என் ஜீவனில் உறைந்திடு – 19 (2)

அன்றிரவு நிச்சயமாக வீட்டில் பெற்றோருக்கு இடையில் வாக்குவாதம் வெடிக்கும் என அவளால் கணிக்க முடிந்தது.

அப்பா கொஞ்சம் அம்மாவுக்காக நேரம் ஒதுக்கலாம் என்று அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அம்மாவும், அப்பாவின் வேலை பளுவை, நேரமின்மையைப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம் என்று முதன் முறையாக நினைத்தாள்.

திருமணம் அவளின் பார்வையைச் சற்றே மாற்றியது போல, விரிவாக்கியது போல அவளுக்குத் தோன்றியது. மெல்லிய புன்னகையுடன் அவள் திரும்ப, மேஜையின் அடியில் அவளின் கைப் பிடித்து அழுத்திக் கொடுத்தான் இளமாறன்.

பெரியவர் வைத்தியலிங்கத்தின் அந்தப் பிரம்மாண்ட மாளிகை விருந்தோடு கலகலத்தது. அவரது கூட்டுக் குடும்பம். ஆக, பேச்சு, சிரிப்பு எனச் சத்தத்திற்கும், சந்தோஷத்திற்கும் குறைவில்லை.

புதுமணத் தம்பதியருக்காக அசைவ விருந்து பரிமாறி அசத்தினார்கள்.

பல வருட பழக்கத்தின் காரணமாக மிக இயல்பாகக் குடும்பம் போல அவர்களிடம் பழகினார்கள்.

உணவு முடித்து அவர்களுக்கு ஆசியோடு பரிசுகளும் அளித்தனர். சித்ரா கண் காட்ட ரோஜா மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்.

இளமாறன் ரோஜாவின் கண்ணசைவில் இசைந்தான்.

அத்தனை நேரமும் அங்கிருந்த பெரியவர்கள் விலகிச் செல்ல, ரோஜா, இளமாறனை சூழ்ந்துக் கொண்டனர் வீட்டின் இளைய தலைமுறையினர்.

சித்ரா அந்த வீட்டின் மருமகளோடு ஐக்கியமாகி விட்டார்.

அவர்கள் ஹாலில் அமர்ந்து ரகுவரனின் அக்கா அமிர்தாவுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இளமாறனுக்கு அழைப்பு வர, அலைபேசியுடன் தனிமை வேண்டி நகர்ந்தான் அவன்.

“ரோஜா, ஒரு நிமிஷம்” என்று அவளைத் தனியாக அழைத்த ரகுவரனை கண்ணைச் சுருக்கி முறைத்தாள் ரோஜா.

“அக்கா கூட அப்புறம் பேசுவ. உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். என் கூட வா” என்றவனைச் சந்தேகமாகப் பார்த்தாள் ரோஜா.

“ரகு” என்று தம்பியை அதட்டிய அமிர்தா, அவன் பாவம் போல முகத்தை வைக்கவும், “இங்க டைனிங் டேபிளில உட்கார்ந்துப் பேசுங்க ரோஜா.” என்று ஹாலின் மற்றொரு பக்கம் இருந்த உணவு மேஜையைக் கண் காட்டினார்.

“இவன் ஏதாவது உளறினா பட்டுனு அடிச்சுடு” என்று சொல்லியே அவளை அனுப்பினார் அவர். ரோஜா புன்னகையுடன் ரகுவோடு நடந்தாள்.

கணவனைத் திரும்பிப் பார்த்து, அவன் பார்வையில் படும்படியே அமர்ந்துக் கொண்டாள்.

“அப்புறம் எப்படியிருக்க ரோஜா?” என்று ரகுவரன் ஆரம்பிக்க, “ஹல்லோ என்ன நக்கலா? மூனு மணி நேரமா இங்கதான் இருக்கேன். இப்போ முதல்ல இருந்து ஸ்டார்ட் பண்றீங்க? என்ன பேசணும் ரகு? அதைச் சொல்லுங்க” என்று கறாராகப் பேசினாள் ரோஜா.

“அது வந்து…”

“வந்தாச்சு. அப்புறம்..”

ரோஜா கிண்டலாகச் சொல்ல, சிரித்தான் ரகுவரன்.

“உங்க உடைஞ்ச மனசு சரியாகிடுச்சு போல? என் ஹஸ்பண்ட் சொன்னார்” என்று ரோஜா சொல்லவும், சற்றே அதிர்ச்சி காட்டினான் ரகு.

“சோ, அடையார் பேலஸ் ஹோட்டலும், அமிர்தா பவனும் சம்பந்திங்களாக மாறப் போறாங்க போல?”

