அவளுக்கு அருகில் வந்து அமர்ந்த இளமாறன், நகரத்தின் எந்தப் பகுதி, அங்கு வசிக்கும் மக்கள், அவர்கள் விரும்பும் உணவு, அவர்களின் வசதி எனப் பல விஷயங்களைக் கேட்டறிந்து அவனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டான்.
முழுதாக இரண்டு மணி நேரங்களையும், சிற்றுண்டி, பழச்சாறையும் விழுங்கி விட்டு, அவர்கள் நிமிர்ந்த போது ரகுவரனின் தொழில் திட்டம் பட்டை தீட்டப்பட்டிருந்தது.
அவன் முகத்தில் அப்படியொரு திருப்தி. ஒத்த அலைவரிசை மட்டுமல்ல, ஒரே தொழிலில் பல வருட அனுபவம் பெற்ற அவன் வயது இளமாறனும், ரோஜாவும், இதுவரை அவன் சந்தித்த அனைத்துத் தொழில் நிறுவனங்களை விடவும் உபயோகமான தகவல்களைத் தந்து அவனது தொழில் கனவை நனவாக்கும் நம்பிக்கையை அவனுக்கு அளித்திருந்தனர்.
“தேங்க்ஸ் அ லாட் செஃப். யூ ஆர் ஜீனியஸ்” என்றான் பாராட்டாக.
“வெற்றியை விடத் தோல்வி அதிகப் பாடம் கத்துக் கொடுக்கும் ரகு. என்னோட அனுபவங்கள் எல்லாமே தோல்வியில் இருந்து வந்தது” என்ற இளமாறனின் வார்த்தைகளில் ரகுவரனுக்கான அறிவுரையும் இருந்தது.
“நானும் அடிபடக் காத்துட்டு இருக்கேன் செஃப்.” அசராமல் பதில் சொன்ன ரகுவரன், நேரமாவதை உணர்ந்து அவர்களிடம் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லி வெளியேறினான்.
பின்மாலை பொழுதாகியிருக்க உணவக பணியாளர்கள் இரவு உணவுக்கான ஆயத்தங்களில் இறங்க, இளமாறன் கண் மூடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்.
“வீட்டுக்குப் போகலாமா செஃப்” ரோஜா மேஜையின் அடியில் அவன் கைப் பிடித்துக் கேட்டாள்.
“ம்ம்” என்றவன் கண் திறக்கவில்லை.
அவனை அப்படியே விட்டுவிட்டு ரோஜா உணவகத்தின் வேலைகளை மேற்பார்வையிட்டாள். சற்று நேரத்தில் மனதை சமன்படுத்தி எழுந்து வந்தான் இளமாறன்.
இரவு ஒன்பது மணி போல உணவகம் பரபரப்பாக இயங்கத் தொடங்க, அவர்கள் இருவரும் வீட்டிற்குக் கிளம்பினார்கள்.
அன்றைய நிகழ்வுகளின் தாக்கத்தினால் ரோஜாவின் மனது அக்காவின் அண்மையை நாடியது. அம்மாவின் மடியில் ஆறுதலை தேடியது.
அவளுக்கு அவளே சொல்லிக் கொள்கிறாள். பெரிதாக ஒன்றும் நிகழ்ந்து விடவில்லை என்று. மறதியால் நிகழ்ந்த அசம்பாவிதம் அதைப் பெரிதுபடுத்த கூடாதென்று.
ஆனாலும், அவள் மனது சமாதானம் அடையவில்லை.
இளமாறனின் உறவுகள் அவளுக்கு உறுத்தலை தந்தனர்.
காரை செலுத்திக் கொண்டிருந்த இளமாறன் அவள் மனம் புரிந்தது போல, நேராக அவள் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். பாதி வழியில் பாதை மாறியிருப்பதைக் கவனித்து, “இளா, இது நம்ம வீட்டுக்குப் போகிற ரூட் இல்லையே?” என்று அவள் கேட்க, “ம்ம். நம்ம வீட்டுக்குத்தான் போறோம். அத்தைக்குப் போன் பண்ணி சொல்லிடு” என்றான் சாலையில் பார்வையைப் பதித்து.
“நிஜமாவா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டவள், அவன் திரும்பி முறைக்கவும், கண் சிமிட்டி விட்டு அம்மாவின் அலைபேசிக்கு அழைத்தாள்.
