என் ஜீவனில் உறைந்திடு – 31 (2)

அவருக்காக மகன் காரின் முன் பக்க கதவை திறந்து விடப் புன்னகையுடன் ஏறி அமர்ந்தார் சுகந்தி.

ரோஜா பின் பக்கத்தில் அமர்ந்து பயணத் தூரம் முழுவதும் சலசலத்துக் கொண்டே வந்தாள். அவளோடு இணைந்து இளமாறனும் அம்மாவிடம் கதைப் பேசினான்.

ரோஜா அருகில் இருக்கும் போது மட்டுமே வெளிப்படும் மகனின் இந்த இதமான பக்கத்தைத் தன் இதயத்தில் நிறைத்துக் கொண்டார் சுகந்தி. துளி பொறாமை உணர்வு எழுந்ததை அவரால் தவிர்க்க முடியவில்லை.

ஆனாலும், மகனின் அன்பு இப்போது அவருக்குப் புரிந்தது. வெறும் பெயரிலும், அழைப்பிலும் என்ன இருக்கிறது? அது வெளிப்படுத்தும் அன்பு தானே பிரதானம் என்பது காலம் கடந்தே அவருக்குப் புரிந்தது.

அவர்கள் மூவரும் வீடு வர, மருமகளை ஓய்வாக உட்கார வைத்து விட்டு மகனுக்காகத் தானே சமைத்தார் சுகந்தி.

குளிர்சாதனப் பெட்டியில் வெண்டைக்காய், புடலங்காய், தக்காளி மட்டுமே இருக்க, தக்காளி ரசம், புடலங்காய் கூட்டு வைத்து, அப்பளம் பொரித்து வைத்தார். அவரே நின்று மகனுக்குப் பரிமாற, அமைதியாய் உண்டு முடித்தான் இளமாறன்.

அவர்கள் மூவரும் ஓய்வாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, அம்மாவை வீட்டிற்கு அழைத்துப் போக வந்தாள் வெண்பா.

“ஹாய் அண்ணி” என்று நேராக ரோஜாவிடம் வந்தாள் அவள்.

பயிற்சி மருத்துவராகத் தன் பயிற்சியை அண்ணியிடம்தான் அதிகம் செய்தாள் அவள். கஸ்தூரி பாட்டி சொல்லிய கை வைத்தியங்களை எல்லாம் பொறுப்பாகச் செய்தாள் அவள்.

“அத்த, என்னைக் காப்பாத்துங்க” என்று ரோஜா போலியாக அலறினாலும், வெண்பாவை தடுத்ததில்லை.

ரோஜாவின் பக்கத்தில் அமர்ந்து அவளின் கழுத்து, முதுகு, இடுப்பு எனப் பிடித்து விட ஆரம்பித்தாள் வெண்பா.

“தேங்க்ஸ் வெண்பா” என்ற ரோஜா உடல் லேசானதில் கண் மூடிக் கொண்டாள்.

அரை மணி நேரம் சென்றிருக்கும், ரோஜாவிற்குக் கண்கள் சொருகியது.

“நேரமாச்சு, நாம கிளம்பலாம் வெண்பா. நீ போய் ரெஸ்ட் எடு ரோஜா. நாங்க போய்ட்டு வர்றோம் மாறா” என்றபடி மகளை அழைத்துக் கொண்டு மருத்துவமனை கிளம்பினார் சுகந்தி.

ரோஜா எட்டாம் மாத இறுதி வரையும் வேலைக்குச் சென்றாள். இரு குடும்பத்தினரும் அவளைத் தடுக்கவில்லை.

அவள் மட்டும் தனியாக வீட்டில் அமர்ந்திருப்பதற்கு, மருத்துவமனை பணிச் சூழல் இன்னுமே பாதுகாப்பு என்றுதான் இளமாறனும் நினைத்தான். ஆனால், அவள் சோர்வாகத் தெரிந்தால் வற்புறுத்தி வீட்டிலிருக்க வைத்து விடுவான் அவன்.

