அந்தத் தனியார் மருத்துவமனை காலை நேர பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது.
அதன் இரண்டாவது தளத்தின் வலப்பக்கமாக இருந்த நீண்ட அறுவை அரங்கம், அதற்கு மாறாக மிகுந்த அமைதியை கொண்டிருந்தது. அங்கிருந்து மருத்துவ உபகரணங்களின் சத்தத்தை மட்டுமே கேட்க முடிந்தது. மிதமான குளிர் அறையை நிறைத்திருந்தது.
“எப்படி ஃபீல் பண்றீங்க லயா?” மெல்லக் குனிந்து நோயாளியின் கைப் பற்றி, மென்மையான குரலில் விசாரித்தான் அந்த மருத்துவன்.
“ஐ அம் ஓகே டாக்டர்” மெலிதான குரலில் சொன்ன பெண்ணுக்கு அவன் வயது தான் இருக்கும். முப்பதுகளின் தொடக்கம்.
அவள் கையில் பொருத்தப்பட்டிருந்த ஐவி லைனை சரி பார்த்துக் கொண்டான். அப்பெண்ணுக்கு கொடுக்கப்பட வேண்டிய மருந்துகள் அனைத்தையும் மீண்டும் ஒரு முறை கண்களால் வரிசைப்படுத்திக் கொண்டான்.
ஜெனரல் அனஸ்தீசியா எனப்படும், முழுதாக உடலை மயக்கத்தில் ஆழ்த்தும் பொது மயக்கமருந்து செலுத்த வேண்டி, முதலில் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, உடலின் ஆக்சிஜன் அளவு மூன்றையும் சரி பார்க்கும் கருவிகள் சரியாகப் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதை இரண்டாவது முறையாகச் சோதித்துப் பார்த்துக் கொண்டான் அவன்.
ஆக்சிஜன் அளவை சரி பார்க்க விரலில் பொருத்தப்பட்டிருந்த கிளிப்பை தொட்டு பார்க்க, “டாக்டர்” எனும் குரலில் நிமிர்ந்து நோயாளியைப் பார்த்தான்.
“எவ்வளவு நேரம் ஆகும்? அப்பாக்கு என்னோட லிவர் மேட்ச்சாகிடும் இல்ல டாக்டர்? அவர், அவர்…” பயத்தில், பதட்டத்தில் லயா வார்த்தைகள் இன்றித் தடுமாற, அவளின் கையை மெல்ல அழுத்திக் கொடுத்து,
“உங்க ஆபரேஷன் 3, 4 மணி நேரம் ஆகலாம் லயா. அப்பாக்கு அஞ்சுல இருந்து எட்டு மணி நேரம் வரை ஆகலாம். பயப்படாதீங்க லயா. ஏற்கனவே எல்லா டெஸ்ட்டும் எடுத்தாச்சு. நீங்க உங்கப்பாக்குப் பெர்பெக்ட் டோனர்.
நீங்க மயக்கம் தெளிந்து கண்ணைத் திறக்கும் பொழுது, உங்களுக்காக நல்ல செய்தி காத்துட்டு இருக்கும். உங்கப்பாவோட ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சதுன்னு உங்ககிட்ட நானே சொல்வேன் பாருங்க. இப்போ தைரியமா இருங்க லயா. இந்த ஆபரேஷன் உங்களுக்கு எந்தச் சங்கடத்தையும் தராம செய்ய வேண்டியது எங்கப் பொறுப்பு.
நீங்க சில மணி நேரம் கழிச்சு என்கிட்ட பேசும் போது, இந்த டேபிள்ல நடந்த எதுவும் உங்களுக்கு ஞாபகம் இருக்காது. இப்போ என்கிட்ட பேசினது மட்டும்தான் உங்களுக்கு நினைவில் இருக்கும். ஓகே?”
அவன் வார்த்தைகள் தந்த ஆசுவாசத்தில் லயா தன் மனதின் கலக்கத்தையும் மீறி புன்னகைத்தாள்.
