என் ஜீவனில் உறைந்திடு – 26 (2)

அப்போதும் அவனுக்குப் பிடித்ததாகதான் சமைத்தாள்.

பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயுடன், ஒரு கிண்ணம் கேழ்வரகு மாவு கலந்து, தேவையான உப்பும், தண்ணீரும் சேர்த்து பிசைந்து உருண்டைகளாக்கி வைத்தாள். அதற்குத் தேங்காய் சட்னி அரைத்து தாளித்தாள்.

இளமாறன் குளித்துத் தலையைத் துடைத்தபடி வெளியில் வர, அவன் கையில் சூடான கேழ்வரகு அடையும், தேங்காய் சட்னியும் கொடுத்தாள்.

உணவு என்று வந்து விட்டால் அவன் இளகி கொடுப்பதில்லை. ரோஜா கொடுத்ததை வாங்கி உண்ணத் தொடங்கினான்.

அவன் தட்டில் இன்னொரு அடையை வைத்து, “அம்மாப்பா ரெண்டு பேரும் இன்னைக்கு நித்திக்கா கூடப் பெங்களூர் போய்ட்டா, நான் அவங்க வர்ற வரைக்கும் பிஸியா இருப்பேன் இளா. நேத்து நீங்களும் சேர்ந்து தான் அப்பாவை நித்திக்கா வீட்டுக்கு போய்ட்டு வரச் சொன்னீங்க. இப்போ இப்படி அடம் பண்ணா, நான் எப்படிச் சமாளிப்பேன்? நான் ஒரு வாரம் கேன்டீன் சீக்கிரம் போற மாதிரி இருக்கும்…” என்று படபடத்தாள் ரோஜா.

“ரிலாக்ஸ் ரோஜா. எனக்கு மதியத்துக்கு மேல ஹோட்டல் போனா போதும். மாமா வர்ற வரைக்கும் டெய்லி உன் கூட நான் கேன்டீன் வர்றேன். ஓகே?” அவன் கேட்க, புன்னகையுடன் தலையசைத்து உள்ளே ஓடினாள்.

சமையல் அறையில் இருந்து திரும்பி வந்தவளின் கையில் இருந்த அடையைதானே எடுத்துத் தட்டில் வைத்துக் கொண்டான் இளமாறன்.

“அப்பவும் நீங்க சமைக்க மாட்டீங்க? அப்படித்தானே?” ரோஜா கடுப்புடன் கேட்க, “எனக்குச் சமைச்சு போட என் பொண்டாட்டி இருக்காடி. நான் ஏன் ஹோட்டல் போய்ச் சாப்பிடணும்” என்று வக்கணையாகப் பேசியபடி அடையை ருசித்து உண்டான்.

“ம்க்கும்” உதட்டை சுளித்து முகத்தைத் திருப்பிக் கொண்டு சமையல் அறைக்குச் சென்றாள் ரோஜா.

அன்று மாலையே மூத்த மகளுடன் பெங்களூர் சென்று விட்டார்கள் சித்ரா, சிவஹரி தம்பதியினர்.

சித்ராவிற்குப் பிள்ளை சுமக்கும் மகளைக் கூடவே வைத்து சீராட்ட கொள்ளை ஆசை. ஆனால், சிவஹரி தொழிலை விட்டு எங்கும் நகர்வதாக இல்லை.

மகள்கள் இருவரும் சேர்ந்து திட்டமிட்டு, பெற்றோருடன் பேசி அவர்களை மருமகன்கள் துணையுடன் சம்மதிக்க வைத்திருந்தனர்.

அப்பாவை வேலை நேரத்தில் தேடினாலும் கூட ரோஜாவிற்கு அம்மா இல்லாமல்தான் எதுவுமே ஓடவில்லை.

சித்ராவிற்குச் சென்னை, பெங்களூர் எல்லாம் பொருட்டே அல்ல. எங்கிருந்தாலும் அவர் மனம் மகள்களின் நலனை மட்டுமே யோசித்திருக்கும். அவரின் வழக்கமாக ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது மகளை அழைத்துப் பேசி விடுவார் அவர்.

ஆனாலும், ரோஜாவின் மனம் பெற்றோரை அதிகமாகத் தேடியது.

இளமாறன் சொன்னது போலவே தினமும் அவளுடன் கேன்டீன் வந்து உதவினான்.

மறுநாள் அவளின் பெற்றோர்கள் பத்து நாட்கள் கழித்துச் சென்னை திரும்புவதாக இருந்தனர்.

