இரவு வீட்டிற்குள் நுழைந்ததும் இளமாறன் மனைவியை இதமாய் இழுத்தணைத்து நின்றான்.
“இளா..”
“இருக்கேன்” அவள் கழுத்தில் உதடசைத்து உச்சரித்தான். கூச்சத்தில் உடலைச் சிலிர்த்தாள் ரோஜா.
“தேங்க்ஸ்” என்றான் ஆத்மார்த்தமாக.
“எதுக்கு இளா?” தன் கழுத்தில் இருந்த கணவன் முகத்தை, கண்களை மட்டும் திருப்பிப் பார்த்துக் கேட்டாள் ரோஜா.
“எனக்கு எப்பவும் கூட்டத்தில் கூடத் தனியா இருக்க ஃபீல் வரும் ரோஜா. பெரும்பாலும் வீட்ல, குடும்பத்துல கூட லெஃப்ட் அவுட்டாதான் உணர்ந்திருக்கேன். ஆனா, இன்னைக்குத் தனியா நிக்கும் போது கூட நீ என் பக்கத்துல இருக்க ஃபீல். உன் பார்வை என் மேலேயே இருந்தது காரணமா இருக்கலாம். ஆனா, இட் மீன்ஸ் அ லாட் டு மீ. யூ மீன் அ லாட் டு மீ”
அவளின் கண்களை ஊடுருவி சொன்னான். அந்த வார்த்தைகளின் அர்த்தம் அவள் மனதை ஆழமாய்த் தொட்டது.
இளமாறன் அதிகமாகப் பேசுவதில்லை. ஆனால், அவ்வப்போது இது போல அவன் மனத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகளில் அதிகமாக அவனது அன்பால் அவளைக் கட்டிப் போட்டு விடுகிறான்.
“நானும், எனது தனிமையும்.. போயே போச்..” அவன் குரல் கரகரத்து கிசுகிசுக்க, ரோஜாவின் மனதும் அவன்பால் அன்பால் கரைந்தது.
அவனிடம் இது குறித்துப் பேச வேண்டும் என்ற முடிவுடன் இருந்தவள், அதை அப்படியே ஓரமாக ஒதுக்கி வைத்தாள்.
“நான் குளிச்சுட்டு வர்றேன், தூக்கம் வருது” அவளை விலக்கி விட்டுப் படுக்கை அறைக்குள் நுழைந்தான்.
ரோஜா அவனைப் பின் தொடர்ந்தாள். அவளுக்குக் குடும்பத்தினர் கொடுத்த பரிசு பொருட்களை ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்த்து, பத்திரப்படுத்திக் கொண்டிருந்தாள்.
சிவப்பு நிற சிறிய நகைப் பெட்டியை அடுத்ததாகப் பிரிக்க, அதில் மெலிதாக இருந்த கைச் சங்கிலியில் ஆங்கிலத்தில் இளமாறனின் முதல் எழுத்தான, “ஐ” இருந்தது. சற்றே கடினமாக இருந்த கைச் சங்கிலியில் ரோஜாவின், “ஆர்” பொறிக்கப்பட்டிருக்க அதை ரசனையுடன் வருடி பார்த்தாள் ரோஜா.
அதனோடு கூடவே ஒரு நெக்லஸும் இருந்தது. ரோஜா அதைத் தனியாக வைத்து விட்டு, கைச் சங்கிலியை மட்டும் எடுத்துக் கொண்டாள்.
இளமாறன் குளித்து, உடை மாற்றிக் கொண்டே மனைவியிடம் வந்தான்.
“என்ன பார்க்கற ரோஜா?”
“பிரேஸ்லெட் இளா. எப்படியிருக்கு?” அவள் நீட்டியதை கையில் வாங்கிப் பார்த்து, “அழகாருக்கு ரோஜா. எனக்கு ஏன் இப்படி ஐடியா தோனல?” என்று கேட்டான்.
“ரொமான்ஸ்னா என்னனு கேட்கிற உங்களுக்கு எப்படி இந்த ஐடியா எல்லாம் தோனும்?” கண்களில் குறும்பு மின்ன அவள் கேட்க, “ஓய் என்னடி…” என்று அவளை அருகில் இழுத்தான்.
அவன் மேல் வாகாகச் சாய்ந்தபடி அவன் கைப் பிடித்து அந்தக் கைச் சங்கிலியை போட்டு விட்டாள் ரோஜா.
அது அவனுக்கு மிகப் பொருத்தமாக இருந்தது.
அவன் கரத்தை அந்தச் சங்கிலியுடன் வருடினாள். அவனோ அதில் இருந்த ஆரை (R ) வருடிப் புன்னகைத்தான்.
“நீங்க இதெல்லாம் போட மாட்டீங்க தெரியும். உங்க வேலைக்கு இதெல்லாம் போட கூடாதுன்னும் தெரியும். ஆனா, எனக்காகப் போட்டுக்க முடியுமா? ஒரு ரெண்டு நாளைக்கு மட்டும்?” கெஞ்சலாக அவள் கேட்க, “ம்ம்” என்றான்.
