மூன்று வருடங்களுக்குப் பிறகு…
“அப்பா, இப்படியில்லப்பா.. இ..ப்ப..டி..” மழலை குரல் ஒன்று சத்தமாக அதட்டிக் கொண்டிருந்தது.
“எப்படிக் குட்டிம்மா? அப்பாக்கு தெரியலையே” அப்பாவியாக நடித்துக் கொண்டிருந்தான் இளம் தந்தை ஒருவன்.
“ஐயோ, அம்மா சொல்லித் தந்தாங்க இல்லப்பா? மறந்துட்டீங்களா?” தன் பிஞ்சுக் கரங்களால் நெற்றியில் அறைந்துக் கொண்டாள்.
“அம்மா, ஐயோ சொல்லக் கூடாது சொல்லியிருக்காங்க இல்ல? பாப்பா மறந்துட்டீங்களா” கண்ணை உருட்டி, மிரட்டி அவன் கேட்க, “சா…ரி” என்று தன் பால் பற்களைக் காட்டி சிரித்து மயக்கினாள் குழந்தை.
அந்தச் சிரிப்பை பார்த்தப் பின் அவனால் மன்னிக்காமல் இருக்க முடியுமா? மகளைக் கையில் அள்ளி முத்தமிட்டு மீண்டும் படுக்கையில் நிற்க வைத்தான் அவளின் அப்பா.
“குட்டிம்மா, அசையாம நேரா நில்லுங்க. அப்பா, உங்களுக்குத் தலை பின்னிடுறேன்”
“சரிப்பா” சமத்தாய் சொன்னாள் குழந்தை.
அவளின் முதுகை நிறைத்த நீள முடியை கோதிப் பிரிக்கத் தொடங்கினான் அவன்.
“அப்பா..”
“என்ன குட்டிம்மா?”
“அம்மா, நானு ஒரே ட்ரெஸ்.”
“ஆமாடா குட்டிம்மா. என் அழகு தேவதைங்க, நீங்க ரெண்டு பேரும் ஒரே போல ட்ரெஸ்” அன்பில் தோய்ந்து ஈரமாய் வந்தது அவன் வார்த்தைகள். மகளின் கன்னத்தையும் மென்மையாய் ஈரமாக்கினான் அவன்.
“நீங்க மட்டும் ஏன் சேம் ட்ரெஸ் இல்ல?” மெல்ல திரும்பி இடையில் கை வைத்து கேட்ட அந்தச் சின்ன உருவம், அவன் மனதை மொத்தமாகக் கொள்ளை கொண்டாள்.
மகளின் கேள்வியில் இருந்த அப்பாவித்தனம் அந்த அப்பாவிற்குச் சிரிப்பை தந்தது. அவன் சத்தமாகச் சிரிக்கவும், மகளும் கிளுக்கிச் சிரித்தாள்.
உலகின் மொத்த அன்பும் அவன் கண்களில் வழிய, மகளை மீண்டும் அணைத்துக் கொண்டான்.
“குட்டிம்மாவும், ரோஜாம்மாவும் எல்லோ கலர் பட்டு போட்டிருக்காங்க. அப்பா, பட்டு வேட்டி. ஆனா, குட்டிம்மா ட்ரெஸுக்கு மேட்ச்சா எல்லோ ஷர்ட் போட்டிருக்கேன், இதோ பாருங்க. சோ, அப்பாவும், பாப்பாவும் சேம், சேம்” என்று இருவரின் உடையையும் ஒன்றாக இழுத்து அவன் காண்பிக்க,
“ஆமாப்பா” என்று அதிசயித்த குழந்தை, “எல்லோ, எல்லோ டர்டி பெல்லோ” என்று சொல்லி இரு கரங்களாலும் வாய் மூடி சிரிக்கத் தொடங்கினாள்.
குழந்தையோடு சேர்ந்து அவனும் சிரிக்க, அவர்களைக் கலைத்தது அந்தக் குரல்.
“இளா, இளா, இங்க வாங்களேன்” மனைவியின் குரலில் அவன் முகம் மென்மையாக, “அம்மா கூப்பிடுறாங்க பாப்பா. வா, போவோம்” என்றான் மகளிடம். சரியென்று தலையசைத்து அவன் கைப் பிடித்து நடந்தாள் மூன்றரை வயது ஆதினி.
