அத்தியாயம் 40
Your children are not your children.
They are the sons and daughters of Life’s longing for itself.
They come through you and not from you,
And though they are with you yet they belong not to you.
You may give your love but not your thoughts,
For they have their own thoughts
You may house their bodies but not their souls,
For their souls dwell in the house
For their souls dwell in the house of tomorrow,
which you cannot visit, not even in your dreams.
You may strive to be like them, but seek not to make them like you.
-Kahlil Gibran
விடியல் ஒன்று தான். அதே சூரியன், அதே பூமி! அவரவர் மனம் போல் அவரவர் நாள் விடிகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
வீட்டிற்குள் நுழைந்த அலர்விழியின் விழிகள் பிரவீன் தங்கியிருந்த அறையை நோக்கியது. அவன் மனமொடிய தான் எந்த விதத்திலுமே காரணமில்லை என்பதால் அவள் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று தெரியும். ஆனால் அவன் முகத்தை எப்படிப் பார்ப்பது?
“அவருக்கு ஏதோ அவசர வேலையாம், மிட் நைட்டே கிளம்பிட்டார். முடிச்சுட்டு அப்படியே கிளம்பிடுவாராம். உன் கிட்ட சொல்ல சொன்னார்.” மார்க் கூறவும் ‘ஹப்பா!’ என்ற உணர்வு!
யோசனையோடு நின்றவளைப் பார்த்து வந்த மனோவிற்கு ‘இன்னுமா’ என்றிருந்தது. “உள்ள போ விழி, நம்ம ஏற்படுத்தின காயம் இல்ல, அது அவரே தேடிக்கிட்டது. ஒண்ணும் செய்ய முடியாது. காலப் போக்கில அவருக்குன்னு ஒரு குடும்பம்ன்னு வரும், இது பாஸிங் க்ளோட் ஆகிடும். விடு!”
“ப்ச் மனோ” என்றவளின் மேல் கோபம் வர, “என்ன டி பண்ண முடியும்? நைட் பூரா அப்செட்டா இருந்த… சரி ஃபீல் ஆகிட்டன்னு பேசாம இருந்தேன். இன்னும் என்ன? எத்தன நாளுக்கு முகத்த தொங்க விட்டுகிட்டு இருக்கப் போற?” என சத்தம் போட்டான்.
“மனோ… எனக்கு ஒண்ணும் அவர நினைச்சு வருத்தமா இல்ல. அது வேற! உங்களுக்கு ஏதாவது புரியுதா? நம்ம கல்யாணம் பத்தி உங்களுக்கு ஏதாவது கவலை இருக்கா? அத இனிமேல் நடத்தி வைப்பாங்கன்னு எனக்குத் தோணல. முன்னமே, அவருக்கு உங்க மேல துளி நல்ல எண்ணம் இல்ல. இப்போ லவ் வேற பண்றாராம்! வீட்டுல உங்களப் பத்தி தப்பா சொல்லப் போறார்… அதோட எல்லாம் முடிஞ்சுது!”
“முதல்ல ஒண்ணைத் தெரிஞ்சுக்கோ, நீயும் நானும் 17வயசு விபரம் தெரியாத சின்னப் பசங்க இல்ல. காதல்ன்னு சொல்லிகிட்டு, நம்ம கடமைகளையும் பொறுப்பையும் எங்கேயும் தவற விடல. நமக்குன்னு ஒரு வரைமுறைகளை ஏற்படுத்தி ஒழுக்கமா உனக்கு நானும், எனக்கு நீயும்ன்னு வாழ்ந்துட்டு வரோம். இதுல எங்கேயாவது தப்பான முடிவ எடுத்திருக்கோமா?
நமக்குன்னு ஒரு எதிர்காலம் இருக்கு விழி. அடுத்த அம்பது… அறுபது வருஷம் அழுதாலும் சிரிச்சாலும் நாம தான் வாழ்ந்தாகணும். அவங்க அவங்க வாழ்க்கையை மட்டும் தான் அவங்க அவங்க வாழ முடியும். வாழணும்!
என் வாழ்க்கையை உருப்படியா வாழ என்ன தேவையோ அந்த நெறி முறைகளை என்னைப் பெத்தவங்க எனக்கு காட்டணும்! நல்ல வழியில போக அறிவப் புகட்டணும். வாழ சொல்லிக் கொடுக்கணும்! எதிர்கால வாழ்க்கைய வாழ என்னைத் தயார் படுத்தி விட்டுடணும்! அதேதான் எனக்கும்! நான் என் பிள்ளைங்களுக்கு ஒரு வழிகாட்டியா இருக்கணுமே ஒழிய, அவங்கள இறுக பிடிச்சு கிட்டு, காலம் பூரா என் விருப்பு விருப்ப அவங்க மேல திணிக்கக் கூடாது.
