விடிவிளக்கு மிச்சம் வைத்திருந்த இருள் அந்த அறைக்கு அதீத கவர்ச்சியைத் தந்திருந்தது. அறையின் தீரைச்சீலைகள் அனைத்தும் மூடப்பட்டு, அதிகாலை வெளிச்சத்தை அறைக்குள் விடாமல் தடை செய்திருக்க, புதுமணத் தம்பதிகள் போல அறையும், அதன் சுவர்களும் மலரின் வாசம் பூசி இருளில் வெட்கி கண் மூடி நின்றது.
தனக்கு மிக நெருக்கமாகத் தலை வைத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மனைவியை, அவளின் உறக்கத்தைக் கலைக்காத வண்ணம் கண்களை மட்டும் திருப்பிப் பார்த்தான் இளமாறன்.
அவன் உதடுகளில் அனிச்சையாய் புன்முறுவல் தோன்றியது.
ரோஜாவின் ஈரக் கூந்தல் தலையணை பாதி, படுக்கை மீதி என விரிந்திருக்க, நெற்றியில் கலைந்த குங்குமம், காதில் காதல் பேசிய குடை ஜிமிக்கி, கழுத்தை உரசிய பசும்மஞ்சள் வாசம் வீசிய தாலி கயிறு, அவன் மார்பில் பதிந்திருந்த மென் கரத்தின் செம்பவழ நிற மருதாணி, ரோஜா முகத்தில் சுக அயர்ச்சி தந்த பொலிவு என உலகின் எந்த ஓவியனாலும் தீட்ட முடியாத அழகுடன் மிளிர்ந்த மனைவியின் கன்னத்தில் மீசை அழுந்த உதடு குவித்து முத்தம் வைத்தான்.
இன்னும் அவனிடம் கூச்சம் விலகாமல், லேசாக இடைவெளி விட்டுப் படுத்திருந்தவள், “ம்ம்..” என்று சிணுங்கி தலையைத் திருப்ப, அவளுக்கு வாகாய் தலைசாய்க்க தன் தோளை கொடுத்தான்.
சின்னதாய் ஆசுவாச பெருமூச்சு. அப்படியே மீண்டும் உறங்கிப் போனாள் ரோஜா.
தன் மார்பில் பதிந்திருந்த அவள் கரத்தில் விரல் கோர்த்துக் கொண்டான். ரோஜா இதழ்கள் போன்ற அந்த மென்மையில் உடலோடு அவன் உள்ளமும் சிலிர்த்தது. இந்த ஸ்பரிசம் அவன் நினைவு தெரிந்து யாரிடமும் உணராதது.
அவனுக்கு உறவாய் வந்து ஒரே நாளில் அவனைச் சூழ்ந்திருந்த தனிமை, வெறுமை அனைத்தையும் ஒட்டு மொத்தமாக மாயமாய் மறைய செய்த மனைவி தந்த இந்த உணர்வு அவனுக்கு நிரம்பப் பிடித்தது.
ஒரு வருடத்திற்கு முன்பு அவன் வாழ்க்கையில் இந்த மாற்றங்கள் எல்லாம் நிகழும் என அவன் கற்பனை கூடச் செய்தது கிடையாது. எட்டு மாதங்களுக்கு முன்பு அவன் இருந்த நிலை அதை விட மோசம். ஆனால், இன்று அத்தனை மாற்றமும் ரோஜா என்ற ஒருத்தியால் நிகழ்ந்தது.
அவளின் அன்பு செய்த மாயம் அது.
ஓர் அன்பை நிராகரிக்கும் அளவு அவன் வளமையானவன் அல்ல. அவள் தந்ததை மறுப்பின்றி வாங்கிக் கொண்டான்.
அவன் மனத்தில் அதுவரை இருந்த அத்தனை வெற்றிடத்தையும் ஒற்றைப் பார்வையில் நிறைத்து உயிர் வரை தீண்டியவளை நெஞ்சம் நெகிழ பார்த்தப்படி கண்களை மூடினான் இளமாறன்.
தினமும் அதிகாலை எழும் வழக்கத்தில் மீண்டும் கண் விழித்தாள் ரோஜா. காலை ஆறரை என்றது சுவர் கடிகாரம். மனது ஆழ்ந்த அமைதியில் இருந்தது. மாறாக உடல் ஓய்விற்குக் கெஞ்சியது, ஏற்கனவே ஐந்து மணிக்கு எழுந்து குளித்திருந்த அவளின் தலை முடி ஈரம் வேறு தொல்லை செய்ய, மெல்ல சோம்பல் முறித்து, சோர்வை உதறி தள்ளிவிட்டு எழுந்து சென்று மீண்டும் குளித்து வந்தாள்.
அவளின் உடைகள் நிரம்பிய பெட்டி அங்கிருக்க மஞ்சளில் சிவப்பு கரையிட்ட ஆரணி பட்டை எடுத்து உடுத்திக் கொண்டு, தலையைச் சீர் செய்து கதவை ஓசையின்றித் திறந்து வெளியில் சென்றாள்.