அன்றும் அப்படித்தான். ரோஜா சோர்வாகத் தெரிய, சில மணி நேரங்களுக்கு மட்டும் ஹோட்டல் சென்று வேலையை முடித்து விட்டு வீடு வந்து விட்டான் இளமாறன்.

இரவு உணவை முடித்து விட்டுத் தோட்டத்தில் இருவரும் காலாற நடந்து கொண்டிருந்தார்கள்.

எட்டு மாத வயிறுடன் ரோஜா சிரமப்பட்டு நடக்க, அவளைப் போலவே அடி மேல் அடி வைத்து நடந்து கொண்டிருந்தான் இளமாறன்.

“இளா பையனுக்குப் பேர் யோசிச்சீங்களா?”

“பொண்ணு..”

“இல்ல, பையன்”

“பொண்ணு டி. எனக்குப் பொண்ணுதான் பொறப்பா. அவளுக்கு நான்..” அவனை முடிக்க விடாமல், “ஓஹோ” என்றாள் ரோஜா.

“பத்து மாசம் சுமக்கிறது நான். பாவம் பார்த்து உங்களைப் பேர் செலக்ட் பண்ண சொன்னா, பொண்ணு பொண்ணு சொல்றீங்க?” இடுப்பில் கை வைத்து முறைத்து நின்றவளை ரசித்துப் பார்த்தான் இளமாறன்.

தலை முதல் கால் வரை அவளை ரசனையாய் வருடியது அவன் கண்கள். ரோஜா சற்றே எடை கூடி, மேடிட்ட வயிறுடன், நீண்ட கூந்தலை முன் பக்கமாகப் போட்டபடி நிற்க, அவன் மனம் தடுமாறி நின்றது.

மென்மையாய் அவளை இழுத்து அழுத்தமாய்க் கன்னத்தில் முத்தமிட்டான்.

“இளா, போதும். வாங்க, தூங்கப் போகலாம்” என்று அவன் கைப் பிடித்து உள்ளே இழுத்துச் சென்றாள் ரோஜா.

அவள் ஏதேதோ கதை பேச, அவன் அசதியில் “ம்ம்” கொட்டியபடி உறக்கத்தில் அமிழ்ந்தான்.

தூக்கத்தில் மனைவியின் இடையில் கைப் போட்டவனை உலுக்கி எழுப்பினாள் ரோஜா.

“இளா.. இளா.. எழுந்திருங்க..”

“தூக்கம் வருது ரோஜா. பிளீஸ்”

“ப்ச், இளா…”

“கண்ணை மூடு ரோஜா. தூக்கம் தானா வரும்”

“வரலையே..”

“படுத்தாத ரோஜா. மனுஷனை நிம்மதியா தூங்க விடுறியா நீ?” புலம்பிக் கொண்டே எழுந்து அமர்ந்து அவளின் கால் பிடித்து விட்டான்.

“என்னைக் காயப் போட்டு கால் பிடிக்க விடுறியே. இது உனக்கே நல்லா இருக்கா?” அவன் கேள்வியில் ரோஜா கிளுக்கி சிரிக்க, “சிரி டி. நல்லா சிரி. இப்போ அடுத்தென்ன? எழுந்து நடக்கப் போற, அப்படித்தானே?” என்று அவன் சந்தேகமாகக் கேட்க,

“இல்ல. ஏதாவது ஸ்வீட்டா சாப்பிடணும் போல இருக்கு இளா” என்று சிணுங்கினாள் ரோஜா.

அவளின் கர்ப்பம் உறுதி செய்த நாளில் இருந்து இதுதான் நடக்கிறது. பல நாட்கள் அவள் நடுஇரவில் கணவனை எழுப்பி, “பசிக்கிறது” என்பதும், “காரமா சாப்பிடணும் போல இருக்கு. கேக் வேணும், ஐஸ் கிரீம் வேணும்” என்பதும் அவளின் வாடிக்கையாகி இருந்தது.

அவனும் நேரத்தைப் பார்க்காமல் அவள் கேட்டதை வீட்டில் செய்து கொடுத்து விடுவான். அவனால் செய்ய முடியாததை வெளியில் சென்று வாங்கி வந்தாவது கொடுத்து விடுவான். இல்லையென்றால் அவளைச் சமாளிக்க முடியாது.

