இளமாறன் அவள் சொன்னதைக் கேட்டு புன்னகைக்க, ரோஜாவின் கண்கள் இப்போது அவன் மேல் நிலைத்தது.
“உட்காருங்க ரோஜா, சாப்பிடலாம்” என்றான். ரகுவரனும் வர, அவன் பக்கமாக இருக்கையை இழுத்துப் போட்டான்.
இளமாறன் அவனது கருப்புக் காற்சட்டை, வெள்ளை மேல் சட்டைக்கு மேல் ஏப்ரன் (Apron) எடுத்து அணிந்து கொண்டான். அங்கிருந்த சிறிய கிட்சன் அமைப்பின் பின்னே சென்றான். மின்அடுப்பை முன்னே நகர்த்தி வைத்தான். அவனுக்கு எதிரே இருந்த உயரமான இருக்கைகளில் அமர்ந்திருந்தனர் ரோஜா மற்றும் ரகுவரன். அவர்கள் அமர்ந்த வாக்கில் அவன் சமைப்பதை தெளிவாகப் பார்க்க முடிந்தது.
எலுமிச்சை, புதினா, கிரீன் ஆப்பிள், சோடா, சக்கரை, ஐஸ் கட்டிகள் என ஒவ்வொன்றாக அங்கிருந்த சிறிய குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்து வெளியில் வைத்தான் இளமாறன். அவ்வளவுதான் அவள் கவனித்தாள். ஆப்பிள், எலுமிச்சையை அத்தனை லாவகமாக நறுக்கினான். அடுத்த ஐந்தாம் நிமிடம் அவர்கள் முன்னே மூன்று கிளாஸ்களில் க்ரீன் ஆப்பிள் மோஜிட்டோ மாக்டேயில் (Green apple mojito mocktail) இருந்தது.
இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, குளிர்ச்சி எனக் கலவையாக இருந்த குளிர் பானத்தை அவள் ரசித்துப் பருக, “நைஸ்” என்றான் ரகுவரன்.
“அவ்வளவு தானா ரகு? உங்க ஹோட்டலுக்கு வந்து இதையே சொல்றேன் நான்” என்றாள் ரோஜா கிண்டலாக. சிரித்தான் அவன்.
இளமாறன் ஒரு மிடறு அருந்தி விட்டு, அடுத்த வேலையில் இறங்கினான். அவன் வெள்ளரி, கேரட், ஆலிவ் நறுக்குவதைப் பார்த்து ரோஜா முகம் சுருக்க, அவளை நிமிர்ந்து பார்த்தான் அவன்.
“சாலட் ஸ்கிப் பண்ண முடியாதா செஃப்? ஃப்ரெஞ்ச் கோர்ஸ் மெனு போல 17 டிஷ் எங்களைச் சாப்பிட வைக்கிற ஐடியாவா?” என்று அவள் கேட்க, ரகுவரன் சத்தமாகச் சிரிக்க, மாறன் புன்னகைத்தான்.
“எனக்கு இந்த இலை, தழை எல்லாம் குழந்தையில் இருந்தே அலர்ஜி”
“சாலட் ஹெல்தி மக்கு” ரகுவரன் சொல்ல, நக்கல் சிரிப்புடன் ரோஜா ஏதோ சொல்ல ஆரம்பிக்கும் போதே, “வேணாம். சொல்லாத” என்று சரணடைந்தான் அவன்.
இளமாறன் காய்களைத் தொடர்ந்து நறுக்க, முகம் சுருக்கி அவனையே பார்த்தாள். வெங்காயம், தக்காளி, காய்கறி கலவையை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொஞ்சம் மசாலா கலவை சேர்த்து, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து குலுக்கி வைத்தவன், அவள் எதிர்பாராத விதமாக மிளகு, சீரகம் சேர்த்த அப்பளத்தைக் கையில் எடுத்தான்.
அதைப் பொரித்து அதன் மேலே தூவலாகச் சாலட் வைத்து அவன் நீட்ட, “இதை நான் எதிர்பார்க்கல” என்று வாங்கிக் கொண்டாள்.
மொறுமொறு அப்பளமும், உப்பு, புளிப்பு, காரம் சேர்க்கப்பட்ட காய்கறி கலவையும் சேர்த்து சாப்பிட மிக ருசியாக இருக்க, “ம்ம், மாறன் மசாலா பாப்பட் சாப்பிட்டுருக்கேன். ஆனா, இது ரொம்ப நல்லாருக்கு. வித்தியாசமா, கொஞ்சம் ஹெல்தியா..” அதற்கு மேல் பேசாமல் சாப்பிட மட்டுமே செய்தான் ரகுவரன்.
