ஒரே நேரத்தில் இரண்டு மகள்களும் கர்ப்பமாக இருப்பதில் சித்ராவைதான் கையில் பிடிக்க முடியவில்லை.
அவர்களின் பணியாளர்கள் அனைவருக்கும் ஒரு மாத ஊதியத்துடன், இனிப்புகள் வழங்கி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் அவர்.
சிவஹரி மகள்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று பரபரத்து, இறுதியில் பரிசை மருமகன்களுக்கு அளித்து, தாங்கள் அனைவரும் ஒரே கட்சி என்று நிரூபித்தார்.
“அங்க நித்தியை பார்த்துக்க அவங்க மாமியார் இருக்காங்க. இங்க ரோஜாவை நான்தான் பார்த்துக்கணும். அதுனால நான் நாளையில் இருந்து லீவ். கேன்டீன் வர மாட்டேன் நித்யாப்பா. அப்படியே ரோஜாவையும் வீட்ல இருக்கச் சொல்லணும்” என்று சித்ரா சொல்லவும் முறைத்தார் சிவஹரி.
“நான் வீட்ல இருந்து என்னம்மா பண்ணப் போறேன்? நான் எப்பவும் போல இருக்கலாம்னு அத்தை சொன்னாங்க. அதுனால நான் கேன்டீன் வருவேன்” என்று ரோஜா சொல்ல,
“சொன்ன பேச்சு கேட்க மாட்டியா நீ?” என்று மகளை அதட்டினார் சித்ரா.
“இவ கேன்டீன் வரட்டும். ஆனா, நான் லீவ் நித்யாப்பா. ஆமா, என் சம்பளத்தில பிடிக்க மாட்டீங்க இல்ல?” சித்ரா அப்பாவியாகக் கேட்கவும், அப்பாவும், மகளும் வெடித்துச் சிரித்தார்கள்.
“உனக்குச் சம்பளமே கிடையாது போ” சிவஹரி சொல்ல, “ஆங், அன்னைக்கு இது என் கேன்டீன் சொன்னீங்க தானே? நான் பார்த்துதான் உங்களுக்குச் சம்பளம் கொடுக்கணும். இதுல என் சம்பளத்தில் நீங்க பிடிப்பீங்களா?” என்று சித்ரா கணவரை மடக்க, “இது பாய்ண்ட். அம்மா கேட்கிறதுக்குப் பதில் சொல்லுங்கப்பா” என்றாள் ரோஜா.
“அது சித்ரா..” சிவஹரி பதில் சொல்ல முடியாமல் தடுமாற, சிரித்தார் சித்ரா. பெற்றோரை அப்படிப் பார்த்ததில் மகிழ்ந்தாள் ரோஜா.
கணவரிடம் அப்படிப் பேசினாலும் சித்ரா அவருடன் வேலைக்கு வரவே செய்தார். ஆனால், அதற்காக மகள்களைக் கவனிக்காமல் இல்லை.
அவருக்குத் தனது நேரத்தை, நேர்த்தியாகச் செலவு செய்யத் தெரிந்திருந்தது.
ரோஜாவிற்கு வேண்டிய அனைத்தையும் அவள் கேட்கும் முன்பே செய்து கொடுத்தார் அவர். இடையிடையே மூத்த மகளையும் கவனிக்கத் தவறவில்லை அவர்.
நித்யா செய்தியறிந்ததும் உடனடியாகத் தங்கையைக் காணச் சென்னை கிளம்பி வந்து விட்டாள். தங்கைக்குக் கர்ப்பகால உடைகள், பரிசாக நகைகள் என அனைத்தையும் வாங்கி வந்திருந்தாள்.
“ரோஸ் குட்டி,” நித்யா அழைக்கவும்,
“நித்திக்கா” என்று சிணுங்கினாள் ரோஜா.
“நான் பல வருஷத்துக்கு முன்னாடி உன்ன குட்டி பாப்பாவா கையில் வச்சுருந்தேன். இப்போ உனக்கே பாப்பா வருது” நித்யா சொல்ல, ரோஜா வெட்கத்துடன் முறைத்தாள்.
“அம்மாகிட்ட அந்த ஃபோட்டோ இருக்கு, தெரியுமா? தேடி எடுத்து உன்கிட்ட காட்ட சொல்றேன்”
“அந்த ஆல்பத்தை எப்பவோ என்கிட்ட கொடுத்துட்டாங்க அம்மா. இவர் கூடப் பார்த்திட்டு கிண்டல் பண்ணிட்டு இருந்தார்” என்ற ரோஜாவின் முகம் கூச்சத்தில் சிவக்க, சிரித்தாள் நித்யா.
நித்யாவின் குடும்பம் இரண்டு நாட்கள் தங்கியிருந்து பெங்களூர் திரும்பியது.
சித்ரா மகளுக்கு அன்பை அளவில்லாமல் கொடுக்க, சுகந்தி ஒரு மருத்துவராக மருமகளை நன்றாகப் பார்த்துக் கொண்டார்.
மாத பரிசோதனைகள், மாத்திரைகள், ஸ்கேன் என்று அவளுக்கு எல்லாவற்றிலும் கூடவே நின்றார்.
