என் ஜீவனில் உறைந்திடு – 32 (1)

ரோஜாவிற்கு ஒன்பதாம் மாதம் பிறக்கையில் அதற்காகவே காத்திருந்த சித்ரா, வெகு விமர்சையாக மகளுக்கு வளைகாப்பு நடத்தினார்.

இளமாறனின் மொத்தக் குடும்பமும் அவர்களோடு இருந்தது. அவரவர் ஆசைப்படி, வசதிப்படி அவளுக்குத் தங்க வளையல்களைப் பரிசளித்தனர்.

வளைகாப்பு முடிந்து சிறிது நேரம் ஓய்வாக அமர அறைக்கு வந்தாள் ரோஜா.

இன்னும் பத்தே நிமிடங்களில் அவன் முகம் பாராமல் பெற்றோருடன் வீடு சென்று விடுவாள் மனைவி என்பது இளமாறனை கலங்க வைத்தது.

அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

“இளா, நான் இங்க பக்கத்துலயேதான் இருக்கப் போறேன். நீங்க நினைச்ச நேரம் அங்க வரப் போறீங்க. அப்புறம் என்ன?” என்று அவனைச் சமாதானப்படுத்தினாள் ரோஜா.

திருமணமான நாளில் இருந்து முதல் முறையாக மனைவியைப் பிரியப் போகிறான் அவன்.

இதுநாள் வரை அன்றில்கள் போல என்றுமே பிரிந்ததில்லை அவர்கள்.

ரோஜா அம்மா வீடு சென்றாலும், அவளோடு சென்று விடுவான் இளமாறன்.

முன்னரே அவனது மனநிலை அறிந்து, “நீங்க தப்பா நினைக்கலைன்னா, ரோஜா கூட நீங்களும் நம்ம வீட்டுக்கு வந்துடுங்க மாப்பிள்ளை” என்று தயக்கத்துடன் மருமகனை அழைத்திருந்தார் சிவஹரி.

அப்போது பதில் சொல்லாதவன், இந்த நொடி மனைவியைப் பிரிய முடியாமல் முடிவு செய்து விட்டான். மாமனாரிடம் சம்மதம் சொல்லி மனைவியின் வீட்டோடு சென்று விட்டான்.

சிவஹரி மகளுக்காக வாங்கிய வீடு தற்போது தயாராகி இருந்தது. அதனால், மகளின் வாடகை வீட்டை நிரந்தரமாகக் காலி செய்து இங்கு வரச் சொல்லி விட்டார் அவர்.

ரோஜாவின் பிரசவம் முடிந்து மூன்று அல்லது ஆறு மாதங்கள் கழிந்த பிறகு, குழந்தையுடன் அவர்கள் நேராகப் புது வீட்டுக்குச் செல்லலாம் என அவர் சொல்ல, சரியென்றான் இளமாறன்.

அவன் பெற்றோர்களும் எதற்கும் கருத்தோ, மறுப்போ தெரிவிக்கவில்லை.

அவர்களின் விருப்பம், அவர்களின் முடிவு, அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தார்கள் அவர்கள்.

மகள் தங்கள் வீட்டுக்கு வந்ததும்தான் சித்ரா நிம்மதியாக உறங்கினார் என்றே சொல்லலாம்.

மகளுக்காகக் கீழ் தளத்தில் ஓர் அறையைச் சுத்தம் செய்து ஒதுக்கி தயாராக வைத்திருந்தார். ரோஜா, இளமாறன் அந்த அறையைதான் பயன்படுத்தினார்கள்.

சித்ரா கணவருடன் உணவகம் செல்வதையும் நிறுத்தி விட்டார். மகளையும் செல்ல அனுமதிக்கவில்லை அவர்.

ரோஜாவிற்குப் பிரசவ தேதி நெருங்கிக் கொண்டிருந்தது.

கிட்டத்தட்ட இரண்டு வாரங்களே இருந்த நிலையில் ஒரு மழை நாளின் இரவில், கணவனை மெல்ல எழுப்பினாள் ரோஜா.

“ரோஜா, என்ன பண்ணுது? வலிக்குதா?” நொடியில் உறக்கத்தை விரட்டி, பதறினான் இளமாறன்.

அவனுக்கான பதிலை ரோஜாவின் முகமே சொன்னது. அவன் தோளை அழுத்திப் பிடித்தாள் அவள்.

“ரோஜா.. உன்னால எழுந்துக்க முடியுமா? நான் தூக்கவா?” கலக்கமும், கரிசனமுமாக அவன் கேட்க, “அத்த.. அத்தைக்குப் போன் பண்ணுங்க இளா. அம்மாவை கூப்பிடுங்க” வலியில் திக்கி திணறி கத்தினாள் ரோஜா.

பலமுறை அவனிடம் இது பற்றிப் பேசியிருந்தார் சுகந்தி. ரோஜாவிற்கு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும், வலி வரும் இடைவெளியை குறித்துக் கொள்ள வேண்டும், பதறக் கூடாது என்றெல்லாம் அவர் அறிவுரை சொல்லியிருக்க, அந்த நிமிடம் அனைத்தும் மறந்து அவன் மனம் நிர்மலமான உணர்வு.

ரோஜா மட்டுமே அவன் கண்களுக்குத் தெரிந்தாள்.