ரோஜா பேசவேயில்லை. நீங்களும் சாப்பிடுங்க என்பது போல இளமாறனுக்குக் கண் காட்டினாள் அவள். அவனோ மறுப்பாகத் தலையசைத்தான்.
இவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே அவன் அடுத்ததைத் தயாரிக்கத் தொடங்க, “மாறன், நான் டயட்டில் இருக்கேன். பிளீஸ் நிறையச் சாப்பிட வைக்காதீங்க” என்று போலியாக அலுத்துக் கொண்டான் ரகுவரன்.
சோளம், காளான் சேர்த்த சூப்பை அடுத்ததாகக் குடிக்கத் தந்தான். எல்லாமே சிறிய அளவில் நான்கைந்து கரண்டியில் உண்ணும் படியிருக்க, அவர்களால் சுலபமாக, அதை ரசித்து ருசித்து உண்டு முடிக்க முடிந்தது.
பன்னீர், பேபி கார்ன், சிக்கன் மூன்றையும் விரல் நீள அளவில் பொரித்துக் கார்லிக் சாஸுடன் அடுத்துப் பரிமாற, “அமிர்தா பவனுக்குச் செஃப் மாற்ற வேண்டிய நேரம் வந்திடுச்சு” என்றான் ரகுவரன்.
“எனக்குத் தெரியும். நீ சாப்பிட வரலை. செஃப்பை வேலைக்குக் கூப்பிடதான் வந்திருக்கன்னு…” அவனை இடித்துச் சொன்னாள் ரோஜா.
“ம்ஹூம். இவருக்குச் சம்பளம் கொடுக்க எங்க கம்பனியால முடியாது” சோகம் போலப் புலம்பினான். அதற்குச் சிரித்த ரோஜாவின் கண்கள் இளமாறனை பார்க்க, அவனோ கருமமே கண்ணாயினாராகி இருந்தான்.
உணவின் மீது மட்டுமே அவன் கவனம் இருந்தது. இப்போது அவன் சட்டைக் கை பாதியாக மடித்து விடப்படிருக்க, முன் நெற்றியில் புரண்ட முடியை காற்று சீண்டி கலைத்துக் கொண்டிருந்தது. நெற்றியில் மெல்லிய வியர்வைப் பூக்க நின்றிருந்தவனைப் பார்த்து, “செக்ஸி செஃப்” என்று முணுமுணுத்தாள்.
“என்ன சொன்ன?” ரகுவரன் கண்ணை உருட்டி கேட்க, ‘அழகான ஆண்கள் சமையல் செய்கையில் இன்னும் அழகாருக்காங்க’ இளமாறனை பார்த்தபடி மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.
ஆனால், அவளின் பார்வை மாற்றத்தை கவனித்த ரகுவரன் சட்டென்று எழுந்து இளமாறனின் பக்கத்தில் சென்று நின்றான்.
ரோஜா புருவம் உயர்த்த, “நானும் ஹெல்ப் பண்ணவா மாறன்?” என்றான் அவன்.
“எங்களுக்கு ஹோட்டல் மட்டுமில்ல. நானும் கேட்டரிங் படிச்சுருக்கேன். எனக்குச் சமைக்கத் தெரியும்” என்றவனின் சிறுபிள்ளைத்தனமான பொறாமையில் அவளுக்குச் சிரிப்பு வந்தது.
“ஓகே. ஜாய்ன் மீ” என்று நகர்ந்து அவனுக்கு இடம் கொடுத்தான் இளமாறன்.
“ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே மாறன்?” என்ற ரகுவரன், “ஒரு ஆறேழு மாசத்துக்கு முன்னாடி இந்த ரெஸ்டாரண்ட் விலைக்கு இருக்கதா கேள்விப்பட்டேன். உண்மையா? சாரி, அது வேற ரெஸ்டாரண்ட்டா கூட இருக்கலாம். ஜஸ்ட் கேட்கணும்னு தோணுச்சு. தப்பா எடுத்துக்காதீங்க மாறன்” என்று தன் சந்தேகத்தைத் தயக்கத்துடன் கேட்டு முடித்தான்.
