என் ஜீவனில் உறைந்திடு – 27 (1)

திருமண வாழ்க்கையில் முதல் முறையாக இருவரும் ஆளுக்கொரு பக்கமாகப் படுத்திருந்தார்கள்.

அவர்களின் உறவில் மெல்லிய விரிசல் விழுவதையும் ரோஜா விரும்பவில்லை. அதற்குக் காரணங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும், அதைக் காணாமல் போகச் செய்து விடும் மனத்திடம் அவளிடம் இருந்தது.

இருவருக்கும் நடுவில் இருந்த இடைவெளியை மெல்ல புரண்டு நிறைத்து விட்டாள் அவள். கண்களை இறுக மூடி தூங்குவது போல நடித்துக் கொண்டிருந்த இளமாறன், மனைவியின் கரம் மார்பில் பதியவும் மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டான்.

கடந்த பத்து நாட்களாகத் தினமும் அவளோடு மருத்துவமனை சென்றான் அவன். உணவகத்தில் அவளுக்கு உதவிகள் பலதும் செய்தான்.

ஒரே மருத்துவமனை என்பதால் அங்கே அம்மாவை தினமும் சந்தித்தான்.

ரோஜா அந்தக் கோணத்தில் யோசித்திருக்கவில்லை. அவளால் அம்மாவும், மகனும் தினமும் சந்தித்துக் கொள்வதை ஆவலுடன் எதிர்பார்த்தாள்.

அவர்களின் பார்வை, பேச்சு என அனைத்தையும் ஆர்வமுடன் கவனித்தாள்.

இளமாறன், அம்மாவுடன் மிக இயல்பாகப் பழகினான், பேசினான். பெரிதான எந்த ஆர்ப்பாட்டங்களும் இல்லாத உறவுநிலையைப் பேணினான்.

சில நாட்கள் காலையில் சுகந்தி கேன்டீன் வந்துதான் காலை உணவை உண்டார். மகன், மருமகளோடு அமர்ந்து உண்பதில் அவருக்குச் சொல்லொண்ணா மகிழ்ச்சியும், திருப்தியும் இருந்ததைக் கண்டு கொண்டாள் ரோஜா.

அவர் காலை உணவை முடித்ததும் இளமாறன் காஃபி எல்லாம் போட்டுக் கொடுத்தது அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனாலும், உள்ளுக்குள் அவள் அதை எதிர்பார்த்திருந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும்.

அவள் காண தவறிய, அல்லது கண்டு கொள்ளத் தவறிய கணவனின் இன்னொரு பக்கத்தை இப்போது நன்றாகக் கவனித்தாள்.

அவர்களைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் அத்தையின் முகம் முழுவதுமாக மலர்ந்துப் போவதை பார்க்கையில் ரோஜாவிற்குக் கலவையான உணர்வு.

இது போன்ற தருணங்கள் இனி கிடைக்காது என்பதைப் போல மகனுடன் கிடைத்த ஒவ்வொரு நொடியையும் பொக்கிஷமாகச் செலவழித்தார் சுகந்தி. அவனிடம் பேசிக் கொண்டேயிருந்தார்.

அவன் கைகளில் இருந்த அவரின் பரிசான கைச் சங்கிலி அவர் மனதை குளிர்வித்தது அப்பட்டமாக அவர் கண்களில் தெரிந்தது.

இளமாறன் மறந்தும் கூடக் கண்களில் பாசத்தையும், ஏக்கத்தையும் காட்டவில்லை. நான் எதற்கும் ஏங்கவில்லை, என்னை எதுவும் பாதிக்காது என்பது போலவே இருந்தது அவனது நடவடிக்கை.

அவளால் இந்தவொரு விஷயத்தில் மட்டும் அவன் மனதை புரிந்துக் கொள்ளவே முடிவதில்லை. இவன் மனதில் என்னதான் இருக்கிறது என்று குழம்பியவளுக்கு, அம்மா என்று அவன் மறந்தும் கூட உச்சரிக்காதது மீண்டும் அழுத்தமாய் மனதில் பதிந்தது.

அதன் பின்னே நிச்சயமாய் அவனது காயமும், வலியும் இருக்கிறது என்றே நம்பினாள் அவள். அவனைப் பேச வைக்க வேண்டும், அவனது காயத்தை, பல வருடங்களாக அவன் தூக்கி சுமக்கும் மன அழுத்தத்தைப் போக்கிட வேண்டும் என்று உறுதியாக நினைத்தாள் அவள்.

