38.2 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

மெத்தையில் வைத்திருந்த மாற்று சட்டையும், தலையணைகளும் இருவர் முகம் நோக்கி மாற்றி மாற்றிப் பறக்க, இருவருக்குமிடையே விளையாட்டு ஆரம்பமானது.

அவன் விடுவதாகத் தெரியவில்லை என்றதும் சிணுங்கிக் கொண்டே உருண்டு புரண்டு, எழுந்து கட்டிலைச் சுற்றி ஓட… இவனும், “உன்ன இன்னைக்கு என்ன பண்றேன் பாரு… நோய் வருமாமே…” சிரித்துக் கொண்டே துரத்த… அங்கு பொங்கி வழியும் சிரிப்பு சத்தம் மட்டுமே. 

கையைப் பிடித்தவனை தள்ளி விட்டு மீண்டும் அவள் ஓட்டம் பிடிக்க, “ஓ மேடம் அவ்வளவு ஸ்ட்ராங்கோ. இருடி இன்னைக்கு நீயா நானா பார்க்கிறேன்…” அவள் மேல் பாய… அப்படி எல்லாம் அவளை நெருங்க முடியவில்லை. 

“சண்டைக்காரி வாடி வாடி, உன்ன அடக்கி ஆளுறேன்

குட்டி போட்ட பூனை போல, வட்டம் அடிக்க ஏங்குறேன்” அவன் பாட,

“ஹ ஹ ஹா… முடிஞ்சாப் பிடி. அப்புறம் அடக்கி ஆளலாம்… கொஞ்சம் நல்லா பாடத் தெரியுதுன்னதும், சார் சீனப் பாரு!” அவள் சிரிக்க, 

“எட்டு வெச்சு நீயும்…  போனா சொக்குதடி

எட்டுப்பட்டி ராசா, பேச்சும் திக்குதடி

ஒட்டியிருக்க ஒத்துக்கடி”

அவன் கையில் பெண் சிக்கியதும், சிணுங்கிக் கொண்டே, “ஒட்டியிருக்க நேரங்காலம் இல்ல? விடுங்க மனோ…” என்றவள் சத்தம் அவளுக்கே கேட்டதா தெரியவில்லை. 

கன்னம் ஏந்திய கட்டை விரல்கள் இரண்டும் கன்னங்கள் வருடவுமே, மன்னவன் விழி நோக்கியவளின் நயனம் மயக்கத்தில்.

“விட தான் பிடிச்சேனாக்கும்” என்ற கிசுகிசுப்போடு கேட்டவனை ஆசை பொங்கப் பார்த்து நின்றவள் கண்களிலும் அவனுக்கு குறையாத எதிர்பார்ப்பு.

இதழ் பெண்ணவள் காது தொட்டு, கன்னம் தொட்டு, இமை தொடவுமே ‘மனோ’ என்ற முனகலோடு, தன்னை மறந்து பின்னோக்கி சாய்ந்தாள். குற்றுயிராய் நின்ற புத்தக அலமாரி பொத்தென்று விழ, “அம்மா…” என்ற பய அலறுக்குப் பின், அது அலமாரி      தான் என்றதும் அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லாமல் சுவரோடு சுவராய் அவள்! சுவரோடு ஒட்டியிருந்த சித்திரத்திற்கு நிறமாய் அவன். 

“விழி…” என்று காது மடலை வருடிய இதழின் கிசுகிசுப்பிற்கு பதில் தர முடியாமல் பெண் தவிக்க, கன்னம் வருடிய இதழ்கள் பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும், எந்த நோய் பற்றியும் கவலை இல்லாமல் தங்கள் தாகம் தணிக்கவா வேண்டாமா என்ற குழப்பத்தில் துடித்துக் கொண்டிருந்தன. 

மனம் தள்ளாட இருவருக்கும் விலக மனமில்லை. காலையில் பாதியில் விட்டதை இருவரும் எட்டிப் பிடிக்க ஆரம்பித்தனர். காத்திருப்பு களைத்திருக்க, இளமை சுழல் இருவரை தன் வசம் இழுத்துக் கொண்டிருக்க, அவர்களின் இனிய ஏகாந்தத்தை அறுக்கும் உக்தியை நாம் தேடவேண்டிய அவசியமில்லை. கரடி வீட்டில் தான் இருந்தது!

