இளமாறனால் ரோஜாவிடம் என்றுமே இறுக்கமாக இருக்க முடியாது. அவள் மேல் காரணமின்றிக் கோபத்தை இழுத்துப் பிடிப்பதில்லை அவன்.
ரோஜா, அவன் நலனை மட்டுமே யோசிக்கிறாள் என்பது புரியாதவன் இல்லை அவன். அவன் கோபத்துடன் கத்திய பின்பும் ஆதரவாக அவன் கைப் பிடித்து நின்றது அவளின் அன்பைச் சொல்லியது.
“ரோஜா..” அவனைப் பார்க்காமல் படுக்கையைச் சரி செய்தவளை, இழுத்தணைத்துக் கொண்டான்.
“என்னைக் கல்யாணம் பண்ணும் முன்னாடி நல்லா யோசிச்சுக்கோ. என் கூட வாழ்றது அவ்வளவு ஈஸி கிடையாது ரோஜா” தங்களின் திருமணத்திற்கு முன்பு கணவன் எச்சரித்ததின் காரணம் அவளுக்கு இப்போதுதான் முழுதாக விளங்கியது.
பொதுவாகவே பெண்களுக்குப் புகுந்த வீடென்றால் சவால்கள் இருக்கத்தான் செய்யும். அதிலும் இது போன்ற உறவு சிக்கல்கள் கொண்ட வீட்டில் வாழ்வது இன்னும் சவாலானது என்பதை மிகத் தாமதமாகத்தான் உணர்ந்தாள் ரோஜா.
“இந்த நொடியும், நமக்குள்ள இருக்க இந்த நேசமும், இந்த நெருக்கமும் எனக்குப் போதும் ரோஜா.” கரகரத்த குரலில் அவள் காதில் உச்சரித்தான். அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் ரோஜா.
நாட்கள் இயல்பாக நகர இளமாறன் வேலையில் மூழ்கினான். அவனது சொந்த உணவகத்தைக் கவனிக்க முடியாத அளவு ஐந்து நட்சத்திர விடுதியில் அவனுக்கு வேலையிருந்தது. உணவகம் என்று வந்து விட்டால் தினம் ஒரு பிரச்சனையில்தான் அவர்கள் கண் விழிக்க நேரும். ஒற்றை அலைபேசி அழைப்பில் சிலவற்றைச் சரி செய்து விடுவான், மற்றதை கவனிக்க அவனே நேரில் சென்றாக வேண்டும். மீண்டும் இரட்டை வண்டி சவாரியில் அவன் தடுமாற, அவன் கேட்காமலே கைக் கொடுத்தாள் மனைவி.
அன்று காலை அப்பாவை அழைக்க வீடு சென்றாள் ரோஜா.
“ரோஜா, வாடா. காலைல என்ன டிஃபன் செஞ்ச? சாப்பிட்டியா, இல்லையா? அம்மா இடியாப்பம் பண்ணேன். சாப்பிடுறியா?” அவள் வீட்டினுள் காலை வைத்ததும், மகளின் வயிறை கவனிக்கப் பரபரத்தார் சித்ரா.
“அவருக்கு இட்லி, தக்காளி குருமா பண்ணேன் மா. அதையே நானும் சாப்பிட்டேன். நீங்க சாப்பிட்டீங்களா?” என்றபடி சோஃபாவில் அமர்ந்தவள், அம்மாவை இழுத்து அருகில் அமர்த்திக் கொண்டாள்.
அவரோ, மகளின் கையை உதறி எழுந்து கொண்டார்.
“அப்பா இன்னும் சாப்பிடல ரோஜா. நான் போய் அவருக்கு டிஃபன் எடுத்து வைக்கிறேன்” என்ற அம்மாவோடு அவளும் உணவு மேஜைக்குச் சென்றாள்.
ஐந்து நிமிடத்தில் சிவஹரி உணவருந்த வந்தார்.
“ரோஜா, வாம்மா. உன்ன ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சுட்டேனா?” அவர் கேட்க, “இல்லப்பா. நீங்க சாப்பிடுங்க” என்றவள், பெற்றோர் உணவை முடிக்கும் வரை ஏதோ ஆழ்ந்த சிந்தனையுடன் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
“ஏதாவது பிரச்சனையா ரோஜா? என்ன யோசிச்சுட்டு இருக்க?” சிவஹரி கேட்க,
“பிரச்சனை எதுவும் இல்லப்பா.” என்றாள்.