இப்போது அவன் நிமிர்ந்து மனைவியைப் பார்க்க, “டோனட்ஸ் வேணும்” என்றாள் ரோஜா.

இளமாறன் நேரத்தைப் பார்த்தான். பனிரெண்டு முப்பது என்றது அலைபேசி.

சன்ன சிரிப்புடன், “எழுந்து வா, செஞ்சு தர்றேன்” என்று அவளின் கைப் பிடித்துப் படுக்கையில் இருந்து கவனமாக எழுப்பி, சமையலறை கூட்டிச் சென்றான்.

அவளுக்கு அங்கே ஒரு இருக்கையை இழுத்துப் போட்டு அமர செய்து, அவன் வேலையில் இறங்கினான்.

கணவன் தனக்காகச் சமைக்கிறான் என்பதே மிகுந்த ஆனந்தத்தைத் தர, தன் ஒட்டு மொத்தப் பற்களையும் காட்டி புன்னகைத்தபடி அமர்ந்திருந்தாள் ரோஜா. ஆனால், அவனோ சமையல் மேடை ஓரத்தில் இருந்த கூடையைத் திறந்து எதையோ எடுத்து, மைக்ரோவேவ் அவனில் சூடு செய்து, தட்டில் எடுத்து வைத்தான்.

ரோஜா மெல்ல எட்டிப் பார்க்க, கத்தியை எடுத்து வெட்டி, அதில் எதையோ நிரப்பி அவளிடம் நீட்டினான்.

“ஐயோ, எனக்கு வேணாம். இது செல்லாது இளா. நான் ஒத்துக்க மாட்டேன். எனக்குக் கடையில் வாங்கினது வேணாம். எனக்கு நீங்க செஞ்சதுதான் வேணும்” அடமாக அடித்து அவள் சொல்ல,

“அடி வாங்கப் போற. இதுவும் நான் செஞ்சதுதான். நம்ம ரெஸ்டாரண்ட்டுக்கு பண்ணது. இன்னைக்குக் காலைல ஒரு பேட்ச் சூடா பண்ணதும் உனக்கு எடுத்துட்டு வந்தேன். இதைப் பார்த்தும் சாப்பிடணும் சொல்லுவன்னுதான் உனக்குத் தெரியாம இங்க கொண்டு வந்து வச்சேன். இப்போ வாய் பேசாம, சாப்பிடு” என்று அவன் அதட்டவும், அவனை முறைத்துக் கொண்டே கையில் இருந்ததைப் பார்த்தாள்.

“பம்பலோனி (Bomboloni)” என்று அவள் முணுமுணுக்க,

“ம்ம், அதேதான்” என்றான் அவன்.

“இந்நேரம் இதைச் சாப்பிட்டா டைஜஸ்ட் ஆகுமா செஃப்? அப்புறம் நாளைக்கு அத்தையும், அம்மாவும் திட்டப் போறாங்க” அவள் தட்டை பார்த்தபடி கவலையுடன் கேட்க,

“ஒன்னு தானே சாப்பிட போற? ஒன்னும் ஆகாது. சாப்பிட்டு ஓமம் போட்டு சுடுத் தண்ணி குடி” என்றவன் வெந்நீர் வைக்க, ரோஜா இத்தாலிய டோனட்டான பம்பலோனியை ரசித்து ருசிக்கத் தொடங்கினாள்.

அவள் உண்டு முடித்ததும் குடிக்க வெந்நீரும், ஓமமும் கொடுத்தான் இளமாறன்.

அதன் பின்னர் எங்கே அவர்கள் தூங்க? மனைவியுடன் வீட்டை அளந்து, கதை பேசி, சிரித்து, இரவு நெடுநேரம் கழித்து அவள் மடியில் படுத்து இளமாறன் உறங்கி விட, அதன் பின்னரே கட்டிலில் சாய்ந்தமர்ந்து ரோஜாவும் உறங்கினாள்.

சிறிது நேரத்தில் கண் விழித்து மனைவியை நேராகப் படுக்க வைத்தான் இளமாறன்.

error: Content is protected !!
Scroll to Top