“நீ கேட்ட சம்மர் ட்ரெஸ், மைசூர் சில்க் சேலை அப்புறம் கூர்க் காஃபி பொடி எல்லாம் வாங்கிட்டேன் ரோஸ் குட்டி. உன் செஃப்க்கு மாமா ஏதோ வாங்கி இருக்காங்க. அம்மா வேற உனக்காகப் பார்க்குறதை எல்லாம் வாங்கிக் குமிச்சுட்டு இருக்காங்க. உனக்கு வேற எதுவும் வேணுமா நீ சொல்லு?” நித்யாவிடம் பேசிக் கொண்டே வீட்டினுள் கணவனைத் தேடிக் கொண்டே நடந்தாள் ரோஜா.

“இதுவே போதும் கா.” என்ற ரோஜா, மற்றவை பேசி அழைப்பை துண்டித்தாள்.

“இளா..”

“இங்க இருக்கேன்” தோட்டத்தில் இருந்து குரல் கொடுத்தான்.

வீட்டு சுற்றுச் சுவரில் சாய்ந்து அமர்ந்து வானை வெறித்திருந்தான் இளமாறன்.

ரோஜா அவனுக்கு நெருக்கமாகச் சென்று அமர்ந்தாள்.

“காலங்கள் போனால் என்ன

கோலங்கள் போனால் என்ன

பொய்யன்பு போகும்

மெய்யன்பு வாழும்

அன்புக்கு உருவம் இல்லை

பாசத்தில் பருவம் இல்லை

வானோடு முடிவும் இல்லை

வாழ்வோடு விடையும் இல்லை”

இளமாறன் அலைபேசியில் எஸ்பிபி இசைக்க, யேசுதாஸ் உருகிக் கொண்டிருந்தார். அவரோடு சேர்ந்து பாடிக் கொண்டிருந்தான் இளமாறன்.

அவனது இந்தப் பரிமாணம் அவளுக்குப் புதிது. அந்தப் பாடலும், அதன் வரிகளும் மனதைத் தொட கணவனின் தோள் சாய்ந்துக் கொண்டாள்.

“உங்களுக்கு என்கிட்ட ஏதாவது சொல்லணுமா இளா?” வானில் மலர்ந்திருந்த நிலவைப் பார்த்தபடி கேட்டாள் ரோஜா.

அவன் கண்களும் நிலவின் மேல் தானிருந்தது.

“அழுது புரண்டு நான் அலறிய ராத்திரிகளில் நிலா இருந்தது. சோறும் இருந்தது. ஊட்டத்தான் தாயில்லை”

என்று நா.முத்துக் குமாரின் வரிகளைச் சொன்னான் இளமாறன்.

அவன் குரல் திடமாகதான் இருந்தது. ஆனால், அவன் சொன்னதைக் கேட்டவளின் மனம் உடைந்தது.

“என் வாழ்க்கையை இந்த ரெண்டே வரிகள்ல அடக்கிடலாம் ரோஜா. என்கிட்ட வேற எதுவும் கேட்காத.”

“சாரி” ஏனோ அவளுக்குக் கண்கள் கலங்கியது. அழுகையை அடக்கியதில் மூச்சுக் குழாயில் அவஸ்தையாக வலி அழுத்தியது.

“நீயெதுக்குச் சாரி சொல்ற?” அவன் கேட்க,

“தெரியல.” என்றாள்.

“என் அம்மம்மா, டாக்டர் எல்லோரும் நடந்ததை அவங்கவங்க வெர்ஷனா உன்கிட்ட சொல்லியிருப்பாங்கதானே? ஏற்கனவே உனக்கு எல்லாமும் தெரியும்னும் போது, புதுசா நான் என்ன சொல்லிடுவேன்னு எதிர்பார்க்கிற ரோஜா?” அந்தக் கேள்விக்கு நிச்சயமாய் அவளிடம் பதிலில்லை.

“அவங்க சொல்லாத எதுவும் என் வாழ்க்கையில் நடக்கல ரோஜா. இன்னைக்கு அவங்க மேல எனக்கு எந்தக் கோபமும் இல்ல”

“கோபம் இல்லையா? அப்புறம் ஏன் அவங்களை அம்மான்னு சொல்ல மாட்டேங்கறீங்க இளா?”

“உறவுகள் உணர்வுபூர்வமானது ரோஜா.”

“……”

“உலகத்தின் எந்த மூலைக்கு நான் போனாலும், சுகந்தி டாக்டர் மகன்தான். ஆனா, அந்த உறவு எனக்கு அந்த உணர்வைக் கொடுக்கணும் இல்லையா?” அவன் பேச பேச ரோஜாவிற்கு அழுகை வரும் போலிருந்தது.

“அந்த உணர்வை கொடுக்க நீங்களும் வாய்ப்பு கொடுக்கணும் இல்ல இளா?”

