இளமாறனின் இருப்பை உணரா விட்டால் அவள் ரோஜா அல்லவே.
“இளா, என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்டீங்க” போர்வையை மேலே இழுத்து மூடி, கண்ணைக் கசக்கிக் கொண்டு ரோஜா கேட்க, அவளின் வெற்றுத் தோள்களை வருடியது இளமாறனின் விழிகள்.
“நம்ம ரெஸ்டாரண்ட்ல நேத்து நைட் ஒரு பார்ட்டி ரோஜா. பசங்க போதையில இருந்திருப்பாங்க போல, ஆட்டம் பாட்டம்னு ஒரே ரகளையாம். ரூப் டாப்ல டேபிள், சேர் எல்லாம் டேமேஜ் பண்ணியிருக்கானுங்க. நைட்டே நான் போன்ல பேசி அவனுங்க காண்டாக்ட் டீட்டெய்ல்ஸ் வாங்கிட்டேன். இப்போ போய் டேமேஜ் என்னனு பார்த்திட்டு, தேவைப்பட்டா அவங்களைக் கூப்பிட்டுச் சார்ஜ் பண்ணணும் ரோஜா.” என்றவன், சட்டையில் பொத்தான்களை மாட்டியபடி அவளிடம் வந்தான்.
“அங்க வேலையை முடிச்சுட்டு, நான் ஹோட்டல் போய்ட்டு மதியம் வீட்டுக்கு வந்துடுறேன். நீ இன்னைக்கு வீட்லயே இருக்கியா ரோஜா?” இளமாறன் கேட்கவும், ரோஜா முழுதாக மலர்ந்தாள். மென்மையாய் அவளின் கன்னத்தில் முத்தமிட்டு வெளியேறினான் இளமாறன்.
ரோஜா மீண்டும் உறங்கி, காலை எட்டு மணி போல எழுந்து, காஃபியுடன் அமர்ந்து அப்பாவை அழைத்தாள்.
“என்னம்மா ரோஜா, உடம்புக்கு இப்போ எப்படியிருக்கு?” அக்கறையாக விசாரித்தார் சிவஹரி.
“என்னதுப்பா? ஓ, தலைவலியா? அது நேத்தே சரியாகிடுச்சுப்பா” என்றாள் ரோஜா.
“சரிம்மா. என்ன காலைல கால் பண்ணியிருக்க அம்மாகிட்ட பேசணுமா? கொடுக்கவா?”
“இல்லப்பா. இன்னைக்கு நான் கேண்டீன் வரல. அதைச் சொல்லதான் கூப்பிட்டேன். நீங்க தனியா மேனேஜ் பண்ணிடுவீங்க தானேப்பா?”
“என்னம்மா இப்படிக் கேட்கிற? அப்பா பார்த்துக்கறேன். நீ ரெஸ்ட் எடு” என்று பேசி வைத்தார் சிவஹரி.
ரோஜா குளித்து மெதுவாக வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருக்கையில் மனைவியுடன் மகளைக் காண வந்து விட்டார் சிவஹரி.
சித்ரா மகளுக்கும் சேர்த்து காலை உணவை சமைத்து எடுத்து வந்திருக்க, சிவஹரி உணவை முடித்துக் கொண்டு மனைவியை அங்கேயே விட்டுவிட்டு வேலைக்குக் கிளம்பினார்.
சித்ரா மகளோடு பேசியபடி வீட்டு வேலைகளில் அவளுக்கு உதவி, துணிகளை மெஷினில் போட்டு, காய வைத்தார். இளமாறன் மதியம் வந்து விடுவான் என்று ரோஜா சொன்னதும், மகளுடன் கடைக்குச் சென்று தேவையான பொருட்களை வாங்கி வந்து, மதிய சமையலில் இறங்கினார் அவர்.
நெத்திலி மீன் குழம்பு, நகரை மீன் வறுவல், பூண்டு ரசம், மல்லித் துவையல், பருப்புப் பாயாசம் என ரோஜாவுக்குப் பிடித்ததைச் சமைத்தார்.
