சுகந்தி நேராகச் சிவஹரியை பார்த்தார்.
“நானே உங்களைப் பார்த்து பேசணும்னு இருந்தேன். ரோஜா அம்மா எப்படி இருக்காங்க. இன்னைக்கு ஈவ்னிங் வீட்ல இருப்பாங்களா? அவங்ககிட்ட பேசணும், அதான் உங்க வீட்டுக்கு வரலாம்னு இருந்தோம்” சுகந்தி சொல்ல,
“ரோஜாவை பார்க்கதான் போய் இருக்கா சித்ரா. ஆனா, சாயந்திரம் வீட்டுக்கு வந்துடுவா. நீங்க வீட்டுக்கு வாங்க டாக்டர். இல்ல, என்ன விஷயம்னு இப்பவே என்கிட்ட சொன்னா கூட ஓகேதான். இல்லனா, உங்களுக்கு வீண் அலைச்சல். அதான் கேட்டேன்.” என்ற சிவஹரி, “எதுவும் முக்கியமான விஷயம், வீட்டம்மாகிட்டதான் பேசணும்னா, அவங்ககிட்டயே நேரா பேசிடுங்க. என்கிட்ட எதுவும் சொல்ல வேணாம்” என்று புன்னகையுடன் முடித்தார்.
“ரோஜாக்கு தாலி பிரிச்சு கோர்க்குறதை பத்திதான் பேசணும். அடுத்த வார வெள்ளிக்கிழமை நாள் நல்லாருக்கு. அன்னைக்கே ஃபங்ஷனை வச்சுக்கலாம்னு எங்கம்மா இப்பத்தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போன் பண்ணி சொன்னாங்க. அந்தத் தேதி உங்களுக்குத் தோதுபடுமா? ரோஜா அம்மாகிட்ட பேசிட்டு சொல்லுங்களேன்” சுகந்தி சொல்ல,
“இல்ல. சித்ராகிட்ட நீங்களே பேசிடுங்க. நீங்க ரெண்டு பேரும் முடிவு பண்ணிட்டா எங்களுக்கு ஓகேதான்” என்று அவர் சங்கரனையும் கூட்டு சேர்த்து சொல்லி விட்டு, “என்ன டாக்டர்?” என்று கேட்க,
“ஆமா ஆமா. மீனாட்சி பேச்சை நாம என்னைக்கு மீறப் போறோம்” என்று சிரிப்புடன் சொன்னார் சங்கரன்.
“சரி. அப்போ நான் ரோஜா அம்மாகிட்ட முதல்ல பேசிடுறேன்” என்று சுகந்தி சொல்லவும், ஆண்கள் சரியென்று தலையசைத்தனர்.
சித்ரா அப்போதுதான் மகள் வீட்டில் இருந்து கிளம்பியிருந்தார். அந்நேரம் மகளின் மாமியார் அழைக்க, பதட்டமாகதான் அழைப்பை ஏற்றார் அவர்.
“ரோஜா கூடவா இருக்கீங்க சித்ரா?” சித்ரா அழைப்பை ஏற்றதும் அந்தக் கேள்வியைக் கேட்டார் சுகந்தி.
“இல்லைங்க சம்பந்தி, இப்பத்தான் அங்கருந்து கிளம்பினேன். ரோஜாகிட்ட எதுவும் சொல்லணுமா? அவ போன் போகலையா?” சித்ரா படபடக்க,
“ஐயோ நீங்க டென்ஷன் ஆகாதீங்க சித்ரா. நான் உங்களோட பேசதான் கால் பண்ணேன். நீங்க ரோஜாவை பார்க்க போய் இருக்கறதா அவங்கப்பா சொன்னார். அதான் ரோஜாவை பத்தி விசாரிச்சேன். வேற ஒன்னுமில்ல” என்று சுகந்தி சொல்லவும்தான் சித்ராவிற்கு ஆசுவாச பெருமூச்சு வந்தது.
“சரிங்க. என்கிட்ட ஏதோ பேசணும் சொன்னீங்களே”
“அது ரோஜாக்கு தாலி பிரிச்சு கோர்க்கிறதை பத்திதான். அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை நாள் நல்லாருக்குனு அம்மா இப்பத்தான் சொன்னாங்க. அன்னைக்கே வச்சுக்கலாமா? உங்க பெரிய மகளைக் கூப்பிடணும்னு சொன்னீங்களே. அதான் உடனே சொல்லிடுவோம்னு கூப்பிட்டேன்”
“வெள்ளிக் கிழமைன்னா மாசக் கணக்குச் சரியாதான் இருக்கும். மாப்பிள்ளைக்கும் லீவ் நாள், இன்னும் நல்லதா போச்சு”
“ஆமாங்க சித்ரா. நானும் அதத்தான் நினைச்சேன்”
“நான் காலைலதான் ரோஜாகிட்ட சொல்லிட்டு வந்தேன். இப்ப இன்ன தேதின்னு அவங்களுக்கு நீங்க கூப்பிட்டு சொல்லிடுறீங்களா? இன்னைக்கு மாப்பிள்ளை சீக்கிரம் வந்திடுவார்னு ரோஜா சொன்னா. நீங்க அவங்ககிட்ட விஷயத்தைச் சொல்லிட்டா, நாம அடுத்து நடக்க வேண்டியதை பார்க்கலாம்” தயக்கத்துடன் சொன்னார் சித்ரா.
