“இந்தா வர்றேன் தம்பி. அவரை உள்ள கூப்பிடுய்யா. மழை பெய்யுதுல்ல” என்று பதிலுக்குக் கத்தியபடி வேகமாக வெளியே ஓடி வந்தார் துரைச்சாமி.
“என்னம்மா இப்படிப் புள்ளங்களை வச்சுட்டு வாசல்ல நனைஞ்சுட்டு நிக்கற? நம்ம வீடுதானே? உள்ள வாரதுக்கு என்னா?” என்று சாவித்ரியை அதட்டி, சிறுமிகள் இருவரையும் இழுத்து, “வீட்டுக்குள்ள வாங்க, வாப்பா நடேசா” என்று பெற்றோரையும் அழைத்தார்.
“சித்தப்பா வீட்டுக்கு போய்ட்டு வாரோம், வழியில சட்டுனு மழை பிடிச்சிருச்சு. அதுக்குள்ள வீட்டுக்குப் போயிடலாம் நினைச்சுட்டு வண்டியை வெரட்டினேன், வழுக்கி விட்டுப்புடுச்சு. அதேன் இங்கன நிப்பாட்டி செத்த நேரம் நின்னுட்டு போவோம்னுட்டுப் பார்த்தேன்”
“அந்தக் கதையெல்லாம் உங்கிட்ட யாரு கேட்டா இப்போ? மொத நனையாம உள்ள வாப்பா” என்று அதட்டினார் துரைசாமி.
நடேசன் குடும்பம் உள்ளே சென்றது. துரைசாமியின் மனைவி அவர்கள் ஈரம் துடைக்கத் துவாலை எடுத்துக் கொடுத்தார். பிள்ளைகளுக்குக் குடிக்கப் பாலும், பெரியவர்களுக்கு மழைக்கு இதமாகச் சூடான தேநீரும் கொடுத்தார்.
பொதுவாகப் பேசிக் கொண்டே தேநீர் அருந்தினார்கள் பெண்கள்.
துரைசாமியிம் தம்பியுடனான சொத்துப் பிரச்சனை நிலவரம் கலவரமான கதையை வருத்தத்துடன் பகிர்ந்தார் நடேசன்.
“நாங்களும் உங்களைப் போல நாலு எழுத்து படிச்சிருந்தா இப்படிக் காட்டானுங்க கணக்கா காடு கரைக்கு அடிச்சுட்டு கிடக்க மாட்டோம்னு நினைக்கறேன். என்னா செய்யப் படிக்காத தற்குறிகளா போயிட்டோம்.”
“என்னப்பா தற்குறின்னு சொல்ற. படிப்பு என்ன பெரிய படிப்பு, உன் மனசுதான்ப்பா பெருசு. தம்பிக்காக எந்த ஆதாயமும் இல்லாம பெரிய மனசோட இடத்தை விட்டுக் கொடுக்கறேனு சொல்லிட்டியே. உன்னைப் போல அவன் விட்டுக் கொடுப்பானா சொல்லு? அவன் பங்க உனக்குக் கொடுக்க முன்ன நாப்பத்தெட்டு வில்லங்கம் பண்ணிட்டுத்தே கொடுப்பான்னு ஊர்ல எவனைக் கேட்டாலும் சொல்லுவான்” என்றார் துரைச்சாமி.
“அவன் ஏன் இப்படியானான்னு தெரியல. பேராசை பிடிச்சு, காடு கரைன்னு பேயா பறக்குறான். நானும் அவன் கேக்கறத குடுத்து முடிச்சி விட்டுறணும் பாக்கறேன். எங்க இழுத்திட்டே போகுது.” என்று சலித்தார்.
“எங்க பிள்ளைகளாவது எங்கள போல இல்லாம உங்களைப் போல நல்லா படிச்சு, ஒழுக்கமா, பாசமா நல்ல பிள்ளைங்களா வரணும்னு ஆசப்படுறேன். பழனி ஆண்டவன் அதுக்கு வழி விடணும்” என்று கண்ணை மூடித் திறந்து சொன்னவரை கண்ணெடுக்காமல் பார்த்திருந்தாள் அவர் மகள் கவிதா. துரைசாமியின் மகனும் அப்பாவின் பக்கமாக அமர்ந்து நடேசனின் பேச்சை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.
“நீயென்னப்பா சும்மா சும்மா படிப்புக்கு உதாரணமா என்னைய சொல்ற? நான் என்னா பெரிய படிப்புப் படிச்சுருக்கேன்? உம் பிள்ளைங்க காலேஜ் போய்ப் பெரிய படிப்பு படிக்கும்ங்க பாரு. நீ கவலைப்படாத” என்று அவரின் தோளில் தட்டினார்.
“எனக்கும் எம் பிள்ளைங்க கலெக்டர் ஆகணும்ன்னு ஆசையெல்லாம் இல்ல. உங்களைப் போலப் பெரிய கம்பெனில கணக்கு எழுதுற, மதிப்பான வேலைக்கு வந்தா போதும் வாத்தியாரே” என்றார் தீவிரமாக.
துரைச்சாமி வாத்தியார் அல்ல. அது மரியாதை நிமித்தமான அழைப்பு. திண்டுக்கல்லில் ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்கராகப் பணிபுரிகிறார். மாலை வீடு வந்ததும் அந்த ஊர் பிள்ளைகளுக்குக் கணக்கு மட்டுமல்ல தமிழ், வரலாறு போன்ற பாடங்களைக் கற்றுத் தருவார். அதனால் அவரை வாத்தியார் என்றே அழைத்தார்கள் அனைவரும்.