கஸ்தூரி, சுவாமிநாதன் இருவரும் இளமாறன் வீடு வந்து இரண்டு வாரங்கள் அவர்களுக்குத் துணையாக இருந்தார்கள்.
“நாங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போய்ட்டு சாயங்காலம்தான் வீட்டுக்கு வர்றோம். இங்க அதுவரைக்கும் நீங்க தனியாதான் இருக்கணும். உங்களுக்குப் போர் அடிக்கப் போகுது” என்று சொல்லி அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தான் இளமாறன். அவர்களும் மனமின்றிச் சென்றார்கள்.
மகனிடம் எந்தவித தகவலும் சொல்லிக் கொள்ளாமல் சுகந்தி, சங்கரன் அவனது வீடு வந்தார்கள். அங்கு முழுதாகப் பத்து நாட்கள் தங்கி, ரோஜாவுடன் சிரித்து, கதைப் பேசி, அவளுக்குப் பிடித்ததை வாங்கிக் கொடுத்தார்கள்.
வினோத், வெண்பா அவ்வப்போது சமயம் வாய்க்கும் போதெல்லாம் அவர்களைப் பார்க்க வந்தார்கள். அதிலும் வெண்பா மருத்துவராக அண்ணிக்கு கூடுதல் கவனிப்பும், ஒரே அறிவுரை மயமும்தான்.
ரோஜா இது நாள் வரை தன் மனத்தில் இருந்த அனைத்து எண்ணங்களை ஒதுக்கி தள்ளி விட்டு இளமாறனுடன் மாமியார் வீடு சென்றாள். அங்கிருந்து கஸ்தூரி பாட்டி வீட்டிற்கும் சென்றாள்.
முதலில் எப்போதாவது என்று தொடங்கிய பழக்கம், நாட்கள் செல்ல செல்ல அடிக்கடி செல்லும் வழமையானது.
கஸ்தூரி பாட்டி தன் கைப்பக்குவத்தில் அவளுக்குப் புளி காய்ச்சல், புளி இஞ்சி, தக்காளி ஊறுகாய் என அவள் விரும்பி உண்பதை எல்லாம் செய்து கொடுத்தார்.
சித்ரா, சிவஹரியின் பெரும்பாலான பொழுதுகள் மகளைக் கவனிப்பதிலேயே கழிந்தது.
ரோஜாவிற்கு நான்காம் மாதம் தொடங்கும் போதே வளைகாப்பு பற்றிப் பேசத் தொடங்கினார் சித்ரா.
ஏனென்றால் அதற்கடுத்த மாதம் நித்யாவிற்குப் பிரசவ தேதி கொடுக்கப்பட்டிருந்தது. இரண்டு மகள்களையும் பார்த்துக் கொள்ள வேண்டுமே என்ற கவலையில் தாயாகத் தவித்தார் அவர்.
“நீங்க கவலைப்படாம பெங்களூர் போய்ட்டு பொறுமையா ரெண்டு மாசம் கழிச்சு வாங்கத்த.” இளமாறன் சொல்லவும் முழித்தார்.
“ரோஜாவுக்கு வளைகாப்பு ஒன்பதாம் மாசம் செய்துக்கலாம்னு மாப்பிள்ளை சொல்றார் சித்ரா. எனக்கும் அது சரின்னுதான் படுது. நாம எல்லோரும் இங்க தானே இருக்கோம். தினமும் பார்த்துக்கறோம். அதுனால நீ கவலைப்படாம நித்யா வீட்டுக்கு போய்ட்டு வா. ரோஜாவை இங்க நாங்க பார்த்துக்கறோம்” என்று மனைவிக்கு அவர் உத்திரவாதம் அளித்தார்.
“என்னைப் பார்க்க அப்பா இருக்கார். இவர் இருக்கார். அத்தை, வெண்பான்னு ரெண்டு டாக்டர் இருக்காங்க. நீங்க யோசிக்காம நித்திக்கா வீட்டுக்கு போய்ட்டு வாங்கம்மா” என்று ரோஜா சொல்லவும்தான் பெங்களூர் கிளம்பினார் சித்ரா.
ரோஜாவிற்கு ஐந்தாம் மாதம் தொடங்கும் போது நித்யா வீட்டில் மித்ரனுக்குத் தங்கையாக மிருதுளா பிறந்தாள்.
இளமாறன், ரோஜா, இருவரும் சென்று குழந்தையைப் பார்த்து கொஞ்சி விட்டு வந்தார்கள். அங்கிருந்த இரண்டு நாட்களும் விழித்திருந்த நேரமெல்லாம் குழந்தை இளமாறன் கையில்தான் இருந்தது.
“அவளைக் கீழ விடுங்க இளா” என்று ரோஜா அதட்ட, “மனசே வரல ரோஜா” என்றவனைக் கண்களால் கட்டிக் கொண்டாள் மனைவி.
அவர்கள் சென்னை திரும்பி, சிவஹரியை பெங்களூர் அனுப்பி வைத்தார்கள்.
இரண்டு வாரங்கள் அங்கிருந்து விட்டு மனைவியையும் அழைத்துக் கொண்டு சென்னை திரும்பினார் சிவஹரி.