“இந்த ஒரு மாசமா இவர் ஹோட்டல்ல பிஸியா இருக்கார்ப்பா. அதுனால ரெஸ்டாரண்ட்டை வேற சரியா பார்க்க முடியல. அவரே ரெண்டையும் பார்க்கறதால டெய்லி வீட்டுக்கு லேட்டா வர்றார்” அதை ரோஜா சொல்லும் போதே சித்ராவின் முகம் மாறியதை பார்க்க வேண்டுமே.
“வேலை, பிசினஸ் ரெண்டையும் பார்க்கிறதுன்னா அப்படித்தான் மா. முதல்ல சிரமமாதான் இருக்கும். எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தானே? அதுக்கப்புறம் நார்மல் ஆகிடும். மாப்பிள்ளை எல்லாத்தையும் அசால்ட்டா சமாளிப்பார். நல்ல திறமைசாலி அவர். நீ கவலைப்படாத ரோஜா” என்று மகளிடம் சொன்ன கணவனை முறைத்த சித்ரா,
“அப்புறம், நீங்க வேற என்ன சொல்லுவீங்க? இந்த வேலைன்னு வந்துட்டா, உங்க மாப்பிள்ளை அப்படியே உங்களை மாதிரியே இருக்கார். நம்ம பிள்ளை முகம் எப்படி வாடிப் போய் இருக்கு. பாருங்க” என்று கணவனை அர்சிக்கத் தொடங்கினார்.
ரோஜா சிரித்து, “அம்மா..” என்றாள்.
“என்ன? உங்கப்பாவை நான் எதுவும் சொல்லிட கூடாதே. உடனே சப்போர்ட்டுக்கு வந்துடுவீங்களே” என்று மகளைக் கத்தினார் சித்ரா.
“அம்மா நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க. என்னைப் பேச விடுங்க” அவளும் குரலை உயர்த்திச் சொன்னாள்.
“என்ன, சொல்லு” என்றார் சித்ரா கோபமாக. சிவஹரி மகளை ஊன்றி கவனித்தார்.
“அவரோட ரெஸ்டாரண்ட்டை நாளையில் இருந்து நான் பார்க்கலாம்னு இருக்கேன் ப்பா”
“நல்ல ஐடியா ரோஜா” என்றார் சிவஹரி மெச்சுதலாக.
“என்ன சொல்ற நீ?” என்று சித்ரா அதிர, “அம்மா, எங்க ரெஸ்டாரண்ட் லஞ்ச் அண்ட் டின்னர்தான் ஓபன் பண்றோம். அதுனால, காலைல நான் ஃப்ரீதான். அப்போ இனிமே தினமும் நான் காலைல கேன்டீன் போய்டுறேன். அப்பா மதியத்துக்கு அங்க வந்தா போதும். அப்பா வந்ததும் நான் ரெஸ்டாரண்ட் பார்க்கப் போய்டுவேன். உங்க மாப்பிள்ளை வேலை முடிச்சுட்டு வந்து என்னைப் பிக் அப் பண்ணிப்பார்” அம்மாவின் கைப் பிடித்து விளக்கமாகச் சொன்னாள் ரோஜா.
“அதெப்படி நீ மட்டும் தனியா வேலை பார்ப்ப? மாப்பிள்ளை கூட இருந்தா தேவலை…” என்ற மனைவியின் புலம்பலை, “சித்ரா..” என்று அதட்டி அடக்கினார் சிவஹரி.
“நீ சொல்லு ரோஜா. வேற என்னமோ பிளான் பண்ற போலயே? என்னன்னு சொல்லு” அப்பா கேட்கவும் பெரிதாகப் புன்னகைத்த ரோஜா, திரும்பி அம்மாவைப் பார்த்தாள்.
“என்னை ஏன் பார்க்கற?” சித்ரா சந்தேகமாகக் கேட்க, கிளுக்கிச் சிரித்தாள் ரோஜா.
மகளின் சிரிப்பு அவர்களையும் தொற்றிக் கொண்டது.
“இனிமே நீங்கதான் கேன்டீன் கல்லாவுல உட்காரப் போறீங்க மா. உங்களுக்கு ஓகே தானே? அப்பா, நீங்க என்ன சொல்றீங்க? அம்மா நம்ம கேன்டீன் வரட்டுமா?” மகளின் கேள்வி ஒருவருக்கு அதிர்ச்சியையும், மற்றவருக்கு ஆச்சரியத்தையும் தந்தது.
