அவருக்கு மகனின் பதட்டமான முகத்தைப் பார்க்கையில், தான் அவனைச் சுமந்திருந்த நாட்களின் நினைவு வந்து புன்னகைக்கச் செய்தது.
“ரோஜாவுக்கு ஏழு வாரத்துக்கு மேலாச்சு மாறா. நாம ஸ்கேன் பண்ணி பார்த்திடுவோமா?” அவருமே பதட்டமாகதான் இருந்தார் என்பதை அவரது பேச்சே காட்டிக் கொடுத்தது.
“இப்போ ஸ்கேன் பண்ணலாமா த்த” ரோஜா கேட்கவும், புன்னகைத்தார் அவர்.
“இங்க வா” என்று அவளைத் திரைக்குப் பின்னே அழைத்துச் சென்றார்.
“உன் ட்ரெஸ் லூஸ் பண்ணிக்கோ” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அறையில் இருந்து வெளியேறப் போனான் இளமாறன்.
“மாறா, உள்ள வா.” என்று சுகந்தி அழைக்கவும், தயக்கத்துடன் அப்படியே நின்றான். திரையை விலக்கி, அவனை உள்ளே வருமாறு செய்கை செய்தார் சுகந்தி.
முதலில் மனைவியை, அவளின் பளிச்சிட்ட வயிறை பார்த்தான். அதன் பின் அந்த அறையில் இருந்த சிறிய ஸ்கேன் கருவியின் மேல் பார்வையை நிலையாகப் பதித்திருந்தான் இளமாறன்.
ரோஜா அவனிடம் கண் ஜாடைக் காட்டியது எல்லாம் அவன் கவனிக்கவே இல்லை.
சுகந்தி மருத்துவ உபகரணம் கொண்டு மருமகளைப் பரிசோதிக்கத் தொடங்கினார்.
தனக்கு மிக நெருக்கமாக நின்றிருந்த கணவனின் கையைப் பிடித்து ரோஜா சுரண்ட, அவளை நிமிர்ந்துப் பார்த்து, “என்ன?” என்று கண்களால் விசாரித்தான் இளமாறன்.
அடுத்தக் கணமே அறையை மருத்துவ உபகரணத்தின் மெல்லிய ஒலி நிறைக்க, இருவரின் பார்வையும் திரைக்குச் சென்றது. இளமாறன் மனைவியின் கரத்தை இறுக பற்றிக் கொண்டான்.
“குழந்தையோட ஹார்ட் பீட் அது மாறா. ஸ்கிரீன்ல லேசா மின்னி மின்னி மறையுது இல்ல? அதுதான் இதயத் துடிப்பு. அந்தக் குட்டி புள்ளிதான் உங்க குட்டி பாப்பா” சுகந்தியின் குரலில் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் அப்பட்டமாகத் தெரிந்தது. அவர் குரல் தடுமாறித் தளுதளுத்தது.
இளமாறன் திரையை இமைக்காமல் வெறித்து, பின் மனைவியைப் பார்த்தான். அவன் உதடுகள் அனிச்சையாய் பிரிந்து புன்னகைத்தது.
சுகந்தி அவர்கள் இருவரையும் திரும்பிப் பார்த்து, “கங்கிராட்ஸ்” என்று சொல்லி புன்னகைத்தார்.
“தேங்க்ஸ் அத்த” என்றாள் ரோஜா. இளமாறன் மனது இன்னமும் கண்கள் கண்டதை நம்பவியலாமல் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியிருந்தது.
அங்கே ஒரு தாய் மனதும், தாயாகப் போகிறவளின் மனதும் அன்பில் தளும்பி நிற்க, அவர்களுக்கு நடுவில் உணர்ச்சி பெருக்குடன் உறைந்து நின்றான் இளமாறன்.
“எழுந்து வா, ரோஜா. நான் மருந்து எழுதித் தர்றேன்” சுகந்தி திரையை இழுத்து விட்டு வெளியேற, மின்னலாக மனைவியை அணைத்து விலகினான் இளமாறன்.
அவர்கள் வீட்டில் வைத்துக் கர்ப்பத்தை உறுதி செய்திருந்த போது கிடைத்த மகிழ்ச்சியைத் தற்போது பல மடங்காக்கியது சுகந்தியின் வார்த்தைகள்.
சுகந்தி மருத்துவவராக மருமகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். தினமும் எடுத்துக் கொள்ள வேண்டிய மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். அவர்களை வெளியில் அனுப்பவே மனமின்றி, அரை மணி நேரத்திற்கும் மேல் அறிவுரைகள் வழங்கி அனுப்பினார்.
மூவரும் வெளியில் வர, அவர்களுக்காக ஆவலுடன் காத்திருந்தார் சித்ரா.
மகளைப் பார்வையால் கட்டிக் கொண்டு, கைப் பிடித்தார்.
“வாழ்த்துகள் சம்பந்தி மா.” சுகந்தி சொல்லவும் அவர் முகமே மலர்ந்து போனது.
“எத்தனை மாசம் ரோஜா குட்டி?” அவர் கேட்க, “ரெண்டாவது மாசம் மா. எட்டாவது வாரம் ஆரம்பிச்சிருக்குன்னு அத்தை சொல்றாங்க” கூச்சத்துடன் சொன்னாள் ரோஜா.
மனம் நிறைந்த மகிழ்ச்சியில் மகளின் கன்னம் வருடினார் சித்ரா.
“இத்தனை நாள் எப்படிக் கவனிக்காம விட்ட நீ?” என்று அவர் அன்புடன் அதட்ட, “போன மாசம் பத்து நாள் கழிச்சுதான் மா பீரியட்ஸ் வந்தது. அதான் இந்த மாசமும் அப்படியே வரும்னு விட்டுட்டேன். சத்தியமா கவனிக்கலம்மா, சாரி” என்றாள் செல்லம் கொஞ்சி.