“அது வீட்ல பேசுறாங்க ரோஜா‌, எனக்கும் ஓகேதான்” என்று ரகு சொல்லவும், “கங்கிராட்ஸ் அண்ட் ஆல் த பெஸ்ட் ரகு” என்றாள் ரோஜா.

அதைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டான் ரகுவரன்.

“ரோஜா, நான் அமிர்தா பவனை விட்டு வெளில வரப் போறேன்?”

“ஏன்?” பலமான அதிர்ச்சியுடன் கேட்டாள் ரோஜா.

“இன்னும் எவ்வளவு நாள் குடும்பத் தொழிலையே பார்த்திட்டு இருக்கறது?” அலுப்பாகக் கேட்டான் ரகுவரன்.

“குடும்பத் தொழில் பிடிக்கலன்னா? வேற என்ன பண்ற ஐடியா? நீங்களும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் தானே படிச்சுருக்கீங்க? இதை விட்டு வேற என்ன பிசினஸ் பண்ணப் போறீங்க?” அடுக்கடுக்காகக் கேள்விகளை அடுக்கினாள்.

“இதே தொழில்தான் ரோஜா. ஆனா, நான்வெஜ் ரெஸ்டாரண்ட் தொடங்கலாம்னு இருக்கேன் நான்”

“எப்படி ரகு? அமிர்தா பவனுக்குன்னு ஒரு பேர் இருக்கு. தரம் இருக்கு. பல வருஷ பாரம்பரியம் இருக்கு. அதை எப்படி மாற்ற முடியும்?”

“நீயும் தாத்தா மாதிரியே பேசாத ரோஜா. நான்தான் அமிர்தா பவன் விட்டு வெளில வரப் போறேன் சொன்னேன், இல்ல?” என்று கடுப்புடன் கேட்டவன், “நான் தனியா புதுசா ஒரு பேர்ல தொடங்கப் போறேன். அமிர்தா பவன் பேரை எங்கேயும் குறிப்பிட மாட்டேன்” என்று தீர்க்கமாகச் சொன்னான்.

“ஆனா, நீங்க அந்த வீட்டுப் பிள்ளைன்னு ஊருக்கே தெரியுமே”

“ரோஜா பிளீஸ்” சோர்வுடன் அவள் முன் கை நீட்டினான்.

“இது முழுக்க முழுக்க என் சொந்த முயற்சி. அவ்ளோதான். எனக்கு மெனு டிசைன் பண்ண உன்னோட ஹெல்ப் வேணும். நீ செய்து தர்றியா பிளீஸ்? முதல்ல வந்து இடத்தைப் பாரு. என் ஐடியாவை கேளு. அப்புறம் என்ன மாதிரி புஃட் அங்க விக்கும்னு நீ சொன்னா. அதை ட்ரையல் பார்த்து, புட் டேஸ்ட்டிங் பண்ணி…” என்று சொல்லிக் கொண்டே போனவனை ஆச்சரியமும், அதிர்ச்சியுமாகப் பார்த்தாள் ரோஜா.

“நானா?” சந்தேகமாகக் கேட்டாள்.

“எஸ். நீயேதான். அதிலென்ன சந்தேகம் உனக்கு?” என்றவனை ஆராய்ச்சியாகப் பார்த்தாள் ரோஜா.

“நான் எதுக்கு ரகு? ரெஸ்டாரண்ட் செட் அப் பண்ணிக் கொடுக்க எத்தனையோ ப்ரபஷனல் கம்பெனிகள் இருக்காங்களே. அவங்ககிட்ட வேலையைக் கொடுக்கலாம் இல்ல நீங்க?”

“ப்ச், அவனுங்க எனக்குத் தேவையில்லாத ஐடியா கொடுப்பானுங்க. என் ஐடியாவை செயல்படுத்த ஹெல்ப் பண்ண மாட்டாங்க” சலிப்புடன் சொன்னான்.

“எனக்கு ஃப்ரெஷ் ஐடியா வேணும். அதுக்கு நீதான் சரி” என்று ரகு முடிவாகச் சொல்ல, ரோஜா குழப்பாக அவனைப் பார்த்தாள்.

“ரோஜா பிளீஸ், எஸ் சொல்லு” ரகு அவளின் எதிரே அமர்ந்து கேட்க, பார்வையை அவனிடம் இருந்து திருப்பியவளின் கண்ணில் சித்ரா பட்டார்.

அம்மாவைப் பார்த்ததும், அவளுக்குச் சட்டென அந்த எண்ணம் உதிக்க, “உங்களுக்கு இந்த ஐடியா எப்போலருந்து இருக்கு ரகு? உங்க ஐயா என்னைப் பெண் கேட்டதுக்கு இதான் காரணம் இல்ல?” பட்டென நேரடியாக அவனிடமே கேட்டு விட்டாள்.