“லயா, உங்களுக்கு இப்போ தூக்கத்துக்கு மருந்து கொடுக்கப் போறேன். ரிலாக்ஸ், ஓகே?”
“ஓகே டாக்டர். தூங்கினா கனவு வரும் தானே?” அவளின் சிறுபிள்ளைத்தனமான கேள்வி அவனைப் புன்னகைக்க வைத்தது.
பொதுவாகவே அறுவை சிகிச்சையின் போது இது போலக் கேள்விகள் அவனிடம் கேட்கப்படுவது அவனுக்கு ஒன்றும் புதிதல்ல.
சிறு புன்னகையுடன், “கனவு எதுவும் வராது லயா. நீங்க மயக்கத்தில்தான் இருக்கப் போறீங்க. உங்க மூளைக்குக் கொஞ்ச நேரம் ஓய்வு கொடுக்கப் போறோம். மூளை ஆக்டிவா இருந்தா தானே கனவு வரும்?”
அவன் சொல்லிக் கொண்டே போக,
“ஓ, அப்போ ப்ரைன் வேலை செய்யாதா?…” அவள் கேள்வியை முடிக்கும் முன்பே, அவன் பதில் சொன்னான்.
“உங்களோட சேர்ந்து, உங்க மூளையும் கொஞ்ச நேரத்துக்கு ஓய்வெடுக்கப் போகுது லயா. பொதுவா உடம்புல எங்கயாவது அடிபட்டா, மூளைக்கு நரம்புகள் வழியா சிக்னல் போய், அதுக்கு அப்புறம் தான் வலியை நாம உணருவோம். இப்போ உங்களுக்கு மயக்கமருந்து கொடுக்கறது மூலமா, உங்க மூளைக்குச் சிக்னல் போகாம தடுக்கறோம்.”
“ஓ, எனக்குத் தெரியவே தெரியாது டாக்டர். இன்ட்ரெஸ்டிங். அப்புறம் டாக்டர்?” என்ற அவளின் கேள்விக்கு,
“மூளைக்குச் சிக்னல் போகாததால, உங்களால எந்த அசைவையும் செய்ய முடியாது. இந்தச் சில மணி நேரம் உங்களைச் சுத்தி நடக்கற எதுவும் உங்க மூளைக்கு நரம்புகள் மூலமா கடத்தப்படாது.” மாறா புன்னகையுடன் சொல்லி முடித்தான் அவன்.
“வாவ்” என்றாள் லயா.
இதே உணர்வு அவனுக்கும் பல முறை தோன்றியிருக்கிறது. அவனை எப்போதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் மருத்துவ அறிவியல் இது.
உடலை மரத்துப் போகச் செய்ய முடியா விட்டால், மயக்கமடையச் செய்யா விட்டால், இன்று மணிக் கணக்கில் நடக்கும் பல பெரிய பெரிய அறுவை சிகிச்சைகள் சாத்தியமே இல்லை.
இன்றைக்கு இதய மாற்று அறுவை வரை வந்து விட்டது மருத்துவ அறிவியல். அதற்கு மயக்கவியல் துறையும் மிகப் பெரும் முக்கியக் காரணம்.
நோயாளி பாதுகாப்பான மயக்கத்தில் ஆழ்ந்து இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை நிபுணர் கத்தியை கையில் எடுக்க முடியும். அவனது துறை குறித்த, வேலை குறித்த பெருமிதம் அவனுக்கு எப்போதும் உண்டு.
மெல்ல ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு, லயாவின் நரம்பில் உறக்கத்திற்கான மருந்தை செலுத்தினான் அவன்.
“லிவர் திரும்ப வளர்ந்துடும் இல்ல டாக்டர்?” இத்தோடு முப்பதாவது முறையாக மருத்துவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறாள். அவனும் சளைக்காமல் அக்கேள்விக்குப் பதில் சொன்னான்.