“வாங்க, வாங்க ரோஜா. அம்மா வெயிட் பண்றேன்.” என்ற சித்ராவின் குரலில் அத்தனை மகிழ்ச்சி.
“நீங்க இன்னும் சாப்பிடலை தானே? அப்பாக்கு செஞ்ச இடியாப்பம், குருமா இருக்கு. அது கூட உங்களுக்கு இட்லி ஊத்தி, சட்னி அரைக்கட்டுமா ரோஜா? இல்லனா சப்பாத்தி போட்டு வைக்கவா, குருமா தொட்டுப்பீங்க” சித்ரா அவரின் இயல்பாக விசாரித்தார். ஆனால், அவருக்குப் பதில் சொல்ல முடியாத அளவுக்கு ரோஜாவுக்குத் தொண்டையடைத்தது. தன் கணவனுக்கு அம்மா கொடுத்த முக்கியத்துவம் அவளை நெகிழ்த்தியது. அது அவரின் வழக்கம் என்பது கூட அவள் மனதில் பின்னால் சென்றிருந்தது.
“என்ன ரோஜா? இட்லி, சப்பாத்தி வேணாமா? அப்போ நீயே மாப்பிள்ளைகிட்ட சாப்பிட என்ன வேணும்னு கேட்டு சொல்லு. நீங்க வர்றதுக்குள்ள அம்மா செஞ்சு வைக்கிறேன்” என்று குரலை உயர்த்திச் சொன்னார் சித்ரா.
“இட்லி, இடியாப்பம் போதும் ம்மா” என்ற அவளின் குரல் கரகரக்க, “என்ன உன் குரலே சரியில்ல? ஐஸ் கிரீம் சாப்பிட்டியா ரோஜா? சளி பிடிக்கப் போகுது பாரு. அம்மா மிளகு கசாயம் போட்டு வைக்கிறேன். நைட் படுக்கப் போகும் முன்னாடி குடிச்சா, சரியா போகும்” என்றார்.
“ம்ம். சரிம்மா”
“சரி, நீங்க சீக்கிரமா வாங்க” என்று சித்ரா அழைப்பை துண்டித்தார்.
இருபது நிமிடங்கள் கழித்து ரோஜாவின் வீட்டில் இருந்தார்கள் அவர்கள்.
“வாங்க மாப்பிள்ளை.” என்று வாசலுக்கு வந்து வரவேற்ற சித்ரா, “ரோஜா” என்று மகளின் கையை வாஞ்சையாகப் பிடித்துக் கொண்டார்.
அவர்கள் வீட்டுக்குள் வரவும் முதலில் குடிக்கத் தண்ணீர் கொடுத்து, பின், “ரோஜாகிட்ட காஃபி குடுத்து விடவா மாப்பிள்ளை? இல்ல, டின்னர் சாப்பிடுறீங்களா?” என்று அவர் பரபரக்க, “அம்மா, ஒன்னும் வேணாம். நீங்க உட்காருங்க” என்று அவரை அமைதிப்படுத்தினாள் ரோஜா.
“சரி ரோஜா. நைட் இருந்துட்டு காலைல தானே போவீங்க?” என்று அவர் கேட்டு, ரோஜா தலையசைக்கவும்,
“ரொம்பச் சந்தோஷம். நீங்க போய் முகம் கழுவி, ட்ரெஸ் மாத்திட்டு வாங்க. நான் டிஃபன் எடுத்து வைக்கிறேன்” என்று மகளை அனுப்பி வைத்தார்.
இளமாறன் மௌனமாய் மனைவியுடன் நடந்தான்.
“ரோஜா, ஒரு நிமிஷம் இங்க வாடா” என்று சித்ரா அழைக்க, “நீங்க போய் ரெப்ரஷ்ஷாகுங்க இளா. நான் இப்போ வந்திடுறேன்” என்று கீழிறங்கி போனாள்.
“நீங்க கையில் பை எதுவும் எடுத்துட்டு வரல. மாப்பிள்ளைக்கு மாத்திக்க ட்ரெஸ் இருக்காது இல்ல?”
