“ரோஜா, அப்பா நம்மள வீட்டுக்கு கூப்பிட்டாங்க. எப்போ போறது?” சமையல் அறையில் காலை உணவினை தயாரித்துக் கொண்டிருந்த மனைவியைப் பின்னிருந்து அணைத்தபடி கேட்டான் இளமாறன்.
“இன்னைக்கு வைத்தியலிங்கம் ஐயா வீட்டுக்கு போகணும். ஏற்கனவே வர்றோம்னு அவங்களுக்குச் சொல்லிட்டோம். அப்புறம் நித்யாக்கா வீட்டுக்கு கூப்பிட்டாங்க. அங்க வேற போகணும். நம்ம வீட்டுக்கு அடுத்த வாரம் போகலாமா?” அவனோடு இழைந்தபடி பதிலை கேள்வியாகக் கேட்டாள் ரோஜா.
ஈரமாய் அவள் கன்னத்தில் இதழ் பதித்து, “உன் விருப்பம்தான்.” என்றான். புன்னகைத்தாள் ரோஜா.
அவர்கள் திருமணம் முடிந்த மூன்றாவது நாளே வைத்தியலிங்கம் அவர்களை விருந்துக்கு அழைத்திருந்தார். சிவஹரியிடம் இருந்து அலைபேசி எண் பெற்று நேராக இளமாறனுக்கு அழைத்துப் பேசியிருந்தார் அவர். அவனுக்கு மறுக்கும் வாய்ப்பை அவர் தந்திருக்கவில்லை. ஆக, இன்று அங்கு வருவதாகத் தெரிவித்திருந்தார்கள்.
சுகந்தி அடிக்கடி ரோஜாவிடம் அலைபேசியில் பேசிக் கொண்டு தானிருக்கிறார். இயல்பான நலம் விசாரிப்பு, அன்றாட நடவடிக்கைகள் என அவரின் பேச்சு நீளும். ரோஜா அத்துடன் பேச்சை முடித்துக் கொள்வாள். அவள் மனம் புரிந்தது போல மேலே எதையும் பேச முயன்றதில்லை சுகந்தி.
அன்று கஸ்தூரி பேசியவையே இன்னமும் அவள் மனதில் கனமாய் அமர்ந்திருக்கையில் அதன்மேல் மேலும் பாரம் ஏற்ற ரோஜா விரும்பவில்லை.
அவளுக்கிருந்த கோபத்தில் கஸ்தூரி பரிசாகத் தந்திருந்த சேலையைக் கழற்றி எறிய முடிந்ததே தவிர, அவர் பகிர்ந்த கணவனின் சிறு வயது நிகழ்வுகளை அப்படி உதறி விட முடியவில்லை.
அப்படியிருக்கையில் தற்போது சுகந்தியை சந்திப்பதை தவிர்க்கவே விரும்பினாள் ரோஜா.
நாள்தோறும் தவறாமல் சங்கரனிடம் இருந்து மகனுக்கு அழைப்பு வந்து விடும். தினமும் மகனை வீட்டுக்கு அழைத்துக் கொண்டேயிருக்கிறார் அவர். அவர் பொருட்டே அங்குச் செல்ல விரும்பினான் இளமாறன். ஆனால், மனைவி தயங்குவது தெரிய, அவள் உணர்வுக்கு மதிப்பளித்தான்.
இருவரும் காலை உணவை முடித்துக் கொண்டு, வைத்தியலிங்கம் வீடு செல்ல தயாராகினார்கள்.
தளிர்பச்சை நிற டஸ்ஸர் பட்டுப் புடவை உடுத்தி, அதற்குப் பொருத்தமான நகைகளை அணிந்து கொண்டிருந்தாள் ரோஜா.
இளமாறன் பெரும்பாலும் உடுத்துவது வெள்ளை நிறம்தான். மனைவிக்கு அதில் மாற்றுக் கருத்து இருந்தாலும் அவனால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. வெள்ளை சட்டை, வேஷ்டி அணிந்து வந்தவனைப் பார்த்து, “மாப்பிள்ளை ரெடி” என்றாள் ரோஜா.
“இன்னொரு முறை கல்யாணம் பண்ணிக்கலாமா?” தீவிரமாகக் கேட்டான்.
“அடுத்த ஜென்மத்தில் தானே?” பற்கள் தெரிய புன்னகைத்து, இடையில் கை வைத்து ரோஜா கேட்க, “இதை விடவே மாட்டியா நீ?” காற்றுக்கு அலைபாய்ந்து தொல்லை செய்த அவளின் கூந்தல் கற்றைகளை ஒதுக்கி விட்டபடி கேட்டான்.
“இதையும் விட மாட்டேன். உங்களையும் விட மாட்டேன்” என்றவளின் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.
