இளமாறன், அவன் மட்டுமே அவளுக்கு முக்கியம். அவன் முன்பு மற்றவர் எல்லாம் பொருட்டேயில்லை என்று எப்படிச் சொல்வாள் அவள்?
ரோஜாவின் அகத்தை முகம் காட்டிக் கொடுத்து விட, சங்கரன் தண்ணீர் குடித்துத் தொண்டையைச் செருமி சரி செய்தார்.
“நான் சொல்றதை நீ நம்பணும் ரோஜா. நாங்க யாரும் வேணும்னு, தெரிஞ்சே மாறனை ஒதுக்கல. அவனா விலகிப் போனான். ஒரு சின்னப் பையனை நாங்களும் எவ்வளவுதான் இழுத்துப் பிடிக்க முடியும் நீ சொல்லு? ஒரு கட்டத்துக்கு மேல அவனைக் கட்டாயப்படுத்தி எங்களோடு பிடிச்சு வைக்கிறதே, அவனைக் கொடுமைப்படுத்துறது போல இருந்தது. அதான் அவன் போக்குல விட்டேன். ஆனா, அவனைக் கண்டுக்காம விடல நாங்க. அவனை எப்பவும் கவனிச்சுட்டு, கண்காணிச்சுட்டுதான் இருந்தோம்” ஏனோ அதைத் துளி குற்ற உணர்வுடன்தான் சொன்னார் அவர்.
“சுகந்தி ஒரு கோபத்துல சொன்னது, அவனை இவ்வளவு பாதிக்கும்னு நாங்க எதிர்பார்த்திருக்கணும். தப்பு பண்ணிட்டோம். மாறனை எவ்வளவோ கெஞ்சி, கொஞ்சினோம். ம்ஹூம், பலனில்ல”
“என்ன நடந்தது மாமா?” ரோஜா கேட்கவும் அத்தனை வருடங்களாக மனதில் இருந்த நிகழ்வை பகிர்ந்து கொண்டார் சங்கரன்.
பல வருடங்களுக்கு முந்தைய மாலை நேரமது. சுகந்தி குழந்தைகளோடு வீட்டில் இருந்தார். ஒன்றரை வயது வெண்பாவுக்குக் காய்ச்சல், சளி என உடல் நலக் குறைவில் அழுது கொண்டேயிருந்து அப்போதுதான் உறங்கியிருந்தாள். மூன்று வயது வினோத் தங்கையின் அழுகையைப் பார்த்து அவளை விட்டு நகரவில்லை.
இளமாறன் பள்ளி வீட்டுப் பாடங்களுடன் அமர்ந்து தம்பிக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தான்.
சுகந்தியின் மேல் வெண்பா வாந்தி எடுத்திருக்கச் சேலையை மாற்ற அவரின் அறைக்குச் சென்றார் அவர்.
அவர்களின் வீட்டுக்கு உதவிக்கு இருந்த பெண்ணிடம் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார். அவரோ அப்போதுதான் அவசரமாக ஓய்வறை சென்றார்.
சுகந்தி குளித்து உடை மாற்றிக் கொண்டிருக்கும் போது குழந்தைகளின் அழுகை அலறலாகக் கேட்க, சேலையை அரைக் குறையாக, அவசரமாக உடலில் சுற்றிக் கொண்டு பதறியடித்து ஓடி வந்தார் அவர்.
அங்கே படுக்கையை ஒட்டியிருந்த மேஜையில் குழந்தைக்குத் தேவையான மருந்து மற்றும் மற்ற பொருட்களை அவர் வைத்திருக்க, அது மொத்தமும் மேஜை விரிப்போடு சேர்த்து கீழே இழுத்துப் போடப்பட்டிருந்தது.
மருந்து, எண்ணெய் பாட்டில் எனப் பலதும் உடைந்து சிதறியிருக்க, உள்ளங்காலில் இருந்து கசிந்த இரத்தம் தரையெங்கும் கோலம் வரைந்திருக்க, கத்தி அழுது கொண்டிருந்தான் வினோத்.
மேஜை நுனியை ஒரு கையிலும், பாதித் தூக்கத்தில் எழுந்து, வினோத்தின் அழுகையில் பயந்து பெருங்குரலில் அழுத தங்கையை ஒரு கையிலும் பிடித்தபடி மிரண்டு போய் நின்றிருந்தான் இளமாறன்.
“வெண்பா, அழக் கூடாது. அழக் கூடாது பாப்பா. என்னாச்சு மாறா? வினோத் என்னாச்சு? உங்களைச் சேட்டை பண்ணக் கூடாது, எதையும் தொடக் கூடாதுன்னு அம்மா சொல்லியிருக்கேன் இல்ல” சுகந்தி மூவரையும் பார்த்துப் பதற, வினோத்தின் பிஞ்சு விரல்கள் மேஜையைப் பிடித்தபடி நின்ற இளமாறனை நோக்கி நீண்டது.