“பொண்ணுங்க நாட்டை ஆளுற நாட்ல இருந்துட்டு அவங்க படிப்பை பத்தி நீ கவலைப்படாதப்பா. உம் பொண்ணுங்க ரெண்டும் நல்லா படிச்சு பெரிய ஆளா வரும்ங்க. அதை நான் கண்டிப்பா பார்க்கத்தான் போறேன்” என்று சத்தியம் போலச் சொன்னார்.
நடேசன் மனத்தில் இருந்த குழப்பத்தின் மத்தியிலும் அதைக் கேட்டு முகம் மலர சிரித்தார்.
“உங்க வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்” என்றார் மகிழ்வுடன்.
“ஏங்க” சாவித்ரி அழைக்கவும் திரும்பி மனைவியின் முகம் பார்த்தார். அவர் கண்கள் சொன்ன செய்தி புரிந்து, “மழை லேசா விட்டுருச்சுல்ல. அப்போ நாங்க கிளம்பறோம்” என்று எழுந்து கொண்டார்.
“ஏ இருப்பா. மழை நல்லா விடட்டும், இன்னும் தூறிட்டு கெடக்கே” துரைசாமி தடுக்க, “தூறல்தானே? இந்தா இருக்க வீட்டுக்கு ஒத்த அழுத்துல போயிட மாட்டோமா?” என்று வெளியே வந்தார்.
அவரின் வண்டியை நோக்கி நடந்தார்கள். சாவித்ரியின் பின்னே சிறுமிகள் இருவரும் வர, அவர்களின் பின்னே துரைசாமியின் குடும்பம் அவர்களுக்குக் குடை பிடித்தபடி வந்தது.
“மழை விட்டதும் போன்னா கேட்க மாட்டேங்கற” துரைசாமி சடைக்க, நடேசன் சிரித்தார். அப்பாவின் சிரிப்பு சிறுமிகளுக்கும் தொற்றிக் கொண்டது.
சில நிமிடங்கள்தான், நடேசன் உள்ளேயே இருந்திருக்கலாம். விதி யாரை விட்டது?
அந்நேரம் கணேசன் எப்படி, எதற்காகத் தன் மச்சானுடன் அங்கு வந்தார் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. இருவரும் முழுப் போதையில் இருந்தார்கள்.
நடேசனை கண்டதும் “இந்தாய்யா யோவ்” கணேசனின் மச்சான் கத்தியபடி தள்ளாட்டத்துடன் வண்டியை நிறுத்தினார்.
“டேய், மரியாத குடுத்து பேசலன்னா மூஞ்சி முகரையை எல்லாம் பேத்துருவேன்” நடேசன் கோபமாகச் சொல்ல, “எங்க மேல கை வை பார்ப்போம்” என்று அவரை நெருங்கினான் அவன்.
“என்னடா தம்பி, இவனை ஆட விட்டு பாக்கறியா நீய்யி, கொன்னேபுடுவேன் உன்னய” நடேசன் ஆத்திரத்துடன் விரல் நீட்டி எச்சரிக்க, “கொல்லுவாராம்ல?” என்று கேலியாகச் சொல்லி அவரை மேலும் நெருங்கினான்.
“உன்னய வெட்டி போட்டாதான்…” என்று கொடூரமாகச் சொல்லி அண்ணனை நோக்கி கையை ஓங்கி வீசினார் கணேசன். மறுகணம் அவர் கையில் எப்படி அத்தனை பெரிய அருவாள் வந்தது என்பதை அவர்கள் உணரும் முன்னே அது நடேசனின் மேல் இறங்கியிருந்தது.
“டேய் டேய் பாவிகளா, என்னடா பண்றீங்க?”
“அய்யய்யோ..”
“அண்ணே பார்த்து.”
“மாமா” என்ற அலறல்களைத் தொடர்ந்து, “அ…ப்பா” என்ற தீனமான மெல்லிய அழைப்பு கேட்டது.
“வாணி சின்னக் குட்டியை பிடிம்மா” என்று மனைவியை நோக்கி கத்தினார் துரைசாமி.
“கார்த்திகேயா பெரியவள பிடிச்சுக்கோ, விடாதய்யா” என்று அவர் கத்த கார்த்திகேயன் எட்டி சிறுமியை பிடிக்கப் போனான். அதற்குள் முன்னே ஓடியிருந்தாள் அவள்.
“கவிதாஞ்சலி” என்று கூவியபடி அவளின் கையை இழுத்துப் பிடித்தான். அப்பாவின் ரத்தம் முகமெல்லாம் பட்டுத் தெரித்திருக்க மறுநொடி அவன் பிடியில் மயங்கி சரிந்திருந்தாள் அவள்.
அவளின் முன்னே ஒருபக்கம் அப்பாவின் உடல், மறுபக்கம், “மாமா” என்று அலறி நின்ற இடத்திலேயே மரம் சரிவது போல அம்மா சாவித்ரியும் மயங்கி சரிந்திருந்தார்.
இப்போது மழை நின்றிருந்தது. ஆனால் வீடு செல்ல வழியுமில்லாமல், துணையும் இல்லாமல் தவித்துத் தனியாக நின்றன இரண்டு இளம் குருத்துகள்.