என் ஜீவனில் உறைந்திடு – 25 (2)

நித்யா, சித்ரா, கஸ்தூரிக்கு வாங்கிய நகைகளுக்குத் தன் கார்டில் இருந்து பணம் செலுத்திய ரோஜா, வெண்பாவின் நகையோடு, சுகந்திக்கு வாங்கியதற்கும் சேர்த்து கணவனின் கார்டை அவனிடம் கேட்டு வாங்கித் தேய்த்தாள்.

அவளை முறைத்தாலும் ஒன்றும் சொல்லவில்லை அவன்.

“நகையை நீங்க வீட்டுக்கு எடுத்துட்டு போங்க சம்பந்தி. அதான் முறை.” என்று சித்ரா சொல்ல, சரியென்றார் சுகந்தி.

ரோஜா அங்கு வைத்தே, கைப்பையில் இருந்து நகைப் பெட்டியை எடுத்தாள்.

“வெண்பா இது உனக்கு, அத்த, இது உங்களுக்கு” என்று அவர்களிடம் கொடுத்தும் விட்டாள். இருவருமே ஆவலாக அதை வாங்கிப் பிரித்தனர்.

“வாவ் அண்ணா. இது எனக்குதான் வாங்கினீங்களா? அழகாருக்கு. நான் அண்ணிக்குன்னு நினைச்சேன்” வெண்பா நகையைக் கையில் அணிந்து ரசித்தபடி சொன்னாள்.

“நல்லாருக்கு ரோஜா” புன்னகையுடன் சொன்ன சுகந்தியின் கண்கள் மகன் மேலிருந்தது. அவர் கண்களை இப்போதும் கூர்ந்த ரோஜாவின் மனதை பெயரில்லா உணர்வொன்று அழுத்தியது.

அவர்கள் நகை வாங்கி முடித்து வெளியில் வந்ததும் நேராக வீடு செல்லாமல், அவர்களை உணவகம் அழைத்துச் சென்றான் இளமாறன்.

காஃபி, டீ, பழச்சாறு, வாழைப்பூ வடை என மாலை சிற்றுண்டி உண்டார்கள்.

“வடை எடுத்துக்கோ ரோஜா” தட்டை மகனின் பக்கமாக நகர்த்திச் சொன்னார் சுகந்தி. ரோஜா சிரிப்பை வடையுடன் சேர்த்து மென்றாள்.

சுகந்தி அவளையே பார்ப்பதை உணர்ந்து அவரை ஏறிட்டவளின் கண்கள் ஆச்சரியத்தில் விரிய, இதழ்கள் பிரிந்து புன்னகைத்தது.

“இந்தக் கம்மல் உங்களுக்கு ரொம்ப அழகாருக்குத்த” என்றாள் பளிச்சென்று. அதை எதிர்பார்த்திராத சுகந்தி, “ம்ம்” என்று சொல்லி காஃபியை அருந்த தொடங்கினார்.

இத்தனை நாட்களில் அவர் முகத்தில் எத்தனையோ பாவங்களைப் பார்த்திருக்கிறாள் ரோஜா.

வருத்தம், கோபம், வலி, வேதனை எனப் பலதும் தராத பாதிப்பை அவரின் ஒற்றைப் புன்னகை அவளுக்குத் தந்தது.

அவரின் சிரித்த முகம் அவளை வெகுவாகத் தாக்கியது. அந்தச் சிரிப்பிற்குக் காரணம் இளமாறன் என்பதினால் இருக்கலாம்.

அச்சமயம் சுகந்திக்கு மருத்துவமனையில் இருந்து அழைப்பு வர உடனடியாக அங்கிருந்து கிளம்பினார்கள்.

ரோஜா அன்றிரவு உறங்கச் செல்கையில், நீண்ட யோசனைக்குப் பின் கணவனிடம் சென்றாள்.

“இளா, நான் ஒன்னு கேட்டா கோபப்படாம பதில் சொல்லணும்” என்று பீடிகையுடன் ஆரம்பித்தாள்.

“ம்ம், கேளு”

“நீங்க உங்கம்மாவை ஏன்…”

“எனக்குத் தூக்கம் வருது” பொத்தெனப் படுக்கையில் விழுந்து காதில் தலையணை வைத்து மூடியவனை, முடிக்கப்படாத கேள்வியுடன் முறைத்துப் பார்த்தாள் ரோஜா.

