ரீங்காரம் – 3.1

“நீ பொட்டியக் கட்ட ஆரம்பிச்சாவே இருக்குற சந்தோஷமெல்லாம் எங்கேயோ ஓடிடுது சக்திம்மா!” அவளுக்காக எடுத்து வந்த பழச்சாற்றை அவள் கையிலே கொடுத்துவிட்டு, அவளது உடைகளைத் துணிப் பெட்டியினுள் அடுக்கினார் பூங்கோதை.

“பெரியம்மா… இப்போ ரொம்ப வேலை இருக்காது. அநேகமாக ஒரு வாரம்தான், அப்புறம் வீட்டுக்கு வந்துடுவேன். அதுக்கப்புறம் ஒரு மாசம் கழிச்சுதான் அடுத்த ப்ராஜெக்ட்” என்றபடி அவரை உரசி அமர்ந்தாள் சக்தி.

“போடி… உன்னை அங்கே அனுப்பி வச்சிட்டு நாங்க படுற பாடு எங்களுக்குத்தான் தெரியும். ஏதாச்சும் ஒரு கண்ணாடிப் பாத்திரம் கீழே விழுந்தாக்கூட, உனக்கு ஏதும் ஆகியிருக்குமோன்னு உயிரே போகுது” என்றார் பெருமூச்சோடு.

“இங்க பாருங்களேன்…” அவள் அவர் முகத்தை நிமிர்ந்து பார்க்க, அவர் வாயில் அந்தப் பழச்சாற்றை வம்படியாகச் சரித்திருந்தாள் சக்தி. 

“உனக்காகக் கொண்டு வந்தது சக்திம்மா” என்றார் சிறு முறைப்போடு.

“சும்மாவே ரூம்ல இருக்கிற எனக்கு எதுக்கு பெரியம்மா இதெல்லாம்? படி ஏறி வந்து மூச்சு வாங்க நின்னீங்க… அதான் கொடுத்தேன். பாருங்க… முகம் எவ்வளவு டல்லா இருக்குன்னு!”

“ஆமா… நானும் வீட்டையே புரட்டிப் போட்டு வேலை பார்க்கிறேன் பாரு! கல்யாணம் ஆகப்போற பிள்ளை… நீ தெம்பா இருக்க வேண்டாமா?”

“எனக்கென்ன தெம்புக்குக் குறைச்சல்? இப்போவே உங்களைத் தூக்கி ரங்கராட்டினம் சுத்தச் சொன்னாக்கூட அசால்ட்டா பண்ணுவேன்” என்றாள் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி.

“கையால தூக்குறியோ இல்லையோ… வாயாலேயே எல்லாம் செய்யுற ஆள்தான் நீ!” என அவர் சிரிக்கத் தொடங்கிவிட, இவள் உதட்டைச் சுளித்து முறைத்தாள்.

“ஜூஸ் கொடுத்தது தப்பாப் போச்சு போலயே!”

“அப்படித்தான் போல…” என்றவர், “வேற எதுவும் வேணுமாடா? எது வேணும்னாலும் சொல்லு, வீராகிட்ட சொல்லி விடுறேன்” என்றார்.

“அதெல்லாம் வேண்டாம் பெரியம்மா… எனக்குக் கருவாட்டுக் குழம்பு வேணும், செஞ்சு தரீங்களா?”

“அதுக்கென்ன… இப்போவே செய்றேன். என்ன கருவாடு வேணும் சொல்லு?”

அவளோ பதறி, “ஆஹான்… நீங்க செய்ய வேண்டாம். அண்ணி அவங்க ஊர்ல இருந்து நெத்திலி கருவாடு வாங்கிட்டு வந்தாங்களே… அது வேணும். அவங்களையே செஞ்சு தரச் சொல்லுங்க” என்றாள்.

மகளின் பேச்சைக் கேட்டு முறைத்தவர், “உங்களுக்கெல்லாம் கொழுப்புடி! இத்தனை நாள் பெரியம்மா பெரியம்மான்னு என் பின்னாடியே சுத்திட்டு இருந்த பிள்ளை… நாக்குக்கு வேற ஒருத்தி வந்து ருசி காட்டவும் அப்படியே ஓடுற பாரு!” என்றார்.