அன்றிரவு அவனே அதற்கு வாய்ப்பும் கொடுத்தான். தோட்டத்தில் சோகமாக அமர்ந்து நிலவினை வெறித்தபடி, அவன் பாடல் கேட்டது அவளைப் பேச வைத்தது.

ஆனால், இப்பொழுது அவனைத் தன் வார்த்தைகளால் காயப்படுத்தி விட்டோமோ? என்று தன்னைத் தானே குற்றம் சுமத்திக் கொண்டாள் ரோஜா.

இத்தனை வயது வளர்ந்த ஆண் மகனிடம், அம்மா என்று அழை என்று கட்டாயப்படுத்த முடியாது என்ற முடிவுக்கு அவள் வந்த போது, “பாசத்திற்குப் பருவம் ஏது?” என்ற கேள்வி அழுத்தமாய் எழுந்தது.

ஒரு பெருமூச்சுடன் கண்களை மூடினாள்.

மறுநாள் சென்னை திரும்பிய ரோஜாவின் பெற்றோர் நேராக மகள் வீட்டிற்கு வந்து விட்டனர். சித்ரா மகளை உட்கார வைத்து விட்டு வீட்டு வேலைகளைப் பார்க்க, சிவஹரி மருத்துவமனை கிளம்பினார்.

“பொண்டாட்டி பிள்ளைங்க எதுவும் உங்கப்பா கண்ணுக்குத் தெரியாது. எங்க கல்யாணத்துக்கு முன்னாடி இந்தக் கேன்டீன் இருந்திருந்தா, அதுக்குத்தான் தாலி கட்டியிருப்பார் உங்கப்பா” சித்ரா புலம்ப, ரோஜா சத்தமாகச் சிரித்தாள்.

அவளை முறைத்தப்படி வந்த இளமாறன் காலை உணவை முடித்து வேலைக்குக் கிளம்பினான்.

அவர்களுக்கு நடுவே மௌனமாய் ஒரு பொழுது நகர்ந்ததை அவளால் இன்னமுமே நம்ப முடியவில்லை.

அன்றிரவு உணவின் போது சிவஹரி மெதுவாய் மருமகனிடம் அந்தப் பேச்சை ஆரம்பித்தார்.

“ஏன் மாப்பிள்ளை, வீடு பத்தி யோசிச்சீங்களா? ஏன் கேட்கிறேன்னா நாங்க வீடு பார்த்திட்டு வந்ததுல இருந்து பில்டர் கால் பண்ணிட்டே இருக்கார். அதான், நம்ம முடிவை சொல்லிடலாம்னு..” என்று அவர் இழுக்க, இளமாறன் அவனுக்கு எதிரில் அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்தான்.

அவள் கண்களில் அவனுக்கான பதிலைத் தேடினான்.

“இந்த வெள்ளிக்கிழமை நீங்க ஃப்ரீயா இருந்தா போய் வீடு பார்த்திட்டு வந்துடலாம் மாமா. ரோஜாவுக்குப் பிடிச்ச வீட்டை வாங்கிடலாம்.” அவன் சொல்லவும் ரோஜாவின் கண்களில் சந்தோஷ சாயல்.

மெல்ல இதழ் பிரித்துக் கணவனைப் பார்த்து புன்னகைத்தாள். உதட்டுக்குள் புன்னகையை ஒளித்தான் அவன்.

‘ரொம்பத்தான்’ மனதில் முணுமுணுத்து உதடு சுளித்தாள்.

அன்றிரவு படுக்கப் போகும் முன், “தேங்க்ஸ்” என்று கணவனை அணைத்துக் கொண்டாள் ரோஜா.

“ம்ம்” என்றவனின் கரங்கள் அனிச்சையாய் மனைவியைத் தன்னோடு சேர்த்துக் கொண்டது. அவ்வாறாக அவர்களின் முதல் சண்டை ஒரே நாளில் ஒரு முடிவிற்கு வந்திருந்தது.

ரோஜாவின் பெற்றோர் திட்டமிட்டபடி ஏற்கனவே பார்த்து வைத்திருந்த இரண்டு வீட்டையும் ரோஜா, இளமாறனை அழைத்துச் சென்று காண்பித்தார்கள்.

இளமாறனின் சொந்த உணவகத்திற்கு மிக அருகில் இருந்த வீடுதான் அவர்கள் இருவருக்கும் மிகவும் பிடித்திருக்க, அதையே ஒரு மனதாகத் தேர்வு செய்தார்கள்.

அன்றே முன் பணம் கொடுத்து மகள் பெயரில் வீட்டை முன்பதிவு செய்து விட்டார் சிவஹரி.