“அது.. ரோஜா…” பதில் சொல்ல முடியாது தடுமாறினான் ரகுவரன்.

ஆக, அம்மா சரியாகத்தான் இவர்களைக் கணித்திருக்கிறார்கள் என்று மனதில் நினைத்துக் கொண்டாள் ரோஜா.

“பிளீஸ், ரகு. நாம சேர்ந்து வேலைப் பார்க்கிறது எல்லாம் சரி வராது.” அவள் முடிவாக மறுக்க,

“இப்படி முகத்தில் அடிச்ச மாதிரி பதில் சொல்லாத ரோஜா. மாறன்கிட்ட பேசிட்டு அப்புறம்..” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கை நீட்டி, “என் பதில், முடியாதுதான் ரகு. இதையெல்லாம் அவர்கிட்ட கொண்டு போக நான் விரும்பல” என்றாள்.

“செஃப்க்கு தெரியும் ரோஜா. அவர்கிட்டதான் எல்லாத்துக்கும் ரெசிபி கேட்டுருக்கேன்”

“என்ன சொல்றீங்க ரகு?” அவளின் விழிகள் அதிர்ச்சியில் விரிய, குரல் உயர்ந்திருந்தது.

அவளின் எதிர்வினை ரகுவரனுக்குச் சிரிப்பு மூட்டியது.

“அவருக்கு, எனக்குப் பிடிச்ச ரோஜாவையே விட்டுக் கொடுத்திருக்கேன். பதிலுக்கு இது கூடச் செய்ய மாட்டாரா உன் செஃப்?” என்ற அவனது கேள்வியில் முறைத்தாள் ரோஜா.

“என்னது என்னை விட்டுக் கொடுத்தீங்களா? நான் உங்களை வேண்டாம்னு சொன்னதா எனக்கு ஞாபகம்” ரோஜா சொல்ல, அதிர்வுடன் இதயத்தில் கை வைத்தான் ரகுவரன்.

“இங்க என்ன அவார்டா கொடுக்குறாங்க. இப்படி நடிக்கறீங்க?” என்றவளுக்குச் சட்டென முன்னர் ரகுவரனை கணவனின் உணவகத்தில் வைத்துச் சந்தித்தது நினைவு வந்தது.

“அமிர்தா பவனுக்கு த புட் அஃபேர்ஸில் என்ன பிசினஸ்?” என்று அவள் கேட்டதற்கு, “அசைவம் இல்லாததுதான் பிசினஸ்” என்று ரகுவரன் பதிலளித்தது, இப்போது துல்லியமாக அவளுக்கு நினைவு வந்தது.

“தெய்வமே. நீங்க பிசினஸ் ஸ்டார்ட் பண்ண நாங்கதான் சிக்கினோமா? நான் கல்யாணத்துக்கு நோ சொன்ன பின்னாடி, நான் கல்யாணம் பண்ணிக்கப் போறவர்கிட்ட போய்ப் பிசினஸ் பேசி இருக்கீங்க. அன்பிளீவபுள் ரகுவரன். இப்போ சொல்றேன் கேட்டுக்கோங்க. இனிமே இதைப் பத்தி என்கிட்ட பேசவே பேசாதீங்க. என் ஹஸ்பண்ட்கிட்டயும் இதைப் பத்தி நீங்க பேச கூடாதுனு நான் சொல்லத் தேவையில்லன்னு நினைக்கிறேன்” என்று அழுத்தமாகச் சொன்னாள்.

“ரோஜா பிளீஸ். ரொம்ப யோசிக்காத. நீ நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் கிடையாது. உன்னைப் பிடிச்சுதான் கல்யாணத்துக்கு நான் ஓகே சொன்னேன்.”

“அறிவில்லாம பேசாதீங்க ரகு. அதெல்லாம் இப்போ தேவையில்லாத பேச்சு. எனக்குக் கல்யாணமாகிடுச்சு. அதை மட்டும் ஞாபகத்தில் வச்சு பேசுங்க.” கோபத்துடன் இருக்கையில் இருந்து எழுந்துக் கொண்டாள் ரோஜா.

“சாரி சாரி ரோஜா. பிளீஸ்”

“ப்ச், பேசாதீங்க” என்று அவள் நகரப் போக, “ரோஜா மத்த எல்லாத்தையும் விடு. எனக்கு மெனு டிசைன் பண்ணி மட்டும் கொடு. பிளீஸ். நீ முடியாது சொன்னா..” என்று அவன் முடிக்கும் முன்பே இடையிட்டு, “என்ன பண்ணுவீங்க?” என்று கடுப்புடன் கேட்டாள் ரோஜா.

அங்கிருந்த கத்தியை எடுத்து அவனின் மணிக்கட்டில் வைத்தான் ரகுவரன்.

error: Content is protected !!
Scroll to Top