“என்ன மாறா நீ? இப்படியா மருந்தை எடுத்து விளையாடுவ? எத்தனை முறை இதைத் தொடாத சொல்லியிருக்கேன்” பதட்டத்தில் மகனை அதட்டினார் சுகந்தி.
அந்தக் குரலுக்கு வெண்பா அழுகையைக் கூட்ட, வினோத் அதற்கும் மேல் கத்தி சத்தம் போட்டு அழுதான்.
“ஒன்னுமில்ல ஒன்னுமில்ல பாப்பா. இப்படி வா, அம்மாகிட்ட வா” ஒரு கையில் வெண்பாவை அள்ளிக் கொண்டார். கீழே குனிந்து மண்டியிட்டு அமர்ந்து வினோத்தின் பாதங்களை அவர் ஆராய முயல, குழந்தை விட்டால்தானே? வலியில் அலறினான் அவன்.
வினோத்தின் விரல்கள் இளமாறனை நோக்கி நீள, “அம்மா, நா பண்ணலம்மா. தம்பிதான்” என்று நடுங்கிக் கொண்டே பதில் சொன்னான் இளமாறன்.
“பெரியவன் நீ பொறுப்பா இருக்க வேணாமா மாறா?” என்று அவனைக் கண்டித்த சுகந்தி, அவனையும் வினோத்தையும் பிடித்து ஓரமாக நிற்க வைத்தார். அறையை விட்டு வெளியில் ஓடி முதலுதவி பெட்டியை எடுத்து வந்தார்.
“புஷ்பா மா, எங்கப் போனீங்க? கொஞ்சம் சீக்கிரமா இங்க வாங்க” கத்தி உதவியாளரை அழைத்தார்.
“இந்தா வந்துட்டேன் மா” கைகளை அவசரமாகச் சேலையில் துடைத்தபடி குளியல் அறையில் இருந்து வெளியில் வந்தவரை, அந்த நிமிடம் முறைக்க மட்டுமே சுகந்தியால் முடிந்தது.
அவரது உதவியுடன் சுகந்தி வினோத்தின் பாதத்தைப் பரிசோதித்து, சுத்தம் செய்ய, குழந்தை தொட விடாமல் கத்தினான். அதைப் பார்த்து வெண்பாவும் அழ, இளமாறன் அவன் பங்கிற்கு, “அம்மா.. அம்மா” என்று பயத்துடன் அழைத்துக் கொண்டேயிருந்தான்.
“மாறா, பேசாம இரு. வெண்பா குட்டி, பாப்பா அழக் கூடாது. வினோ, நீ அம்மாவை உன் காலச் செக் பண்ண விடு. புஷ்பா மா அவனை அசைய விடாம பிடிங்க” சுகந்திக்கு இரண்டு கைகள் போதவில்லை. குழந்தை பாதத்தில் இரத்தம் வந்து கொண்டேயிருக்க, பதறினார் அவர்.
“ம்மா..”
“ம்மா..”
“மாறா பேசாம இரு”
“ம்மா..”
“அம்மா என்ன பண்ணிட்டு இருக்கேன்னு பார்க்கற இல்ல மாறா? தம்பி கால்ல கண்ணாடி குத்தியிருக்கு. அவனுக்கு வலிக்கும், அதை நான் எடுக்கிற வரைக்கும் நீ கொஞ்சம் அமைதியா இரு”
“ம்மா, அதில்லம்மா..”
“உனக்கு இப்பத்தான் அம்மான்னு கூப்பிட தோணுதாடா? பேசாம இரு மாறா”
அப்போதும் பயத்தில், கண்கள் கலங்க, “அம்மா, நான் பண்ணலம்மா” என்றான் இளமாறன்.
“வாயை மூடு. அம்மா, அம்மான்னு நொச்சு பண்ணாத” என்று அதட்டினார். மிரண்டு சுவரோடு ஒட்டி நின்றான் இளமாறன்.
புஷ்பா அறையைப் புயல் வேகத்தில் சுத்தம் செய்து முடிக்க, வெண்பாவை அவரிடம் கொடுத்து விட்டு, வினோத்தை கையில் தூக்கிக் கொண்டு மருத்துவமனை கிளம்பினார் சுகந்தி.
அவரோடு நடந்தபடி, அவரின் சேலையைப் பற்றி இழுத்து, “அம்மா…” என்று தொடங்கிய இளமாறனிடம், “அம்மா, அம்மான்னு கத்தி என் உயிரை வாங்காம அமைதியா இரு மாறா.” என்றார் கண்டிப்பாக.
அவ்வளவுதான்!!!
அன்றைக்கு, “அம்மா” என்ற அழைப்பை நிறுத்திய இளமாறன் அதன் பின்னர்ச் சுகந்தியை, “அம்மா” என்று அழைக்கவேயில்லை.
