39.1 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

அத்தியாயம் 39

 

அர்த்தமில்லாமல் வாழ்கிறோம் 

என்பதை உணரும்போது – சிலபேர்

தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

நிறையப்பேர், காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்

–கண்ணதாசன் 

 

மாலை நேரம் வீடு மீண்டும் அதன் இயல்புக்கு மாறியது. மதியம் உணவில் மீதமிருந்த சிக்கனையும், மட்டனையும் பப்சாக பாயல் மாற்றிக் கொண்டிருக்க, எபி டீ போட இஞ்சியை இடிக்க ஆரம்பித்தான். 

நடமாடும் உயிரினங்களை உண்ணாதவனுக்காக, பப்சிற்கு உள்ளே வைக்க, உருளைக் கிழங்கு பச்சைப் பட்டாணி மசாலாவை தயாரித்துக் கொண்டிருந்தவளைப் பாரத்த எபி, வாய் திறந்தானில்லை. 

“இப்போ டீ வேண்டாம் மனோ. இந்த பப்ஸ் ரெடி ஆகறதுக்கு அஞ்சு நிமிஷம் முன்ன போட்டாப் போதும். டீக்கு இடிச்ச மசாலா ஐட்டம வச்சுட்டுப் போங்க. நான் போடுறேன்,” என்றவளிடம் எந்த வாதமும் செய்யாமல் வெளியே சென்றவனை இயலாமையோடு பார்த்தாள்.  

“வீட்டுக்கு ஒருத்தரை கூப்பிட்டுட்டு ‘என்னால உன்ன கவனிச்சுக்க முடியல’ன்னு அவர எப்படி கிளம்ப சொல்ல முடியும் மனோ?” என்று கேட்டதற்கு, அவன், “என்னவாவது பண்ணு. எனக்கு அவனப் பிடிக்கல! உங்கிட்ட அவன் ஓவர் உரிமை எடுக்கறது எனக்கு சரின்னு படல! அவ்வளவு தான்!” என்று விலகிக் கொண்டான். 

தயாரான பப்சையும் தேநீரையும் பிரவீனிடம் நீட்ட, அதைப் பார்த்தவன், “அலர்விழி, நான் உன் கெஸ்ட் இல்ல. ஃபேமிலி. சோ இருக்கறத குடு. எனக்காக தனியா எதையும் செய்யாத. எனக்கு கிட்சன் வேலை தெரிஞ்சா ஹெல்பாது பண்ணுவேன். எனக்கு ஹெல்ப் பண்ணக் கூடத் தெரியல! நீ      கஷ்ட படுறத பார்க்க முடியல. நைட்டுக்கு ஆர்டர் பண்ணிடுவோமா?” என்றவனிடம் 100 விழுக்காடு கரிசனமே.

“அச்சோ என்னத்தான் நீங்க? எனக்கு ஒரு கஷ்டமும் இல்ல. ஹெல்ப் பண்ண மனோ, இலக்கியா, பாயல்ன்னு எல்லாரும் தான் இருக்காங்களே அப்புறம் என்ன?”

இவள் மனோ என்றவுடன் மதிய நிகழ்வு நினைவு வர, இவன் பார்வை எபியின் பக்கம் சென்றது.

பாயல், எபியின் அருகில் அமர்ந்து கொண்டு எதையோ கேட்டுக் கொண்டிருக்க, இருவரும் ஒற்றை மடிக்கணினியில் தலைகளை நுழைத்துக் கொண்டிருந்தனர். அவனிடம் அவள் எதையோ ரகசியம் போல் கூற… அவன், அவள் தலையில் தட்டி, “இதப் பாரு” என்று சிரிக்க, மீண்டும் அவள் எதையோ கூற இருவரின் சிரிப்பொலியும் அறையை நிறைத்தது. 

‘ஒருத்தியையும் விட்டு வைக்க மாட்டானா?’ என்று பார்த்த பிரவீன் நேரடியாகவே முகம் சுளிக்க, அந்த சுளிப்பை அலர்விழி பார்க்கத்தான் செய்தாள். நீண்ட மூச்சை இழுத்து விட்டு உள்ளே சென்று விட்டவளுக்கு தன்னால் எபியின் பெயர் கெட்டு விட்டதே என்ற வருத்தம். 

அம்மாவிற்கு இவன் தான் மருத்துவம் பார்க்கிறான் என்று தெரியும். இவனிடம் மருத்துவம் பெற ஒரு கூட்டமே காத்திருக்க, இவன் அம்மாவைக் காண அவ்வப்போது வீட்டிற்கே செல்வானாம். வீட்டில் இவனுக்கு ஏகபோக மதிப்பும் மரியாதையும் என்று நகு கூறியிருக்கிறாள். இவனும் இங்கு வந்த அன்றிலிருந்தே, பேசும் வேளையிலெல்லாம் அப்பாவும் அம்மாவும் இவன் நலம் விசாரித்து விடுகின்றனர்! இது போதாதென்று இவனுக்கு, சின்ன மாப்பிள்ளையின் அண்ணன் என்ற பட்டம் வேறு!