சக்தி விடாமல், “ஏன் போனா என்ன? அவங்க ரொம்ப நல்லவங்க பெரியம்மா. அண்ணனுக்கு அவ்வளவு ‘மேட்ச்’. அதுவும் ரெண்டு பேரும் பக்கத்துல பக்கத்துல நிக்கிறப்போ அண்ணி அவ்வளவு க்யூட்டா இருப்பாங்க” என்றாள்.

“எது… அவ என் பையனுக்குச் சரியான ஜோடியா?” – பூங்கோதை கேட்க, அவர் முகம் சற்று முன்பிருந்த மென்மையை முற்றிலும் தொலைத்திருந்தது. 

“பெரியம்மா…” எனச் சக்தி அழைக்க, அவளுக்கோ அன்பரசியின் நிலையை எண்ணிப் பெருத்த கவலைதான்.

“பெரியம்மா… சில நேரம் கிடைக்கிறது எதுவோ, அதை முழு மனசோட ஏத்துக்கணும்.”

அவர் முகம் இன்னும் அதே கடுமையை இழக்காமல் இருந்தது. “விதியேன்னு வாழச் சொல்றியா?” எனக் கேட்டார். இவளுக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. சரியாக ஒரு வருடம் முன்பு வேலுவின் பூர்வீக வீட்டிற்குச் சென்றிருந்த சமயம் அது.

வருடா வருடம் குலதெய்வ வழிபாட்டிற்காகச் செல்பவர்கள், அன்று கோவிலின் நடை அடைத்திருக்கவும் விசாரித்தபோதுதான் தெரிந்தது, வேலுவின் பெரியப்பா மகன் வேதாச்சலம் இறந்துவிட்டது. தகவல் ஏதும் வராத காரணத்தால் குடும்பமாகச் சென்றிருக்க, சக்தி மற்றும் இளைய மருமகளை வீராந்தகனோடு முன்னே அனுப்பி வைத்து மற்றவர்கள் பின்னே சென்றனர்.

அங்கேதான் அன்பரசியைக் கண்டனர். தாய் தந்தை இல்லாமல் தாத்தாவின் அரவணைப்பில் வளர்ந்தவள், அவர் மறைவில் தடுமாறிப் பரிதவிப்போடு அமர்ந்திருப்பதைப் பார்த்தவர்களுக்கு மனம் பிசைந்தது. ஒரு காலத்தில் வேலுவின் பெரியப்பா வழிகாட்டுதலில் தான் இந்தத் தொழிலைத் துவங்கியதே! அப்பேர்ப்பட்ட குடும்பத்துப் பெண்ணை விட்டு வர மனம் வரவில்லை. வேதாச்சலத்தின் பேத்திதான் அன்பரசி.

அவர் இருந்தவரை இல்லாத கவலை, அவர் பிரிந்த பிறகு அவளை மொத்தமாய் உடைத்திருக்க, மனதில் ஈரமுடைய வேலு அவளைத் தன் வீட்டிற்கே கையோடு அழைத்து வந்திருந்தார். அதில் யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை; அன்புடன் அரவணைத்தனர். வந்த ஒரே மாதத்தில் அவளுக்கு வரன் பார்க்கத் தொடங்கிவிட்டார் வேலு. ஓராண்டு போராட்டத்திற்குப் பின்னும் பலனில்லை.

“காசு பணத்தைப் பார்க்கிறதை விடுங்க… நாளை பின்ன என் பிள்ளை வந்து போக ஒரு இடம் வேண்டாமான்னு கேக்குறாங்கப்பா” எனக் கவலையாக மகன்களிடம் கூறினார் வேலு.

“வசதி கம்மியா பார்க்கலாம் மாமா… அப்போ அமையும்ல” என்றார் மரகதவள்ளி.

“எப்படிம்மா? நம்பி வந்த பெண்ணைக் கடமைக்காக அவசரமா கட்டிக் கொடுக்கவும் முடியலையே” என்றார் வேலு.

“அப்போ கொஞ்சம் ஆறப்போடுங்க. வயசு இருபத்தி மூணுதானே ஆகுது… அமையுறப்போ அமையட்டும்” என்றார் சம்பூரணமும்.

“வயசுப் பசங்க ரெண்டு பேர் இருக்கிறப்போ ஊர் வாய்க்குப் பயந்துதானே ஆகணும் பூரணம்?”

“யாரும் எதுவும் பேசுனாங்களாப்பா?”

“பேசுறதுக்குள்ள முடிக்கணும் சேந்தா… உங்க பக்கம் எதுவும் சொல்லிப் பாருங்களேன்” எனச் சேந்தன், முரளி இருவரையும் பார்த்துக் கூறினார். அவர்களும் முயன்று பார்த்தனர்; எதுவும் சரிவர அமையவில்லை.

