சென்னையின் புறநகர் பகுதியான ஆவடியில் அமைந்திருந்தது அவள் பணியில் சேர்ந்திருந்த வங்கி. கடற்படை வானொலி மையம், விமானப்படை தளம், இராணுவ படை உடைத் தொழிற்சாலை மற்றும் மத்திய காவல்துறை பயிற்சி அகாடெமி என மத்திய அரசு நிறுவனங்கள் நிறைந்திருந்த பகுதி அது. அதன் பணியார்களின் வங்கி சேமிப்புக் கணக்குகள் அதிகளவு அவர்களின் வங்கியில்தான் இருந்தது. சம்பளம் எடுக்க, ஓய்வூதியம் பெற என மிகப் பெரிய வரிசை காத்திருந்தது. அத்தனை பணிகளுக்கு நடுவிலும் மிகப் பொறுமையாக அவளின் ஆவணங்களைச் சரி பார்த்து, தேவையான கோப்புகளில் கையொப்பம் வாங்கி, அவள் பணியில் முறையாகச் சேர உதவினான் வெற்றி.
அத்தோடு அவளுக்குப் பணிச் சூழலையும் அவன் விளக்க, அவளுக்குக் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலிருந்தது.
“ஓகே சார். ஓகே சார்” என்று பள்ளி மாணவியைப் போலத் தலையசைத்து, அவன் சொன்னதை அப்படியே செய்தாள்.
“முதல் நாளே எல்லாத்தையும் கத்துக்க முடியாது மேடம். அதுனால பயப்பட வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமா டெய்லி கத்துக்கலாம். ஓகே? இப்போ வீட்டுக்கு கிளம்புங்க” வெற்றி சொல்ல, அதற்காகக் காத்திருந்ததைக் காட்டிக் கொள்ளாமல், நிதானமாக அனைவரிடமும் விடை பெற்று வெளியில் வந்தாள் வேதா. அங்கே அவளுக்காகக் காத்திருந்த அண்ணனை பார்த்ததும் அவளின் முகமே மலர்ந்து போனது.
“ஹாய் விஜய்ண்ணா” என்றழைத்தாள்.
“என்ன வேதா? அழுதிட்டு வருவனு பார்த்தா அலைப்பறை குறையாம வர்ற? முதல் நாளே உன் மண்டையில் கொட்டி எவனும் வேலை வாங்கலையா?” அவளின் மண்டையில் வலிக்காமல் கொட்டி அவன் கேட்க, “தம்பி, தம்பி. நான்தான் நாலு பேரை வேலை வாங்க வந்திருக்கேன். நான் அசிஸ்டன்ட் மேனேஜர் தம்பி. அது தெரியாம பேசிட்டு இருக்க நீ” என்று அண்ணனின் தோளில் ஓங்கி அடித்துக் கெத்தாகச் சொன்னாள்.
அந்த நிமிடம் பார்த்தா அவன் நினைவு வர வேண்டும்? நினைவு மட்டுமா? அவனுமே வெளியில் வந்து நின்றான், வெற்றி வேந்தன்.
அவளுக்கு அனிச்சையாக அவன் கேட்ட, “எஜுகேஷன் லோன் வேணுமா?” நினைவு வர, “விஜய்ண்ணா, வா போகலாம்” அவசரமாக அண்ணனை கிளப்பினாள்.
“இரு அராத்து” நிதானமாகச் சுற்றுப் புறத்தை பார்வையிட்டு, வண்டியை கிளப்பினான் அவன். காலையை விட மிக மோசமான போக்குவரத்து நெரிசலில் இப்பொழுது சிக்கி அரும்பாக்கத்தில் இருந்த அவளின் சித்தி வீட்டிற்கு வந்து சேர அவர்களுக்கு மீண்டும் ஒன்றரை மணி நேரமாகியிருந்தது. அவளின் மொத்த குடும்பமும் தற்போது அங்குதான் இருந்தார்கள்.
“வா, ஆத்தா. வேலை எப்படி இருந்தது?” வாசலில் அவளுக்காக வழி மேல் விழி வைத்து நின்றிருந்த அப்பத்தா விசாரிக்க, “வேதா, பேங்க் எப்படியிருக்கு? உன் கூட வேலை பார்க்கறவங்க எல்லாம் நல்லவங்க தானே?” என்று தன் பங்கிற்குக் கேட்டார் அய்யனார்.