“வாவ் இளா. அடுத்த ஜென்மத்துக்கு இப்போவே ஃப்ரப்போஸ் பண்ண போறீங்களா?” அவனது தீடீர் செய்கையில் ஆச்சரியம் மிகக் கேள்வி எழுப்பினாள்.
தனது கையில் இருந்த சிறிய நகைப் பெட்டியை படுக்கையில் வைத்தான். ரோஜாவை அங்கிருந்த இருக்கையில் அமரச் செய்து அவளின் வலது காலை கையில் ஏந்தினான்.
“இளா, என்ன பண்றீங்க?” வெட்கத்துடன் வினவினாள்.
மனைவிக்குப் பதில் சொல்லாமல் அவளின் பாதத்தை எடுத்து தன் தொடையின் மேல் வைத்தான் இளமாறன்.
சற்றே நிறம் மங்கிய ஆண்டிக் வகை வெள்ளிக் கொலுசை கையில் எடுத்து மனைவியின் பாதங்களை அலங்கரித்தான்.
கொலுசோடு சேர்த்து அவள் பாதங்களை வருடினான். மெல்ல அவன் குனிய, “இளா..” அவன் மனம் புரிந்தது போலத் தடுக்க முயன்றாள் ரோஜா. ம்ஹூம், மீசை அழுந்த முத்தமிட்டான்.
அவளோ கூச்சத்துடன் சிரித்து, “உங்களுக்குக் கொலுசு பிடிக்குமா?” என்று கேட்டாள்.
“பிடிக்கும்னு இல்ல. உன் கால்ல கொலுசு போட்டு பார்த்தா எப்படி இருக்கும்னு தோணுச்சு. அதான், வாங்கினேன். மத்த எந்த நகையையும் விடக் கொலுசு கொஞ்சம் கவர்ச்சிதான் இல்ல?” கேட்டபடியே மற்றொரு பாதத்திலும் கொலுசை அணிவித்தான்.
“அப்படியா?” என்று விழி விரித்தாள் ரோஜா.
“ம்ம், உன்னைப் போலவே சிணுங்கி, சிரிக்குமே.” அந்தப் பதிலில் அவள் முகம் சிணுங்க, “அப்படியே ஒட்டி, உரசி, சத்தம் கூட்டி..” மேலே அவன் பேசும் முன் கை நீட்டி அவன் வாயை மூடினாள் ரோஜா.
“என்ன இப்படிப் பேசறீங்க?” கோபத்திற்குப் பதில் தாபக் குரல்தான் ஒலித்தது.
“பேசக் கூடாதா?” குறுநகையுடன் வினவினான்.
“ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்…” அவள் பதில் சொல்லும் முன் பாடினான்.
“நான் பேசக் கூடாதுன்னா, இந்தக் கொலுசை பேச வைப்போமா?” கண்ணடித்துக் குறும்பாகக் கேட்டான்.
ரோஜாவுக்குப் பேச்சே வரவில்லை. அவளின் பார்வையில் மயங்கி, இழுத்தணைத்து முத்தமிட்டு, மனமின்றி விலகி எழுந்து நின்றான் இளமாறன்.
அவன் கைப் பிடித்து எழுந்து நின்று குனிந்து புடவையை விலக்கி பாதங்களைப் பார்த்தாள் ரோஜா.
“செக்ஸி இல்ல?” அவன் கேட்க,
“சும்மா இருங்க இளா” என்று சிணுங்கி, கொலுசு அழகாருக்கு. தேங்க்ஸ்” என்றாள் ரோஜா.
தன் பாதத்தால் மனைவியின் பாதம் வருடினான். ஒற்றை மணிக் கொண்ட கொலுசு மெல்லிய சப்தம் எழுப்ப, அதை ரசித்துக் கேட்டு, “ம்ம்” என்றான் இளமாறன்.
ரோஜா மருத்துவமனை உணவகத்தில் வேலை செய்வதால் கொலுசின் ஒலி தொல்லையாக இருக்கும் எனக் கருதி அவள் அதை அணிந்ததே கிடையாது. சிறுமியாகவும் அவள் அணிந்தது கிடையாது. பள்ளி, கல்லூரி, சீருடை, உடைக் கட்டுப்பாடுகள் எனப் பல தடைகள்.
இப்போது திருமணத்தின் போது கூடச் சித்ரா வெள்ளிக் கொலுசு வாங்க வேண்டும் என்று வற்புறுத்தினார்தான். அவள்தான் மறுத்து விட்டாள்.