ஒரு கட்டத்தில், வீட்டினரிடமே வந்து நின்றார் வேலு. “நம்ம வீராவுக்கு அன்பரசியைப் பேசலாமாப்பா?” என உரிமையோடு கேட்ட தந்தையின் தயக்கம் முரளியைப் பெரிதும் உலுக்கியது. 

“அப்பா… என்ன இது யாரோ மாதிரி கேக்குறீங்க? அவன் உங்க பேரன்ப்பா. கல்யாண நாளைக் குறிச்சுட்டு வந்து சொல்லியிருந்தீங்கன்னா கூட யார் மீறப்போறா?” என்றார் முரளி.

முரளி பேசி முடிக்கவும், “என்னங்க!” என்கிற தயக்கமான அதே சமயம் வேகமான அழைப்பு பூங்கோதையிடமிருந்து வந்தது.

“என்ன?” என வினவிய முரளியின் கண்களைப் பார்த்து, எந்நாளும் அமைதி காக்கும் கோதை அந்த முறை அமைதி காக்கவில்லை. 

“எனக்கு இதுல விருப்பம் இல்லைங்க!” என்றார் யாரைப் பற்றியும் யோசிக்காமல்.

“என்னம்மா நினைக்கிற?” என்ற சம்பூரணம், மருமகளின் எண்ணத்தை அறிய விழைந்தார்.

“வீரா ஒரு பெண்ணைக் காதலிக்கிறான் மாமா!” என்றார் மொத்த வீட்டினருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்து

உணவு மேஜையில் அமர்ந்து இதைக் கேட்டிருந்த இளசுகள் இருவரும், தங்களுக்கு முன்பு அமர்ந்திருந்த வீராந்தகன் மேல் பார்வையைத் திருப்பினர். கையிலிருந்த தேநீரை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தவனின் தாடை நரம்புகள் இறுகியிருந்தன.

“அண்ணா…” – சக்தி மெல்ல அழைக்க, அவளை அவன் பார்த்த பார்வையில் அடுத்துக் கேட்க வந்த கேள்வியும் காணாமல் போனது.

“வீரா!” – முரளியின் குரலில் கண்களை இறுக்கமாக மூடித் திறந்தவன், எழுந்து வரவேற்பறைக்குச் செல்ல, “என்னடா இது?” என்றார் முரளி ஆத்திரமாக.

“உங்க ஃபிரண்ட் பெரியசாமி பொண்ணு காயத்ரிப்பா… ரெண்டு வருஷமா லவ் பண்றேன்” என்றான் வீரா எதையும் மறைக்காமல். அவன் மனதில் வேறொரு பெண் இருப்பதை அறிந்த பிறகு, வேலுவுக்கு அன்பரசியின் வாழ்க்கையை எண்ணிப் பெருத்த வருத்தம் சூழ்ந்தது.

“விடுடா…” என மகனிடம் கூறிவிட்டு அவர் எழுந்து சென்ற அந்தச் சோர்ந்த முகம், முரளி மற்றும் சேந்தனைப் பெரிதும் அசைத்தது. மகனிடம் பேசிப் பார்த்தனர்; அதட்டி, மிரட்டியும் பார்த்தனர். ஆனால், எதுவும் வீராவின் உறுதிக்கு முன்பு நிற்கவில்லை.

வேலுவுக்கு வீராந்தகனைத் தவிர அன்பரசிக்கு வேறு வரன் பார்க்க விருப்பமில்லை. இறுதியில் தன் கம்பீரத்தை இறக்கி வைத்துப் பேரனிடம் கையேந்தி, “எனக்காகச் சாமி… கெஞ்சித் கேக்குறேன்” என்றார். அந்த ஒரு வாக்கியத்தில் அவனுக்குள் இருந்த உறுதியெல்லாம் மொத்தமாக உடைந்து போனது.

பெரியவரின் கம்பீரத்தை மட்டுமே பார்த்து வளர்ந்தவனுக்கு, அதைத் தானே சிதைத்துவிட்டோமோ என்கிற உணர்வு மேலோங்கியது. தான் காதலித்த பெண்ணுக்குச் செய்யும் துரோகம் தெரிந்தும், குடும்பத்திற்காகத் தன்னை நம்பி வந்த அன்பரசியைத் திருமணம் செய்துகொண்டான். 