ஒரு சின்ன குருவி கூட பறக்க சொல்லிக் குடுத்து, இரைய தேட சொல்லிக் கொடுத்த பிறகு அதோட குஞ்ச பறக்க விட்டுடுது! நமக்கு தான் என்ன பிரச்சனைன்னே தெரியல! எப்பவும் நம்ம எண்ணங்களை மத்தவங்க மேல திணிக்கிறதும்… அவங்கள நம்மள மாதிரி மாத்த நினைக்கிறதும்!
என் பசிக்காக அம்மா 25வருஷம் முன்ன சாப்பிட்டாங்க, பால் கொடுத்து என் பசிய ஆத்தினாங்க! அதையே இப்போ செய்ய முடியாது. வளர்த்து விட்டாச்சு. இது வாழ்க்கைன்னு கை காட்டியாச்சு. விழுந்தோ எழுந்தோ என் வாழ்க்கைய நான் தான் வாழணும். என் தேவைக்கு நான் தான் சம்பாரிக்கணும். என் வயறுக்கு நான் தான் சாப்பிடணும். அதே மாதிரி, என் சாவு வரை என் மனச நிரப்பப் போற என் வாழ்க்கைத் துணையை நான் தான் முடிவு பண்ணணும்! பண்ணிட்டேன்.
சொன்னா புரிஞ்சுக்கவே மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறவங்களோட போராடி பயனில்ல! யாரையோ திருப்திப் படுத்த, வறட்டு கௌரவத்துக்காக, அவங்களோட உதவாத கொள்கைக்காக, சொந்தப் பிள்ளைங்க விருப்பு வெறுப்ப யோசிக்காத பெத்தவங்களுக்காக… இருக்கற ஒரு வாழ்க்கையை நெருப்புக்குள்ள வெந்துகிட்டே வாழ முடியாது விழி.
நம்ம வாய்க்குள்ள என்ன போகணும்ன்னு முடிவு பண்ற உரிமை நமக்கு இருக்கும் போது, நம்ம உயிரோட யார கலக்க விடணும்ன்னு முடிவு பண்ற உரிமையும் நமக்கு மட்டும் தான்! இவர் தான் என் வாழ்க்கை துணைன்னு நீ நம்பற வரைக்கும் உன் முடிவ யாரும் மாத்த முடியாது!
இத முதல்ல புரிஞ்சுக்கோ. சும்மா நடுங்காத. ஒண்ணு ஒத்துப்பாங்க இல்ல ஒத்துக்க மாட்டாங்க! சாவத் தவிர, எது நடந்தாலும் நானும் நீயும் தான் ஒண்ணா இருக்கப் போறோம் புரியுதா?”
“ம்ம் ம்ம்ம்”
“போ, போய் குளிச்சுட்டு வேலையப் பாரு. வந்தவங்களுக்கு என்ன குடுக்கறதுன்னு யோசிப்போம்.”
“நீங்களும் மார்க்கும் சேந்து பனானா பேன் கேக் பண்ணுங்க. நான் ரெடி ஆகுறேன்.”
பெண் முகம் தெளிந்திருக்க, கன்னம் தட்டி, “தட்ஸ் மை கேர்ள்!” என்று அலர்விழியை அனுப்பி வைத்தான்.
சிறிது நேரத்திற்கெல்லாம் அனைவரும் கிளம்பி விடுவார்கள் என்றதுமே பெண்கள் முன்பே முடிவெடுத்தது போல் ஒரே நிறத்தில் உடுத்திக் கொண்டனர்.
கண்ணாடி முன் நின்றவளுக்கு முன்னிரவு பிரவீன் பேசியது காதில் எதிரொலித்தது. தன்னை இவனுக்கு எப்படிப் பிடித்தது என்பதே ஆச்சரியம் தான். இவளோடு அவனால் ஒரே ஒரு நாள் தாக்கு பிடிக்க முடியுமா? தலை முதல் கால் வரை பார்வை ஓடியது. நூல் போல் மெலிதான சங்கிலியில் மின்னிய வைரம், மனோ வாங்கி அனுப்பியது. கம்மல், பிரேஸ்லட், வாட்ச், ஏன் வாசனைத் திரவியம் கூட இவள் விரும்பி அவன் வாங்கிக் கொடுத்தது தானே… அடங்காத கூந்தலை அலங்கரித்த கிளிப் கூட மனோ வாங்கிக் கொடுத்தது. தான், 100 விழுக்காடு உள்ளும் புறமும் மனோவை தாங்கியிருக்க, ஏன் அதை பிரவீன் உணரவில்லை? எல்லாம் இருந்த போதும் ஒரு மஞ்சள் கயிறு இல்லாததாலா?