மனோ தான் காதலன் என்று அறிமுகபடுத்தும் வேளை, மருத்துவனின் மனோவைப் பற்றிய எண்ணம் எங்கு கொண்டு நிறுத்தப் போகிறது என்று கணிக்க தனி விசாரணைக் கமிஷன் தேவையில்லை! இந்த திருமணம் நடக்க ஒரே ஒரு விழுக்காடு சாத்தியக்கூறு கூட இருப்பதாக அலர்விழிக்கு தோன்றவில்லை. 

பிரவீன் நினைத்தால் முடியுமோ? முடிய சாத்தியக்கூறு உள்ளது என்றது அலர்விழியின் கணிப்பு. இவன் கூறினால் அம்மா அப்பா காது கொடுத்துக் கேட்பார்கள். ஏன், அம்பிகா அத்தையும் இவளுக்காக பேச வாய்ப்புள்ளது. அதற்கு இவனிடம் மனோ பற்றிக் கூறவேண்டும். 

இன்றே பேச வேண்டும் என்ற எண்ணங்களில் உழன்றவள், எபியின் தோள் தட்டி, “அவங்க ரெண்டு பேரும் டீ நல்லா இருக்குன்னு எக்ஸ்ட்ரா எடுத்துகிட்டாங்க. சோ காபி தான் நமக்கு” என்று அவன் கேட்காமலே, ஒரு வாய் குடித்து ருசி பார்த்த காபியை அவன் கையில் கொடுத்து விட்டு அலர்விழி செல்ல, பார்த்திருந்த மருத்துவன் காதில் புகை மூண்டது. 

அலர்விழி மேல் விருப்பம் மட்டும் இல்லை, அவள் தனக்கு மட்டுமே சொந்தமானவள் என்ற உடைமைத் தன்மையோடு இருப்பவனுக்கு எபி அவளிடம் உரிமை காட்டுவதையோ, இவள் அவனோடு நட்பாய் பழகுவதையோ அனுமதிக்க முடியவில்லை. ‘நல்ல வேளை சித்திகிட்ட பேசியாச்சு!’ என்ற நிம்மதி மூச்சின் காரணத்தை அலர்விழி அறிந்திருந்தால் அவனோடு வேறு விதமாகப் பேசியிருப்பாள்! 

 இரவு உணவிற்கு பீட்ஸா தயாரிக்கும் வேலை ஆரம்பமாகும் முன் மனோவிற்கு ரசம் வைக்க அலர்விழி அடுக்களை செல்ல, “விழி ரசம் வைக்கப் போறேன்னா, மட்டா அரிசி வை. வெள்ள அரிசி வேண்டாம்” என்று எபி குரல் கொடுத்தான். 

“வரவா…” என்றவனிடம், “மத்தவங்களுக்கு நீங்க பாருங்க இத நான் பார்த்துக்கிறேன்.” என்றவளோடு மருத்துவனும் இணைந்து கொண்டான்.

“நீ சொல்லு, நான் எடுபிடி வேலை செய்றேன்” என்று வந்து நின்று கொண்டவனுக்கு, அலர்விழியோடான அந்த நேரம் மிகவுமே பிடித்துப் போனது.

“ரைஸ் வைக்கிறேன்னா, எனக்கும் சேர்த்தே வச்சிடேன் அலர்விழி. பீட்ஸா வேண்டாமே” என்றான் கெஞ்சலாய்.

“ஏன் த்தான்? உங்களுக்கும் ச்சீஸ் வேண்டாம்ன்னு இருக்கா?”

“இப்போ தானே பூட் ஹேபிட்ஸ்ஸ மாத்துறேன். கொஞ்சம் பொறுமையாப் போறேனே. மில்க் மாதிரி ச்சீஸ் டைஜெஸ்ட் ஆக மாட்டேங்குது. அது ஸ்மெல் கூடப் பிடிக்கல.” 

“ஹ ஹ ஹா… தியாகி அத்தான் நீங்க! யாரு அத்தான் அந்த கொடுத்து வச்ச பொண்ணு? சொல்லுங்களேன்.”

சிரித்தான். “இன்னும் அவகிட்ட சொல்லல அலர்விழி!”

“ஓஹ்?! ஒன் சைடுக்கேவா? அவங்களுக்கு உங்கள தெரியுமா? தெரியாதா?”

“அவளுக்கும் எனக்கும் நல்ல பழக்கம்.”

“அப்புறம் ஏன் சொல்லல?”

“அவளுக்குன்னு ஒரு கொள்கை, கனவு கை சேந்த பிறகு தான் கல்யாணம்ன்னு! அதனால அவ ஆசை நிறைவேறுற வரை அவள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்ன்னு காத்திருந்தேன்.”

“ஆஆ… சோ ஸ்வீட் அத்தான் நீங்க! சொல்லுங்க, அவங்க கனவு எப்போ தான் நிறைவேறும்?”