இதோ… இப்போது வரை அவள் அவன் வாழ்க்கையில் ஒரு ‘பொறுப்பு’ மட்டுமே! அவளிடம் மனம் விட்டுப் பேசவோ, சிரிக்கவோ அவன் மனைவியாக அவள் இல்லை. காதலின் நிராகரிப்பிற்குப் பிறகு வீரா இன்னும் அமைதியானான்.

“உங்ககிட்ட வந்தா அவனோட வாழ்க்கைக்கு ஒரு வழி கிடைக்கும்னுதானே மாமா வந்தான்? அப்பவும் உங்களோட சுயநலத்தைத் தானே முன்னாடி வச்சீங்க!” என பூங்கோதை கேட்ட ஏமாற்றமான வார்த்தைகளில் வேதனையை உள்வாங்கிக்கொண்டார் வேலு.

மகனின் மகிழ்ச்சியற்ற வாழ்க்கை பூங்கோதைக்கு வேலுவின் மேல் தீராத கோபத்தை உண்டாக்கியது. அதன் விளைவாக, அவர் வேலுவிடம் பேசுவதையே தவிர்த்துவிட்டார்.

“உனக்குத் தெரியாது சக்திம்மா… அவன் காயத்ரியைக் காதலிக்கிறதா சொன்னப்போ எனக்குக் கோபம்தான் வந்தது. ஆனா ஒருநாள் அவளைப் பார்க்கக் கூட்டிட்டுப் போனான். உன் அண்ணன் அந்தப் பொண்ணை அப்படி ரசிக்கிறான்… அவ்வளவு சந்தோஷமா இருந்தான். இப்போ?” என அவர் வினவ, “எல்லாத்துக்குமே நேரம் எடுக்கும் பெரியம்மா. அண்ணா அவங்களை உண்மையா லவ் பண்ணியிருந்தா, இந்த ஒரு வருஷம் பத்தாது” என்றாள் சக்தி.

“மறக்கவே முடியலைன்னா? என் பையன் இப்படியே இருப்பானா? அவளைக் கட்டுன நாள்ல இருந்து ரோபோ மாதிரி வாழ்ந்துட்டு இருக்கான். அவளுக்குச் சொகுசான வாழ்க்கை கிடைச்சிருக்கு… ஆனா அதை அனுபவிக்கிறது என் பையன் இல்லையே!”

அவர் அன்பரசியைச் சாடிப் பேசியபோது, சக்திக்கு மறுத்துப் பேசத் தோன்றவில்லை; அதே சமயம் அன்பரசியை இழிவுபடுத்துவதையும் அவளால் ஏற்க முடியவில்லை. அதனால் அமைதியாக இருந்தாள். கதவு தட்டப்பட, “வாங்க அண்ணி” என்றாள் சக்தி.

பூங்கோதை முகத்தைத் திருப்பிக்கொள்ள, உள்ளே வந்த அன்பரசி, “அத்தை… காபி” எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினாள். அவள் முகம் வாடியிருப்பதைப் பார்த்த சக்திக்கே தெரிந்தது, பெரியம்மா பேசியது அவள் காதில் விழுந்திருக்குமென்று.

தன் அறைக்குள் நுழைந்த அன்பரசி, அங்கே மெத்தையில் அமர்ந்து படம் பார்த்துக்கொண்டிருந்த வீராந்தகன் அருகே தேநீரையும் பாப்கார்னையும் வைத்துவிட்டு குளியலறைக்குள் சென்றாள். 

அவள் வெளியே வந்ததும் மீண்டும் மீண்டும் கதவைத் திறந்து வெளியே சென்று வர, எரிச்சலுற்ற வீரா, “எதுக்குச் சும்மா கதவைத் திறந்து மூடிட்டு இருக்க? போறதுன்னா போயேன்!” எனத் தடித்த வார்த்தைகளில் சீறினான்.

அப்போதுதான் அவள் கண்கள் சிவந்திருப்பதை அவன் கவனித்தான். அங்கே சக்தி வந்து நின்றாள். “அண்ணி…” எனச் சக்தி கெஞ்சலாக அழைக்க, “இல்ல… நீங்க பேசுங்க, எனக்குக் கீழே வேலை இருக்கு” எனத் தப்பிக்கப் பார்த்தாள் அன்பரசி.

