என் ஜீவனில் உறைந்திடு – 33 (2)

நித்யா, ரோஜா இருவரும் சுகந்தியை தேடி மணமகள் வெண்பாவிற்கு ஒதுக்கியிருந்த அறைக்குச் சென்றார்கள்.

சசிகுமார், இளமாறனை பின் தொடர்ந்தான்.

சிவஹரி, சித்ரா இருவரும் இளமாறன் வீட்டுப் பெரியவர்களான கஸ்தூரி, வைத்தியநாதனுடன் சென்று அமர்ந்தார்கள்.

கஸ்தூரி, வைத்தியநாதன் இருவரும் வயது மற்றும் மூப்பின் காரணமாகத் தளர்ந்திருந்தார்கள்.

அவர்களின் ஆரோக்கியம் அவர்களைப் போலவே தள்ளாடியது. ஆகையால், சுகந்தி அவர்களைத் தன்னோடு அழைத்துக் கொண்டார்.

அவர்களை நாள் முழுவதும் பார்த்துக் கொள்ள வீட்டோடு செவிலியரை பணிக்கு அமர்த்தியிருந்தார்.

இளமாறன், ரோஜா, ஆதினியுடன் சென்று அவர்களை அடிக்கடி பார்த்துக் கொண்டனர்.

இப்போதும் மண்டபத்தின் மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் மேடை நன்றாகத் தெரியும்படி அவர்கள் அமர்ந்திருக்க, சித்ரா கணவருடன் சென்று அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

“ஹாய், கல்யாண பொண்ணே” என்று கேலியாக அழைத்தபடி வெண்பாவிடம் சென்றாள் ரோஜா.

“ஹாய் அண்ணி” என்று ரோஜா மற்றும் நித்யாவை நிமிர்ந்து பார்த்த வெண்பாவின் முகத்தில் வெட்கத்தின் சாயல். அதில் மேலும் அழகாய் தெரிந்தாள் அவள்.

“ரோஜா, நின்னுட்டே இருக்காத. கால் வீங்கப் போகுது. வா, வந்து இப்படி உட்காரு” அப்போதுதான் அறைக்குள் நுழைந்த சுகந்தி, நேராக மருமகளிடம்தான் வந்தார்.

ஒரு இருக்கையை மருமகளுக்காக அவர் இழுத்துப் போடவும், அதில் அமர்ந்தாள் ரோஜா.

“இவங்களுக்குக் கொஞ்சம் தலை அலங்காரம் பண்ணி விடுங்கம்மா” என்று அங்கிருந்த அழகு நிலைய பெண்களிடம் மருமகளைக் காட்டிச் சொன்னார் சுகந்தி.

“அச்சோ, வேணாம் த்த” ரோஜா மறுக்க, “நீ பேசாம, உட்காரு ரோஜா.” என்று மருமகளை அடக்கினார் அவர்.

வெண்பா, ரோஜா, நித்யா என மூன்று பெண்களையும் அழகுப்படுத்தி விடத் தொடங்கினார்கள் அந்தப் பெண்கள்.

சுகந்தி ஏதோ வேலையாக வெளியில் செல்ல, அறைக்குள் வந்தார் சித்ரா. அவர் கையில் இரண்டு சிறிய உணவு பாத்திரம் இருந்தது.

“வெண்பா, நித்யா, இந்தாங்க உங்க ரெண்டு பேருக்கும் பால் பணியாரம்.” என்று ஒரு கிண்ணத்தைக் குட்டி கரண்டியுடன் அவர்களிடம் கொடுத்து விட்டு, ரோஜாவிடம் திரும்பினார்.

தாய்மையில் மிளிர்ந்த மகளை அவர் பார்த்த பார்வையிலேயே வாஞ்சை கொட்டிக் கிடந்தது.

“இந்தா ரோஜா குட்டி, உனக்கு இளநீர் பாயாசம். உன் வீட்டுக்காரர் கொடுத்து விட்டார்” அதைக் கேட்டதும் ரோஜா மலர்ந்தாள்.