நடுக்கூடத்தில் விட்டுச் சென்ற கைப்பேசியை எடுக்க வந்தவன் காதில் ‘படார்’ ‘அம்மா’ என்ற சத்தங்கள் கேட்கவும், எதையும் சிந்தியாமல், கட்டளை கால் மேல் வைத்திருந்த ஆணி கொண்டு கதவைத் திறந்தான் மருத்துவன்.

கதவு ‘டமார்’ என்று திறக்கப்பட, கூடவே, “என்ன ஆச்சு?” என்ற அக்கறையான சத்தமும் வர, பார்க்காமலே, வந்தது யார் என்று தெரிந்தது இருவருக்கும். அவள் நின்று கொண்டிருந்த நிலையில், எப்படி அவனைச் சந்திக்க? எபியின் நெஞ்சுக்குள் சுருண்டு கொண்டாள் அலர்விழி.

“சரியான கரடி!” என்று கண்களை இவன் இறுக்க, அவளோ, “என்னங்க… இந்தாளு இங்க?” அணைத்திருந்தவனை இறுகப் பற்றிக் கொண்டாள்.

“என்ன டி? இவனுக்கு எல்லாம் இவ்வளவு சீன் குடுத்துகிட்டு?” என்றவனிடம், “ப்ளீஸ் மனோ நகர்ந்துடாதீங்க… என்னால சத்தியமா இப்போ அவர ஃபேஸ் பண்ண முடியாது” என்றவளுக்குத் தவிப்பாய் போனது. 

முதுகைக் காட்டி நின்றவன், ஒற்றைக் கை கொண்டு தலை வருடி, “என்ன நடந்துதுன்னு இவ்வளவு டென்ஷன் உனக்கு?” என்றவனின் காதில் மீண்டும் மருத்துவன் சத்தம்! 

“ஹலோ… என்ன பண்ணிட்டு இருக்க?”

‘இம்சை கொல்றானே. என்ன நடக்குதுன்னு கூடத் தெரியாத அளவு கேனையா இவன்?’ எண்ணியவளின் இடது கை சட்டையோடு எபியைத் தன் பக்கம் இழுக்க… வலக் கை விரல்கள் விலாவிற்கு பின்னிருந்த சட்டை பகுதியை இறுக்கிக் கொண்டிருந்தது.

“இரு டி பட்டு. என்ன அவசரம்? அவனை அனுப்பிட்டு வரேன்!” என்று சட்டையிலிருந்த கையை எடுத்து விட்டு அவள் இரத்தக் கொதிப்பை ஏற்றி விட்டான். 

முகத்தை மட்டும் திருப்பிய எபி, சலிப்பு மிகுந்த குரலில், “என்ன?” என்றான் பிரவீன் முகம் பார்த்து. 

“என்ன பண்ற?” என்ற மருத்துவனின் குரலில் காரம் அதிகம் தான்!

கட்டிலுக்கு மறுபக்கம் இருக்கவே எபியின் மேல் பாதி மட்டுமே தெரிய, அவனுக்குள் புதைந்திருந்த பெண் யார் என்று தெரியவில்லை. இலக்கியா தானே உள்ளே இருந்தாள்! ஆனால் அவன் நினைத்தது போல் பெண் விருப்பமில்லாது நிற்கவில்லை என்பது வெளிச்சம். அறிந்த பின் நாகரீகமாக வெளியே சென்றிருக்கலாம்! கலைந்திருந்த மெத்தையும், தரையில் அங்குமிங்குமாக கிடந்த பெண்ணின் உடையும் பார்த்த பின்னும் வெளியே செல்லாமலே நின்றிருந்தான், மருத்துவன். 