கிளம்பி அறையை விட்டு வெளியே வந்த அலர்விழி, எபியைப் பார்த்ததும், ‘எப்படி?’ என வினவினாள், பார்வையால்… புருவம் உயர்த்தி.
மாதவன் திருமணத்திற்காக எபி வாங்கித் தந்த ஊதா நிற ஹான்லூம் பனாரஸ் புடவையில் அவனுக்குப் பிடித்தது போலவே அடர் பர்புள் நிற இதழ் சாயத்தொடு, அரை வேக்காடு நூடுல்ஸ் அங்கங்கு முகத்தில் தொங்க அவன் மனதை கொள்ளையடிக்க தான் செய்தாள்.
மார்க் அருகில் இருக்கவும், ‘அள்ற டி’ என்றான் எபி, கண்களை சுருக்கி வாய் அசைத்து, ரசனையாய்.
மற்ற பெண்களும் வந்துவிட பேச்சும் சிரிப்பும் இடத்தை நிரப்ப, இன்ப தருணம் விதவிதமான நிழற் படங்களாய் கைப்பேசியை நிறைத்தது.
அனைவரும் கூட்டமாக நின்றிருக்க, அலர்விழி நின்றிருந்த இடத்தில் இரண்டு டசன் தங்க நிற ஹீலியம் பலூன்கள் பறந்து உட்கூரையில் ஒட்டிக் கொள்ள, ‘என்ன டா இது?’ என்ற பாவத்தோடு அவள் திரும்ப, இரண்டு கைகளை நிறைத்த பெரிய அடர் பர்புள் நிற அழகான டப்பாவை எபி நீட்டி நின்றான்.
பெண்ணவள் முகம் முழுவதும் பூரிப்பு. ‘பிறந்த நாளும் இல்லையே! என்னவாம்?’ பெண் மனம் குடைந்தது. எதிர்பார்ப்பு கண்களை எட்ட, ‘ம்ம்?’ பார்வையால் கேட்க, ‘உள்ள பார்’ பதில் பார்வை பார்த்தான்.
டப்பாவைத் திறக்க, உள்ளே மென் ஊதா ரோஜாக்கள் மற்றும் அடர் ஊதா ரோஜாக்களுக்கு மத்தியில் இதய வடிவில் குட்டி குட்டி ‘ரெட் வெல்வெட் கப் கேக்’ நிறைத்திருந்தது.
பெண்ணின் முகம் புன்னகையைப் பூசிக் கொள்ள, டப்பா கையிலிருந்தாலும் பார்வை முழுவதும் எபியின் மீதுதான்.
கையிலிருந்த டப்பாவை வாங்கி மேசையில் வைத்தவன், அவளை அள்ளி வாரி உயரத் தூக்கி, “இன்னும் ஒரு பத்து… பதினைஞ்சு கிலோ போட்டா கூட ஈசியா தூக்கிடுவேன். அதுக்கு மேலன்னா கொஞ்சம் கஷ்டம்!” என்று கீழே இறக்கி, “என் ஆர்ம்ஸ் எப்படி? ஸ்ட்ராங்கா இருக்கேனா?” என்று கேட்டு நிற்பவனுக்கு, அனைவர் முன்னும் என்ன பதில் கொடுக்க!
‘என்னது இது’ என்று அவள் சிரித்து முடிக்கும் முன்னமே பாட ஆரம்பித்தான்.
“சுவாசப் பையில் உந்தன் வாசம் பூட்டி வைத்தும்
நெஞ்ச ஏட்டில் இன்னும் உன் பேரை தீட்டி வைத்தும்
பாடல் தீர்ந்து போன பின்னும்
மௌனம் கூட தீர்ந்த பின்னும்
கோடி முத்தம் வைத்த பின்னும்
போதவில்லையே போதவில்லையே
உன்னைப்போல போதை ஏதும் இல்லையே”
தன்னை சுற்றி சுற்றி வந்து பாடியவன் முகபாவம் கண்டு பெண்ணின் முகத்தில் செம்மை பரவ, புன்முறுவலையும் அடக்க முடியாமல் போக, ‘என்ன செய்கிறான்’ என்று பார்க்க, பலமான கைதட்டல் நிடுவே, “நல்லா பாடுறேனா?” என்ற கேள்வியோடு நின்றான்.
கண்கள் பார்த்து நின்றவனுக்கு… முகம் முழுவதும் அடக்க முடியா புன்னகையோடு பதில் பேச மறந்தவளாய், வெட்கம் எட்டிப் பார்க்க, ‘ம்ம்’ என்ற வேகத் தலையசைப்பை பதிலாகக் கொடுத்தாள்.
“பார்க்க ஹான்சம்மா இருக்கேனா?” என்று தலை கோதி நமட்டு சிரிப்பு சிரிக்க,
“என்ன மனோ… எல்லார் முன்னாலயும் என்ன விளையாட்டு?” மெல்லச் சிணுங்கினாள்.