ரோஜா பொறுப்பாக அதை மாமியார் குடும்பத்தினரிடம் பகிர்ந்துக் கொண்டாள். மறுவாரமே அவர்களை அழைத்துச் சென்று வீட்டையும் காண்பித்தாள்.

அது வில்லா என்றழைக்கப்படும் தனி வீடு. இப்போதுதான் கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருந்தது.

“வீடு ரொம்ப நல்லாருக்கு ரோஜா. ரூம்ஸ் மட்டும்தான் கட்டியிருக்காங்க இல்ல? இப்போ உங்க ஐடியாவை சொன்னா அதுக்கேத்த மாதிரி கட்டித் தருவாங்க தானே?” சுகந்தி கேட்க,

“பொதுவா அப்படிப் பண்ண மாட்டங்களாம் அத்த. பட் இந்தப் பில்டர் அப்பாக்கு தெரிஞ்சவங்க போல. நமக்குக் கஸ்டமைஸ் பண்ணித் தர்றேன்னு சொல்லியிருக்காங்க” என்றாள்.

“ஓ குட்” என்றபடி சுகந்தி நடக்க, “இங்க என்ன மாத்த சொல்லியிருக்கீங்க? கிட்சென் பெருசா வைக்கச் சொல்லியிருக்கீங்களா?” என்று அவளிடம் கேலியாகக் கேட்டார் கஸ்தூரி.

“பாட்டி உங்க பேரன் வீட்ல சமைக்கவே மாட்டார் தெரியுமா? அதுனால வீட்ல கிட்சென் எவ்வளவு சின்னதா இருந்தாலும், எந்த மூலையில் இருந்தாலும் அவருக்குக் கவலை கிடையாது” என்று ரோஜா சொல்ல, “நிஜமாவா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டார் கஸ்தூரி.

“மாறன் வீட்ல சமைக்க மாட்டானா? என்ன ரோஜா சொல்ற?” அவளின் பேச்சைக் கேட்டுக் கேள்வி எழுப்பினார் சங்கரன்.

ரோஜா மையமாகச் சிரித்து வைத்தாள். அவளுக்குக் கணவனைக் காட்டிக் கொடுக்கவும் விருப்பமில்லை. விட்டுக் கொடுக்கவும் மனமில்லை.

“ம்ம். உங்க அத்தைக்கிட்ட கேளு. நான் அவளுக்கு வீட்டு வேலையில எப்படி ஹெல்ப் பண்ணுவேன்னு சொல்லுவா.” என்று அவர் பெருமை பேச, பூஜை அறை எப்படி அமைய வேண்டும் என்று மகனிடம் சொல்லிக் கொண்டிருந்த சுகந்தி, அங்கிருந்தே திரும்பி கணவனை முறைத்தார்.

“நான் கேட்காமயே அத்த பதில் சொல்லிட்டாங்க மாமா” முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு ரோஜா சொல்ல, சத்தம் போட்டு சிரித்தார் சங்கரன்.

அவரோடு பேசியபடியே வீட்டின் பின் பக்கம் சென்றாள். அங்கே தோட்டம் போடுவது பற்றிப் பேசிக் கொண்டார்கள்.

“உங்க கல்யாணம் முடிவானப்போ மாறனுக்கு வீடு வாங்கித் தர்றேன்னு சொன்னேன் ரோஜா. ஒரே வார்த்தையில் வேண்டாம்னு சொல்லிட்டான்.” சங்கரன் சொல்ல,

“அத்தை எங்களை நம்ம வீட்டுக்கு கூப்பிட்டாங்க மாமா” என்று ரோஜா சொல்லவும், குற்ற உணர்வும், அதிர்ச்சியுமாக அவளைப் பார்த்தார் அவர்.

“என் தப்புதான் மா. மாறா, கல்யாணமானதும் உன் மனைவியோட நம்ம வீட்டுக்கு வான்னு நான் அவனைக் கூப்பிட்டு இருக்கணும். அதை விட்டுட்டு வீடு வாங்கித் தர்றேன் சொல்லவும், அவன் முகமே மாறிப் போச்சு. நான் தெரிஞ்சும், தெரியாமலும், என்னை அறியாமலும் ஒரே தப்பையே திரும்பத் திரும்பச் செய்திட்டே வந்துட்டுருக்கேன் மா.” அங்கிருந்து சாலையில் விரையும் வாகனங்களை வெறித்தபடி அவர் சொல்ல, ரோஜா அமைதியாக நின்றாள்.