“எனக்கு உங்ககிட்டதான் பேசணும் அண்ணி” எனச் சக்தி பிடிவாதம் பிடிக்க, வீராவின் சைகைக்குப் பிறகு அன்பரசி உள்ளே வந்தாள். கதவை மூடிய சக்தி, தன் உணவின் விருப்பங்களைப் பட்டியலிட்டாள். அனைத்திற்கும் ‘சரி’ என்று மட்டுமே பதிலளித்தாள் அன்பரசி.

சக்தி வெளியேறியதும் வீரா கோபமாக, “உனக்கு என்ன பிரச்சனை? ஆசையா கேக்குற பொண்ணுகிட்ட ரெண்டு வார்த்தை நிதானமா பேச முடியலையா?” என்றான்.

“பண்றேன்னு சொல்லிட்டேன்ல… வேற என்ன எதிர்பார்க்குறீங்க?”

“கடமைக்குன்னு சொல்ற மாதிரி இருக்கு!”

“நிச்சயமா இது என் கடமைதான். இந்தச் சொகுசான வாழ்க்கையைக் கொடுத்த உங்களுக்குப் பிரதிபலனா இந்த வேலையைச் செஞ்சுதானே ஈடுகட்டணும்?”

“அன்பரசி!” எனப் பற்களைக் கடித்து அவன் எச்சரிக்க, அவளோ அதே நிதானத்துடன், “ம்ம்… சொல்லுங்க… அன்பரசிதான், காயத்ரி இல்ல!” என்றாள்.

கண்களை இறுக்கமாக மூடித் திறந்தவன், “இப்ப எதுக்குச் சம்பந்தமே இல்லாம பேசுற?” என்றான் ஆத்திரத்துடன்.

“என்ன பண்றது? நீங்க அடிக்கடி காயத்ரின்னு என்னைக் கூப்பிடுறதும், உங்க அம்மா நான் இந்த வீட்டுல சொகுசா வாழுறதைச் சொல்றதையும் கேட்கும்போது சம்பந்தமே இல்லாமத்தான் பேச வருது.”

அவன் பெருமூச்சோடு மீண்டும் படத்தைப் பார்க்கத் திரும்ப, அவளது கண்களில் வேகம் வேகமாகத் தாரை தாரையாய்க் கண்ணீர் சுரந்தது. 

“இந்த அமைதிக்கு நான் என்ன அர்த்தம் எடுத்துக்கட்டும்? இது எப்பவும் மாறவே மாறாதுன்னு எடுத்துக்கவா?” அவளது பார்வையைத் தன் மேல் அழுத்தமாகப் பதித்தவனின் தாடை நரம்புகள் இறுகின. அன்பரசியின் பார்வை அவனது கைகளுக்கு மாற, அதன் இறுக்கம் அவளது கோபத்தை முற்றிலும் குறைத்திருந்தது.

அமைதியாக இருந்தவனின் கண்கள் திரையில் இருந்தாலும், அவன் சிந்தனையில் அவன் ஆசையாகக் காதலித்த காதலியும், விருப்பமே இல்லாமல் கடமைக்காகத் திருமணம் செய்த மனைவியும் சலிக்காமல் வந்து போயினர். 

“எப்பவும் மறக்கவே மாட்டீங்களா?” காயத்ரி பற்றிய கேள்விதான் இது என வீராந்தகனுக்குத் தெளிவாகப் புரிந்தது. 

அவளைப் பார்க்காமலேயே ‘இல்லை’ எனத் தலையசைத்தவனுக்கு, கேள்வி கேட்டவளை விட அதிக வலி. கைகூடிய காதல் நிலைக்கவில்லை என்பது ஒரு வகை வலி என்றால், அந்த அழகிய உணர்வை மனைவியிடம் ‘மறக்க வாய்ப்பே இல்லை’ என்று கூறுவது அதை விடப் பெரிய கொடுமைதான். முதல் காதலை அவ்வளவு எளிதில் மறந்திடவும் முடியவில்லை.

“பொய்யாவது சொல்லலாமே!” ஏமாற்றம் கண்ணீராய்ப் பொங்கியது அன்பரசிக்கு. 

“மறுபடியும் பொய்யான நம்பிக்கை கொடுக்க நான் விரும்பல” அவளைத் திரும்பிப் பார்த்துக் கூறியவன் கண்களில் அவளுக்கான சிறு கரிசனை கூட இல்லை. 