“சரி சரி, விடு.” என்றார் சித்ரா.
அடுத்தச் சில நிமிடங்களில் அந்த மகிழ்ச்சியான செய்தி மொத்த குடும்பத்தையும் சென்று சேர்ந்தது.
இரண்டு குடும்பங்களும் மருத்துவமனையில் ஒன்று கூடி காஃபி, தேநீர் மற்றும் இனிப்புடன் கொண்டாடி விட்டார்கள்.
அன்று இளமாறன், ரோஜா வீடு வரும் போது மாலையாகி இருந்தது.
“அப்பாடா, இப்பத்தான் என் ரோஜாவை என்கிட்ட தனியா விட்டிருக்காங்க” வீட்டிற்குள் நுழைந்ததும் மனைவியை இறுக அணைத்து நின்றான். ஒருவித சரணாகதி நிலை. வார்த்தைகள் தேவைப்படாது இருவரும் ஒருவரையொருவர் உணர்ந்து நின்றனர்.
அவன் மனத்தில் அலையடித்த உணர்வுகளை, வெளிப்படுத்தத் தெரியாமல் திணறினான் இளமாறன்.
“இளா..” அவன் மார்பில் சாய்ந்து முகத்தை மட்டும் நிமிர்த்திய மனைவியின் இதழ்களை ஈரமாக்கினான்.
“அடுத்த வாரம் விசா வந்திடும் இல்ல? ஹனிமூன் போகலாமா செஃப்?”
“என்னது ஹனிமூனா? என்னடி பேசுற? நீ ரெண்டு மாசம் ப்ரக்னன்ட். இத்தோட லாங் டிராவல் பண்ணக் கூடாது. தெரியும் தானே?”
“இல்ல இளா. அத்தை என்கிட்ட ஃபேமிலி லைஃப் எப்பவும் போல இருங்கன்னு சொன்னாங்க” வெட்கத்துடன் சொல்லி கண் சிமிட்டினாள்.
“உனக்கும், உன் அத்தைக்கும் வெட்கமே கிடையாதா டி?” கூச்சத்துடன் அவள் நெற்றியில் முட்டிக் கேட்டான் இளமாறன்.
“இந்த மாதிரி நேரத்துல எந்த டாக்டர்னாலும் இதைப் பத்தி பேசதான் செய்வாங்க. இதெல்லாம் நார்மல்” என்று ரோஜா சொல்ல, உடல் குலுங்க சிரித்தான் அவன்.
“நான் அவங்களுக்குக் கால் பண்ணி, இல்லயில்ல வேணாம். அத்தையை மீட் பண்ணி நாம டிராவல் பண்ணலாமான்னு கேட்கவா?” ஒவ்வொரு வார்த்தையாக உச்சரித்து அவள் கேட்க,
“உன்னைப் பிச்சுடுவேன் ராஸ்கல். இப்போ நாம எங்கேயும் போகப் போறதில்லை” என்று அவன் அழுத்தமாகச் சொல்லவும், உதட்டை சுளித்தாள்.
“உனக்கு ஆறு மாசம் ஆகட்டும் போகலாம்” என்று அவளைச் சமாதானப்படுத்த அவன் சொல்ல,
“கதை விடாதீங்க. உங்களை நான் நம்ப மாட்டேன். ஆறு மாசம் ஆனதும் வேற காரணம் சொல்லி வேணாம் சொல்வீங்க” என்று முகம் திருப்பினாள் ரோஜா.
“சரி விடு. பாப்பா பொறந்ததும், போவோம். சரியா?”
“எது? குழந்தை கூட ஹனிமூனா? நடக்கவே நடக்காது” அவன் மார்பில் முட்டி அலுத்தாள்.
“இந்த ஜென்மத்தில் ரெண்டு முறை தாலி கட்டியும், உங்களுக்கு அடுத்த ஜென்மத்தில்தான் ஹனிமூனா?” ரோஜா கிண்டலாகக் கேட்க, சத்தமாகச் சிரித்தான் இளமாறன்.
“கல்யாணமான முதல் ஆறு மாசம் ஹனிமூன் பீரியட்னு நீங்க அடிக்கடி சொல்லும் போதே நான் சுதாரிச்சுருக்கணும்.” ரோஜாவின் புலம்பல் அவனுக்குச் சுவாரசியம் கூட்டியது.
“விடுடி. கேவலமா நடிக்காத. அதான் உன் டாக்டர் ஃபேமிலி லைஃப்க்கு ஓகே சொல்லிட்டாங்க, இல்ல? நாம ஹனிமூனை வீட்லயே கொண்டாடிடுவோம். என்ன சொல்ற?” ரோஜாவை நெருக்கமாக இழுத்து அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்து வாசம் பிடித்தான்.
“அச்சச்சோ. அதெல்லாம் நடக்காது. நாம கவனமா இருக்கணும். நீங்க இன்னும் ரெண்டு மாசத்துக்குத் தள்ளிப் படுக்கணும். என்னை விடுங்க முதல்ல” கணவனை விலக்கி தள்ளி ரோஜா நடக்க, இரண்டே எட்டில் அவளை நெருங்கி கையில் அள்ளிக் கொண்டான் இளமாறன்.
“இளா” அவன் கழுத்தில் கரம் கோர்த்து கத்தினாள் ரோஜா.
“இருக்கேன் டி. இங்கதான் இருக்கேன்” என்று அவன் சொன்னதும், அந்த வீட்டை நிறைத்தது அவர்களின் சந்தோச ஆர்ப்பரிப்பு.