“எஸ், லயா. உங்க லிவரில் இருந்து சின்னப் பகுதியை எடுத்து தான் உங்கப்பாவுக்கு வைக்கப் போறோம். சில வாரம் போதும். ரெண்டு பேரோட லிவரும் முழுசா வளர்ந்திடும் லயா. ரெண்டு பேருமே நார்மல் வாழ்க்கைக்குத் திரும்பிடுவீங்க” விளக்கினான்.
“ஓகே டாக்டர்” குழறலாக வந்தது லயாவின் குரல்.
மெல்ல மெல்ல உறக்கத்திற்குச் செல்ல ஆரம்பித்தாள் லயா. இப்போது மிகக் கவனமாக, அதே நேரம் வேகமாகவும் செயல்படத் தொடங்கினான் அவன். அவனது உதவியாளர் உதவியுடன், செயற்கை சுவாசம் கொடுக்க மூச்சுக் குழாயினுள் ஆக்சிஜன் டியூப்பை பொருத்தி விட்டு நிமிர்ந்தான்.
சரியாக அந்நேரம் மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் அரங்கினுள் நுழைந்தார்.
“குட் மார்னிங் டாக்டர்” என்று புன்னகைத்து விட்டு, கையில் கொடுக்கப்பட வேண்டிய மயக்க மருந்தை எடுத்துக் கொண்டான்.
எவ்வித பரபரப்பும் இல்லாமல், அதை அவன் செலுத்த தொடங்க, சீரான வேகத்தில் மயக்கத்தில் அமிழத் தொடங்கினாள் லயா.
இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, உடலின் ஆக்சிஜன் அளவு மூன்றையும் தனக்கு முன் இருந்த மானிட்டரில் சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு, அறுவை சிகிச்சை நிபுணருக்குக் கைக் காட்டினான் அவன்.
“டென் பிளேடு டு மீ” அறுவை சிகிச்சை நிபுணர் (Surgeon) அவரது வேலையைத் துவங்க, அனைத்தையும் பார்த்தபடி அமைதியாய் நின்றான் அவன்.
லயாவின் இதயம் சீராக இயங்கிக் கொண்டிருக்க, இவன் இதயம் தாறுமாறாகத் துடித்துக் கொண்டிருந்தது.
“யூ டோண்ட் லூக் குட் டுடே” வயிறை கிழித்து வேலைப் பார்த்துக் கொண்டே, இரத்தம் தோய்ந்த கரங்களுடன், புன்னகை சுமந்த முகமாக அந்தக் கேள்விக் கேட்கப் பட, “ஃபேமிலி” என்றான் ஒற்றை வார்த்தையைப் பதிலாக. அவனது உணர்வை புரிந்தவராகப் புன்னகைத்து,
“அவங்க பத்திரமா தான் இருப்பாங்க. நீ சிரி மேன்” என்ற, சர்ஜனின் குரலுக்குப் புன்னகைத்தான் அவன்.
“ஏதாவது பாட்டு போடுங்க டாக்டர்” என்று அவர் சொல்ல, காற்சட்டையில் இருந்து அலைபேசியை எடுத்து, பாடலை தேடி ஒலிக்க விட்டான்.
மருந்துகளின் வாசத்துடன் ரத்த வாசம் கலக்கத் தொடங்கியிருந்த அறையை நிறைக்கத் தொடங்கியது மெல்லிசை.
“நினைத்து, நினைத்து பார்த்தால், நெருங்கி அருகில் வருவேன். உன்னால் தானே நானே வாழ்கிறேன்”
அடுத்த வரிகளைக் கேட்க விரும்பாமல் கண்களை இறுக மூடித் திறந்தான். மனதை பாடல் வரிகளுக்குள் செலுத்தாமல், மிகுந்த சிரமத்துடன் நடந்து கொண்டிருந்த அறுவை சிகிச்சையில் மனதை செலுத்தினான். இசையை மட்டுமே மனதில் வாங்கிக் கொண்டு, கண்களை எதிரில் தெரிந்த காட்சிக்குக் கொடுத்தான். வெறுதே நின்றால் தானே, இந்தத் தொல்லை என்று அவனும் மருத்துவருக்கு உதவத் தொடங்கினான்.