சமையலில் அம்மாவுக்கு உதவியபடி கதைப் பேசிக் கொண்டிருந்தாள் ரோஜா.
“ரோஜா, இன்னும் பத்து நாள்ல உங்களுக்குக் கல்யாணமாகி மூனு மாசம் ஆகப் போகுது இல்லையா? உனக்குத் தாலி பிரிச்சு கோர்க்கணும். நானும், உங்கத்தையும் இது பத்தி பேசினோம். நான் அப்பாவை நல்ல நாள் பார்க்கச் சொல்லியிருக்கேன். தேதி தெரிஞ்சதும் சொல்றேன். நீ மாப்பிள்ளைகிட்ட சொல்லி அவரை லீவ் போட சொல்லிடு சரியா?”
“சரிங்கம்மா”
“அவர்கிட்ட அவங்க வீட்ல சொல்லுவாங்கதான். இருந்தாலும் நீயும் சொல்லி வை”
“ஓகேம்மா”
“உனக்கு நேத்து என்னாச்சு? உங்க மாமனார்கிட்ட பேசிட்டு வந்ததுக்கு அப்புறம்தான் உன் முகமே சரியில்லன்னு அப்பா சொல்றார். ஏதாவது பிரச்சனையா ரோஜா? அம்மாகிட்ட சொல்லு. அப்பாவை பேசச் சொல்றேன்.” சித்ரா மீன் கழுவும் கையோடு மகளின் கரத்தை ஆதரவாகப் பற்றினார்.
“அப்பா தேவையில்லாம உங்களைப் பயமுறுத்தி இருக்கார் பாருங்கம்மா.” ரோஜா சிரிப்புடன் சொல்ல, சித்ராவின் முகம் சற்றே தெளிந்தது.
“ஹாஸ்பிட்டல் ஃபோர்ட்ல என்னையும் ஒரு டைரக்டரா சேர்க்க அவங்க ஆசைப்பட்டாங்கம்மா”
“நிஜமாவா? நல்ல விஷயம் ரோஜா. ஆனா, அதுக்கு மாப்பிள்ளை என்ன சொல்றார்?”
“அவர் வேணாம்னு சொல்லிட்டார்ம்மா.”
“அப்போ சரி. நீ மாப்பிள்ளை சொல்றதையே கேளு. அவங்க குடும்ப விஷயம், பிரச்சினை எல்லாம் அவங்களே பேசி சரி பண்ணிக்கட்டும். நீ எதிலும் தேவையில்லாம தலையிடாத. நீ மாப்பிள்ளையைப் பாரு, அது போதும்” சித்ரா மகளுக்காக மட்டுமே பேச, புன்னகைத்தாள் ரோஜா.
“அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் உன்கிட்ட சொல்லணும் ரோஜா. அப்பா இன்னைக்கு நைட் நேரா வந்து மாப்பிள்ளைகிட்ட பேசுறேன் சொன்னார். நான் அதுக்கு முன்னாடி உன்கிட்ட சொல்லிடுறேன்”
மகளின் முகம் பார்த்து அவர் சொல்ல,
“என்னம்மா பில்ட்அப் பலமா இருக்கு? சொல்லுங்க. சொல்லுங்க” சிரிப்புடன் அவள் வினவ,
“அப்பா உனக்கு வீடு வாங்கிக் கொடுக்கணும்னு ஆசைப்படுறார் ரோஜா” என்றார் சித்ரா.
“வீடா?”
“ஆமா, ரோஜா. உங்க ரெஸ்டாரண்ட் பக்கத்துலதான் ரெண்டு வீடு பார்த்திருக்கோம். உங்களுக்கு எது பிடிக்குதோ அதை வாங்கிடலாம்”
“ஏம்மா? நம்ம ஏரியால வீடெல்லாம் விலை ரொம்ப அதிகம் மா”
“அதைப் பத்தியெல்லாம் நீயேன் யோசிக்கிற ரோஜா? அப்பாகிட்ட காசு இருக்கு. உனக்குச் செய்யாம, யாருக்குச் செய்யப் போறோம் நாங்க?”
