36 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

அத்தியாயம் 36 

 

 

லக்கியாவின் இருப்பிடம் வந்து அக்கடா என்று கால் நீட்டி அமர, பயணச் சீட்டு வந்ததற்கான அறிகுறி வந்தது கைப்பேசியில். 

பிரவீனுக்கு மட்டுமே பயணச் சீட்டிருந்தது. “நீ இலக்கியாவோட இருந்துட்டு நாளைக்கு வா” என்ற செய்தி இவளுக்கானது. எபிக்கு அழைப்பு விடுக்க அவன் எடுத்தானில்லை. 

பிரவீன் கைப்பேசிக்குப் பயணச் சீட்டை அனுப்பி, “நீங்க நியூ ஜெர்ஸிக்கு வந்துட்டுப் போக வேண்டாம் டாக்… டிக்கெட் நியூயார்க்குக்கு கிடைச்சா எடுக்கச் சொல்லியிருந்தேன் என் ஃப்ரெண்டுட்ட… உங்களுக்கு கிடைச்சிடுச்சு. நான் இலக்கியா கூட இருந்துட்டு நாளைக்குச் சாயங்காலம் வரேன்” என்று மழுப்பினாள். பின் அவனிடம் எப்படிக் கூற, எபி செய்த வேலை இது என்று.

அவன் புன்னகைத்தான். ஆனால் முகம் காட்டிக் கொடுத்தது அவன் மனம் அடிவாங்கிப் போனதென்று. 

“ஏன் த்தான்?” ஒன்றாக வந்துவிட்டு தனியே ‘போ’வென்று கூறுவது அவளுக்குமே அசௌகரியம் தான். 

“ரொம்ப படுத்தறேனா அலர்விழி?” என்றவன் தொனியில் பெண் அடி வாங்கிப் போனாள். உண்மையிலுமே அவனோடான நேரம் கசக்கவில்லையே. நல்ல தோழன் உணர்வைக் கொடுத்தவனாயிற்றே! 

“அச்சோ… ஏன் இப்படி நினைக்கறீங்க? நல்ல புக் கூட இருக்க ஃபீல் உங்கட்ட மட்டும் தான். ஒரு நல்ல ஃப்ரெண்டோட யாருக்காவது இருக்கக் கசக்குமா? ப்ளீஸ் தப்பா நினைக்காதீங்க. 

கார்ல வரலாம்ன்னு நீங்க சொல்லும் போதே ஒரு நாள் கூட இருப்போம் சொன்னதுக்கு நீங்க தான் சண்டே வேல இருக்குன்னு சொன்னீங்க. அது தான் எதுக்கு உங்களுக்கு தேவை இல்லாத அலைச்சல்ன்னு நினைச்சேன். 

இலக்கியா அளவுக்கு ஒரே இடத்தை திரும்பத் திரும்ப பார்க்கிற பொறுமை எல்லாம் எனக்கில்ல. சோ நைட் லைட் ஷோ பார்த்துட்டு, இந்த இடத்துக்கு முழுக்கு போட்டுட்டு நாளைக்கு ஊர் போய் சேர்றேன்.” என்று எதை எதையோ கூறி மழுப்ப அவமானமாய் தோன்றினாலும் கச்சிதமாய் செய்து முடித்தாள். 

நல்ல நண்பனாய், நல்ல புத்தகத்தோடு தன்னை ஒப்பிட்டதெல்லாம் அவனை வானில் பறக்கச் செய்தது. “ஒரு பிரச்சனையும் இல்ல அலர்விழி. நீ இவ்வளவு எல்லாம் எனக்கு விளக்க வேண்டாம். என்னால உன்னைத் தப்பா நினைக்கவே முடியாது. சோ பீ கூல்” என்றவன் அவள் மனதில் ஏறி அமர்ந்து கொண்டான்.

“ஒண்ணு பண்ணுவோமா? உங்க டிக்கெட்ட கேன்சல் பண்ணிட்டு, நாளைக்கு என் கூட வர மாதிரி வேற எடுப்போமா?” என்றாள் பிரகாச முகத்தோடே.

அவளில்லாமல் செல்ல அவனுக்கு மனமில்லை என்றாலும் பொறுப்பான மருத்துவனால் இருக்க முடியாது. கடமை தவற முடியாது. 

“நீ ரெஸ்ட் எடு, நான் கேப்ல போறேன். அப்புறம் ஃபிரியா இருக்கும் போது பார்ப்போம்,” என்று அவன் உணவு முடித்து விட்டு கிளம்பிவிட, “ஏன் மனோ? அவரோட வந்தா என்னைத் தின்னுடுவாரா?” என்று தன்னவனிடம் சண்டையிடுமளவு அலர்விழிக்கு கோபம். 

