இருளை விழுங்கிக் கொண்டிருந்த இரவின் ஏகாந்தத்தைப் பால்கனி கம்பியில் சாய்ந்து நின்று ரசித்துக் கொண்டிருந்தாள் ரோஜா. தென்றல் அவளைத் தீண்டி உடல் சிலிர்க்க வைக்க, அவள் காதில் காதல் பேசிக் கொண்டிருந்தான் இளமாறன்.
“ரோஜா, நான் அங்க வரவா? இல்லனா, நீ இங்க வாயேன். இடையில ஒரு கதவு தானே?” அவள் காதில் பொருத்தியிருந்த காதொலிப்பானில் ஹஸ்கி குரலில் கோரிக்கை வைத்தான்.
“இ…ளா..”
“என்னடி அதட்டுற? நாளைக்கு இதெல்லாம் செல்லாது. தெரியுமில்ல?” உல்லாசமாகச் சீண்டினான்.
“ம்ஹூம். அப்டியா?” நக்கல் தொனிக்கக் கேட்டாள்.
“கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு திருட்டுக் கிஸ் கூட அடிக்கல நான். நாளைக்கு நம்ம பயோ பிக்சர் வரும் போது ஒரு கிளுகிளுப்பே இருக்காது டி. நீ கொஞ்சம் கருணை காட்டியிருக்கலாம். ம்ம்.. எங்க…” தாபமும், ஏமாற்றமும் கலந்து ஒலித்தது அவன் குரல்.
“இளா..” குரலில் வழிந்த வெட்கத்தை மறைக்க முயன்று தோற்றாள் ரோஜா.
“இளா சொல்றியா, இல்லனு சொல்றியா புரியல எனக்கு. சரியா சொல்லு டி” புலம்பினான். கிளுக்கிச் சிரித்தாள் ரோஜா.
“ம்ம். சிரி, சிரி..” என்றவனின் குரலும் சிரித்தது.
“ரோஜா..” பூஜை வேளை கரடியாக உள்ளே வந்தாள் நித்யா.
“இங்க வா” எனத் தங்கையின் கையைப் பிடித்து அறைக்குள் இழுத்தாள்.
“நீ என்ன பண்ணி வச்சிருக்க? அங்க அப்பா கத்திட்டு இருக்கார் ரோஸ் குட்டி” நித்யா இடுப்பில் கை வைத்து முறைத்தபடி கேட்க, “எனக்குக் கத்தார் ஏர்வேஸ்ல வேலை காத்துட்டு இருக்குனு இவர்கிட்ட சொல்லிட்டு இருந்தேன் கா. அதை அம்மா கேட்டுட்டாங்க, என்னை ஒன்னும் சொல்லாம முறைச்சுட்டு போய் அப்பாவை அடிச்சுட்டு இருக்காங்க போல..” ஊதா நிற பட்டுச் சேலையில் மணப்பெண்ணின் களையோடு, இரண்டு கைகளிலும் மருதாணி வரைந்திருக்க, கையை விளையாட்டாய் காற்றில் வீசி பதில் சொல்லிய தங்கையை ரசித்தபடி முறைத்தாள் நித்யா.
“இது ரெண்டு வாரம் பழைய செய்தி தானே? அதை எதுக்கு இப்போ சொன்ன?” நித்யா கேட்க, “இன்னைக்குச் செஃப்கிட்ட ஒப்பீனியன் கேட்டுட்டு இருந்தேன். வேலைக்குப் போகவா வேண்டாமான்னு அதை அம்மா கேட்டு…” கண் சிமிட்டி அவள் சொல்லி முடிக்கும் முன்பே, “உனக்கு இருக்கு பாரு கொழுப்பு” என்று அலுத்துக் கொண்டு தங்கையின் தலையில் வலிக்காமல் கொட்டினாள் நித்யா.
“ஆஆஆ..” ரோஜா கத்த, அவள் காதில், “ஓய், என் பொண்டாட்டி மேல கை வைக்கிற வேலையெல்லாம் இருக்கக் கூடாதுன்னு உங்க அக்காகிட்ட சொல்லி வை” என்று அவள் காதில் கத்தினான் இளமாறன்.
ரோஜா சிரித்துக் கொண்டே, “அப்பாம்மாவை போய்ச் சமாதானம் பண்ணுவோமா?” என்று கேட்க, தங்கையை இழுத்துக் கொண்டு போய் அப்பா, அம்மா இருந்த அறையைக் காட்டினாள் நித்யா.