“அப்பாகிட்ட எவ்வளவு காசு இருக்குனு எனக்கு நல்லாத் தெரியும்ம்மா. அப்பா அக்கவுண்ட்ஸ் எல்லாம் நான்தானே பார்க்கறேன். அந்த ஏரியா ரொம்பக் காஸ்ட்லி. அப்பா லோன் எடுத்தா அதைக் கட்டி முடிக்கவே பல வருஷமாகும் மா.” மகள் அக்கறையுடன் சொல்லவும், சித்ரா சந்தோஷத்துடன் சிரித்தார்.
“காசு பத்தியெல்லாம் பேசுற நீ? ம்ம். உங்கப்பா கூடச் சொன்னார். நீ இப்படித்தான் பேசுவன்னு.. ஆனா, பாரு ரோஜா. உங்க கல்யாணச் செலவு மொத்தமும் உன் மாமியார் வீடு பார்த்துக்கிட்டாங்க. நாங்க பணம் கொடுத்தும் அவங்க வாங்கல. கல்யாண சாப்பாடு செலவு எல்லாம் ஐயா பார்த்துக்கிட்டார். அதுனால உன் கல்யாணத்துக்கு நாங்க சேர்த்து வைச்ச பணம் அப்படியே தொடாம பத்திரமா எங்ககிட்டதான் இருக்கு” என்றவர்,
“உனக்கு நாங்க சீரும் பெருசா செய்யல. உனக்கு வந்த மொய் பணமும் அப்படியே எங்ககிட்டதான் இருக்கு. அதையும் நீ வாங்கிக்கல. அதான் சேவிங்ஸ்ல இருக்க மொத்தப் பணத்தையும் போட்டு உனக்கு வீடா வாங்கிக் கொடுத்திடலாம்னு அப்பா ஆசைப்படுறார். செலவு கூடக் குறைய ஆகத்தான் செய்யும். அது அப்பா பார்த்துப்பார். நீ அதைப் பத்தி யோசிக்காம மாப்பிள்ளைகிட்ட பேசி அவரைச் சம்மதிக்க வை.” என்று விளக்கமாகச் சொன்னார் சித்ரா.
ரோஜாவிற்குச் சுகந்தி தங்களை அவர்கள் வீட்டிற்கு அழைத்தது நினைவில் வந்தது. அதற்கு ஒரே பார்வையில் இளமாறன் மறுப்புத் தெரிவித்ததும் சேர்ந்தே நினைவில் வர, அம்மாவை யோசனையாகப் பார்த்தாள் அவள்.
“அம்மா, இவருக்குப் பிசினஸ் இப்போ நல்லா போகுது மா. நாங்களே கொஞ்ச வருஷத்துல வீடு வாங்கிடுவோம். நீங்க வீணா அப்பாவை லோன் எடுத்து கஷ்டப்பட வைக்காதீங்க”
“என்ன பேசுற ரோஜா நீ? நான் எதுக்கு அப்பாவை கஷ்டப்படுத்த போறேன்? உங்கப்பா இத்தனை வருஷம் நேரம் காலம் பார்க்காம கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிச்சது எல்லாம் உங்களுக்காகதான். அதை வச்சுட்டு நாங்க என்ன பண்ண போறோம். நீயே சொல்லு.” சித்ரா குரல் உயர்த்த, அம்மாவை பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள் ரோஜா.
அதைப் பார்த்ததும் அவளின் தோளில் அடித்து, “எதுக்குச் சிரிக்கற நீ? இப்பவும் உங்கப்பா ரெஸ்ட் எடுக்காம ஓடுறது எனக்குக் கோபம்தான். அதுக்காக நான் அவரைத் திட்டதான் செய்வேன்” என்றார் சிரிப்புடன்.
