என் ஜீவனில் உறைந்திடு – 8 (2)

“ரோஜா, இன்னைக்குக் கேன்டீன் போகல நீ?”

கையில் சிறிய மூங்கில் கூடையைப் பிடித்துக் கொண்டு, தோட்டத்தில் மலர்ந்திருந்த பூக்களை எல்லாம் பறித்துக் கொண்டிருந்த மகளிடம் கேட்டார் சித்ரா.

“இல்லம்மா. ரகு கூட லஞ்ச் போறேன். செஃப் இளமாறன் எங்க ரெண்டு பேரையும் இன்வைட் பண்ணியிருக்கார். அன்னைக்கு உங்ககிட்ட சொன்னேன் இல்லம்மா?” சற்றே யோசனையுடன் தலையசைத்தார் அவர்.

“ஓ, கண்டிப்பா போகணுமா ரோஜா?”

“செஃப்கிட்ட நாங்க வர்றோம்னு ரகு சொல்லிட்டார் போலம்மா. இப்போ நான் மட்டும் வரலைன்னு சொன்னா நல்லாருக்காதே” ரோஜா சொல்ல, “சரி. போய்ட்டு வா. ஆனா, அதுக்கு முன்னாடி நாம ரெண்டு பேரும் கோவிலுக்குப் போய்ட்டு வரலாமா? உனக்கு நேரம் இருக்குமா?” என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, உள்ளிருந்து அவரை அழைத்தார் சிவஹரி.

“சித்ரா…” என்று அழைத்துக் கொண்டே அவர் வெளியில் வர, “வந்துட்டேங்க” என்றவர், மகளையும் இழுத்துக் கொண்டு உள்ளே போனார்.

“என்னடா ரோஜா, நீ இன்னும் ரெடியாகல”

“நான் இன்னைக்கு வீட்ல இருக்கேன்ப்பா. அம்மா கோவிலுக்குப் போகணும் சொன்னாங்க. அவங்களைக் கூட்டிட்டு போய்ட்டு வரேன்” என்றாள்.

“ம்ம் சரி மா. வேற ஏதாவது வாங்கணும்னாலும் வாங்கிட்டு வந்திடுங்க. காசு..”

“இருக்குப்பா”

“சரி ரோஜா” என்று திரும்பியவர், “கையில் என்னடா காயம்?” பக்கத்தில் வந்து கைப் பிடித்துப் பார்த்தார்.

“எப்படி அடிபட்டது?”

“நேத்து கால் தடுக்கி கீழ விழுந்துட்டேன்ப்பா” என்ற மகளைச் சிறு அதிர்ச்சியுடன் பார்த்தார் சித்ரா. அவரிடம் மொத்த கதையையும் ஒப்பித்த மகள் அப்பாவிடம் மாற்றிச் சொல்வதை அவர் விரும்பவில்லை என்பதை அவரது முகபாவமே சொன்னது.

“கவனமா இருக்க மாட்டியா மா? சரி, இன்னைக்கு வீட்ல இருந்து ரெஸ்ட் எடு. வெளில வெயில்ல ரொம்ப அலைய வேண்டாம். பார்த்துக்கோ சித்ரா” என்று விட்டு வெளியே சென்றார் அவர்.

“ரோஜா” என்று மகளை அதட்டினார் சித்ரா.

“இல்லம்மா. அன்னைக்கு ஆக்சிடென்ட்டாச்சு இல்ல? அப்போ ஹெல்ப் பண்ணுதுக்கே அப்பா திட்டினார். அதான் இன்னைக்குச் சொல்லாம விட்டேன். பொய் சொல்லலமா. உண்மையை மறைச்சேன். அவ்ளோதான்” என்று சமாளித்த மகளின் தலையில் தட்டி, உண்மையை என்னைக்கும் மறைக்கக் கூடாது. மறைக்கவும் முடியாது. அது தானாவே வெளியில் வந்திடும். அதுக்கு நாமளே சொல்லிடுறது நல்லது என்றார்.

குழந்தையில் இருந்து அவர் சொல்லும் போதனையை இப்போதும் சொல்ல, “சாரிம்மா” என்றாள் மகள்.

“சரி விடு. கோவிலுக்குப் போகலாம், வா” என்றார் மகளின் தலைக்கோதி.

ஒரு மணி நேரம் கழித்து இருவரும் அஷ்டலட்சுமி கோவிலில் இருந்தனர். சித்ரா கண் மூடி மனதுருக வேண்டி நின்றார். அதன் பின்னரும் கோவிலில் வெகு நேரம் அமைதியாய் அமர்ந்திருந்தார். ரோஜா தன் இயல்பாகச் சலசலத்து கொண்டேயிருந்தாள்.