பொதுவாக அவளுக்கு இனிப்பு அத்தனை பிடிக்காது. ஆனால், கர்ப்பம் என்று வந்து விட்டால், அவளுக்கு இனிப்பை அதிகமாகத் தேடும்.

கர்ப்பக்காலச் சக்கரை வந்து விடக் கூடாது என்று சுகந்தி அவளை மிரட்டி இருந்ததால், இளமாறன் அவளைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தான்.

“தேங்க்ஸ்ம்மா” அம்மா நீட்டியதை வாங்கி அருந்த தொடங்கினாள்.

“ஏன் ரோஜா, அப்பா சொல்றது உண்மையா? மாப்பிள்ளை வேலையை விட்டுட்டு இன்னொரு ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்கப் போறாராம்?” என்று அவர் குனிந்து மகளிடம் கேட்க, முதலில் தயங்கி பின்னர் மறைக்க விரும்பாமல் ஆமென்று தலையசைத்தாள் ரோஜா.

சித்ரா மகளை அதிர்ச்சியுடன் பார்த்தார்.

“உங்கப்பாவை..” என்றவர், சுற்றிலும் பார்வையை ஓட்டி விட்டு, “உனக்கும் இருக்கு. நீ வீட்டுக்கு வா. அம்மா பேசிக்கறேன்” என்று இளைய மகளை மிரட்டிய சித்ராவின் கண்கள் மூத்த மகளையும் முறைத்தது.

அம்மா வெளியில் சென்றதும் சகோதரிகள் இருவரும் வெடித்துச் சிரித்தார்கள்.

“அப்பா சிக்கினார்” என்ற இருவரின் குரலிலும், முன்பை போலப் பயம் இல்லாமல் சிரிப்பு மட்டுமே இருந்தது.

அங்கே கணவரை பிடித்துக் கொண்டார் சித்ரா.

“சித்ரா, வீட்டுக்குப் போய்ப் பேசலாம்” என்று சிவஹரி மனைவியைச் சமாளிக்க, “என்கிட்ட ஏன் முன்னாடியே சொல்லல?” என்று கோபத்துடன் கேட்டார் சித்ரா.

“நீங்க கஸ்தூரி அம்மாகிட்ட சொல்லவும்தான் எனக்குத் தெரியுது. மாப்பிள்ளை வேலைக்கு இப்போ என்ன குறை? ஏற்கனவே அவங்களுக்கு ஒரு ரெஸ்டாரண்ட் இருக்கில்ல? அப்புறம் ஏன் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் வேலையை விடணும்?” என்று அவர் கேள்விகளாக அடுக்க, சிவஹரி முழித்துக் கொண்டு நின்றிருந்தார்.

“ஏற்கனவே மாப்பிளைக்கு வேலை அதிகம். அவர்தான் நம்ம ரெண்டு கேன்டீனையும் கூடப் பார்க்கறார். இதுல இன்னொரு ரெஸ்டாரண்ட்..” சித்ரா புலம்பத் தொடங்க,

“சித்ரா…” கரிசனத்துடன் கனிவாக அழைத்தார் சிவஹரி.

“இது நம்ம மாப்பிள்ளை முடிவு. அவர் என்கிட்ட நேத்துதான் இதைச் சொன்னார். இதுல ரோஜாவுக்கும் சம்மதம் போல. அவங்க யோசிச்சு முடிவு செய்திருப்பாங்க சித்ரா. எல்லாம் சரியா வரும். இல்லனா, என்ன? அவங்களுக்கு நாம இருக்கோம். சரியா?” மனைவியின் முகம் பார்த்து அவர் கேட்க, சித்ரா சிந்திக்கத் தொடங்கினார்.

விரைவில் சமாதானமும் ஆகி விடுவார். அவர் அப்படித்தான். அன்பும், அக்கறையும் கலந்த கலவை அவர்.