“போன வாரம் நம்ம வீட்டுக்கு வந்தப்போ அவரோட பேண்ட் ஷர்ட், வேட்டி எல்லாம் இங்க வச்சுட்டு போனேன் மா. அது இருக்குமே” ரோஜா சொல்ல,
“நான் ரெண்டு நாளைக்கு முன்னாடி கடைக்குப் போனேன் ரோஜா. அப்போ உனக்கு, மாப்பிள்ளைக்கு, நித்தி வீட்டுக்குப் புதுத் துணி, துண்டு எல்லாம் வாங்கினேன். உங்கப்பாதான் அளவு சொன்னார். அதுனால மாப்பிள்ளைக்கு அளவு சரியா இருக்கும். இரு அதை எடுத்துத் தரேன். மாப்பிள்ளைக்கு மாத்திக்கக் கொடு” என்றார் சித்ரா.
“நீங்க என்கிட்ட சொல்லவே இல்லம்மா. எங்களுக்குப் புது டிரஸ் வாங்கினீங்களா?” சிறுமியின் குதூகலத்துடன் ரோஜா கேட்க,
“ஆமா, ரோஜா” என்று மகளை அவரின் அறைக்கு அழைத்துச் சென்று உடைகள் இருந்த பையை எடுத்துக் கொடுத்தார் சித்ரா.
ரோஜா அங்கேயே நின்று பிரித்துப் பார்க்க, “இதை உன் ரூமுக்குப் போய்ப் பிரிச்சு பாரு. அங்க மாப்பிள்ளை தனியா இருப்பார், நீ போய் அவரைக் கவனி” என்று மகளைத் துரத்தியவர், அவள் அறை வாசலுக்கு நகரவும் வேகமாக வந்து அவளின் கைப் பிடித்து நிறுத்தினார்.
“இன்னைக்கு உங்க மாமியார் வீட்டுக்கு போன தானே? விருந்து எப்படிப் போச்சு?” மகளின் முகத்தைக் கனிவும், கரிசனமுமாகப் பார்த்துக் கேட்டார் அவர்.
“ம்ம். அத்தை நல்லா கவனிச்சாங்க மா. எனக்கு அங்கருந்து கிளம்பவும் உங்க ஞாபகமா வந்தது. நான் சொல்லாமலே இவர் கூட்டிட்டு வந்துட்டார்” புன்னகையுடன் சொன்ன மகளை மகிழ்வுடன் பார்த்தார் சித்ரா.
“மாப்பிள்ளை குடும்பம் ரொம்ப நல்லவங்க ரோஜா. அதெல்லாம் உன்னை நல்லா பார்த்துப்பாங்கன்னு எனக்குத் தெரியும். உங்கப்பா வர்ற நேரமாச்சு. நீ போய்த் துணியை மாத்திட்டு வா, சாப்பிடலாம்” என்று மகளை அனுப்பி வைத்தார்.
ரோஜா அறைக்குச் செல்ல, குளித்து விட்டு வந்து இடுப்பில் துவாலையுடன் நின்று அலைபேசி கொண்டிருந்தான் இளமாறன்.
கையில் இருந்த பையைப் படுக்கையில் வைத்து விட்டு மெல்ல அவனை நெருங்கி அவனின் இரு பக்கமும் கைக் கோர்த்து இறுக அணைத்துக் கொண்டாள் ரோஜா.
“நான் திருப்பிக் கூப்பிடுறேன்” என்று அழைப்பை துண்டித்த இளமாறன், மனைவியின் அணைப்பில் இசைந்து நின்றான்.
அவனின் வெற்று மார்பில் முகம் புதைத்து, சுவாசத்தில் அவன் வாசத்தை நிறைத்துக் கொண்டிருந்தாள் ரோஜா.
அவளாக விலகும் வரை மனைவியை அவன் விலக்கவும் இல்லை, அணைக்கவும் இல்லை.
மெல்ல தலையை உயர்த்தி, “அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க. வெயிட் பண்ணுங்க, நானும் குளிச்சுட்டு வர்றேன்” என்றாள்.
“ம்ம்”
என்று அவள் முகம் பார்த்து நின்றவனுக்கு இரவு உடையைப் பிரித்துக் கொடுத்து, தனக்கான உடையுடன் குளியலறை சென்றாள் ரோஜா. பதினைந்து நிமிடங்கள் கழித்து அவர்கள் கீழே வர, சிவஹரியும் வீடு வந்திருந்தார்.