“அது ஆச்சு அலர்விழி.”

“அப்புறம் என்ன அத்தான்? சொல்ல வேண்டியது தானே?”

“எப்பிடி சொல்றதுன்னு தெரியல அலர்விழி. அவகிட்ட சொல்லணுமா இல்ல முறைப்படி அவங்க அம்மா அப்பாகிட்ட பேசவான்னு ஒரு குழப்பம் அதுதான்!”

“ஹ ஹ ஹா.. தி கிரேட் நியூரோ சர்ஜன், டாக்டர். பிரவீன் குமாருக்கு குழப்பமா? இதுல குழம்ப என்ன அத்தான் இருக்கு? பொண்ணுகிட்ட நேராப் போய் எனக்கு உன்ன பிடிச்சிருக்கு உன் வீட்டுல பேசட்டான்னு பட்டுன்னு கேட்டுடுங்க. உங்கள வேண்டாம்ன்னு கண்டிப்பா சொல்ல மாட்டாங்க! கெத்தா போய் அவங்க அப்பாட்ட ‘மாமோய் உன் பொண்ணக் குடு’ன்னு நெஞ்ச நிமித்திட்டு கேளுங்க! உங்களுக்கு பொண்ணு கொடுக்க மாட்டேன்னு மடையன் கூட சொல்ல மாட்டான்! அப்புறம் அடுத்த மாசமே எங்களுக்கு கல்யாண சாப்பாடு தான்!”

“நீயா இருந்தா என்னை மாதிரி வேலையே மூச்சுன்னு வாழற போரிங், முசுடு டாக்டருக்கு மனைவி ஆக விருப்பப் படுவியா அலர்விழி?”

“அய்யே… என்ன பேச்சிது? நீங்க கொஞ்சம் ரிசர்வ்ட் டைப்… அது உங்க குணம்! சட்டுன்னு யார் கிட்டயும் பேச வரல. அதுக்காக நீங்க போரிங்கும் இல்ல, முசுடும் இல்ல. நீங்க கிரேட் கம்பனி. ஐ லவ் யுவர் கம்பனி அத்தான்.”

“வாவ்! தேங்க்ஸ் அலர்விழி! அப்போ நான் உன் அம்மா அப்பா…” அவன் முடிக்கும் முன், “என்ன ஆச்சு… இன்னுமா ஒரு ரசம் வச்சிட்டிருக்க? கால் வலிக்குதுன்னு சொல்லிட்டு ஏன் இவ்வளவு நேரம் நிக்கிற? என்ன செய்யணும்ன்னு சொல்லிட்டு போய் சோஃபால உக்காந்து பேசுங்க!” கூறிக் கொண்டே வந்து நின்ற எபியை வெட்டவா குத்தவா என்று முறைத்தான் பிரவீன்.

“ஆகிடுச்சு மனோ” என்றவள், “இவர் ரசத்துக்கு எக் தொட்டுப்பார் அத்தான். உங்களுக்கும் கொரியன் எக் ஆம்லேட் போடவா? வெஜ் எல்லாம் இருக்கும்… டேஸ்ட் நல்லா இருக்கும். நட்-மெக், சினமன், இட்டாலியன் மிக்ஸட் ஹெர்ப் போடுறேன், எக் ஸ்மெல் ரொம்ப வராது. ட்ரை பண்ணுறீங்களா?” பிரவீனை ஆர்வமாய் பார்த்து கேட்டாள்.

“ம்ம், நீ சொன்னா சரி தான்” என்றவன், “நீங்க ரெண்டு பேரும் போய் உக்காருங்க நான் முட்டை ரெடி பண்றேன்.” என்று எபி கூறவும், வேறு வழியில்லாமல் வெளியே செல்ல, அலர்விழி மனோவோடே நின்று  கொண்டாள்.

பிரவீன் அலர்விழியோடு வாஞ்சையோடு பாசம் பொங்கப் பேசுவதும், இடையே வரும் எபியை முறைத்தே கொல்லுவதையும் எபி கவனிக்காமலில்லை. வீட்டிற்கு வந்தவனை கழுத்தைப் பிடித்து தள்ள முடியவில்லையே என்ற ஆதங்கம் இருந்தாலும் இயல்பாய் கடந்தான். 

உணவும், அதன் பின் அவர்கள் பேச்சிலும், பாட்டிலும், விளையாட்டிலும் என்று அனைத்து கேளிக்கைகளிலும் பிரவீனை இணைத்துக் கொண்டாள் அலர்விழி. “தள்ளித் தள்ளி நிக்காதீங்க த்தான். இந்த வயசுல தான் இப்படி எல்லாம் கவல இல்லாம இருக்க முடியும். எஞ்சாய் பண்ணுங்க,” என்றவள் அருகிலேயே அமர்த்திக் கொண்டாள். என்ன மாயமோ, அவனும் அந்த நேரத்தை விரும்பியே கழித்தான். 

error: Content is protected !!
Scroll to Top