இப்பொழுது அவளின் காலை அலங்கரித்த அந்த மெல்லிய வெள்ளி நகை வித்தியாச உணர்வை தந்தது. அவள் நடக்கையில் மெல்லிய ஒலி பின் தொடர்ந்தது. அத்தோடு இளமாறனின் பார்வையும் பாவையின் பாதத்தைத் தொடர்ந்து வருடியது.
அவள் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க, அதுவரை அமைதியாக இருந்த வீட்டை நிறைத்தது மெல்லிய இசையொலி.
“ரோஜா, கொலுசு என் ஆசைக்கு வாங்கினேன். ஆனா, நீ அதைப் போடணும் அவசியமோ, கட்டாயமோ இல்ல. ஓகே?”
“இல்ல. எனக்குப் பிடிச்சிருக்கு இளா. நான் போட்டுக்கறேன்.”
பட்டென மறுத்தாள்.
“நீ இதுவரை கொலுசு போடாம இருந்ததுக்கு வேலை தானே காரணம்? இப்போ மட்டும் என்ன மாறிடுச்சு? என் அம்மம்மா, டாக்டர், என் தங்கை வெண்பான்னு யாரும் கொலுசு போட்டு நான் பார்த்ததுல்ல. நீயும் எனக்காக அதைப் போட வேணாம். எப்பவாவது வீட்ல போடு, போதும்” அவன் வார்த்தைகளை ஊன்றி கவனித்து, அவதானித்து மெல்ல தலையசைத்தாள் ரோஜா.
அரை மணி நேரம் கழித்து இருவரும் ரோஜா வீடு சென்று, சித்ரா, சிவஹரி உடன் வர பெரியவர் வைத்தியலிங்கம் வீடு நோக்கி சென்றார்கள்.
சித்ரா சிரித்த முகமாக மகளிடம் பேசிக் கொண்டு வந்தார். அவருக்குக் கணவன் தங்களோடு வெளியில் செல்வதில் அத்தனை மகிழ்ச்சி. ஆனால், சிவஹரி எப்போதும் போல மனைவிக்கு அதிர்ச்சியைச் சட்டைப் பையில் தயாராக வைத்திருந்தார்.
“மாப்பிள்ளை நம்ம இன்னொரு கேன்டீன் இங்கதான் இருக்கு சொன்னேன் இல்ல? வாங்க, ஒரு எட்டு பார்த்திட்டு போவோம்.” என்று அவர் இளமாறனை அழைக்க, திநகரில் இருந்த அவர்களின் உணவகம் சென்றார்கள் அவர்கள்.
மருத்துவமனை சென்று அங்கிருந்த கேன்டீன் ஊழியர்களிடம் மருமகனை அறிமுகப்படுத்தினார் சிவஹரி.
இருபது நிமிடங்கள் கழித்து அவர்கள் வெளியே வர, “நீங்க பெரியவர் வீட்டுக்கு போங்க. எனக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்கு, அதை முடிச்சுட்டு வந்து நான் ஜாயின் பண்ணிக்கறேன்” மருமகனின் முன் நின்று சொன்னார் சிவஹரி.
அவன், “சரிங்க மாமா” என்க, ரோஜா அம்மாவை திரும்பி பார்த்தாள்.
சித்ரா கணவரை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கண்களில் மெல்ல மெல்ல கோபத்தின் சாயல் ஏற, “என்ன இப்படிப் பண்றீங்க? நீங்க வரலன்னா ஐயா கோவிச்சுக்கப் போறார்” என்று கணவரை கடிந்து கொண்டார்.
“நான் அதுக்குள்ள வந்துடுவேன் சித்ரா. வேலை இருக்கு சொல்றேன் இல்ல? அதான், நீ கூட இருக்கியே. போம்மா” மனைவியின் கைப் பிடித்துக் காரில் ஏற்றி விட்டார்.
“ரோஜா, அப்பாக்கு வேலை இருக்கும்மா. உனக்கென்ன அவங்க வீடு புதுசா? நீங்க போய்ப் பேசிட்டு இருங்க. லஞ்ச் சாப்பிடும் முன்னாடி அப்பா வந்துடுவேன்” என்று மகளிடமும் கெஞ்சலாகச் சமாதானம் சொல்லி அனுப்பினார் அவர்.
அவள் தலையசைத்துக் காரில் ஏறினாள். அவர்கள் அங்குச் சென்று அறிமுகங்கள் முடிந்து, சிறிது நேரம் பேசி, சிரித்து, உணவுண்ண அமர்ந்தனர்.
சிவஹரி வேலையின் காரணமாக வர முடியவில்லை என்று மருமகனிடம் தெரிவித்து விட்டார்.
அதைக் கேட்டதும் அதிருப்தியில் சோர்ந்து போன அம்மாவின் முகத்தைப் பார்க்க பார்க்க ரோஜாவுக்கு வருத்தமாக இருந்தது.