“வா அலர்… நைட் லைட் எல்லாம் போட்டு நயாகரா ரொம்ப அழகா இருக்கும். போவோம். எபி கூட்டிட்டு போக சொன்னான்.” 

“ம்ம்ம்…” என்றவள் மனமோ, ‘ஏன் என்ட்ட ஒரு வார்த்தை கேக்க முடியாதா? நான் என்ன பாக்கணும், யார் கூட பாக்கணும்… எல்லாம் இவர் தான் டிசைட் பண்ணுவாரா?’ என்ற கோபம் மட்டும் குறையவே இல்லை. 

கோபம் தான் மனோ மேல். அதைக் காட்டிலும் கோபம் தன் மேல். அவளோடு செல்லவேண்டித் தானே மனோவும் காத்திருந்தான். இருவர் ஆசையும் அவளால் தானே நிறைவேறாமல் போனது. பாய்ந்து வந்து கொண்டிருந்த கடலளவு நீர் அருகில் மக்கள் செல்லாமல் இருக்கத் தடையாய் நின்ற இடுப்பளவு கம்பியில் சாய்ந்து நின்றவள் மனமோ அங்கில்லை. 

மனோ இருந்திருக்கலாம்… இந்த நேரம் வேறு விதமாய் இருந்திருக்கும்! பொக்கிஷமாக மனதில் புதைய வேண்டிய தருணம்… கசந்த நினைவாக மாறிக் கொண்டிருந்தது. ப்ச்! நீண்ட பெருமூச்சோடு இருட்ட ஆரம்பித்த இடத்தை வெறித்து நின்றாள். முதல் முறை தனிமையை உணர்ந்தாள். மனோ வேண்டும் என்று மனம் சண்டித்தனம் செய்தது. அவனைப் பார்த்தே நாட்கள் ஆகிவிட்டது! இன்னும் ஒரு வாரம் அவனைப் பார்க்க முடியாது என்ற உணர்வு உவப்பாக இல்லை. ‘மனோ…’ மனம் மெல்லக் கதறியது.

“மிஸ் மீ?” மனோவின் குரல் உள்ளுக்குள் ஒலித்தது. மனோவின் அந்த ஒற்றை ‘மிஸ் மீ’யை கேட்க மனம் ஆவல் கொண்டது. அவனில்லாமல் கண்களில் நயாகரா வந்துவிடும் அபாயம். “மனோ…” வாய் முணுமுணுத்தது.

நீண்ட பெருமூச்சை விட்டவள் காது மடலில், மீசையோடு மனோவின் இதழ் உரசியது. “மிஸ் மீ?” என்றவனின் உஷ்ணக் காற்று உள்ளுக்குள் சென்று உடல் சிலிர்த்தது தோளை அணைத்து கன்னத்தில் இதழ் பதித்து மீண்டும் “ரொம்ப தேடினியா டி பட்டு?”  என்றவனைப் பார்த்தவளுக்கு எப்படி உணர வேண்டுமென்று தெரியவில்லை. 

கண்களை அழுத்தி மூடித் திறந்தாள். அவனே தான். பிரமை எல்லாம் இல்லை. சவ்வு மிட்டாயை மென்று கொண்டே கண் சிமிட்டிச் சிரித்தான். 

சிரிப்பு வரவில்லை. “போடா… உன்ன பாக்க யார் ஏங்கினா? எதுக்கு வந்தீங்க… போங்க, மிஸ் மீ-யாம் மிஸ் மீ!” என்றவளுக்கு உதடு துடித்து, கண்கள் கரித்துக் கொண்டு வந்தது. 

“சரி போ, போய் நீயே கெனடா பக்கமிருந்து அருவி மேல அடிக்கிற கலர் கலர் லைட்ட தனியாப் பாரு,” என்று பாலம் கடந்தால் அருகே இருந்த கனடா தேசத்திற்குள் நுழைய வாங்கி வைத்திருந்த அங்கீகாரப் பத்திரங்களை (ETA) நீட்டினான். 

பெண்ணவள் கண்கள் ஏகத்திற்கும் விரிய தேங்கி நின்ற  நீர் வழிந்து… இதழ் விரிந்தது. “நீங்க… உங்கள… போங்க மனோ…” என்றாள், பட்டென்ற ஒற்றை அடியோடு. 

“அடிப்பாவி… இவ்வளவு தானா? இதுக்குத் தான் எனக்கு இந்தப் பாடா?” அவன் செல்லமாய் அலுத்துக் கொள்ள, 

“வேற என்ன வேணுமாம்…?” மந்தகாசப் புன்னகை பூத்தவளுக்குக் கோபம் என்ற ஒன்று இருந்தது மறந்தே போனது. 