“வாங்க மாப்பிள்ளை, சாப்பிடுவோம்” என்று அவர் அழைக்க, மற்ற நேரமென்றால் தன் வீட்டில் தனக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை என்று செல்ல கோபம் காண்பித்திருப்பாள் ரோஜா. ஆனால், அந்தக் கணம் பெற்றோரின் மாப்பிள்ளை கவனிப்பை கண்டு மகிழவே செய்தாள் அவள்.
மாமன், மாப்பிள்ளை பேசிக் கொள்ள, அவர்களை விட்டு விலகி அம்மாவுக்கு உதவப் போனாள்.
அந்தக் குறைந்த நேரத்தில் சித்ரா ஒரு முடிவுக்கு வர முடியாமல் அவர் சொன்னது அனைத்தையும் செய்து வைத்திருந்தார்.
இடியாப்பம், சப்பாத்தி, காய்கறி குருமா, தேங்காய், புதினா சட்னி, எனத் தயாராகப் பாத்திரங்களில் இருந்த உணவை மேஜைக்குக் கொண்டு வந்து வைத்தாள் ரோஜா.
அவர் இட்லியை அப்போதுதான் ஊற்றி வைத்திருக்க, அது சூடாக அவிந்து கொண்டிருந்தது.
“அப்பா, சாப்பிட வாங்க” என்ற ரோஜா, அம்மா ஆவி பறக்க எடுத்து வைத்த இட்லியை மேஜைக்குக் கொண்டு வந்தாள்.
இளமாறனுடன் வந்து உணவருந்த அமர்ந்தார் சிவஹரி. ரோஜா அவர் தட்டில் இடியாப்பம் வைக்க, “முதல்ல மாப்பிள்ளைக்கு வை மா” என்றார் அவர்.
அப்பாவுக்கு இடியாப்பம், குருமா பரிமாறி, கணவனுக்குச் சூடான இட்லியை வைத்தாள்.
“நீங்களும் சாப்பிட உட்காருங்க அத்த” என்ற இளமாறன், ரோஜாவுக்குக் கண் காட்டி விட்டு, சட்னியை அவனே எடுத்துப் போட்டுக் கொண்டான்.
அம்மாவுக்கும் பரிமாறி விட்டு கணவனுக்குப் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டாள் ரோஜா. சித்ரா சாப்பிட அமர்ந்து விட்டாரே தவிர, அவரின் கண்கள் மற்றவர்களின் தட்டில்தான் இருந்தது. மகள், மருமகன், கணவன் என மூவர் தட்டிலும் உணவை குறையக் குறைய நிறைத்தபடி உண்டார் அவர்.
சிவஹரி மருமகனுடன் காய்கறி, பருப்பு விலைவாசி உயர்வு குறித்துப் பேசிக் கொண்டே உண்ண, பேச்சு சுவாரசியத்தினாலோ, இல்லை பசியினாலோ இயல்பை விட அதிகமாக உண்டான் இளமாறன்.
ரோஜா அவன் தட்டில் சப்பாத்தியை வைக்கப் போக, “போதும்” என்று தடுத்தான்.
உணவு முடித்துச் சிறிது நேரம் ஆண்கள் பேசிக் கொண்டிருக்க, அம்மாவுக்குச் சமையல் அறை ஒதுக்க உதவினாள் ரோஜா.
“அவ்வளவுதான் வேலை முடிஞ்சது. நான் பார்த்துக்கறேன். நீ இந்த மிளகு கசாயத்தைக் குடிச்சுட்டுப் போய்ப் படு.” என்று சித்ரா சொல்ல, அவர் நீட்டியதை கண்ணை மூடி ஒரே மடக்கில் குடித்து விட்டு வெளியில் சென்றாள் ரோஜா.
அவள் மாடிப் படியில் கால் வைக்க,
“மாப்பிள்ளை தோட்டத்துல இருக்கார் ரோஜா” என்றார் சிவஹரி.
“சரிங்கப்பா” என்று பின் வாசலை நோக்கி நடந்தாள்.
மல்லி, முல்லை, இருவாட்சி பூக்கள் நிலவொளியில் மொட்டவிழ்ந்து கொண்டிருக்க அதனுடன் இணைந்தாள் ரோஜா.