பிரவீன் பார்வை சென்ற இடங்களைப் பார்த்த எபியின் முகத்தில் நமட்டு சிரிப்பு. “அதுதான் என்ன நடக்குதுன்னு தெரியுதில்ல. போவியா… அத விட்டுட்டு ஓசி ஷோ பார்க்க, ‘என்ன பண்ற’ன்னு கேட்டுட்டு வந்து நிக்கிற! என்ன ஃப்ரீ ஷோ வேணுமா?” எனவும் மருத்துவனுக்கு ‘கசப்பான அதே கனவை’ மீண்டும் காண்பது போன்ற உணர்வு!  இதே பேச்சு… இதே தோரணை… இதே நக்கல்! எங்கோ எப்பொழுதோ அனுபவித்தது! எங்கே? சட்டென்று பொறி தட்டியது! 

“ஏய்… நீ… நீ தானே அன்னைக்கும் அந்த புக் ஷாப்ல… ஒருத்தி கூட?”

“ஹப்பா ஒருவழியா ட்யூப் லைட் எரிஞ்சுடுச்சு! ஆமா நானே தான்! இப்போ என்ன அதுக்கு?” 

“செய்யறது எல்லாம் பொறுக்கி வேல! இதுல என்ன ஒரு தெனாவட்டு உனக்கு?”

“ஆமா நாங்க பொறுக்கினா, நாகரீகம் தெரியாம பொறுக்கி இருக்கிற படுக்கயறையில நிக்கிற நீங்க யாரு சார்? வெளில போவியா? ஒரு மணி நேரம் கழிச்சு வரேன். ஆற அமர கதை பேசுவோம்!” 

“உனக்கு வேற வேலையே இல்லியா? எங்க போனாலும் இது தான் உன் வேலையா? காலையில கடை வாசல்ல ஒருத்தி… இங்க ஒருத்தின்னு! ஷேமா இல்ல? ச்ச!” கூறியவன் முகத்தில் அத்தனை அருவருப்பு. 

அவன் வார்த்தைகளோ, முக அருவருப்போ இவனைப் பாதித்ததாகத் தெரியவில்லை. “அதுல உனக்கு என்ன காண்டு? இப்போ இடத்தக் காலி பண்ணு! இல்ல, என்ன பண்றேன்னு பார்த்து தெரிஞ்சுக்கணும்னா நின்னு பாரு!” என்றவன் முகத்தைத் திருப்பிக் கொண்டு, “லூசு ஏதேதோ நினைச்சு கத்திகிட்டு நிக்குது. ஓங்கி ஒண்ணு அவன் மூக்குல குத்திட்டு வந்து ஆரம்பிச்ச கிஸ்ஸ முடிக்கட்டா டி?” என்று கிசுகிசுக்க,

“ச்ச… அடுத்தவங்க வீடுன்னு ஒரு மரியாதை இல்ல? என்ன மனுஷன் நீ எல்லாம்! உன்னையெல்லாம் ஒரு ஃப்ரெண்டுன்னு வீட்டுக்கு கூப்பிட்டவளை சொல்லணும்! அவ வந்ததும், வீட்டுப் பக்கம் சேர்க்காதன்னு சொல்லணும்!” 

“அந்த ஆணிய நாங்க கழட்டறோம்… இப்போ காத்து வரட்டும்!” என்றவனின் முதுகை முறைத்துச் சென்றவன், அவன் முழுக் கோபத்தையும் காட்டியதோ வாயில்லாக் கதவின் மேல். 

‘கல்யாணம் ஆகட்டும், அடுத்த நாளே வேலைக்குப் போய் கிழிச்சது போதும்ன்னு நிறுத்திட்டு, இவ பூரா ஃப்ரெண்ட்ஷிப்பையும் கட் பண்றேன்!’ கருவிக் கொண்டான், மருத்துவன். இப்படிப் பட்டவனோடு ஏன் அலர்விழி நட்பு கொள்ள வேண்டுமென்றே அவனுக்குப் புரியவில்லை. பாம்பை ஃப்ரெண்டுன்னு பால் ஊத்தி வளர்க்குறா! 

‘இவ இங்க இருக்கறது சரியில்லையே’ என நினைத்தவன், அலர்விழியின் அமெரிக்க வாழ்விற்கு முழுக்கிட்டு ஊருக்கு அழைத்துக் கொள்ளும் முடிவில், தூங்கிக் கொண்டிருந்த சித்தியை அழைத்துக் கொண்டே அவனிருந்த அறைக்குள் புகுந்தான். 