அவர்கள் இருவரும் பக்கத்து அறைக்கு வர, அங்கே பட்டுச் சேலையைக் கட்டத் திணறிக் கொண்டிருந்த ரோஜா, அவர்களைப் பார்த்ததும் சோர்ந்து படுக்கையில் அமர்ந்தாள்.
ரோஜாவை கண்டதும், “அம்மா..” என்று ஓடி அவள் வயிற்றில் முகம் புதைத்தாள் ஆதினி.
மகளைக் கொஞ்சி, முத்தமிட்டு, “ஆதினி செல்லம், பெரியம்மாகிட்ட போங்க. அம்மா சேலையைக் கட்டிட்டு இப்போ வந்திடுவேன்” ரோஜா சொல்லவும், திரும்பி அப்பாவை பார்த்தாள் மகள்.
அவன் கண்ணால் அனுமதி கொடுக்கவும், அவனிடம் வந்தாள்.
மகளை அழைத்துச் சென்று அவளின் பாட்டி சித்ராவிடம் விட்டுவிட்டு அவன் அறைக்குள் வருவதற்குள், “இளா, இளா” என்று அவன் பெயரை ஏலம் விட்டாள் அவன் மனைவி.
“இருக்கேன் டி, இங்கதான் இருக்கேன்” அறையின் கதவை சாத்தி விட்டு வந்து மனைவியை அணைத்தான்.
“இளா, சேலை கசங்குது” அவள் சிணுங்க, “ம்ம்” என்றவனின் கரங்கள் மனைவியின் மேடிட்ட வயிற்றை மென்மையாய் வருடியது.
அவன் தொடுகை உணர்ந்து குழந்தை அசைய, அந்த உணர்வில் உடல் சிலிர்க்க கண் மூடினான்.
“இளா..” பொறுமை காற்றில் கரைய கடுப்புடன் அழைத்தாள் ரோஜா.
“இருக்கேன் ரோஜா” மென்மையாய் உச்சரித்து அதே மென்மையுடன் மனைவியின் உதடுகளை ஈரமாக்கினான்.
“நான் இப்பதான் உங்க கண்ணுக்கு தெரியறேனா?” அவள் கோபிக்கவும், சிரித்தான் இளமாறன்.
“எப்பவும் மகளையே கவனிங்க, என்ன?” என்று முறைத்து,
“அவளுக்கு நித்திக்கா தலை பின்னி விடுறேன் சொன்னா. அக்காகிட்ட விடாம நீங்க ஏன் உங்க பொண்ணு கூட மல்லுக்கட்டிட்டு இருக்கீங்க?” ரோஜா கேட்க, பதிலுக்கு அவளை முறைத்தான் இளமாறன்.
“சரி, சரி. எனக்குச் சேலை கட்ட ஹெல்ப் பண்ணுங்க. என்னால குனிஞ்சு பிளீட்ஸ் எடுக்க முடியல. எல்லாம் உங்களாலதான்” அவள் புகார் போலச் சொல்ல, “ஆமா, நீ ஒன்னுமே பண்ணல” என்று சாதாரணமாகச் சொல்லி அவளை வெட்கப்பட வைத்து, அவள் சொன்ன வேலையைச் செய்தான் அவன்.
“சீக்கிரம் இளா, லேட்டாகுது. அத்தை நம்மளை தேடப் போறாங்க” அவளின் கோபமும், எரிச்சலும் கர்ப்பக்கால ஹார்மோன்களின் காரணத்தினால் அல்ல.
அன்று இளமாறனின் தங்கை வெண்பாவிற்குத் திருமணம்.
கிட்டத்தட்ட ஒரு வாரமாக அம்மா வீட்டில்தான் அவர்கள் இருந்தார்கள்.
இளமாறன் அந்த வீட்டின் மூத்த மகனாக, பொறுப்பான அண்ணனாக முன் நின்று தங்கைக்காக எல்லாம் செய்தான். அப்பா, தம்பியுடன் இணைந்து திருமணப் பொறுப்புகளைக் கவனித்தான்.
அன்று அதிகாலை வெண்பாவின் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்திருந்தது.
மாலை வரவேற்பிற்கு உடை மாற்ற ரோஜாவின் அம்மா வீடு வந்திருந்தார்கள் அவர்கள்.