வீடு நிசப்தத்தில் மூழ்கியிருந்தது. இன்னும் கதவு கூடத் திறக்கப்பட்டிருக்கவில்லை.
“அக்கா, நித்திக்கா…” மெல்ல குரல் கொடுத்தபடி எதிரே இருந்த அறையைப் பார்த்தாள். அது மூடியிருக்க, ஹால், சமையல் அறை என அக்காவை தேடி செல்ல, ம்ஹூம் அமைதிதான் அவளை வரவேற்றது.
ஹாலில் இருந்த கீ ஸ்டாண்டில் தொங்கிக் கொண்டிருந்த சாவிகளை மொத்தமாக எடுத்து வாசற்கதவிற்குப் பொருந்திய சாவி போட்டு அவள் கதவைத் திறக்க, “ஹேய் ரோஸ் குட்டி, என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்ட?” துளி பதட்டமும், ஆச்சரியமும் தொனிக்கக் கேட்டபடி அங்கு வந்தாள் நித்யா.
“நீ தானே சீக்கிரம் எழுந்து குளிச்சு வா, காலையில பெரியவங்க வருவாங்கன்னு சொல்லி அனுப்பின கா?” என்ற தங்கையின் முகத்தை வாஞ்சையுடன் பார்த்தாள் நித்யா.
“நான் சொன்னேன்தான். அதுக்குன்னு? இவ்வளவு சீக்கிரமாவா எழுந்து வருவ? இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கியிருக்கலாம் இல்ல?” நித்யா கேட்டபடி தங்கையின் கைப் பிடித்துக் கொண்டாள்.
“ம்ம். போ நித்திக்கா, மாத்தி மாத்தி பேசுற நீ” சலித்த தங்கையை அங்கிருந்த சோஃபாவில் அமர செய்தாள் நித்யா.
“எனக்கு அஞ்சு நிமிஷம் டைம் கொடு. அக்கா வந்துடுறேன்” என்றவள், வெளியில் சென்றாள்.
ரோஜா சோஃபாவில் தலை சாய்த்துக் காலத்தை விட வேகமாகச் சுழலும் காற்றாடியை பார்த்துக் கொண்டிருக்க அவளின் இமைகள் அப்படியே மூடிக் கொண்டது.
“ரோஜா.. ரோஜா..” அவளின் கன்னத்தில் தட்டி எழுப்பி விட்டாள் நித்யா.
“நான் வாசல் தெளிச்சுக் கோலம் போட்டேன். பால் அடுப்புல வச்சுருக்கேன். வா, காஃபி கலந்து தர்றேன்.” என்ற அக்காவை மௌனமாய்ப் பின் தொடர்ந்தாள் ரோஜா.
“பால், கோலப் பொடி எல்லாம் உங்கத்தை ஏற்பாடு” நித்யா பேசிக் கொண்டே நடந்தாள்.
ரோஜா, “ஒரு நிமிஷம் கா, முகம் கழுவிட்டு, என் மொபைல் எடுத்துட்டு வர்றேன்” என்று நித்யா உறங்கிய அறையின் முன்னின்று சொல்லியபடி, கதவில் கை வைக்க, “ஏய் ரோஸ் குட்டி.” பதறி தங்கையின் கைப் பிடித்துத் தடுத்தாள் நித்யா.
“முகம் தானே இங்க வந்து கழுவு. உன் மொபைல் நான் எடுத்துட்டு வந்து தர்றேன்” என்ற நித்யா, அவளைச் சமையல் அறைக்குள் இழுத்துச் சென்றாள்.
அங்கிருந்த குழாயில் முகம் கழுவி ரோஜா நிமிர, “டி.. நித்தி, அங்க குப்பை தொட்டி இருக்கா? இந்தப் பூவை அதுல போடவா?” எனக் கேட்டபடி அங்கு வந்தான் சசிகுமார்.
அவன் கையில் இருந்த துண்டுத் துணியில் வாடிய ரோஜா இதழ்களைக் கண்ட ரோஜாவின் கண்களில் அதிர்ச்சி, கூடவே இதழில் நமுட்டுச் சிரிப்பு உதிக்க, சட்டெனத் திரும்பி அவனுக்கு முதுகு காட்டி நின்றாள் அவள்.
“அதை இங்க என்கிட்ட கொடுத்துட்டு போய் உங்க வேலையைப் பாருங்க” அடக்கப்பட்ட கோபத்துடன் நித்யா சொல்ல, ரோஜா அசையாமல் நின்றாள்.
“குட் மார்னிங் ரோஜா” சசிகுமார் சொல்ல, “குட் மார்னிங் மாமா” என்ற ரோஜா, மிகச் சிரத்தையுடன் எட்டி காஃபி கோப்பைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
“நீங்க போய் ரெடியாகுங்க” என்று கணவனை விரட்டி விட்டாள் நித்யா.