அம்மாவின் அந்தக் குரலா, கோபமுகமா, இல்லை பயமா, முதல் முறை இரத்தத்தைப் பார்த்ததா, அதிலும் தன் குட்டித் தம்பியின் காலில் இரத்தம் வடிந்ததைப் பார்த்து பயந்ததா? அந்நேரம் காதில் அறைந்த தங்கையின் அழுகையா, இல்லை எல்லாமும் சேர்ந்தா என்று பிரித்தறிய முடியவில்லை. அந்நிகழ்வு சிறுவன் இளமாறன் மனதில் ஆழமாய்ப் பதிந்து, மாறா வடுவாய் மாறி நின்றது.
“அப்போ மாறன் பெரிய பையன் ரோஜா, அவன் புரிஞ்சுப்பான்னு உங்கத்தை நினைச்சிருக்கா. அவ அந்த நேர பதட்டத்துல சொன்னது மா அது. அவ கண்டிப்பா மனசார அதைச் சொல்லல. அவ சொன்னது குழந்தையை இவ்வளவு பாதிக்கும்னு சத்தியமா அவ நினைச்சிருக்க மாட்டா. மாறனை அது எவ்வளவு பாதிச்சு இருக்கும்னு புரிஞ்சு, என்னெல்லாமோ பண்ணோம். ஆனா, அவன் எங்களை மன்னிக்கலை”
சங்கரன் சொல்லி முடிக்க ரோஜா அவரின் முகத்தை விட்டுக் கண்களை நகர்த்தவில்லை.
“ரோஜா..” அவர் அழைக்க, அசையவில்லை அவள்.
“சாரி, மாமா” என்று மட்டுமே சொல்லி அறையை விட்டு வெளியேறியிருந்தாள்.
அவளது மனக் கண்ணில் மாமனார் விவரித்த காட்சி இன்னமும் படமாய் ஓடிக் கொண்டிருந்தது.
அம்மா அதட்டினார், அவ்வளவுதானே? என்று அவளால் ஒதுக்கிட முடியவில்லை.
எதுவுமே நமக்கு நிகழாத வரை அதன் வலியை நாம் உணரப் போவதில்லை என்பதில் அவளுக்கு நிறைய நம்பிக்கை இருந்தது.
அவள் வீட்டிலும் கூட அவ்வப்போது இது நடப்பதுதான். மூத்தவளாக நித்யா பல முறை ரோஜாவிற்காக அடியும், திட்டும் வாங்கி இருக்கிறாள். அவளுக்காகப் பல முறை பலவற்றை விட்டுக் கொடுத்திருக்கிறாள். ஆனால், அவர்கள் வளர்ந்த சூழல் வேறு.
இளமாறன் அப்படியில்லையே. அங்குதானே அவர்கள் வேறுபடுகிறார்கள். இளமாறனின் வேதனையின் வலி கூடுவதின் காரணமும் அதுதானே?
தன் மனத்தைச் செலுத்திய எண்ணங்களுடன் போராடியபடி காரைச் செலுத்தி வீடு வந்து சேர்ந்தாள் ரோஜா. உடையைக் கூட மாற்றத் தோன்றாமல் நேராகப் படுக்கை அறைக்குச் சென்று படுத்து விட்டாள்.
இரவு வீடு திரும்பிய இளமாறன் கண்டது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மனைவியைதான்.
ரோஜாவை தினசரி வழக்கமாக மாலை அலைபேசியில் அழைத்திருந்தான் அவன்.
ரோஜா உறக்க கலக்கத்துடன் பேச, “எங்க இருக்க நீ?” என்று கேட்டான் அவன்.
“வீட்ல..”
“தூங்கறியா ரோஜா? உடம்புக்கு என்ன?” பதறினான்.
“லேசா தலைவலி. வேற ஒன்னுமில்ல” என்றாள் ரோஜா.
அதைக் கேட்டதும் முக்கியமான வேலைகளை விரைந்து முடித்து விட்டு விரைவாகத்தான் கிளம்பி வந்தான். அப்படியும் நேரமாகி விட்டது.
சட்டெனப் படுக்கையில் அமர்ந்து, “ரோஜா..” என்று மென்மையாய் அவளின் கன்னத்தைத் தட்டினான். மெல்ல கண் விழித்தவள் கணவனைக் கண்டதும் தாவி அவனை அணைத்துக் கொண்டாள்.
அவளின் இறுகிய அணைப்பும், அவசர முத்தங்களும் அவனுக்கு ஒன்றைதான் நினைவுப்படுத்தியது.
அவளை மென்மையாய் விலக்கி, அவளின் முகம் பார்த்தான். அவளோ மீண்டும் அவன் முகத்தை அருகில் இழுத்தாள்.
“ஸ்டாப் இட் ரோஜா” அந்தக் குரலில் அவள் பின் வாங்க, “என்னை இப்படிப் பார்க்காத, அடிபட்ட நாய் குட்டியை பார்க்கற மாதிரி.. உன்னோட இந்தப் பார்வை… அப்படிப் பார்க்காத பிளீஸ்…” என்றான் இளமாறன். அந்த வார்த்தைகளில் ரோஜா அடிபட்டு போனாள்.