“என்ன வேணும்? நீ தான். நீ மட்டும் தான் வேணும். உன் மனசுல ஆச கொப்பளிக்கும் போது எம்பி என் கன்னத்துல கொடுக்குற முத்தம் ஒண்ணு போதும்…” என்று காதல் வசனம் பேச, பெண்ணவள் பூலோகத்தில் இல்லை! 

புஜத்தை சுற்றி வளைத்துக் கொண்டவள் கண்கள் எதிரில் தெரிந்த அருவியை வாஞ்சையாய் கண்டு களித்தது. காலையில் வெறும் நீராய் தெரிந்த அருவி மனோவோடு பார்க்க அதிக பிரம்மாண்டமாய் தோன்றியது. 

இலக்கியா வந்து இருவரிடமும் விடைபெற்றுச் செல்லவும், மெல்ல ரெயின்போ பாலத்தில் (Rainbow bridge) நடக்க ஆரம்பித்தனர். 

“மனோ…” 

“ம்ம்..” 

“ரொம்ப அழகா இருக்கில்ல?” 

“காலைலயே ஃபுள்ளா சுத்தி பார்த்திருப்பியே…” 

“ம்ம்ம்… அப்போ இவ்வளவு அழகா இல்லியே” மெல்ல புஜத்தில் இதழ் பதித்து, “தேங்க்ஸ் மனோ…” என்றாள் தலை உயர்த்தி கண்கள் பார்த்து. 

“போடி போடி…” மெல்லச் சிரித்தவனுக்கும் அது இனிமையான தருணமே. 

“நீ காலையில பார்த்த அமெரிக்கன் ஃபால்ஸ், பிரைடல் வெயில் ஃபால்ஸ் எல்லாம் ஒண்ணுமே இல்ல. இப்போ பார்க்கப் போற ஹார்ஸ் ஷூ அருவிய மேல இருந்து பாத்தா அப்பிடியே குதிரை லாடம் மாதிரியே இருக்கும். அத கனடால இருந்து தான் முழுசாப் பார்க்க முடியும். நாளைக்கு வீட்டுக்கு போகறதுக்கு முன்ன, ஹாட்-ஏர்-பலூன், ஹெலிகாப்டர் ரைட் போலாம்.” அருவியைப் பார்த்துக் கொண்டே பிரம்மிப்போடு கூறினான்.

“மனோ…” 

“ம்ம்ம்?” 

“நாம போக நினைச்ச இடத்துக்கு எல்லாம் இப்போவே போயிடலாமா?” 

“அலாஸ்காவுக்குமா?” அவன் நமட்டு சிரிப்பு சிரிக்க… 

“ம்ம்கும்! எனக்கு என்னவோ அங்க போனாலும் நீங்க வானத்தைத் தான் பார்ப்பீங்கன்னு தோணுது. சோ ஓவர் பில்ட்-அப் எதுக்கு ராசா?” அவள் சிரித்த சிரிப்பில், “உன் சிரிப்ப அங்க வச்சு கதறக் கதற அடக்குறேன் டீ,” என்று சூளுரைத்து அவன் சிரிக்க, “கதறக் கதறவா இல்ல கதறிக் கதறியா?” என்றவளின் சிரிப்பும் கலந்தது. 

உரசி சென்ற ஈரம் கலந்த குளிர் தென்றல் இதமாய் இருவருக்குள்ளும் இறங்கி நிமிடங்களை ரம்மியமாக்கியது. மனோவோடு ஒட்டி நின்று கொண்டிருந்தவளுக்கு உள்ளுக்குள் ஏகாந்தம். அவனின் ஒவ்வொரு அசைவிலும்… மூச்சுக் காற்றிலும் அவள் தானே! நாட்களைக் கடத்தாமல் அவனோடு ஒரே வீட்டில் வாழ்க்கையை ஆரம்பிக்க உள்ளுக்குள் பேராவல் எழுந்தது. 

“எப்பவும் என்னை பத்தி தான் யோசிப்பீங்களா மனோ?” 

“ஹ ஹா… இது என்ன டீ கேள்வி?” 

கேட்டவனைப் பார்த்து நின்றவளின் இமைகளை அவன் இதழ்கள் ஆசையாய் தொட்டு மீண்டது. 

“என்ன டி ரொமன்டிக் லுக் விடுற?”

“உங்கள அப்படியே கடிச்சு தின்னணும் போல இருக்கு மனோ…”

“அடியேய்… வீட்டுக்கு ஒரே பிள்ள டி!” என்றவன், தோளோடு பெண்ணை அணைத்து உச்சந்தலையில் இதழ் பதித்தான். 

“எமோஷனல் ஆகாத விழி, உன் கூட தான் காலம் பூரா இருப்பேன். பொறுமையா தின்னு! இப்போ வந்த வேலையப் பார்ப்போம்!”