“அச்சோ.. இவரோட…” என்று முணுமுணுத்த நித்யாவின் கையில் இருந்த பூக்கள் பதட்டத்தில் சிதறப் போக, ஓரக் கண்ணால் அதைப் பார்த்த ரோஜா சிரிப்பில் சிதறினாள்.
“ப்ச், சிரிக்காத ரோஜா” நித்யாவின் செல்ல அலுப்பில் வெட்கம் கொட்டிக் கிடந்தது.
“நான் சிரிக்கல கா” என்ற ரோஜாவின் குரலே கேலி பேச, தங்கையின் தோளில் அடித்தாள் நித்யா.
“நேத்து எனக்குத் தானே கல்யாணம் ஆச்சு?” என்ற அவளின் சந்தேகக் கேள்வியில் நித்யா சத்தமாகச் சிரித்து விட்டாள்.
பூக்களை அங்கிருந்த குப்பை கூடையில் கொட்டிக் கைக் கழுவி திரும்பிய நித்யா தங்கையின் சிரிப்பை பார்த்து, “அழகா இருக்க ரோஸ் குட்டி” என்றபடி தங்கையின் கன்னம் கிள்ளி முத்தம் கொடுத்தாள்.
பால் கொதித்திருக்க இருவருக்கும் காஃபி கலந்தாள் நித்யா. ரோஜா காஃபி குடித்து, கணவனுக்குப் பால் வாடை இல்லாமல் டிக்காஷன் தூக்கலாகச் சேர்த்து காஃபி கலந்து எடுத்து அறைக்குச் சென்றாள்.
காஃபியை அங்கிருந்த மேஜையில் வைத்து விட்டு, கலைந்திருந்த அறையை ஒதுக்கினாள். தரை உடுத்தியிருந்த அவர்களின் உடைகளை எடுத்து ஓரமாக மடித்து வைத்தாள். அதன் பின் திரைச்சீலைகளை மட்டும் விலக்கி விட்டு கணவனை எழுப்பினாள்.
ரோஜா படுக்கையில் அமர்ந்து, “இளா..” என்று அவன் தோளை தொட்டாள். அவனிடம் அசைவேயில்லை.
“இளா, எழுந்திருங்க.” சத்தம் கூட்டினாள்.
“இளா..” அவன் முன்னுச்சி முடியில் விரல் நுழைத்து இழுத்தாள்.
“ரோ…ஜா…” என்று செல்ல அலுப்புடன் உச்சரித்த உறக்கம் நிறைந்த அவன் குரலில் அலாதி கவர்ச்சியிருந்தது.
“தூங்க விடுடி. நைட் எல்லாம் இப்படிதான் பண்ண.. இளா.. இளான்னு.. என் தலைமுடியை பிச்சு…”
“அச்சோ..” வேகமாக அவன் வாயை வளைக்கரம் கொண்டு மூடினாள்.
கண்களைச் சிரமப்பட்டுப் பாதித் திறந்து அவளைப் பார்த்து குறும்பாய் கண் சிமிட்டினான் இளமாறன்.
அவன் உதட்டை அழுத்தமாக மூடியிருந்த அவள் உள்ளங்கையில் ஈரமாய் முத்தம் பதித்தான். சிலிர்த்து கையை அவள் விலக்க, கை உயர்த்தி அவளை நெருக்கமாக இழுத்தான்.
“எனக்குச் சத்தியமா தூக்கமா வருது டி. என் முன்னாடி இப்படி மோகினி மாதிரி வந்து உட்கார்ந்து டெம்ப்ட் பண்ணாத” ஒவ்வொரு வார்த்தைக்கும் முகமெங்கும் முத்தம் வைத்தான்.
“இளா, நானும்தான் தூங்கல” என்று புகார் படித்தவளின் கரத்தை கள்ளச் சிரிப்புடன் கோர்த்து, “அப்ப வா, தூங்கலாம்” என்று தன் மேல் மொத்தமாகச் சாய்த்தான்.
ஒரு நொடி கண் மூடி அவன் இதயத் துடிப்பை உணர முயன்றவள், அவள் இடையில் அவன் கரத்தின் அழுத்தம் உணர்ந்து, மெல்ல முகம் நிமிர்த்தி, “நீங்க தூங்குங்க இளா. என்னை அக்கா வரச் சொன்னா” என்றாள்.
“கண்டிப்பா போகணுமா ரோஜா?” இரண்டு கைகளும் சேர்த்து வைத்து அவள் முகத்தை ஏந்தினான்.
“ம்ம்” என்றவள், அவன் நெற்றியில் இதழொற்ற, கண் மூடி அந்தக் கணத்தை லயித்து அனுபவித்தான் இளமாறன்.
“தூங்குங்க” என்றபடி எழுந்தவளின் முந்தானை அவனை மெல்ல தழுவி விலக, வெளியே செல்லும் மனைவியைப் பார்த்தபடியே கண் மூடினான் அவன்.