“என்னத்த சொல்ல? நான் இன்னைக்கு என் தாய் சொல்லைத் தட்டாம, சேலையைக் கட்டிட்டு வேலைக்குப் போய் இருக்கணும்” மெலிதாகப் புலம்பி, அப்பத்தாவை அணைத்துக் கொண்டாள் வேதா.
“மொத நாள்னு வேலை ஒன்னும் கொடுக்கல அப்பத்தா. என்ன வேலை, எப்படிச் செய்யணும்னு சொல்லிக் கொடுத்தாங்க” இருவருக்கும் கேட்கும்படி சத்தமாகச் சொன்னாள்.
“ஆங்..” பெரியவர்கள் ஒன்றாகச் சொல்ல, “ஒன்னும் புரியலை. போகப் போகப் புரியும்னு மேனேஜர் சொல்லி அனுப்பினார்.” என்றாள் தோளை ஏற்றி இறக்கி.
“அதெல்லாம் நீ கப்புனு பிடிச்சுப்ப ஆத்தா, என் அறிவாளி பிள்ளை” அவளின் கன்னம் கிள்ளி அவர் சொல்ல, பளிச்சென்று புன்னகைத்தாள் வேதவர்ஷினி.
“எப்ப டி வேதா வந்த? வேலை ரொம்பவா? உன் முகம் ஏன் இப்படிச் சோர்ந்து போய் இருக்கு? மதியம் சாப்பிட்டியா இல்லையா? நான்தான் சோறு கட்டிக் கொடுத்தனே? சாப்பிடலையா நீ?” கேள்விகளை அடுக்கினார் அவளின் அம்மா ஜெயலட்சுமி.
அவள் பதில் சொல்லும் முன்னே, “ஏன்பா விஜய். தங்கச்சிக்கு ஏதாவது சாப்பிட வாங்கிக் கொடுத்து கூட்டிட்டு வந்திருக்கலாம் இல்ல?” என்று அவர் கேட்க, “இவ எல்லாம் சோறை மறக்குற ஆளா ம்மா?” என்று எதிர்க்கேள்வி கேட்டான் அவன்.
“இந்தாடா அண்ணா. எனக்கு ஃபர்ஸ்ட் டே, அரசு பணி வேற. சோறே இறங்கல. தெரியுமா?” அவள் சோகமாகச் சொல்ல, “சாப்பிடலயா நீ?” மொத்த தாய் குலமும் அதிர்ந்து, அவளை உள்ளே தள்ளிக் கொண்டு போனார்கள்.
“கிவ் மீ ஃபைவ் மினிட்ஸ். முகம், கை, கால் கழுவிட்டு வர்றேன்” என்று அவர்களிடம் இருந்து நழுவி, பத்து நிமிடங்களில் மீண்டும் அப்பத்தா, அம்மா, சித்தி முன்பு வந்து அமர்ந்தாள் வேதவர்ஷினி.
மழைக்குச் சூடாகச் செய்திருந்த மொறுமொறு மசால் வடைக்கு, சோறை பிசைந்து பேத்திக்கு ஊட்டினார் அப்பத்தா. உப்புப் பருப்பு குழம்புக்கு மசால் வடை சுவை சேர்க்க, ரசித்து, ருசித்து உண்டு கொண்டிருந்தாள்.
“என்னம்மா, இப்பதான் வேலை விட்டு வந்தியா?” அப்பாவை பார்த்ததும் உணவின் ருசி சற்று குறைய, அவரின் கண் ஜாடையில் அம்மா ஜெயலட்சுமி பேச தொண்டையைச் செருமவும் அப்புச்சியைப் பார்த்தாள் அவள்.
“என்னப்பா? நீங்களும், உங்க பேத்தியும் மாத்தி மாத்தி பார்த்துக்கிட்டா ஆச்சா? ரெண்டு பேரும் ஒழுங்கா சொன்ன சொல்லை காப்பாத்துங்க” தன் அப்பாவிடம் குரலை உயர்த்தினார் அவளின் அப்பா வானமாமலை.