தன்னுடைய வேதனை ஒன்று மட்டுமே அவனுக்குப் பெரிதாகத் தெரிந்தது. ஒரு பெண் எத்தனை திடமாக இருந்தாலும், கணவன் துணையில்லாமல் வாழும் வீட்டில் உரிமை இழந்து நிற்கும் நிலைதான் அன்பரசிக்கும். எல்லாம் அந்நியமாகவே தோன்றியது. நிற்பதற்கு, நடப்பதற்கு, உண்பதற்கு என எதிலும் ஒரு தயக்கம். அவர்கள் கொடுக்கும் உணவிற்காகவே வீட்டில் வேலைகளைத் தானே செய்யும் நிலைக்குச் சென்றிருந்தாள்.

“ஒரு நிமிஷம்!” – மீண்டும் வெளியேற இருந்தவளின் நடை அவனால் தடைபட்டது. அவள் அவனைத் திரும்பிப் பார்த்தபோது, ஒரு படிவத்தை அவளிடம் நீட்டினான். “தாத்தா உனக்கு அப்ளிகேஷன் வாங்கிட்டு வரச் சொன்னாங்க. ரெண்டுமே லோக்கல் காலேஜ்தான். உனக்கு எது வசதியோ சொல்லு, அடுத்த வாரத்துல நவிரனை அனுப்பி அட்மிஷன் போட்டுடலாம்.”

“சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க… ‘உன்கிட்ட இருந்து வர்ற எதுவுமே எனக்கு வேண்டாம்டா’ன்னு கத்தணும் போல இருக்கு. ஆனா ரொம்பக் கட்டுப்பாடா இருக்கேன்.” இதை விட அவள் நேரடியாகப் பேசிவிட முடியுமா என்கிற ஒரு நொடி கோபம் வீராந்தகனுக்கு வந்தது. 

“ரொம்பப் பேசுற!” என்றான் பற்களைக் கடித்து. அவனுக்குப் பதில் கொடுக்க விருப்பமில்லாமல் போக, அவள் திரும்பிப் பார்க்காமல் எழுந்து சென்றுவிட்டாள் சக்தி கேட்ட உணவு வகைகளைச் சமைக்க.

மதிய நேரம் சக்தி கிளம்பி நிற்க, “சாயந்திரம் வரை தாங்குமா அண்ணி?” எனக் கேட்டாள். 

“நைட் கூட வச்சுச் சாப்பிடலாம் சக்திம்மா” என்ற அன்பரசி, மற்றொரு பாத்திரத்தைக் காட்டி, “இதுல ஊறுகாய் இருக்கு” என்றாள். 

சக்தி மகிழ்ச்சியில் அன்பரசியை இறுக்கமாகக் கட்டியணைத்து விடைபெற்றாள். வழக்கம்போல வீட்டின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் நின்று முகத்தைத் தூக்கி வைத்திருக்க, அவர்களிடமிருந்து விடைபெற்றுச் செல்லவே பெண்ணுக்கு நேரம் பிடித்தது. இதையெல்லாம் எதிர்பார்த்துத் தானே அவளும் துணிந்து இதில் இறங்கியது? 

இன்னும் எத்தனை நாட்களை இதுபோல் தன்னுடைய விருப்பத்திற்காகச் செல்ல முடியுமெனத் தெரியவில்லை. அதனால்தான் பிடிவாதமாக மனம் விரும்பித் தவிக்கும் இந்த வேலையைச் செய்யத் துணிந்து இறங்கிவிட்டாள்.

படப்பிடிப்புத் தளமே சற்று பரபரப்பாகக் காணப்பட்டது. “தல… இருந்தாலும் உனக்குத் தில்லுதான் போ!” என்றான் சுசிகரன், தமிழ்செல்வனுக்கு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து.

“என்னடா பண்ணச் சொல்ற? ஆட்களைக் கூட்டிட்டு வர வேண்டியது புரொடக்ஷன் காரங்க. அவங்க வரலைன்னா நாம என்ன பண்றது?”

“புரொடியூசர் வேற இன்னைக்கு ஸ்பாட்டுக்கு வர்றேன்னு சொன்னாரே!”

“வரட்டும். இந்த டயலாக்கை கொஞ்சம் மாத்தி எழுதலாமான்னு பாரு” என்றான் தமிழ் அன்றைய நாளுக்கான வசனங்களைச் சரிபார்த்தவாறே.

“தல…” என இழுத்தான் சுசிகரன். 

error: Content is protected !!
Scroll to Top