அம்மாவின் அந்தச் சிரிப்பு ரோஜாவை அத்தனை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
“அதை விடு. நித்தி வீட்டுக்காரர் பெங்களூரில வீடு வாங்கும் போது கூட அப்பா பணம் கொடுத்தார். உனக்கு ஞாபகம் இருக்குதானே? நீ தானே ஆடிட்டர்கிட்ட பேசி அவளுக்குப் பணம் அனுப்பின?”
“ஆமாம்மா. ஆனா..”
“எப்பா கல்யாணமானதும் எல்லாம் பெரிய மனுஷி ஆகிடுறீங்க, இல்ல ரோஜா? அம்மாப்பா பேச்சை கேட்கிறது கிடையாது. ஆனா, எங்களுக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு வளர்ந்துடுறீங்க, இல்ல?” கோபத்துடன் கேட்டார்.
“அப்படியில்ல மா..”
“சும்மா ஏதாவது சொல்லாம, ஒழுங்கா நீ மாப்பிள்ளைகிட்ட பேசு. நாங்க நாலைஞ்சு வீடு பார்த்தோம். அதுல எங்களுக்கும், நித்திக்கும், அவ மாப்பிள்ளைக்கும் ரெண்டு வீடு ரொம்பப் பிடிச்சிருக்கு. நித்தியும், மாப்பிள்ளையும் வீடியோ, ஃபோட்டோ எல்லாம் பார்த்து பில்டர்கிட்ட பேசிட்டாங்க. இனி நீங்க பார்த்து, உங்களுக்குப் பிடிச்சதா ஒரு வீடை முடிவு பண்ணணும்” என்று அவர் முடிக்க, ரோஜா இன்னமும் விலகாத தயக்கத்துடன் தலையாட்டினாள்.
“அதெல்லாம் மாப்பிள்ளை ஒன்னும் சொல்ல மாட்டார். நீதான் ரொம்ப யோசிக்கிற.” அவளைக் கடிந்து கொண்ட சித்ரா,
“எங்க பொண்ணுங்களுக்குச் செய்யறது எங்க கடமை. எங்ககிட்ட இருக்கதை உங்களுக்குக் கொடுக்காம, சேர்த்து வச்சு என்ன பண்ண சொல்ற? அப்பாவோட இத்தனை வருஷ சம்பாத்தியத்தைத் தானம் பண்ற அளவுக்கு எல்லாம் எங்களுக்குப் பெரிய மனசு இல்ல ரோஜா. உங்க சந்தோஷம் மட்டும்தான் எங்களுக்குப் பெருசு” என்று முடித்தார்.
“நான் அவர்கிட்ட பேசுறேன்ம்மா” என்ற மகளை முறைத்து அவளிடம் குழம்பை ருசி பார்க்க நீட்டினார்.
“ம்ம். சூப்பர் மா” என்று சப்புக் கொட்டி அவள் சொல்ல, சிரிப்புடன் வேலையைத் தொடர்ந்தார் சித்ரா.
ஒரு மணி நேரம் கழித்து, “நான் ரசமும் வச்சுட்டேன் ரோஜா. நீ மாப்பிள்ளை வந்ததும் சூடா மீனை பொரிச்சுக் கொடு” என்று சொல்லி சித்ரா கிளம்ப, அவர்கள் மதியம் உண்பதற்காக வற்புறுத்தி கொஞ்சம் குழம்பை கொடுத்து விட்டாள் ரோஜா.
சித்ரா கிளம்பி சிறிது நேரத்தில் எல்லாம் வீடு வந்து விட்டான் இளமாறன்.
வீட்டுக்குள் நுழைந்தவனை ரோஜா இதழ்கள் புன்னகையில் பிரிய, கண்களில் ஆவல் மின்னப் பார்க்க, “இந்தப் பார்வை தான்டி வேணும் எனக்கு” என்று ரசனையுடன் சொன்னவன், குனிந்து அவள் கண்களில் முத்தமிட்டான்.