“எஸ், ரகுவரன். நீங்க கேள்விப்பட்டது உண்மைதான்” என்று இளமாறன் சொல்ல, மற்ற இருவரும் அவனை அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
“நான் அப்போ ஹைதராபாத்தில் வொர்க் பண்ணிட்டு இருந்தேன். என் பார்ட்னர்தான் இங்க மேனேஜ் பண்ணிட்டு இருந்தான். என் ப்ரெண்ட், காலேஜ் மேட். எங்களால லாஸை கன்ட்ரோல் பண்ண முடியல. அதான் அப்படியொரு முடிவெடுத்தோம்.”
“ம்ம். சாரி”
“இப்போ எல்லாம் ஓகே. ஓரளவு பழையபடி கொண்டு வந்துட்டேன்” என்றவனின் குரலில் இருந்த பேதத்தை மற்ற இருவராலும் புரிந்து கொள்ள முடிந்தது.
ஏற்கனவே சமைத்து தயாராக வைத்திருந்த பிலாஃப் (Pilaf), ஆட்டிறைச்சி பொதியப்பட்டுச் சமைக்கப்பட்டிருந்த டோல்மாவை (Dolma) சூடு செய்து அவர்களுக்குப் பரிமாறினான். ரகுவரன் நின்ற இடத்தில் இருந்தே உண்ணத் தொடங்கினான். அந்நேரம் அவனுக்கு அலைபேசி அழைப்பு வர, “அப்பா” என்றவன், அழைப்பை ஏற்று ஓரமாகச் சென்று பேசி விட்டு வந்தான்.
“முக்கியமான வேலை. நான் போயே ஆகணும் செஃப். சாரி” என்றவன், உணவை அவசர அவசரமாக உண்ண, “பொறுமையா ரகுவரன்” என்றான் இளமாறன்.
“இந்தாங்க ஸ்வீட்ஸ்” அழகாகச் சிறிய பெட்டிகளில் அடைக்கப்பட்ட இனிப்புகளைக் கீழிருந்து பணியாளர் ஒருவர் கொண்டு வந்து கொடுக்க, ரகுவரனிடம் கொடுத்தான். “தேங்க்ஸ்” என்று சிரிப்புடன் வாங்கிக் கொண்டான் அவன்.
“ரோஜா” என்று அவன் தயங்க, “அவங்க சாப்பிட்டு முடிக்கட்டும். நான் வீட்ல கொண்டு போய் விடுறேன்” என்றான் இளமாறன்.
“ஓகே, சீ யூ கைஸ்” என்று கையசைத்து விட்டு வெளியேறினான் ரகுவரன்.
“நீங்க சாப்பிடவேயில்ல” ரோஜா கேட்க, “பசிக்கல” என்றான் மொட்டையாக, இளமாறன்.
“நான் ஏதாவது செய்யட்டுமா?” அவள் கேட்கவும், புருவம் சுருக்கினான்.
“பசிக்கல சொல்றீங்க. ஆனா, உங்க கண்ல பசி தெரியுதே. இதையா சாப்பிடன்னு நீங்க சமைச்சதை பார்த்து யோசிக்கிற மாதிரி இருந்தது” என்று சொன்னவளை ஆச்சரியமான அதிர்ச்சியுடன் ஏறிட்டான்.
தன் இருக்கையைப் பின்னுக்குத் தள்ளி விட்டு எழுந்த ரோஜா, அவனிடம் சென்று நின்றாள்.
அங்கிருந்த பாத்திரங்களைத் திறந்து பார்த்தாள். எதற்கோ கோதுமை மாவு பிசைந்து மூடி வைத்திருந்தான். அதன் அருகில் வேகவைக்கப்பட்ட பருப்பு கலவை இருந்ததைப் பார்த்தவள் இரண்டையும் எடுத்தாள்.
அவளுக்குத் தேவையானதை கேட்க அவனும் அமைதியாக எடுத்துக் கொடுத்தான். அவள் பன்னீர் கேட்க, “நான் சாப்பிட மாட்டேன்” என்றான்.
“ஓகே செஃப்” என்றவள், சப்பாத்தி இட்டு, பருப்பில் தாளித்துக் கொட்டி, கூட்டு வைத்து நீட்டினாள். அதனோடு அவன் தயாரித்த சாலட் மற்றும் கொஞ்சம் சோறும், ஊறுகாயும் அவள் பரிமாற, முன் தினத்தைக் காட்டிலும் இப்போது நன்றாக உண்டான் அவன்.