வெண்பா தயாராகி மேடைக்குச் செல்ல, நித்யா, ரோஜா இருவரும் கீழிறங்கி வந்தார்கள்.

அங்கே சங்கரன், வினோத், சுகந்தி மூவரும் மேடையைப் பார்த்தபடி, மேடைக்கு நெருக்கமாகக் கீழே நின்றிருந்தார்கள்.

ஆதினி, மித்ரன், மிருதுளா எனக் குழந்தைகள் மூவரும் அவர்கள் வசம் இருந்தார்கள்.

“நீ கொஞ்ச நேரம் உட்காரு ரோஜா” என்று நித்யா தங்கையிடம் சொல்ல,

“இல்லக்கா நான் நிக்கறேன்” என்றாள் ரோஜா. அவர்கள் இருவரின் பார்வையும் அங்குக் கூடியிருந்த விருந்தினர்களின் மேல் படிந்தது.

எட்டாம் வரிசையில் மனைவி, மகனுடன் அமர்ந்திருந்தான் ரகுவரன்.

“அங்க பாரு நித்திக்கா, அமிர்தா பவன், அடையார் பேலஸ்கிட்ட அடி வாங்கிட்டு இருக்கு” ரோஜா சிரிப்புடன் சொல்ல,

“ரோஸ் குட்டி, நீ முதல்ல இதைப் பார். வினோத் அந்தப் பொண்ணையே பார்த்திட்டு இருக்கான்.” என்றாள் நித்யா.

அதைப் பார்த்ததும், “லவ் இஸ் இன் த ஏர் (Love is in the Air)” என்றாள் ரோஜா சுவாரசியத்துடன்.

“எங்க வீட்ல சீக்கிரம் ஒரு பஞ்சாயத்தும், லவ் மேரேஜும் இருக்கும் போலயே” ரோஜா சொல்லவும் சிரித்தாள் நித்யா.

“ஆமா, ரகுக்கு என்ன பிரச்சனை?” நித்யா கேட்க, “தெரியலை, ரகுவை கேட்டாதான் தெரியும்” என்றாள் ரோஜா.

“ரகுகிட்ட என்ன கேட்கணும்?” இப்போதும் ஆடு, தானாக வந்து அவர்களிடம் தலையைக் கொடுத்தது.

பெண்கள் இருவரும் அவனைக் கேள்விகளால் துளைத்தெடுக்க, “அது வந்து..” என்று திணறி, திண்டாடிக் கொண்டிருந்தான் அவன்.

இளமாறன் உணவு தயாரிப்பை மேற்பார்வை செய்து விட்டு, அரங்கத்திற்குள் வந்தான்.

அப்பாவை பார்த்ததும் ஓடி வந்தாள் ஆதினி. அவளின் உயரத்திற்குக் குனிந்து மகளைக் கையில் அள்ளிக் கொண்டான் இளமாறன்.

பட்டுப் பாவாடை சட்டையில் கொள்ளை அழகாய் இருந்தாள் குழந்தை. அப்பாவின் கழுத்தை கட்டிக் கொண்டு முகத்தோடு முகம் வைத்து அவள் செல்லம் கொஞ்ச, அந்தக் காட்சியைத் தங்களின் கேமரா கண்களின் வழியே பார்த்து அழகிய புகைப்படம் ஆக்கினார்கள் புகைப்படக் கலைஞர்கள்.

“அப்பா நெத்தில தண்ணி..” தன் பிஞ்சுக் கரங்களால் அப்பாவின் முகத்தில் துளிர்த்திருந்த வியர்வையைத் துடைத்து விட்டாள் மகள்.

“செல்லக் குட்டியம்மா, கைல துடைக்கக் கூடாது” என்று அவன் சொல்லவும், மூக்கை சுருக்கி, நுனிநாக்கை கடித்து, அவளின் பாவாடையில் பின் குத்தியிருந்த கைக்குட்டையை எடுத்து துடைத்து விட்டாள் ஆதினி.

error: Content is protected !!
Scroll to Top