படுக்கையை நெருங்கி இடுப்பில் கை வைத்து நின்று, “இளா..” என்றவளை இழுத்துக் கொண்டான் இளமாறன்.

கஸ்தூரி, சங்கரன், சுகந்தி எனப் பலரும் அவரவர் பார்வையில் சொன்ன கதையில் கணவனின் கோணத்தை அறிய விரும்பினாள் ரோஜா. எங்கே? அவன் சொல்வதற்குத் தயாராக இருந்தால் தானே?.

வெள்ளிக்கிழமை முன் காலைப் பொழுதில் ரோஜாவின் வீட்டில் வைத்து ஏற்கனவே திட்டமிட்டபடி இருவரின் குடும்பத்தார் மற்றும் சில நெருங்கிய உறவுகள், நட்புகளை அழைத்து, ரோஜாவிற்குத் தாலி பிரித்துக் கோர்த்திருந்தார்கள். சித்ரா, நித்யா, சுகந்தி, கஸ்தூரி, ரகுவின் பாட்டி எனப் பெண்கள் அனைவரும் அளித்த தாலி உருக்களைக் கோர்த்து ரோஜாவுக்குத் தாலி பெருக்கி போட்டிருந்தது காணவே நிறைவாக இருந்தது.

ரோஜா முகூர்த்த பட்டில் இருக்க, இளமாறன் பட்டு வேஷ்டி சட்டையில் இருந்தான். பெண்கள் ஒவ்வொருவராக வந்து அவர்களை ஆசிர்வாதம் செய்ய, மீண்டுமொரு முறை தங்களுக்குத் திருமணமானது போல உணர்ந்தாள் ரோஜா.

அவளின் புன்னகையை இமைக்காமல் பார்த்திருந்தான் இளமாறன்.

“என்ன ஒரே சிரிப்பு?” அவன் கேட்க, “எனக்கு இந்த ஜென்மத்திலயே ரெண்டு முறை தாலி கட்டிட்டீங்க இளா‌. அடுத்த ஜென்மத்தில்..” என்று ஆரம்பித்தவளின் கையை இறுகப் பற்றினான் இளமாறன்.

ரோஜா சொல்ல வந்ததைப் பாதியில் நிறுத்திவிட்டுச் சிரிக்கத் தொடங்கினாள்.

“இந்தப் பேச்சை விடவே மாட்டியா நீ?” குறுநகையுடன் அவன் கேட்க, “மாட்டேன்” என்றாள்.

“போடி” என்றவனுக்கும் சிரிப்புதான் வந்தது.

சித்ரா, சிவஹரி இருவரும் வந்திருந்த உறவுகளை உபசரித்துக் கொண்டிருந்தார்கள்.

அத்தனை நேரமும் அவர்களோடு இருந்த நித்யா, சசிகுமார் இவர்களிடம் வந்தார்கள். குழந்தை மித்ரனை கையில் வாங்கிக் கொண்டான் இளமாறன். ஆண்கள் இருவரும் பேசத் தொடங்க, அக்காவும், தங்கையும் அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தார்கள்.

அதை எங்கிருந்துதான் பார்த்தாரோ அவசரமாக அவர்களிடம் வந்து, “நித்தி, வெறும் வயிறா இருக்கப் பாரு. இதைக் குடி” என்று மூத்த மகளிடம் பாசமாகப் பழச்சாறை பருகக் கொடுத்தார் சித்ரா.

“அம்மா, எனக்கு ஜூஸ்.” ரோஜா கேட்க, “இரு உனக்கும் எடுத்துட்டு வர்றேன்” என்றார் அவர்.

“காலையில தூங்கி எழுந்ததும் காஃபி கொடுத்தீங்க. அவ்ளோதான். ஆனா, அக்காக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பு” என்று அவள் சடைக்க,

“அக்கா மாசமா இருக்கா ரோஜா. அதுனாலதான் ஸ்பெஷல் கவனிப்பு. இரு அம்மா வர்றேன். அப்பா என்னைத் தேடுறாங்க பாரு” என்று சொல்லி அவர் செல்ல,

“போங்கம்மா” என்ற ரோஜாவின் பார்வை, அக்கா நித்யாவின் மேல் படிந்தது.

முந்தின இரவுதான் நித்யா, கர்ப்பச் செய்தியை தங்கையுடன் பகிர்ந்திருந்தாள்.

“நிஜமாவா கா?” என்று ஆர்ப்பரித்தவளை, வெட்கப் புன்னகையுடன் பார்த்தாள் நித்யா.