சுகந்தி சில நொடி சிந்தனைக்குப் பின், “ம்ம், தாலிக் கொடி வாங்கணும் இல்லையா? எங்க வீட்ல வர மாட்டார். உங்க வீட்ல எப்படி?” என்று கேட்டார்.
“அவர் வருவாருங்க டாக்டர். என்னைக்கு வாங்கப் போறோம்?”
“இப்போ மாறன் வீட்ல இருப்பான்னு சொல்றீங்க. இன்னைக்கு நல்ல நாள், வளர்பிறை நாள்னு எங்கம்மா சொன்னாங்க. நீங்க ஃப்ரீன்னா இன்னைக்கே போய்ட்டு வந்திடுவோமா?” சுகந்தி கேட்க,
“ரோஜா, மாப்பிள்ளைகிட்ட கேட்டுட்டு..” என்று தயக்கத்துடன் இழுத்தார் சித்ரா.
“ஆமா, அவங்களைக் கேட்காம முடிவு பண்ண முடியாது இல்லையா? ஒருவேளை அவங்க வெளில எங்கேயும் போக நினைச்சுருந்தா சங்கடம். ஒன்னு பண்ணுங்க, நீங்க ரோஜாக்கு போன் பண்ணி கேட்டு சொல்றீங்களா? அவங்க ஓகே சொன்னா உடனே போய் வாங்கிட்டு வந்துடுவோம்.”
“சரிங்க. நான் பேசிட்டு சொல்றேன்” என்றார் சித்ரா.
“அப்போ நான் எதுக்கும் என்னோட அப்பாய்ண்மெண்ட் எல்லாம் வேற டாக்டருக்கு மாத்தி விட்டு ரெடியா இருக்கேன். உடனே கிளம்ப வசதியா இருக்கும்” என்று பரபரத்தார் சுகந்தி.
சித்ரா சரியென்று சொல்லி இணைப்பை துண்டித்தார்.
மகளிடம் பேசுவதற்கு முன் கணவரிடம் இதுகுறித்துப் பேச விரும்பி, அவருக்காகக் காத்திருக்கத் தொடங்கினார்.
சங்கரனின் அறையில் இருந்து வெளியே வந்த சிவஹரி முதலில் மருமகனுக்குத்தான் அழைத்தார்.
மருத்துவமனை நிர்வாகப் பொறுப்பை இளமாறன் வேண்டாம் என மறுத்திருக்க, எங்கே மகளுக்காக அவர் வாங்கிக் கொடுக்கப் போகும் வீட்டையும் அவன் மறுத்து விடுவானோ என்ற எண்ணம் அவரை ஆக்கிரமிக்க, மகளின் நலன் குறித்து ஒரு தகப்பனாகப் பயந்தார் அவர்.
சங்கரன் குடும்பத்தைப் பல வருடங்களாக அவர் அறிவார். அவர்களின் உறவு சிக்கலும் ஓரளவுக்கு அவருக்குத் தெரிந்தும், புரிந்தும் இருந்தது.
புகுந்த வீட்டு சிக்கல் மகளின் மண வாழ்க்கையில் எந்தச் சிக்கலையும் உருவாக்கி விடக் கூடாது என்ற கவலை முன்னெப்போதையும் விட இப்போது அவரை அதிகமாக ஆக்கிரமித்தது.
அதனால் நேரடியாக மருமகனிடம் பேசுவது என முடிவு செய்து, அவனை அழைத்து விட்டார் அவர்.
இளமாறன் அவரின் பேச்சை மறுபேச்சின்றிக் கேட்டுக் கொண்டான்.
“ரோஜா என்ன சொன்னா மாமா?” என்ற கேள்வியை மட்டுமே கேட்டான் அவன்.
“அது வந்து மாப்ள, ரோஜாகிட்ட இது பத்தி நான் இன்னும் பேசல. முதல்ல உங்களுக்குத்தான் சொல்றேன். ஒருவேளை அவங்கம்மா சொல்லியிருக்கலாம். ரோஜா என்ன சொன்னான்னு உங்கத்தைகிட்ட கேட்டாதான் தெரியும்”
“சரிங்க மாமா” என்றான் இளமாறன். அவன் எதற்குச் சரியென்று சொல்கிறான் என்று புரியாமல் குழம்பிப் போய், “மாப்ள…” என்று இழுத்தார் சிவஹரி.
“ரோஜா முடிவை கேட்டுக்கோங்க மாமா” என்று விட்டான் இப்போது.
ஆனால், வீடு வந்து ரோஜா அது குறித்துப் பேசிய போது வேறொரு சிந்தனை அவனை நிறைத்துக் கொண்டதில் எதுவுமே சொல்லவில்லை அவன்.