ரோஜாவிற்குப் புகுந்த வீட்டில் மூத்த மருமகளாக நிறைய வேலைகள் இருந்தது. ஆகையால், அவளுக்கும், அவள் கணவன், மகளுக்கும் உடை, நகை என அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் காத்திருந்தார் அவளின் அம்மா சித்ரா.
தங்கை கர்ப்பமாக இருக்கிறாள் என்று அக்கறையுடன் அவள் மகள் ஆதினியை கவனித்துக் கொள்வது மொத்தமும் அக்கா நித்யாதான்.
இப்போது நேரமாவது குறித்து ரோஜா கவலைப்பட, “நம்மள உங்கத்தைத் தேட மாட்டாங்க ரோஜா. பிளீஸ் பதறாம இரு. நான் அவங்ககிட்ட சொல்லிட்டுதான் வந்தேன். கொஞ்சம் லேட்டா வருவோம்னு. கெஸ்ட் வர்றதுக்கு முன்னாடி போய்டலாம்” என்று அவளின் புகாரை புறங்கையால் தள்ளி விட்டான் இளமாறன்.
அவள் முன்னே மண்டியிட்டு அமர்ந்து பட்டுப் புடவையைச் சரி செய்து விட்டான். ரோஜாவின் கால்களில் இருந்த வெள்ளிக் கொலுசு அவன் கண்ணில் பட்டுத் தொல்லை செய்ய, அழுத்தமாய்த் தொட்டு வருடினான்.
“இளா..” ரோஜா உறும,
“இருக்கேன்..” என்றான் கிசுகிசுப்பான குரலில்.
“இன்னொரு ஹனிமூன் போகலாமா ரோஜா? இந்த டைம் தூரமா வேணாம். இங்க பக்கத்தில் இருக்கச் சிம்லா, டார்ஜிலிங், மணாலி போகலாமா?” அவன் ஒற்றைக் கண்ணடித்துக் கேட்கவும், விழி விரித்தாள் ரோஜா. மெல்லக் குனிந்து அவன் தலை முடியை பிடித்து ஆட்டினாள்.
இளமாறன் ஏற்கனவே மனைவியிடம் சொல்லியது போலவே, அவளை ஒரு வாரம், பத்து நாட்கள் என இரு முறை வெளிநாடு அழைத்துச் சென்றான். எல்லாம் ரோஜா ஆசைப்பட்ட இடங்கள்தான். என்னவொன்று மகளுடன் சென்றார்கள். அதில் இருவருக்கும் வருத்தம் ஒன்றுமில்லை. மாறாக மகளோடு சேர்ந்து வேலை நெருக்கடிகள் ஏதுமின்றி, கவலையின்றி நாட்களை ரசித்துச் செலவழித்து ஊர் திரும்பினார்கள்.
அவர்கள் கடந்த முறை வியட்நாம் சென்று விட்டு வந்ததும் ரோஜாவிற்குக் குழந்தைத் தங்கி விட்டது. அதனால்தான் போலி கோபமும், வெட்கமும் கொண்டாள் அவள்.
“ஒன்னும் வேணாம். என்னால இன்னொரு குழந்தைப் பெத்துக்க முடியாது. அத்தை திட்டுவாங்க. டாக்டர் மருமக நான். பொறுப்பா இருக்கணும்” என்று அவள் சொன்ன தினுசில் அவனுக்குச் சிரிப்பு வந்தது.
அவன் சிரிப்பை அவள் முறைக்க, எம்பி அவள் வயிற்றில் முத்தமிட்டான் இளமாறன். வெட்கமும், கூச்சமும், காதலும் கண்ணில் வழிய அவனைப் பார்த்தாள் ரோஜா. அந்தக் காதலும், பார்வையும் இளமாறன் இதயத்தை ஊடுருவி அவன் ஜீவனை உறைய வைத்தது.
“இப்படிப் பார்க்காதீங்க இளா” என்று அவன் கண்ணை மூடினாள் ரோஜா. அவள் கையை விலக்கி சிரிப்புடன் எழுந்து கொண்டான் இளமாறன்.
அரை மணி நேரத்தில் தயாராகி இருவரும் வெளியில் வந்தார்கள். மகளையும், மனைவியின் மொத்தக் குடும்பத்தையும் இரண்டு கார்களில் அழைத்துக் கொண்டு வரவேற்பு விழா நடக்கும் இடத்திற்கு வந்தான் இளமாறன்.