“நான் படிக்கணும்னு நினைச்ச கோர்ஸ்ல இருந்து, பார்க்கணும்ன்னு நினைச்ச வேலை வரைக்கும் சாத்தியமாக்கியது நீங்க தான். முன்னயிருந்த ஆசை எல்லாம் நிறைவேறிட்டனாலயோ என்னவோ இப்போ எனக்கு வேற ஆசை மனோ.”

“சொல்லு சொல்லு… அதையும் ஒரு கை பார்த்திடுவோம்”

“கல்யாணம் பண்ணிக்கணும், நம்ம காதலுக்கு பரிசா உங்க வாரிசை சுமக்கணும். பாட்டி தாத்தா அரவணைப்புல நம்ம பிள்ளைங்க வளரணும், மூச்சு இருக்க வரை உங்க கூட நிறைவான வாழ்க்கை வாழணும்! ஒரு சராசரிப் பொண்ணோட கனவும் ஆசையும் தான் மனோ. ஆனா எனக்கு இப்போவே வேணும்ன்னு இருக்கு”

“நல்ல பிளான் தான்! செஞ்சிடுவோம்! பாப்பா பிறந்த பிறகு கொஞ்ச நாளுக்கு அத அனுபவி. அப்புறம் பிள்ளைங்க ஸ்கூல் போக ஆரம்பிக்கவும் போர் அடிக்கும் அந்த லைஃப். 

சோ, நாம சென்னைல செட்டில் ஆனதும், நம்ம சென்டரைப் பார்த்துக்கோ. பேபீஸ் எல்லாரும் ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சு, நீயும் ரெடின்னு ஃபீல் பண்ணும் போது வீட்ட விட்டு வெளில வரணும் விழி. நம்ம சென்டர அம்மாக்கு அப்புறம் நீ எடுத்து நடத்தணும்.”

“நானா?”

“நீயே தான்! முடியாதுன்னு சொல்லிடாத. உன்னால முடியும். உனக்குத் துணையா, உன் நிழலா எப்பவும் நான் இருப்பேன். நான் இல்லாட்டாலும் சாதிக்கிற திறன் உனக்கிருக்கு. 

நானும் இலக்கியாவும் சேர்ந்து சின்ன சின்ன பிராஜெக்ட்ஸ் எடுத்து செய்யறோமில்ல, அதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு. கொஞ்சம் பெரிய கிளையன்ட்க்கு வெயிட்டிங், கிடைச்சதும் நம்ம லெவலே வேற! அம்மா கூட இருந்து கம்பனி எப்பிடி ரன் பண்றதுன்னு ட்ரெயினிங் எடுத்துக்கோ. உன்னால தனியா முடியும்ன்னு தோணும் போது அத உனதாக்கிக்கோ. நானும் இலக்கியாவும் உனக்கு கிளையன்ட்ஸ் ரெடி பண்றோம்! ட்ரெயினிங் சென்டரா மட்டும் இல்லாம ஒரு முழு சாப்ட்வேர் கம்பனியா அத வளர வை! இது உனக்கான என் கனவு. 

எனக்காக… உன்ன கஷ்டப்பட்டுப் படிக்க வச்ச உன் பெத்தவங்களுக்காக நீ செய்யணும். செய்வியா?”  கேட்டு நின்றவன் காதலில் விழுந்து மூழ்கிப் போனாள் மங்கை. மனம் நெகிழ்ந்து போனதால் வார்த்தைகள் மறந்து போனது அலர்விழிக்கு.

எதிரில் கொட்டிக் கொண்டிருந்த பேரருவியில் பலவர்ண விளக்கொளி வீசப்பட்டது. பேரருவி பல வண்ணமாய் ஜொலித்தது. 

உணர்ச்சிப் பிழம்பாய் மாறியவள், கால் பெருவிரல்களில் எம்பி நின்று தன்னவன் கன்னத்தில் ஈரம் பட அழுத்தி இதழ் பதித்தாள். “இந்த நிமிஷம் ஃபிரீஸ் ஆகட்டும்,” என்று அதை கைப்பேசியில் பதிந்து கொண்டாள்.

ஆயிரம் ஆயிரம் நட்சத்திரங்கள் ஒன்று திரண்டு, பல மைல் நீளத்திற்கு ‘ஹோ’வென்று கொட்டிக் கொண்டிருந்த வண்ண நீர்வீழ்ச்சியின் மேல், பெரும் முழக்கத்தோடு அத்தனை நட்சத்திரங்களும் ஒன்றாய் தொப்பென்று மீண்டும் மீண்டும் வானவேடிக்கையாய் விழ… ஆயிரம் கண்கள் கண்டு களித்துக் கொண்டிருந்தது அந்த அழகிய காட்சியை.

பேரருவியாய் விழி, ஒளியாய் மனோ! இவர்களும் ஒன்று சேர்ந்தால் அழகு தான்!

error: Content is protected !!
Scroll to Top