“சூப்பர் ஐடியா கொடுத்துட்டு என்னை என்ன சொல்ல சொல்ற ரோஜா குட்டி? இன்னைக்கே நம்ம கேன்டீனுக்கு உங்கம்மாவை கூட்டிட்டு போவோம். அவ கையைப் பிடி சொல்றேன்” என்று சிரித்த முகமாகச் சொன்னார் சிவஹரி.
சித்ரா அதிர்ச்சியுடன் அவர்களைப் பார்த்தார்.
“நானா? நீங்க எல்லாம் கால்ல சக்கரம் கட்டிட்டு ஓடுறது பத்தாதுன்னு என்னையும் இதுல இழுக்கப் பார்க்கறீங்களா?” மறுப்பை முறைப்பில் வெளிப்படுத்தினார்.
“நீங்க வந்தா அப்பாவுக்கும், எனக்கும் நிறைய வேலை குறையும் இல்லம்மா?”
“சும்மா சொல்லாத. நான் வந்து பெருசா என்னாகப் போகுது?” சித்ரா மீண்டும் சந்தேகம் எழுப்ப, “என்னம்மா நீங்க, முன்னாடி நீங்க தானே அப்பாவுக்கு ஹெல்ப் பண்ணீங்க? என்னமோ புதுசா கேன்டீன் வரப் போற மாதிரி பேசுறீங்க?” என்று கோபித்தாள் ரோஜா.
“இத்தனை வருஷமும் பிள்ளைங்க ஸ்கூல், படிப்புன்னு வீட்ல உட்கார்ந்துட்டு, நான் வீட்டுக்கு நேரத்துக்கு வர்றதில்லைன்னு புலம்பிட்டு இருந்த நீ. இப்போதான் நாம பிள்ளைங்களுக்குக் கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சு இல்ல. ஒழுங்கா கேன்டீன் வா சித்ரா. ரோஜா, எனக்கு இது தோனவே இல்ல பாரேன்” மனைவியிடம் கண்டிப்பாகச் சொல்லி விட்டு, மகளிடம் அங்கலாய்த்தார்.
சித்ரா அத்தனை எளிதில் அதற்குச் சம்மதிக்கவில்லை.
கணவரும், மகளும் சேர்ந்து அவர் மனதை கரைக்க, இறுதியில் பெரும் தயக்கத்துடன் சரியென்றார் அவர்.
அப்பா, மகள் இருவரும் அவரிடம் பேசியதில் ஓய்ந்து அமர, “ரோஜா வெயிட் பண்ணு. அம்மா சேலையை மாத்திட்டு வர்றேன்.” என்று உள்ளே ஓடி அவர்களை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தினார் சித்ரா.
ஐந்து நிமிடத்தில் வேறு சேலை மாற்றி வந்து, “ஏங்க…” என்று சித்ரா கணவரை அழைக்க, “என்னம்மா?” என்றார் அவர்.
“மாசாமாசம் நித்திக்கு ஒரு அமௌண்ட் கொடுக்கறீங்க. உங்க கூடவே இருக்க ரோஜாக்கு அதை விட ரெண்டு பங்கு பணம் தர்றீங்க. நான் வந்தா, எனக்கு என்ன தருவீங்க?” என்று சித்ரா கேட்டதும், பக்கெனச் சிரித்து விட்டனர் மற்ற இருவரும்.
“அந்தக் கேன்டீன் முதலாளியே நீதான் சித்ரா. நான் சம்பாதிக்கிற மொத்தப் பணமும் உன்னோடதுதான். நீ பார்த்து எங்களுக்கு ஏதாவது கொடுத்தா போதும்” மனைவியை நெருங்கி அவர் சொல்ல, ரோஜா வெளியில் நடந்தாள்.
“ஆங், இதெல்லாம் நல்லா பேசுவீங்க” என்ற அம்மாவின் போலி கோபக்குரல் ரோஜாவின் செவியில் விழ சிரித்துக் கொண்டாள் அவள்.
அவர்கள் திட்டமிட்டபடி கணவரோடு தினமும் கேன்டீன் வந்தார் சித்ரா. வேலை அவரை மகள்களைத் தவிர மற்றதை யோசிக்க விடாமல் பரபரப்பாகவே வைத்திருந்தது.