அவள் கைப் பிடித்து அவளுக்கான சங்கிலியை போட்டு விட்டான். ரோஜா இருவரின் கரத்தையும் அருகருகே வைத்து அழகுப் பார்த்தாள்.
“வாவ்.” என்றாள். சிரித்தான் இளமாறன்.
ரோஜா எட்டி அலைபேசியை எடுத்து இருவரின் கரத்தையும் அப்படியே புகைப்படம் எடுத்தாள். “ஐ, ஆர்” ஒன்றையொன்று தொட்டு உரசிக் கொண்டிருந்தது.
“சசி அண்ணாகிட்ட தேங்க்ஸ் சொல்லணும்.” அவளின் கைச் சங்கிலியை வருடியபடி அவன் சொல்ல, “எதுக்கு?” என்ற ரோஜாவிற்கு அப்போதுதான் காரணமே புரிந்தது.
“இது நித்யாக்கா கொடுக்கல. உங்கம்மா நமக்குக் கொடுத்தது. நீங்களும் இருக்கும் போதுதானே கொடுத்தாங்க?” என்றவள், “அத்த, நெக்லஸ் கூடக் கொடுத்தாங்க. பார்க்கறீங்களா?” என்று கேட்க, அவளை இமைக்காமல் பார்த்திருந்தான்.
“இளா..” ரோஜாவின் குரலில் கலைந்த இளமாறன் இணைந்திருந்த அவர்களின் கரங்களையும், அந்தக் கைச் சங்கிலியையும் வெறித்துப் பார்த்தான்.
“கோபமா?” அவள் மீண்டும் கேட்க கடுமையாக முறைத்தான். ஆனால், அந்தக் கைச் சங்கிலியை கழற்றவில்லை அவன்.
ரோஜா கேட்டுக் கொண்டபடி அடுத்து வந்த இரு நாட்களும் கூட அவன் அதை அணிந்தேயிருந்தான். மூன்றாம் நாள் ரோஜாவாகதான் அதை அவன் கையில் இருந்து கழற்றி எடுத்து பத்திரப்படுத்தினாள்.
ரோஜாவின் கரங்களில் நிரந்தரமாகத் தங்கி விட்டது அந்த நகை. மனைவியின் கரங்களை வருடும் போது அதையும் சேர்த்தே உணர்ந்தாலும் எதுவும் சொல்வதில்லை அவன்.
மறுநாள் காலையில் இளமாறன் படுக்கையில் இருந்தபடி அலைபேசியில் பேசிக் கொண்டிருக்க, ரோஜா அவசரமாக வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள்.
“இளா எனக்கு லேட்டாச்சு. உங்களுக்கு டிஃபன் செய்ய நேரமில்ல. சாரி.” என்றாள்.
“நான் சட்னி அரைச்சு வச்சுட்டு போறேன். சூடா தோசை ஊத்திக்கறீங்களா?” புடவையைக் கட்டி முடித்து, தலைமுடியை மொத்தமாக அள்ளி கொண்டையிட்டபடி கேட்டாள்.
மெல்ல நகர்ந்து படுக்கை விளிம்புக்கு வந்து, குனிந்து மனைவியின் புடவையைச் சீர் செய்து விட்டான் அவன்.
“எனக்கு ப்ரேக்பாஸ்ட் வேணாம்”
“ஏன் இப்படிப் பண்றீங்க இளா? எனக்கு நேரமாச்சு. அதான் செய்ய முடியல. அதுக்காகச் சாப்பிடாம போவீங்களா? இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணக் கூடாதா?”
“ப்ச், நான் ஹோட்டல் போய்ச் சாப்பிட்டுக்கறேன்” என்றவனை இடுப்பில் கை வைத்து முறைத்தாள் ரோஜா.
“நான் சமைச்சாதான் சாப்பிடுவீங்களா? ஒரு நாள், ஒரே ஒரு நாள் வீட்ல நீங்க சமைச்சா என்ன? அதுவும் சட்னி அரைச்சு வைக்கிறேன் சொல்றேன். ஒரு தோசை ஊத்தி சாப்பிட முடியாதா உங்களால? பேருதான் பெரிய செஃப். ஆனா, வீட்ல சமைக்கக் கெஞ்சணும்” கோபத்தில் எண்ணெயில் இட்ட கடுகாய் பொரிந்தாள் ரோஜா.
“நீங்க ஏன் வீட்ல சமைக்க மாட்டேங்கறீங்க?” இடுப்பில் கை வைத்துக் கோபமாக அவள் கேட்க, “நான் வேலையை வீட்டுக்குக் கொண்டு வர்றதில்ல மிஸஸ் இளமாறன்” என்று கண் சிமிட்டி சொன்னவன், எழுந்து குளியல் அறைக்குள் சென்று மறைந்தான்.
“என்னது?” என்று கத்திக் கொண்டிருந்தாள் ரோஜா.
“எப்படியெல்லாம் சொல்லி தப்பிக்கிறார். கடவுளே.. இவரை..” புலம்பிக் கொண்டே அவசர அவசரமாகச் சமைத்தாள்.