தோட்டத்து நடை பாதையில் நடை பயின்று கொண்டிருந்த இளமாறன், மனைவியின் மெல்லிய கொலுசு சத்தத்தில் மெல்ல திரும்பி அவளைப் பார்த்தான்.
அவனை நெருங்கி கைக் கோர்த்து கொண்டாள் ரோஜா.
“நிலா வெளிச்சம் நல்லாருக்கு இல்ல இளா, கொஞ்ச நேரம் இங்க உட்காருவோமா?”
இரவில் இதயம் நிறைத்தவளுடன் இதமான அந்தக் காலநிலையை ரசித்தபடி புல் தரையில் கால் நீட்டி அமர்ந்தான் இளமாறன்.
அவன் தோளில் தலை சாய்த்து அமர்ந்தாள் ரோஜா.
இருவருக்கும் இடையே வார்த்தைகள் தேவைப்படாத ஓர் அமைதி நிலவியது.
நிலவும், மலரும், தென்றலும் சூழ்ந்திருந்த அவ்விரவு தந்த ஆழ்ந்த அமைதியில் இளமாறனுக்கு மனதின் உளைச்சல் எல்லாம் கரைந்து போய் இருந்தது. அதற்குக் காரணம் அவன் மார்பில் பதிந்திருந்த ரோஜா என்று நினைக்கையில் அவன் இதழ்களில் புன்னகை மலர்ந்தது.
“உனக்குத் தூக்கம் வரலையா ரோஜா?” அவன் கேட்க,
“உங்களுக்கு ஏதாவது பேசணுமா இளா?” கண்களை மட்டும் நிமிர்த்தி அவன் கண்களைக் கூர்ந்துக் கேட்டாள்.
“என்ன பேச?”
“உங்க மனசுல இருக்க எதுவா இருந்தாலும் சொல்லலாம். கேட்க நான் ரெடி.”
“ம்ம். சொல்ல நானும் ரெடிதான். ஆனா, அதைச் சொல்றதால எதுவும் மாறிட போகுதா ரோஜா? நம்மால கடந்த காலத்தை மாற்றிட முடியுமா? முடியாது தானே?”
“ம்ம்.”
“பழசை நான் திரும்பிப் பார்க்க விரும்பல ரோஜா. அதை மறக்க விரும்பறேன். கிட்டத்தட்ட மறந்துட்டேன்னு கூடச் சொல்லலாம். இனிமே நல்ல நினைவுகளை மட்டுமே சேர்க்க விரும்புறேன். உன்னைப் பார்த்த நாள்ல இருந்து இன்னைக்கு வரைக்கும் தினம் தினம் அழகான நினைவுகள் சேர்த்துட்டேதான் இருக்கேன்.”
அவள் கண்களைப் பார்த்து சொன்னவன், அழுத்தமாய் அவள் நெற்றியில் உதடு பதித்தான். அவன் உதட்டில் ஓடிய மெல்லிய நடுக்கம் அவள் உடலுக்குள் ஊடுருவியது.
“இளா..”
“உனக்குத் தெரிஞ்சுக்கணும்னு விருப்பம் இருந்தா சொல்லு. நான்..”
“இல்ல. வேணாம். எனக்கு எதுவும் தெரிய வேணாம்.”
“ம்ம்” என்றவன், அப்படியே தரையில் மல்லாந்து கண் மூடினான். அவன் தோளில் தலை வைத்து வானில் நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ரோஜா.
நேரம் கடப்பதை உணர்ந்து, “ரோஜா உள்ள போகலாம்” மனைவியை எழுப்பி, அவளோடு அறைக்கு வந்த இளமாறன் படுத்ததும் உறங்கி விட்டான்.
ரோஜாவை ஏதேதோ சிந்தனைகள் வாட்ட, உறக்கம் அவளின் கைக்கு எட்டாமல் தள்ளியே நிற்க, படுக்கையில் புரண்டு கொண்டே இருந்தாள் அவள்.
“என்னடி?” இரவு விளக்கின் வெளிச்சத்தில் மனைவியின் முகம் பார்த்த இளமாறனின் உதடுகள் அவளின் பதிலை முத்தமிட்டது.
“ம்ம், இளா” என்று சிணுங்கிய ரோஜாவின் குரலோடு, கொலுசும் இணைந்து சிணுங்கி இளமாறனின் இதயத்தை இரவு முழுக்க நிறைத்தது.