“இன்னொரு வாய்ப்பு கொடுக்க இதென்ன வேலையா ரோஜா? இன்னொரு வாய்ப்புன்னு சொல்லும் போதே முதல் முறை அவங்க தவறிட்டாங்கன்னு அர்த்தம் ஆகுதுதானே?”

“எஸ். அதை உங்கம்மாவே ஒத்துக்கறாங்களே இளா. அவங்க இருபது வருஷத்துக்கு முன்னாடி உங்களுக்குப் பண்ணது தப்புன்னா, இன்னைக்கு மனசு மாறி மன்னிப்பு கேட்கிற அவங்களை நீங்க உதாசீனம் பண்றதுக்குப் பேர் கொடுமை இல்லையா?”

“ஆமா, நான் கொடுமைக்காரன்தான். என்ன இப்போ?”

“கோபப்படாதீங்க இளா, பிளீஸ்.”

“சஃபரிங் இஸ் வெரி பெர்சனல் ரோஜா. வலியும், வேதனையும் அதை அனுபவிக்கிறவனுக்கு மட்டும்தான் புரியும். என் வலியை என்ன பண்ணாலும் உன்னால புரிஞ்சுக்க முடியாது ரோஜா. வாயும், வயிறும் மட்டுமில்ல. வலியும் வேறதான்” என்றான் விரக்தியாக.

“எனக்கு உங்க வலி புரியுது இளா. நான் கேட்கிறது எல்லாம் உங்க காயத்தை ஏன் இத்தனை வருஷமா தூக்கி சுமக்கறீங்கன்னுதான். லெட் கோ இளா, பிளீஸ். காயத்தை ஆற விடாம குத்தி கிளறி புண்ணாக்கிட்டே இருந்தா எப்படிச் சரியாகும்?”.

“காலத்துக்கும் ஆறாத காயங்கள் உண்டு ரோஜா.”

“நீங்க பண்றது விதாண்டவாதம். உங்க பாட்டி, தாத்தா, அப்பா எல்லோர்கிட்டயும் நல்லா பேசுற நீங்க வேணும்னு உங்கம்மாவை ஹர்ட் பண்றீங்க. மத்தவங்களை மன்னிக்க முடிந்த உங்களால, ஏன் உங்கம்மாவை மட்டும் மன்னிக்க முடியல?”

“ஏன்னா அவங்க ஏதோ ஒரு வகையில் என் கூட இருந்தாங்க. இவங்க இல்ல. உனக்குப் புரியுதா? இல்லையா? புரியாட்டி தயவு செஞ்சு பேசாம இரு.” அதற்கு மேல் பொறுமையைக் கடைப்பிடிக்க முடியாமல் கத்தினான் இளமாறன்.

ரோஜா அந்தக் குரலில் ஒரு நொடி மிரண்டு, திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்.

“என்னடி வேணும் உனக்கு?” அவன் கோபமாகக் கத்த, இவனுக்குத் தன்னிடம் இப்படியெல்லாம் கடினமாகப் பேச வருமா என்று அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

“நான் என்ன பண்ணனும்னு எதிர்பார்க்கிற நீ?” முயன்று வருவித்த அமைதியுடன் அழுத்தமாய்க் கேட்டான்.

ரோஜா பதட்டத்துடன் எச்சில் கூட்டி விழுங்கினாள்.

“எந்த உறவையும் வலுக்கட்டாயமா இழுத்துப் பிடிக்கவோ, சேர்த்து வைக்கவோ முடியாதுன்னு எனக்குத் தெரியும். ஆனா, உங்கம்மா ரொம்ப வருத்தப்படுறாங்க. நீங்க அவங்களை அம்மான்னு கூப்பிடலாம் இல்ல இளா? பாசத்தைக் காட்ட தாய் தவறினா என்ன? தனயன் நீங்க சரி பண்ணலாம் இல்ல?”

“நான் ஏன் சரி பண்ணனும்னு நினைக்கிற ரோஜா? நான் மட்டும் ஏன் பண்ணனும்? என்னை வேணாம்னு தூக்கிப் போட்டவங்க, எனக்கும் வேணாம்” அவள் முகத்திற்கு நேராகக் குனிந்து கத்தினான்.

“இல்ல. வேணாம்னு… நீங்க பொய் சொல்றீங்க”

“என்னது? என்ன சொன்ன நீ?” அவளை விலக்கித் தள்ளி விட்டு சடாரென எழுந்து நின்றான்.

அதீத கோபத்தில் அவன் உடலே இறுகிப் போக, “போடி” என்று கை வீசி கத்தி விட்டு வீட்டுக்குள் போனான் இளமாறன்.

ரோஜா அதிகம் பேசி விட்டோம் என்ற உறுத்தலுடன் அவனைப் பின் தொடர்ந்தாள்.

error: Content is protected !!
Scroll to Top