“நித்திக்கு போல உனக்கும் ஒரு நல்ல வரன் அமைஞ்சா நிம்மதியா இருக்கும்.” வாய் விட்டு புலம்பினார் சித்ரா.

“அதுக்கு நான் மனசு வைக்கணும். சாமியை தொல்லை பண்ணாதம்மா” என்ற மகளை முறைத்தார் சித்ரா.

“தாய் சொல் தட்டாத பிள்ளை நான் மா. வாங்க வீட்டுக்கு போவோம். அப்பாக்கு லஞ்ச் கொடுத்து விடணும்” ரோஜா சொல்ல எழுந்துக் கொண்டனர்.

அவர்கள் கார் வீட்டை நெருங்கும் போது எதிர்புறத்தில் ரகுவரனின் கார் வந்து கொண்டிருந்தது. தங்கள் காரின் வேகத்தைக் குறைத்து அவன் செல்ல வழி விட்டாள் ரோஜா.

அவன் காரைத் தொடர்ந்து சென்று உள்ளே நிறுத்தி அவள் இறங்க, ரகுவரன் தன் காரின் மீது சாய்ந்து நின்றிருந்தான்.

காலை பதினோரு மணி வெயில் நேராக அவன் முகத்தில் விழ, அதைப் பொருட்படுத்தாமல் நின்றிருந்தான்.

“வா ரகு. வீட்டுக்குள்ள வா, ஜுஸ் சாப்பிட்டுப் போகலாம்” சித்ரா அழைக்க, “இல்லத்த, இன்னொரு நாள் வர்றேன். இப்போ லேட்டாச்சு” என்றவன், “ரோஜாவை கூட்டிட்டு போறேன் அத்த.” என்றான்.

“சரி, ரகு. ரோஜா கவனம்” என்றார் மகளிடம்.

“ஓகே மா” என்றவள் திரும்பி ரகுவை பார்த்தாள். அவளை உச்சி முதல் உள்ளங்கால் வரை ரசனையாய் பார்த்தவன், “ரோஜா ரோஜா, கண்ட பின்னே உன்னிடத்தில் என்னை விட்டு..” என்று பாட ஆரம்பிக்க, “கண்ணை நோண்டி கையில கொடுத்திடுவேன் மிஸ்டர் ரகுவரன்” என்றாள் ரோஜா.

அவனை முறைத்துக் கொண்டு நின்றிருந்தவளைப் பார்க்க அவனுக்குச் சிரிப்பு பீறிட்டது.

ரோஜா திரும்பி வீட்டை ஒரு பார்வை பார்த்து விட்டு அவன் காரில் ஏறினாள். ரகுவரன் பேசிக் கொண்டே வந்தான். ரோஜா இயல்பாக அவனுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கையில் இளமாறனின் ரெஸ்டாரண்ட் அவர்கள் கண்ணில் பட்டது.

அவர்கள் வருகைக்காக ஆவலாகக் காத்திருந்தாலும் கூட அந்த நிமிடம் வேறொரு வேலையாகத்தான் வெளியில் வந்தான் இளமாறன்.

சரியாக அவனுக்கு மிக அருகில் சென்று காரை நிறுத்தி இறங்கினாள் ரோஜா. மறுபுறம் ரகுவரனும் இறங்க அவன் கையில் கார் சாவியைக் கொடுத்தாள்.

ஒரு சின்னத் தலையசைப்பு. அந்த நிமிடம் அவ்வளவுதான் அவனால் முடிந்தது. அவன் பார்வை முழுவதும் ரோஜாவின் மேலேயே இருந்தது.

மஞ்சளில் அடர் நீல கரை வைத்த மல்மல் சேலை அணிந்திருந்தாள். கோவிலுக்குச் சென்று வந்ததற்கு அடையாளமாக, பூ, திருநீர், குங்குமம் என்று மங்கலகரமாக வசீகரித்து நின்றவளின் மேலிருந்து விழிகளைப் பிரிக்க முடியவில்லை அவனால்.

“ஹாய் மாறன்” என்று ரகுவரன் கை நீட்ட, “ஹாய், வாங்க ரகுவரன்” என்று தடுமாற்றத்துடன் வரவேற்றான் இளமாறன்.

“பிளீஸ், உள்ள வாங்க” முன்னே நடந்தபடி சொன்னான். ரகுவரன் அவனைப் பின் தொடர, “வாங்க ரோஜா” என்றான் இளமாறன்.

“எப்படியிருக்கீங்க? நேத்து அடிப்பட்டது வலியில்லையே?” அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் அவன் விசாரிக்க, “சின்ன அடி தானே செஃப்? ஐ ஆம் ஓகே” என்றாள் அவள்.