“நேத்து ஊருக்கு கிளம்பும் போதுதான் கன்பார்ம் பண்ணோம் ரோஜா” என்றிருந்தாள் நித்யா.

இப்போது ரோஜாவின் துளைக்கும் பார்வையை எதிர்கொள்ள முடியாமல், “ரோஸ் குட்டி, உன் மண்டைக்குள்ள என்ன ஓடுது?” என்று கேட்டாள் நித்யா.

“இல்ல, எனக்கு ஒரு சந்தேகம். உனக்குச் சரியா எத்தனை மாசமாகுது நித்திக்கா?” என்ற தங்கையின் கேள்வியில் நித்யாவின் முகத்தில் நாணத்தின் சாயல்.

“அது, மூனு மாசம்… சிரிக்காத ரோஸ் குட்டி. டேட் மிஸ்ஸானதை நான் கவனிக்கவேயில்ல. ச்சே, எதுவும் சொல்லாத பிளீஸ்” என்று நித்யா கெஞ்ச,

“எனக்கும் கல்யாணமாகி சரியா மூனு மாசம்தான் ஆகுது. அப்போ.. அப்போ.. ஏய் அக்கா..” என்ற தங்கையின் கேலியில் நித்யா சிவந்து கணவனைக் கண்களால் தேடி முறைத்தாள்.

அவனோ, இளமாறனுடன் தீவிரமாக எதையோ பேசிக் கொண்டிருந்தான்.

“ரோஜா..” தங்கையை அதட்டி, அவளின் கைப் பிடித்துக் கிள்ளினாள் நித்யா.

“என் கல்யாணத்துக்கு வந்து நீங்க செகண்ட் ஹனிமூன்…” தங்கையின் வாயை பட்டென மூடினாள் நித்யா.

“உனக்குக் கல்யாணமானதும் வாய் நீளுது. அடி வாங்கப் போற ரோஸ் குட்டி” என்று மிரட்டினாள்.

ரோஜா குறும்பாகக் கண் சிமிட்ட, நித்யா கையை எடுத்து விட்டு தங்கையுடன் இணைந்து சிரித்தாள்.

“ரோஜா..” மனைவியை அழைத்தப்படி அங்கு வந்த இளமாறன், “நம்ம ரெஸ்டாரண்ட்ல சின்னப் பிராப்ளம். நான் போய் என்னனு பார்த்திட்டு வந்துடுறேன்” என்று சொல்ல, “இப்பவா?” என்று திகைப்புடன் கேட்டாள் ரோஜா.

அவள் கண்கள் சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்க்க, “பத்து மணிக்கு மேலதான். இப்பவே கிளம்பல, டென்ஷன் ஆகாத.” என்று சொல்லிச் சென்றான் அவன்.

சிறிது நேரத்தில், “‍மாப்பிள்ளை ரெஸ்டாரண்ட் போறாரா ரோஜா?” என்று சித்ரா வந்து கேட்க, “ஆமாம்மா. ஆனா, வேலையை முடிச்சுட்டு உடனே வந்திடுவார்” என்று ரோஜா சமாளிக்க, அவளை முறைத்து விட்டு, நேராகக் கணவரிடம் சென்றார் அவர்.

“போச்சு. அப்பா மாட்டினார்” மகள்கள் இருவரும் ஒன்று போல முணுமுணுத்தனர்‌.

“அப்படியே உங்களை மாதிரியே மாப்பிள்ளையைத் தேடி பிடிச்சுருக்கீங்க இல்ல?” கணவரிடம் அவர் எகிற, “என்ன சித்ரா? மாப்பிள்ளைக்கு என்ன?” என்று குழப்பத்துடன் கேட்டார் சிவஹரி.

“உங்களை மாதிரியே நாள், கிழமை பார்க்காம வேலைக்குப் போறார் உங்க சின்ன மாப்பிள்ளை. வேற என்ன எதிர்பார்க்க முடியும்? நீங்க பார்த்த மாப்பிள்ளை உங்களை மாதிரி தானே இருப்பார்?” சித்ரா படபடவெனப் பொரிய,

“நான் எங்க பார்த்தேன்? நீயும், உன் பொண்ணும் தானே என்னைச் சம்மதிக்க வச்சீங்க? கடைசில என் மண்டையை உருட்டுங்க” புலம்பிக் கொண்டிருந்தார் சிவஹரி.

error: Content is protected !!
Scroll to Top