அவனின் முதலானவள், தொடக்கமானவள். அவனுக்கு அப்பா என்னும் தொடக்கத்தைத் தந்து அவன் வாழ்வில் முதலானவளாய் ஒற்றைப் பார்வையிலே மாறிப் போனவள்.
அவன் வாழ்வில் ரோஜாவை யாராலும் மறக்கச் செய்ய முடியாது என்ற அவனின் கர்வத்தை உடைத்தெறிந்தவள்.
அங்கே ஆதினி மட்டுமல்ல, அவளோடு இளமாறனும் புதிதாகப் பிறந்து வளர்ந்தான்.
அவளோடு ஒவ்வொரு அடியையும் சேர்ந்தே எடுத்து வைத்தான்.
அவன் ரோஜாவை நெஞ்சு நிறைய நேசிக்கக் காரணமாகி போனாள் ஆதினி.
ஆதினி, இரண்டு வீட்டினருக்கும் அனைத்துமாகி போனாள்.
நித்யா தன் மகளைப் போலவே தங்கை மகளிடமும் அதிகப் பாசம் வைத்திருந்தாள், அதனால் அவளைக் காண அடிக்கடி சென்னை வந்து விடுவாள்.
மித்ரனுக்குத் தன் தங்கை மிருதுளாவை போலவே இருக்கும் சித்தியின் மகளை அதிகம் பிடித்தது. அவனது பிடிவாதத்திற்காகவே ஆதினியை காண சென்னை வந்தார்கள் அவர்கள். இல்லையென்றாலும் ரோஜாவை பார்க்காமல் நித்யாவால் இருக்கவும் முடியாது. ரோஜா, அவளின் தங்கை மட்டும் அல்லவே. அது புரிந்து சசிகுமாரும் குடும்பத்தை அடிக்கடி அழைத்து வந்தான்.
சுகந்தி, சங்கரன் விரும்பிய நேரமெல்லாம் குழந்தையை வந்து பார்த்தார்கள். வினோத், வெண்பா அவளுக்கு விளையாட்டு பொருட்களாக வாங்கிக் குவித்தார்கள்.
பேரனின் மகளை, தங்களின் கொள்ளு பேத்தியை கொண்டாடி கொஞ்சி தீர்த்தார்கள் வைத்தியநாதன், கஸ்தூரி தம்பதியினர்.
ரோஜாவும், இளமாறனும் முதல் முறையாக அவர்கள் வீடு சென்று குழந்தையுடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்தார்கள்.
ஆதினியை பார்த்துக் கொள்வதில் கஸ்தூரி, சுகந்தி இருவருக்கும் ஒரே போட்டியும், தகராறும்தான்.
“அம்மா இதெல்லாம் குழந்தைக்குக் கொடுக்கக் கூடாது மா. அவளுக்குச் சேராது” என்று கை வைத்தியம் பார்க்கும் அம்மாவை எச்சரித்து அதட்டுவார் சுகந்தி.
“உன்னையே நான்தான் வளர்த்தேன். என் கொள்ளு பேத்தியை எனக்கு வளர்க்கத் தெரியாதா? அவளுக்கு எது கொடுக்கணும், எது கொடுக்கக் கூடாதுனு எனக்குத் தெரியாதா? நீ டாக்டர்தான். ஆனா, உங்க இங்கிலீஷ் மருந்து எல்லா நேரமும் வேலை செய்யாது. அதுனால நீ பேசாம இரு” என மகளின் வாயை அடைப்பார் கஸ்தூரி.
ரோஜா அனைத்தையும் ஒதுங்கி நின்று புன்னகையுடன் வேடிக்கை பார்ப்பாள்.
ஆனால், இளமாறனால் அப்படியிருக்க முடியாது.
“என் செல்லத்தை இப்படிக் குடுத்துட்டு நீங்க சண்டை போடுங்க” என்று மகளை வாங்கிக் கொண்டு அறைக்குள் போவான் அவன்.
அவர்களின் உலகம் அலாதியானது. அன்பால் நிறைந்தது. ஆதினி அப்பா பெண்.
“ஹலோ மிஸ்டர் செஃப்” என்று சீண்டலாக அழைத்து, “என்னை, கண்ணு தெரியுதா?” என்று பொய் கோபத்துடன் அவனிடம் மல்லுக்கு நிற்பாள் ரோஜா.