“ரொம்பத்தான்” என்று சலித்துக் கொண்டாள் ரோஜா. சத்தமான சிரிப்புடன் அவளை அணைத்து விடுவித்தான் இளமாறன்.
“இளா ரெஸ்டாரண்ட்ல டேமேஜ் அதிகமா?” படுக்கை அறைக்குள் சென்றவனைப் பின் தொடர்ந்து கேட்டாள் ரோஜா.
“ம்ம், ஒரு டேபிள், ரெண்டு மூனு சேர்ஸ் எல்லாம் உடைச்சிருக்காங்க. அதுக்கு மேல நம்ம ஸ்டாப்ஸ்கிட்ட ரூடா பேசியிருக்கானுங்க. அதுக்காகவே கூப்பிட்டு தாளிச்சு அனுப்பிட்டேன்.” நாக்கை மடித்து அவன் சொல்ல, ரோஜா சத்தமாகச் சிரித்தாள்.
“நேத்து நம்ம ஸ்டாப்கிட்ட பந்தா காட்டிட்டு, இன்னைக்கு என்னைப் பார்த்ததும் பம்முறானுங்க.” சலித்தபடி குளிக்கச் சென்றான்.
அவன் குளித்து வருவதற்குள் ரோஜா சூடாக மீனை பொரித்திருந்தாள்.
இருவரும் பேசிக் கொண்டே மதிய உணவை உண்டனர்.
அவள் பெற்றோர் அவர்களுக்கு வீடு வாங்கித் தர விருப்பப்படுவது குறித்து ரோஜா சொல்ல, பாயாசத்தை உண்டபடி அதைக் கேட்டுக் கொண்டான் இளமாறன். அவன் பதில் ஏதும் சொல்லாதிருக்க, ரோஜா அவனுக்கான அவகாசத்தை அளித்து அமைதியாகத் தானும் பாயாசத்தை அருந்தினாள்.
“இளா, உங்களுக்கு வெளில போற வேலை எதுவும் இல்லைதானே?” அவள் கேட்கவும் மறுப்பாகத் தலையசைத்தான்.
“ஒரு மாசமா உங்ககிட்ட ஒரு வேலை சொல்லிட்டு இருக்கேன். ஞாபகம் இருக்கா? இன்னைக்கு அதை முடிக்கலாம் வாங்க” என்று அவனின் கைப் பிடித்து இழுத்தாள்.
“இரு ரோஜா. கை கழுவிட்டு வர்றேன்” என்று அவளையும் இழுத்துக் கொண்டு போனான் இளமாறன்.
“என்ன வேலை?” என்று கேட்டவன் முன்பு பத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்களை எடுத்து நீட்டினாள் ரோஜா.
அவன் ஏற்கனவே பலமுறை பார்த்து ரசித்த புகைப்படம்தான். ஆனால், இப்பொழுதும் இமைக்காமல் அதைப் பார்த்து உறைந்து நின்றான் இளமாறன்.
ரோஜா உயரமான இருக்கை ஒன்றை இழுத்துப் போட்டு, சட்டமிடப்பட்டிருந்த புகைப்படம் ஒன்றை கையில் எடுத்துச் சுவரில் வைத்துப் பார்த்தாள்.
அந்தப் புகைப்படத்தில் ரோஜாவின் தோளில் கைப் போட்டுச் சிரிப்பை உதடுகளுக்குள் அடக்கியிருந்த இளமாறனின் கண்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அவளையே கண்ணெடுக்காமல் பார்த்தது.
“ஹா.. பார்வையைப் பாரு” புகைப்படத்தைப் பார்த்து உதடு சுழித்து முணுமுணுத்தவளின் பக்கத்தில் வந்து நின்ற இளமாறன், மென்னகையுடன் ரோஜாவை பார்த்தான்.
ரோஜா புகைப்படத்தை ரசிக்க, இளமாறன் அவளை ரசித்தான். அவளின் கண்கள் நகலின் மேலிருக்க, அவன் கண்கள் அசலின் மேலிருந்தது.