இவன் விட்ட வேலையைத் தொடர, “மனோ…” என்று முதுகில் ஒன்று வைத்தாள் அவள்! 

“என்ன டி?” எரிந்து விழுந்தான். 

“இது இப்போ நமக்கு தேவையா?” 

“உனக்கு தேவையில்லாம இருக்கலாம்! ஆனா எனக்கு, இப்போ தான் அதிகமா தேவைப்படுது!” 

“ப்ச் மனோ!” 

“இந்த இம்சையை எதுக்கு டி கூப்பிட்ட?” 

“சத்தமா பேசாதீங்கப்பா! தெரியாம கூப்பிட்டேன் போதுமா! திரும்பவும் வந்திடப் போறார் மனோ… அசிங்கமா நினைக்க போறார். வெளியில் போங்க மனோ…” என்றவளை முறைத்துக் கொண்டு தொப்பென்று கட்டிலில் அமர்ந்தவனுக்குள் எரிச்சல் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது! மருத்துவன் இவனின் எல்லைக்குள் கால் வைத்த எரிச்சல் அது! 

பூட்டியிருந்த அறைக்குள் நாகரீகம் இன்றி வந்ததில்லாமல் சத்தம் போட்டுச் செல்வானாமா? இவன் தன்னை என்ன நினைத்தால் என்ன? பெரிய இவனாமா?! அவனுக்காக இவள் பரிந்து பேசுவாளா?

“இது என் வீடு! அவனப் போக சொல்லு வெளியில!” என்றான் ஒட்டு மொத்த கோபத்தோடும். 

“மனோ ப்ளீஸ்..! சொந்தக்காரர் மனோ… அவர் உள்ள வந்தது தப்புதான். ஆனா சத்தம் கேட்டு ஏதோ ஆபத்துன்னு நினைச்சு தானே உதவிக்குன்னு…” 

“வந்த அடுத்த செக்கண்டே அவனுக்கு என்ன நடக்குதுன்னு தெரியும்! போகாம நின்னவன் கிட்ட ‘வெளியில போடா’ன்னு சொல்ல திராணி இல்ல. என்னை சொல்ல வந்துட்டா!” 

“மனோ… அவர் தப்பானவர் எல்லாம் இல்ல மனோ…” 

“அவனுக்காக என்ட்ட வாயத் திறக்காத விழி!”

யாருக்காகவோ மனோவை கோபப்படுத்த பெண் தயாராக இல்லை. “அச்சோ என் செல்லத்துக்கு கோபம் வந்திடுச்சு. நான் யாருக்கும் பரிஞ்சு பேசல பா. எல்லாமே எதிர்பாராம நடந்துடுச்சு. ஃபிரியா விடுங்க. எதுக்கு மூட கெடுத்து கிட்டு? உங்கள அவர் கேவலமா நினைக்குறார்ன்னு தானே கோபம். விடுங்க… நான் தான் உங்க கைக்குள்ள இருந்தேன்… உங்கள லவ் பண்றேன். கல்யாணம் பண்ணப் போறேன்னு சொல்றேன் போதுமா?”

“அவனுக்கு சொன்ன அதே தான் உனக்கும். ஒரு ஆணியையும் கழட்ட வேண்டாம். அவன் எதையாவது நினைக்கட்டும். வேலையப் பாரு போ.” u

உடுப்பை சரி செய்து, தலை வாரி வெளியே சென்றவளைப் பார்த்தே படுத்திருந்தான்! 

அப்படி எல்லாம் ஒருவரையும் வெறுக்கும் குணமில்லை எபியிடம். ஆனால், நகத்திற்கும் சதைக்கும் நடுவில் முள் போல் இறங்கிக் கொண்டிருப்பவன் மேல் எரிச்சலோடு கூடிய வெறுப்பும் ஒட்டிக் கொண்டது. மனோவின் முகம் அவன் உணர்வுகளைக் கண்ணாடி போல் காட்ட, வெளியே சென்றவள் மனோவின் முகம் பார்த்து அவன் மனதையும் படித்தே சென்றாள். 

‘கரையான் புற்றெடுக்க கருநாகம் புகுந்தது!’ – இது பழமொழி.

error: Content is protected !!
Scroll to Top