“மாறன் ஒரு நல்ல மகன். எங்களால்தான் அவனுக்கு நல்ல பெற்றோரா இருக்க முடியல. நான் நிறைய நேரம் நினைச்சுருக்கேன். எனக்கு மட்டும் ஒரு வாய்ப்பு கிடைச்சா முப்பது வருஷத்துக்கு முன்னாடி போய் நடந்த எல்லாத்தையும் மாத்தி, எங்க தப்பை எல்லாம் சரி செய்திடணும்னு ஆசைப்படுவேன். நாம அத்தனைக்கும் ஆசைப்படலாம். ஆனா, ஆண்டவன் அதை நிறைவேற்றி வைக்க மாட்டான் இல்ல? நாம செய்ற தப்புக்கு உடனடி தண்டனை கொடுத்திடுறான்‌”

“எங்களுக்கு நிறையக் கனவு இருந்தது ரோஜா. என் பையனை ஸ்கூல், காலேஜ் கூட்டிட்டு போகணும். அவனுக்குச் சைக்கிள், பைக் ஓட்ட நானே சொல்லிக் கொடுக்கணும். அவனோட சேர்ந்து கிரிக்கெட், டென்னிஸ் விளையாடணும். அவன் பின்னாடி உட்கார்ந்து பைக்கில் போகணும். எங்க மகனோடு சேர்ந்து அம்மா, அப்பாவா நாங்களும் வளரணும் நினைச்சோம். ஆனா… அந்த ஆசையை நாங்களே கெடுத்துக்கிட்டோம்.”

“மாறன் அப்போ சின்னப் பையன். அவனைக் குத்தம் சொல்லவே முடியாது. அவங்க பாட்டி எப்பவும் உங்க அத்தையை ஏதாவது திட்டிட்டே இருப்பாங்க. அப்போல்லாம் மாறன் உதடை பிதுக்கிட்டு அழ ரெடியா நிற்பான். என்னால அவனை அப்படிப் பார்க்கவே முடியாது. ஒரு வயசுக்கு மேல அவனோட ஃபீலிங்ஸை வெளில காட்டிக்காம நிப்பான். அதைப் பார்க்கும் போது, இவனை ஏன் நாங்க இப்படிக் கொடுமைப்படுத்தறோம்னு எனக்குத் தோனுச்சு. அதுனால அதுக்கு அப்புறம் அவனை நான் மட்டும்தான் போய்ப் பார்த்தேன். உங்க அத்தையை எப்பவாவதுதான் கூடக் கூட்டிட்டு போவேன். அம்மா, பையன் ரெண்டு பேரும் ஹர்ட்டாகக் கூடாதுனு நான் நினைச்சது ரொம்பத் தப்பா போச்சு. அதான் அவங்களுக்கு நடுவுல பெரிய பாலத்தை உண்டாக்கி பாசத்தைக் காட்ட முடியாம பண்ணிடுச்சு”

“அத்த, அவரைப் போய்ப் பார்த்ததில்லையா? அது அவங்க வீடு தானே மாமா?”

“அவங்கம்மா வீடுதான். அடிக்கடி போகவும் செய்வா. சுகந்தி மேல அவங்கம்மாக்கு ரொம்பக் கோபம். பெத்த பிள்ளையைப் பார்க்காம வேலை, ஹாஸ்பிடல் கட்டுறதுன்னு இருக்கன்னு திட்டிட்டே இருப்பாங்க. தன்னாலதான் அம்மா பேச்சு வாங்குறங்கன்னு மாறனுக்குத் தோனி இருக்கும் போல. நாம பேசலன்னா அம்மா வந்து அநாவசியமா திட்டு வாங்க மாட்டாங்கன்னு.. என்கிட்டயே சொல்லியிருக்கான்.” அதைச் சொல்லும் போதே உணர்ச்சி பெருக்கில் அவர் குரல் உடைந்தது.

“நாங்க ரொம்ப மோசமான பேரண்ட்ஸ் ரோஜா. ஆனா, மாறன் ரொம்ப நல்ல மகன். அவனை அவனேதான் வளர்த்துக்கிட்டான். படிப்பு, வேலை, வாழ்க்கைன்னு எல்லாமே அவன் முடிவுதான். ஆனா, சரியான முடிவுகள்தான் எப்பவும் எடுத்திருக்கான். இன்னைக்கு அவனைச் சந்தோசமா பார்க்கவே, எங்களுக்கு அவ்வளவு சந்தோசமா இருக்கும்மா” அவளின் முகம் பார்த்துச் சொன்னார்.

ரோஜா புன்னகைக்க முயன்றாள்.

error: Content is protected !!
Scroll to Top