அவர்களின் திருமணத்தின் போதே அப்பா வீடு வாங்கித் தருவதாகச் சொன்னது அவன் நினைவில் வந்தது. “வீடா? வேண்டாம்” என்று தான் மறுத்ததும் அப்பாவின் முகம் மாறிப் போனதும், இப்போதும் அவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது.
பெற்றோர்களுக்காகத்தான் எதுவும் செய்யாத போது, அவர்களிடம் இருந்து எதையும் பெற அவனுக்கு மிகுந்த தயக்கம் இருந்தது. ஆனால், அது அவர்களுக்குப் புரிந்தால் தானே? என்னவோ அவர்களை வருத்தவென்று அவன் மறுப்பதாக அவர்கள் நினைப்பது அவனுக்கு வலிக்கவே செய்தது.
அவனின் சிந்தனையை ரோஜா கலைத்து இழுத்துக் கொண்டு போக, இஷ்டத்துடன் இழுபட்டான் இளமாறன்.
மதிய உணவிற்கு வீடு வந்த சிவஹரி மனைவி சொன்னதை உள்வாங்கிக் கேட்டுக் கொண்டார். சங்கரன் அதையே தன்னிடம் சொன்னதையும் பகிர்ந்து கொண்டார் அவர்.
இப்போது இருவருக்கும் கவலையாகிப் போனது.
“இப்போ நாம வீடு வாங்கிக் கொடுத்தா ரோஜாவை கோபிச்சுப்பாங்களா அவங்க?” என்று சித்ரா கேட்க, சிவஹரிக்கும் அதே எண்ணம் இருந்தாலும், “ரெண்டுக்கும் என்ன சம்மந்தம் சித்ரா, அதெல்லாம் அவங்க ஒன்னும் சொல்ல மாட்டாங்க. நம்ம பொண்ணுக்கு நாம செய்யறதும், மருமகளுக்கு அவங்க பதவி கொடுக்குறதும் ஒன்னா?” என்று கேட்டார்.
“இல்லையா பின்ன? அவங்க மூத்த மகனோட பொண்டாட்டி ரோஜா. அவங்க மகனுக்குப் பதிலா மருமகளை உட்கார வைக்க நினைக்கிறாங்க. அவ வேணாம்னு சொன்னா.. போங்க. எனக்குத் தெரியல.” சித்ராவின் பேச்சில் அவரின் மனக் குழப்பம் வெளிப்பட்டது.
“முதல்ல நம்ம பொண்ணு அவ முடிவை சொல்லட்டும். அப்புறமா சேர்த்து வச்சு நீ நல்லா கவலைப்படலாம்.” என்ற சிவஹரி,
“எப்பப் பாரு எதையாவது யோசிச்சு, மண்டையை உடைச்சுக்கணும் உனக்கு. அப்போதான் நிம்மதியா தூக்கம் வரும். இல்ல?” என்று கிண்டலாகச் சிரித்தபடியே கேட்க, சித்ரா கோபப்படத்தான் விரும்பினார். ஆனால், முந்திக் கொண்டு சிரிப்புதான் வந்தது.
“அவங்க சுகந்தி அம்மா நாள் நல்லா இருக்குன்னு இன்னைக்கே தாலிக் கொடி வாங்க போகலாம்னு சொல்றாங்க. அவங்கதான் வாங்கணும். ஆனா, நம்மளையும் கூப்பிடுறாங்க, போய்ட்டு வந்துடுவோமா?” சித்ரா கேட்க,
“இந்த நகை, நட்டு எல்லாம் உங்க சமாச்சாரம். நீங்க போய்ட்டு வாங்க சித்ரா. அதான் ரோஜா கூட வருவா இல்ல?”
“அவகிட்ட இன்னும் நான் பேசல. இனிதான் கேட்கணும்” அவர் வர மாட்டேன் என்று சொன்ன கோபத்தில் பேசினார் சித்ரா.
“முதல்ல ரோஜாகிட்ட கேளு. மாப்பிள்ளை வீட்டுக்கு வந்திருந்தா, அவரும் சேர்ந்து வருவார். அது போதும். கேன்டீன்ல ரோஜாவும் இல்லாம, நானும் இல்லாம சமாளிக்க முடியாது சித்ரா. புரிஞ்சுக்கோ” என்றவரை முறைத்தபடி அமர்ந்திருந்தார் சித்ரா. அவரை ஒரு வழியாகச் சரி கட்டி சம்மதிக்க வைத்து, சமாதானம் செய்து விட்டே வேலைக்குத் திரும்பினார் சிவஹரி.
போகும் முன், “வீட்ல பணம் இருந்தா எடுத்துக்கோ சித்ரா. அங்க போய் ஏதாவது நகை உனக்குப் பிடிச்சா எடுத்துக்கோ. பொண்ணுங்களுக்கு ஏதாவது வாங்கணும்னா வாங்கிக்கோ.” என்றவர், “இல்ல, பணம் வேணாம். வீட்ல அவ்ளோ இருக்காது. நீ பேங்க் கார்டை மறக்காம எடுத்துட்டு போ” என்று விட்டு மனைவியைப் பார்க்க, சித்ரா சரியென்று சொல்லவும், புன்னகையுடன் சென்றார் சிவஹரி.