உணவகத்தின் உள்ளே நுழையும் போதே அதன் பெயரைதான் முதலில் கவனித்தாள் ரோஜா.

“த புஃட் அபேஃர்ஸ்” (The Food Affairs) மெல்ல வாசித்து, “இன்ட்ரஸ்டிங்” என்றாள்.

ரகுவரனின் கண்கள் மொத்த உணவகத்தையும் துல்லியமாக ஸ்கேன் செய்தது.

“இவ்வளவு பெரிய இடமா இருக்கும்னு நான் நினைக்கல மாறன். ரொம்ப நல்லாருக்கு. நல்ல ரசனையான டேஸ்ட் உங்களுக்கு” என்று பாராட்டினான் அவன்.

“தேங்க்ஸ்” என்றான் மாறன்.

அவர்கள் இருவருக்கும் உணவகத்தைச் சுற்றிக் காட்டினான். ரகுவரன் கருத்துகள் சொல்லிக் கொண்டே வர, அவனும் அதே தொழிலில் இருப்பதால் கவனத்துடன் கேட்டுக் கொண்டான் இளமாறன்.

ரோஜா ஒவ்வொன்றையும் நுணுக்கமாகப் பார்த்துக் கொண்டே வந்தாளே ஒழிய எதுவும் சொல்லவில்லை.

“ஐ ஆம் இம்ப்ரஸ்ட் ப்ரோ” அவன் தோளில் தட்டிச் சொன்னான் ரகுவரன். அவன் கண்களில் இப்போது மெச்சுதல் தெரிந்தது.

“லஞ்ச்க்குக் கெஸ்ட் வந்தா இங்க பிஸியா இருக்கும். நாம மேல போய்டலாம், வாங்க” என்று அவர்களை மேலே அழைத்துச் சென்றான் இளமாறன்.

இப்போது தனை மறந்து, “வாவ்” என்றாள் ரோஜா.

முதல் தளத்தில் அமைத்திருந்த திறந்தவெளி உணவகம் அவளை மிகவும் கவர்ந்தது. உள்ளே நுழைந்ததும் வலப்புற ஓரத்தில் சிறிய கிச்சென் அமைப்பும், அதைத் தொடர்ந்து வாடிக்கையாளர் அமர்ந்து உண்ண மேஜைகளும் போடப்பட்டிருந்தது. சிறிய சிறிய குடில் போன்ற அமைப்பு, அதில் பற்றிப் படர்ந்து கொண்டிருந்த பூச்செடிகள் சீராக வளர்ந்து வாடிக்கையாளர்களைத் தொந்திரவு செய்திடாத வண்ணம் பராமரிக்கப்பட்டிருந்தது.

வண்ண வண்ண குடைகளின் கீழே, மலர்ந்திருந்த பல வண்ண சிறிய மலர்களைப் பார்த்ததும் மனம் மலர, “ஆம்பியன்ஸ் (Ambience) ரொம்ப நல்லாருக்கு செஃப்” என்றாள் ரோஜா. அவளின் பாராட்டைப் பிரதிபலித்தது ரகுவரனின் கண்கள். ரோஜாவின் அருகில் நின்றிருந்தவனை ஒரு நொடி கண்ணைச் சுருக்கிப் பார்த்த இளமாறனுக்கு அப்போதுதான் அந்தக் கேள்வி உதித்தது.

ரோஜா, ரகுவரன் இருவரையும் முதல் முறையில் இருந்து சேர்ந்தே பார்க்கிறான் அவன். அப்படியென்றால், அதை நினைத்துப் பார்க்கையிலேயே மூச்சடைப்பது போலிருக்க, ரோஜாவை கூர்ந்தான் அவன். அந்நேரம் ரகுவரனுக்கு அலைபேசி அழைப்பு வர, “எக்ஸ்கியூஸ் மீ” என்று அவன் விலக, “ரோஜா, ரகு?” கேள்வியை முடிக்க முடியாமல் தடுமாறினான் இளமாறன்.

அவன் விளக்கி சொல்லாமலே அவன் கேட்க வந்ததைப் புரிந்து கொண்டு, “ஃபேமிலி ப்ரெண்ட்” என்றாள் ரோஜா. அதைக் கேட்டுச் சட்டெனத் திரும்பிய ரகுவரன், “அடிப்பாவி” என்றான் நின்ற இடத்தில் இருந்தே. அவனைத் திரும்பிப் பார்த்த ரோஜா முறைக்க, சிரித்தான் அவன்.

error: Content is protected !!
Scroll to Top