“எப்பா புள்ள சாப்பிட்டுட்டு இருக்கும் போது என்ன பஞ்சாயத்து ஆரம்பிக்கிற நீ? இரு. அவ சாப்பிட்டு முடிக்கட்டும்” அப்பத்தா, அப்பாவை அதட்ட, “முத்துமாரி இருக்க வரைக்கும் உன்னை யாரும், எதுக்கும் கட்டாயப்படுத்த முடியாது வேதா” மனதில் ஆனந்த தாண்டவமாடி சொல்லிக் கொண்டாள்.
“ம்மா..” என்று வானமாமலை கோபமாக அழைத்து, “பேச்சு மாறாதீங்க மா” என்று கடுப்புடன் சொன்னார்.
“என்னடா, பேச்சு மாறுறாங்க? வந்துட்டான் பேச. இன்னைக்குதான் பிள்ளை வேலைக்குச் சேர்ந்திருக்கு. அதுக்குள்ள தடை போடுற மாதிரி பேசுற? புத்திக் கெட்டவனே” மகனை அதட்டினார் அய்யனார்.
அவரோ நிதானமான அமைதியுடன் மகளைப் பார்க்க, அவரின் பார்வையை மிகக் கவனமாகத் தவிர்த்தாள் வேதவர்ஷினி.
“சரிப்பா. இன்னைக்குப் பேசல. அப்புறம் எப்போ பேசுறது?” வானமாமலை, அப்பாவிடம் கேட்க, அவரோ பேத்தியை பார்த்தார்.
“என்ன பேசணும் உனக்கு?” முத்துமாரி மகனை கேட்க, “ஏயப்பத்தா” என்று அவரின் முந்தானையைப் பிடித்து மெல்ல இழுத்தாள் வேதா.
“என்னை வேலைக்குப் போக விடுங்க. அப்புறம் நீங்க சொல்ற மாதிரி கல்யாணம் பண்ணிக்கிறேன்னு உங்க பேத்தி சொன்னாளா? இல்லையா?”
“சொன்னாதான்”
“அதுக்கு நீங்களும் சப்போர்ட்டு தானே?”
“ஆமா, அதுக்கு என்னடா இப்போ?” மீண்டும் அய்யனார் மகனிடம் எகிற,
“என்னப்பா என்னையவே கேள்வி கேட்டு கத்திட்டு இருக்கீங்க? ஒழுங்கா உங்க பேத்தியை கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்ல வைங்க. அவளைக் காலத்துக்கும் உங்க கூடவே வெச்சு இப்படியே சோறு ஊட்டி விட்டு, செல்லம் கொஞ்சிட்டு இருக்கப் போறீங்களா ரெண்டு பேரும்?” மகளுக்காகப் பெற்றவர்களை அவர் முறைக்க, “ஆத்தி, அப்பத்தா ஆமான்னு சொல்லிடு. அப்பத்தான் அப்பா இன்னும் ஆடுவார்” முத்துமாரியின் காதில் சிரிப்புடன் குறும்பாக முணுமுணுத்தாள் வேதா.
“என்னடா பேசுற? கூறு இல்லாம. அவளுக்குக் கல்யாணம் பண்ணி, அழகு பார்த்து கொஞ்சுவோம் டா நாங்க. உனக்கென்ன பொறாமை. புள்ளை கூடப் போட்டி போடுறான் பார்” மகனை முறைத்த முத்துமாரி, “உனக்கென்ன கோபம் இப்போ? நாங்க யாரும் பேச்சு மாறல. பேத்தி வேலைக்குச் சேர்ந்தாச்சு. உன் சொல்லை நீ காப்பாத்திட்ட. நாங்களும் பேச்சு தவறல சாமி. நீ உன் மகளுக்குக் கல்யாணத்துக்குப் பாரு.” என்று தீர்க்கமாகச் சொல்லி முடிக்க, அவரின் பக்கத்தில் அமர்ந்திருந்த அவரின் மீனாட்சி வேதவர்ஷினி, அவரின் பேச்சைக் கேட்டுக் காளி அவதாரம் எடுத்திருந்தாள்.