“இரு வர்றேன்” மகளை மாமியாரிடம் கொடுத்து விட்டு வந்து மனைவியை இழுத்து அணைத்துக் கொள்வான்.
“என் கண்ணுக்கு உன்னைத் தெரியாம இருக்குமா டி? என் ரோஜா, அப்படியே பன்னீர் ரோஜா மாதிரி கும்முனு வாசமா இருக்க. என் பொறுமையை ரொம்பச் சோதிக்கிற நீ. தெரியுமா?” என்றபடி அவளை உச்சி முகர்வான். முத்தத்தில் தொடங்கி மொத்தமாய் அவளை நிறைப்பான்.
மகளும், மனைவியும் அவனுக்கு நிறைவான வாழ்வை நிரந்தரமாகத் தந்தார்கள்.
இப்பொழுது அவர்களின் புது வீடு முழுமையாகத் தயாராகியிருக்க, ஆதினிக்கு ஆறு மாதமாகையில் புது வீட்டிற்குக் குடும்பமாகக் குடி பெயர்ந்தார்கள்.
சுகந்தி, சங்கரன் இருவரும் மகனின் வீட்டிற்குத் தேவையான அனைத்து பொருட்களையும் கட்டாயப்படுத்தி வாங்கிக் கொடுத்து விட்டார்கள்.
அத்தோடு தங்களின் சொத்தின் ஒரு பகுதியை பேத்திக்கு எழுதி வைத்தார்கள். அந்த விஷயத்தில் இளமாறனால் அவர்களைத் தடுக்க முடியவில்லை.
சில வருடங்களுக்கு முன்பு கஸ்தூரி தங்கள் பரம்பரை வீட்டை அவனுக்கு எழுதி வைக்கும் போதும், மருத்துவமனை நிர்வாகப் பொறுப்பின் பதவியைப் பெற்றோர் அவனுக்குக் கொடுக்கும் போது பெற்றோருடன் வாக்குவாதம் செய்து, வேண்டாம் என்று சண்டையிட்டிருக்கிறான் அவன்.
அதிலும் சுகந்தியிடம் தன் கோபம் முழுதையையும் வார்த்தைகளால் வெளிப்படுத்தி வந்திருக்கிறான்.
ரோஜா அவனைக் காண நேர்ந்த பொழுகள் அவை என அவன் அறியான். அந்தக் காரணங்களை அவளும் அறியாள். ஆனால், இன்று முறையாக அவர்களின் வாரிசை வந்தடைந்தது அவன் பெற்றோரின் சொத்து.
அவனால் மறுக்க முடியவில்லை. பெற்றோரை மேலும் காயப்படுத்த விரும்பவில்லை அவன்.
சிவஹரி சொன்னது போல, அவர்களின் உழைப்பை அவனால் உதாசீனம் செய்ய முடியாது, பெற்றோரை அவர்களின் போக்கில் செல்ல விட்டான்.
அவர்கள் மூவராகப் புது வீட்டில் குடும்பமாய் வாழ்க்கையை வாழத் தொடங்கினார்கள். இளமாறனின் சொந்த உணவகத்திற்கு மிக அருகிலேயே வீடு இருந்தது அவனது வேலையை எளிதாக்கியது.
பல மாதங்களுக்குப் பின்னர், இரண்டு குடும்பங்களும் இல்லாமல் நிறைந்த தனிமை அவர்களுக்கு வாய்த்தது.
தங்களுக்கு இடையில் குழந்தையைக் கிடத்தி நிர்மலமான மனத்துடன், நிம்மதியாக உறங்கினார்கள்.
ரோஜா குழந்தைக்கு ஒரு வயதாகும் வரை வீட்டில் இருக்கும் முடிவில் இருந்தாள். அவள் முடிவை ஆதரித்தான் இளமாறன்.
ஆயிற்று, அவர்கள் புது வீடு வந்து ஒரு மாத காலம்.
ஆதினிக்கு ஏழாம் மாதம் பிறந்திருக்க, தவழ தொடங்கினாள் அவள்.
அந்தக் காலைப் பொழுதில் பரபரப்பாகச் சமையல் அறையில் காலை உணவை சமைத்துக் கொண்டிருந்தாள் ரோஜா.