“ரொம்ப வலிக்குதா ரோஜா?” மனைவியின் வியர்த்த முகம் பார்த்து பயந்து அவன் கேட்க, “இப்போ ஓகே. ஆனா, திரும்ப வலி வரும் போல. இல்லன்னா, ஃபால்ஸ் பெயினா கூட இருக்கலாம். அத்தைக்குக் கால் பண்ணுங்க” வலியில் முகம் சுருக்கியபடி அவள் பேச, அவனுக்கு அப்போதுதான் மண்டையில் மணி அடித்தது.

அவசர அவசரமாக அலைபேசியை எடுத்து சுகந்திக்கு அழைத்தான்.

அவனது அழைப்பை உடனே ஏற்று, “மாறா, ரோஜா எப்படியிருக்கா?” என்றுதான் கேட்டார் அவர்.

“அத்த…” என்று பின்னிருந்து ரோஜா கத்த, “மாறா, உடனே ஹாஸ்பிடல் கிளம்பி வாங்க. நான் ரெடியா இருக்கேன்” என்று அதிகம் பேசாமல் அழைப்பைத் துண்டித்தார் அவர்.

சென்னையை இரக்கமின்றி மழை ஈரமாக்கிக் கொண்டிருந்தது.

அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இளமாறன் அறைக் கதவை திறக்க, பக்கத்து அறையில் இருந்த சித்ரா மகளின் பேச்சுச் சத்தத்தில் எழுந்து வெளியில் வந்து நின்றிருந்தார்.

ரோஜாவின் பெற்றோர் உதவியுடன் அந்த மழை நாளின் இரவில் மனைவியை மருத்துவமனை அழைத்துச் சென்றான் இளமாறன்.

கனமழை காரணமாக மெதுவாகதான் காரை செலுத்தினான். அவர்கள் கார் மருத்துவமனையை அடையும் போது அங்கே அவர்களுக்காகச் சுகந்தி, வெண்பா மற்றும் சங்கரனுடன் காத்திருந்தார். வினோத்தான் அவர்களை அழைத்து வந்திருந்தான்.

ரோஜாவிற்கு அடுத்து வலி வரும் முன் பிரசவ அறையில் இருந்தாள் அவள்.

அப்போது நள்ளிரவு ஒரு மணி. ஆனால், அதிகாலை நான்கு மணியாகியும் கூட ரோஜா கதறிக் கொண்டே இருந்தாளே ஒழிய குழந்தை வெளியில் வந்த பாடில்லை.

அம்மாவின் அனுமதியுடன் ரோஜாவின் கைப் பிடித்தபடி பிரசவ அறையில் இருந்த இளமாறனின் கைகளைப் போராடி களைத்த சோர்வில் பற்றினாள் ரோஜா.

“என்னால முடியல இளா” என்று அவள் அழுகுரலில் சொல்ல, அவனுக்குக் கண்கள் கலங்கியது.

“ஆபரேஷன் பண்ண சொல்லவா ரோஜா? உனக்குச் சிசேரியன் ஓகே வா?” அவன் அக்கறையுடன், அவளின் முகம் நோக்கி குனிந்து கேட்க, “ம்ம்” என்றாள் ரோஜா.

அந்நேரம் அவர்கள் பேச்சை கேட்டபடி அறைக்குள் வந்த சுகந்தி, “மாறா, வெளில போய் நில்லு” என்று மகனை அதட்டினார். அவன் தயக்கத்துடன் மனைவியைத் திரும்பி திரும்பி பார்த்தபடி அறையை விட்டு வெளியேறினான்.

மேலும் அரை மணி நேரம் அவனுக்கு உணர்வு போராட்டமாகக் கழிய, பிரசவ அறையில் இருந்து தலையை வெளியில் நீட்டி, “அண்ணா, உள்ள வாங்க” என்றாள் வெண்பா.

அவன் உள்ளே சென்ற நொடி, ரோஜா கதறி கண் மூடினாள்.

அந்த அதிகாலை பொழுதில், அந்த மருத்துவமனை அறையைத் தன் அழுகையால் நிறைத்தபடி பிறந்தாள், இளமாறனின் மகள்.

“மாறா, பெண் குழந்தை. ரோஜா, இங்க பாரு குட்டியை” சுகந்தியின் குரல் நெகிழ்ந்து, உடைந்து வந்தது.

அந்த அறையின் ஓரத்தில் மிரட்சியுடன் ஒதுங்கி நின்றிருந்த இளமாறன், மெல்ல முன்னே சென்றான்.

சுகந்தி குழந்தையைத் தூக்கி அவனிடம் காண்பித்தார்.

அவனுக்கு உணர்ச்சி மிகுதியில் கண்கள் கலங்கி, பேச்சு மறந்து போய் இருந்தது. சட்டென ரோஜாவை திரும்பிப் பார்த்தான்.

“பொண்ணு” என்று சிரமப்பட்ட புன்னகையுடன், கண்கள் ஒளிர கணவனைப் பார்த்து முணுமுணுத்து புன்னகைத்தாள் ரோஜா.

சுகந்தி குழந்தையைச் செவிலியிடம் கொடுக்கும் முன் ஒற்றை விரல் நீட்டி தொட்டுப் பார்த்தான் இளமாறன்.

தொட்ட விரல் நுனி மட்டுமல்லாது அவனது ஒட்டு மொத்த உடலும் சிலிர்த்தது. அந்த நிமிடம் முதல் அவனின் மொத்த உலகமுமானாள் அவள்.

ஆதினி!!!

error: Content is protected !!
Scroll to Top