“சொல்லு சொல்லு… உன் கண்ணுக்கு ஸ்மார்ட்டா இருக்கானா உன் மனோ?” கேட்டவன் குரலில் துள்ளல். பார்த்திருந்த நான்கு ஜோடி கண்களிலும் எதிர்பார்ப்பும் ஆனந்தமும்.
“ம்ம்… ரொம்ப” என்றவளுக்குப் புன்னகையை அடக்கத்தான் வழி தெரியவில்லை.
குட்டி கப்-கேக் ஒன்றை எடுத்து வாய்க்கு நேராய் நீட்டவும் வெட்கம் ஒரு பக்கம், ‘எதற்கு இந்த விளையாட்டு’ என்ற ஆர்வம் ஒரு பக்கம் இருந்தாலும் அதை வாய் திறந்து வாங்கிக் கொள்ள, “அவ்வளவு டெஸ்ட் வச்சு செலெக்ட் பண்ணின அந்த சிகப்பு கார்டினல் பறவ, அதோட குஞ்சு பறக்க ஆரம்பிச்சு, சீசன் முடிஞ்சதும் விட்டுட்டுப் போயிடுமாம். நான், கார்டினல் மாதிரி ஒரு சீசனுக்கு மட்டும் இல்லாம, ஒரு ஜென்மம் முழுசும் உன்னையும் நம்ம பிள்ளைங்களையும் உயிரா பார்த்துப்பேன்,” என்றவனின் குரலில் ஆழம் அதிகம். உள்ளத்தைத் தயவு தாட்சணியம் இல்லாமல் குடைந்தது அவன் வார்த்தைகள்.
வாயிலிருப்பதை விழுங்கவும் மறந்து… மெய் மறந்து நின்றவளை, இடையோடு தன் பக்கம் இழுத்து உதட்டைத் தீண்டி கண்களைப் பார்த்தான். கூட்டத்தின் நடுவில் பெண் திக்கு முக்காடிப் போனாள்.
“ரொம்ப நல்ல பையன். யார்ன்னு தேடாத! நான் தான்! நீ பிறந்து வளர்ந்த குடும்பம் மாதிரியே உன்னைத் தலை மேல தாங்குற பாசமான குடும்பம் உனக்குத் தர காத்திருக்கேன். நீ காணற கனவெல்லாம் நினைவாக்க துணையா வருவேன். காலம் பூரா கூடவே இருந்து சண்டை போடுவேன், கோவிச்சுப்பேன், குட்டி குட்டி முத்தம் கொடுத்து சமாதானம் ஆவேன், மனசார உன்னை மட்டும் காதலிப்பேன்.
உன்னையும் நம்ம பிள்ளைங்களையும் குறையில்லாம பார்த்துப்பேன். குழந்தைங்கள குளிப்பாட்டி, சாப்பாடு கொடுத்து, முகம் சுளிக்காம டயப்பர் வரைக்கும் மாத்துவேன். நம்ம பிள்ளைகளோடையது மட்டும் இல்ல… பேரப் பிள்ளைகளுதும்! வயசான பிறகு தேவைப்பட்டா உனக்கும். என் கூடவே என் உயிரா… என்னோட பெட்டர் ஹாஃபா இருப்பியா விழி?” மோதிரத்தை நீட்டி நின்றவனைப் பார்த்தவள், பார்த்தபடியே நின்றாள்.
அது வெறும் அலங்கார மோதிரம் இல்லையே… தான் மனோவா எபெனேசருக்கு மட்டுமே சொந்தம், மனோ தனக்கு மட்டுமே சொந்தம் என்று பறை சாற்றும் நிச்சய மோதிரமாயிற்றே!
பற்கள் கடித்திருந்த கீழ் உதடு துடித்துச் சிரிக்க… கன்னங்கள் துடிக்க, கண்கள் இரண்டும் நீர் சொறிய, இதயம் மனோ என்று கதற நின்றிருந்தவளின் பதிலுக்காக, மனோவோடு சேர்ந்து அனைவரும் நகம் கடித்துக் காத்திருக்க,
கண்ணீரும், நீளமான புன்னகையுமாய், “இந்த ஜென்மம் மட்டும் கூட இருந்தாப் போதுமா மனோ?” என்றாள்.
இடது மோதிர விரலில் வைரம் மின்ன நின்றிருந்த பெண்ணிற்கும், கூட்டம் எல்லாம் தெரியாமலே போனது. கரகோஷத்திற்கு மத்தியில் மனோவின் நெஞ்சிற்கு உப்பு நீரோடு, ஊதா சாயத்தையும் கடத்தி நின்றாள் மனோவின் விழி!