மகள் பசித்து அழும் முன் வேலையை முடித்து விடும் அவசரத்தில் இருந்தாள்.
இட்லி, பாசிப்பருப்பு சாம்பார், புதினா சட்னி அரைத்து, அதைப் பாத்திரங்களுக்கு மாற்றி அவள் நிமிர்கையில் குழந்தையின் அழுகுரல் கேட்டது.
இங்கே ரோஜாவின் மார்பும் கனக்க, வேகமாகக் கைகளைக் கழுவி, உடை மாற்ற ஓடினாள்.
“இளா, ஒரே ஒரு நிமிஷம் அவளைப் பிடிங்க. என் ட்ரெஸ் ஈரமா இருக்கு. மாத்திட்டு வந்திடுறேன்” என்று கத்தினாள்.
“ம்ம், பொறுமையா வா” என்று மனைவிக்குப் பதில் சொன்ன இளமாறனின் கண்கள் மகளின் மேலிருந்தது.
ஆதினி விழித்து வெகுநேரமாகி இருக்கப் பிள்ளை பசியில் உதடு பிதுக்கி சத்தமாக அழுதாள்.
“ரோஜா..” இளமாறன் குரல் கொடுக்க,
“வர்றேன்..” என்று கத்திக் கொண்டே உடையைச் சரிப்படுத்திக் கொண்டு வந்த ரோஜாவின் காதில் அந்த அழைப்பு விழுந்தது.
“அம்மா…” யார் அழைத்தது?
ஆதினி முதலில் அழைக்க, அவளைத் தொடர்ந்து, “என் செல்லக் குட்டியம்மா” என்றான் இளமாறன்.
ரோஜா அப்படியே உறைந்து நின்றாள். “அம்மா” என்ற வார்த்தையை இளமாறன் சொல்ல முதல் முறையாகக் கேட்கிறாள். ஒரு பேச்சுக்காகக் கூட அந்த வார்த்தையை அவன் சொன்னதில்லை.
ஆதினியும், “ம்மா” என்பாளே தவிர, இப்படி அழுத்தமாக, “அம்மா” என்று இதுவரை உச்சரித்தது இல்லை.
“அ..ம்மா” ஆதினி வீரிட, “என் செல்லக் குட்டி அம்மாக்கு என்ன வேணுமாம்? ஏன் அழுறீங்க?” என்று மகளைக் கொஞ்சிக் கொண்டிருந்தான் இளமாறன்.
“ரோஜாம்மா வேணுமா உங்களுக்கு?” என்று அவன் கேட்க, ரோஜா அலங்க மலங்க விழித்து, பின் சுதாரித்துத் தன் அலைபேசியைத் தேடி எடுத்து அத்தையை அழைத்தாள்.
“சொல்லு ரோஜா” என்று அந்தப் பக்கம் சுகந்தி பேச,
இங்கே, “என் செல்லத்தோட அம்மாவை காணோமா?” என்று கேட்டுக் கொண்டிருந்தான் இளமாறன்.
“வீட்டுக்கு வாங்க அத்த” என்று சுகந்தியிடம் சொன்னாள் ரோஜா.
“ம்ம்” என்றார் அவர். அதற்கு மேல் அவருக்கு வார்த்தைகள் வரவில்லை.
பின்னணியில், “அம்மா” என்றாள் ஆதினி.
“ரோஜாம்மா, என் செல்லக் குட்டி அம்மா, வாங்க. செல்லத்துக்குப் பசிக்குதாம்” இளமாறன் மகளைச் செல்லம் கொஞ்சி சமாதானம் செய்து கொண்டிருந்தான்.
சுகந்தி சமாதானமாகி அலைபேசி அழைப்பை துண்டித்தார்.
“ரோஜாம்மா” திரும்பி மனைவியைப் பார்த்து இளமாறன் அழைக்க, ஓடிச் சென்று மகளோடு சேர்த்து அவனை அணைத்துக் கொண்டாள் ரோஜா.
இளமாறனின் கரங்கள் தாமாக விரிந்து மனைவி, மகளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டது.
“அம்மா…” மீண்டும் அழைத்தாள் ஆதினி, அவனின் தொடக்கத்தைத் தொடர்ந்தான் இளமாறன்.
“ரோஜாம்மா.. என் செல்லக் குட்டியம்மா”.