அவள் நான்காவது சப்பாத்தியை திரட்ட, “போதும் ரோஜா.” என்று தடுத்தான் அவன்.
“நீங்களும் சாப்பிடுங்க” அவன் சொல்ல, அவள் பாதியில் வைத்திருந்த உணவை முடித்தாள் ரோஜா.
இருவரும் எழுந்து சென்று கை கழுவி வந்தனர்.
“டேசர்ட்?” அவன் கேட்க, “ஐயோ இப்பவேவா? கொஞ்ச நேரம் ஆகட்டும்” என்றாள் சிரித்து.
“ஓகே” என்றவன், “நேத்து நடந்ததுக்குச் சாரி ரோஜா. காயத்தினால ஃபீவர் எதுவும் வரல இல்ல?” என்று அக்கறையுடன் கேட்டான். அவளோ அதைக் கேட்டதும், அதற்கு நேர்மாறான மனநிலைக்குச் சென்று விட்டாள்.
“ஒரு விஷயம் சொல்லுங்க செஃப். என்ன பிரச்சினை உங்களுக்கு? நேத்து மட்டுமில்ல, அன்னைக்கு நடந்த ஆக்ஸிடென்ட்டுக்கு நீங்களும் ஒரு காரணம்னு ரகு சொன்னார். நீங்க சரியா வண்டியோட்டலைன்னு சொன்னார். ஒரே வேகத்தில் சீரா இல்லாம.. ப்ச், எனக்குப் புரியல. ஏன் இப்படி இருக்கீங்க? லைஃபை ஏன் இப்படி அசட்டையா டீல் பண்றீங்க? உயிர் மேல ஆசை இல்லையா உங்களுக்கு? இன்னைக்கு இந்த லஞ்ச் கூட உங்களைக் காப்பாத்தினதுக்குத் தானே எங்களுக்குக் கொடுக்கறீங்க. இதே போல இன்னும் எத்தனை லஞ்ச் கொடுப்பீங்க?” படபடத்தாள். பார்வை மாறாமல் அமைதியாக அவள் கண்களைப் பார்த்தபடி நின்றான் இளமாறன்.
“நான் தெரியாமதான் கேட்கறேன். நீங்க வேணும்னு பண்றீங்களா இளா? உங்களுக்கு வாழ்க்கை மேல அப்படியென்ன வெறுப்பு? இன்னும் எத்தனை முறை உங்களை நான் காப்பாத்தறது? இன்னும் எத்தனை லஞ்ச் எனக்குக் கொடுக்கப் போறீங்க? எனக்கு நன்றி சொல்ல நீங்க சமைக்க ஆரம்பிச்சா, அதுல உங்க வாழ்க்கையே ஓடிடும் போல. நீங்க இன்னொரு ஜென்மம் எடுத்துதான் எனக்கு நன்றி சொல்லி முடிக்கணும்..” படபடவெனப் பேசிய ரோஜாவின் முகம் நோக்கி குனிந்தான். அவள் அதிர்ந்து அமைதியானாள்.
“அன்னைக்கு ஆக்ஸிடென்ட்ல இருந்து என்னைக் காப்பாத்தினதுக்கும், இந்த நிமிஷம் நான் உயிரோட நிக்கக் காரணமா இருக்கதுக்கும், எஸ். நான் உனக்கு நிறைய நன்றி கடன்பட்டிருக்கேன் ரோஜா. உனக்கு நன்றி சொல்லவும், என் அன்பை சொல்லவும் இன்னொரு ஜென்மம் எல்லாம் எடுத்திட்டிருக்க முடியாது. இந்த வாழ்க்கையை முழுசா வாழ்ந்து பார்த்திடுறேன். நீ மட்டும் என் கூடவே இரு, போதும். வில் யூ?”
வார்த்தைகளை அதற்கான ஏற்ற இறக்கத்துடன், உணர்ச்சி ததும்ப அவன் சொல்லி முடிக்க, ரோஜா அதிர்ந்து விழி விரித்து அவனைப் பார்த்தாள்.
அவள் கண்களில் வைரமாய் ஒரு துளி கண்ணீர் மின்னியது.
“ரோஜா?” கரகரத்த குரலில் அழைத்தான் இளமாறன்.