அவர்கள் இருவரும் காரசார விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
“நான் வேலைக்குப் போகலன்னு சொல்லிடு கா”
“அவங்களுக்குத் தெரியும் தானே. ஆனாலும், நான் இப்போ சொல்லிட்டேன் ரோஜா. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இன்டர்வியூ அட்டென்ட் பண்ண, இப்போ ஆஃபர் லெட்டர் வந்திருக்கு. ஆனா, வேலைக்குப் போகல. எல்லாம் சொல்லியாச்சு. அவங்களுக்குச் சும்மா சண்டை போட ஒரு காரணம் வேணும். அவ்ளோதான்” என்று நித்யா சொல்ல, சிரித்துக் கொண்டே பெற்றோரைப் பார்த்தாள் ரோஜா. இப்போது அப்பா ஏதோ சொல்ல அம்மா சிரித்துக் கொண்டிருந்தார்.
சிவஹரி – சித்ரா எப்போதும் இப்படித்தான். அவர்கள் மாறினாலும் அது நன்றாக இருக்காது என்று தோன்ற சிரித்தபடி திரும்பி அக்காவை பார்த்தாள் ரோஜா. பெற்றோரை பார்த்து நித்யாவும் சிரித்துக் கொண்டிருந்தாள்.
இருவரும் சென்று பெற்றோரிடம் பேசி, சூழ்நிலையை விளக்கி விட்டு அவர்களுக்கு ஒதுக்கியிருந்த அறைக்கு வந்தனர்.
சில மாதங்கள் முன்பு வேலைக்குச் செல்வதென்பது ரோஜாவின் கனவாக இருந்தது. ஆனால், அந்தக் கனவை தன் காதலால் திருடிக் கொண்டான் இளமாறன்.
இப்போது வேலை கனவை மீறி, வாழ்க்கையின் மீது அவளின் கனவு மிகுந்திருந்தது. இளமாறனுடனான வாழ்க்கையின் மீதான காதலுக்கு முன் மற்ற கனவுகள் பெரிதாகத் தோன்றவில்லை.
ஆனாலும், அவனைச் சீண்டவே வேலையைப் பற்றி அடிக்கடி பேசினாள்.
அவனோ, “உன் இஷ்டம் ரோஜா. நான் உன்னை எதுக்கும் தடுக்கப் போறதில்லை” என்று ஒற்றை வரியில் முடித்து விட்டான். ரோஜாவும் திருமணத்திற்குப் பிறகு அப்பாவின் கேன்டீனை பார்க்கப் போவதாகச் சொல்லி விட்டாள்.
அவளுக்கு வேலை கிடைத்தது, அதை வேண்டாம் என்ற அவளின் முடிவு என அனைத்தும் அவளின் பெற்றோருக்கும் தெரியும். ஆனால், நாளை திருமணம் எனும் நிலையில் இதைப் பற்றிப் பேசவும்தான் சித்ரா கோபப்பட்டுட்டிருக்கிறார் என்பது அவளுக்குப் புரிந்தது.
இப்போது அவள் விளக்கம் தந்ததும் அவர்களின் முகம் தெளிந்தது.
“தூங்கு ரோஜா.” நித்யா சொல்ல, அலைபேசியை ஓரமாக வைத்து விட்டுக் கண்களை மூடினாள் ரோஜா.
நாளை விடிந்தால் இளமாறன், ரோஜாவிற்குத் திருமணம். சென்னை அடையாரின் புகழ் பெற்ற திருமண மண்டபம் அது.
இரண்டு குடும்பங்களும் அவர்களின் நெருங்கிய உறவுகளும் அன்று மாலையே மண்டபத்திற்கு வந்திருந்தனர்.
சடங்கு, சம்பிரதாயங்கள் முடித்து, இரவு உணவருந்தி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு உறங்கச் சென்றனர்.
மறுநாள் அதிகாலை சுபவேளையில் பெற்றோர், உற்றார் சூழ அக்னி சாட்சியாக மூன்று முடிச்சுட்டு ரோஜாவை தன் மனைவியாக்கி கொண்டான் இளமாறன்.
சென்னையின் பிரபலமான சுகந்தி மருத்துவமனையின் மூத்த வாரிசான இளமாறன் திருமணம் என்பதால் திருமண மண்டபம் முக்கிய விருந்தினர்களால் நிறைந்திருந்தது.
ரோஜா குடும்பத்து உறவுகள், நித்யா மாமியார் வழி உறவுகள், இளமாறனின் தனிப்பட்ட நண்பர்கள், தொழில் முறை நண்பர்கள் என அத்தனை கூட்டம் அலைமோதியது.
மருத்துவர் சுகந்தி குடும்பத்தில் மகளைக் கொடுக்கிறோம் என்ற பிரம்மிப்பு சிவஹரிக்கு வந்திருந்த கூட்டத்தைப் பார்த்ததும் இன்னும் அதிகரித்தது.
சுகந்தி மருத்துவமனை ஊழியர்கள், சிவஹரியின் கேன்டீன் ஊழியர்களுக்குச் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
சிறு சிறு குழுக்களாக நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த பேருந்துகளில் திருமண மண்டபம் வந்து சென்றார்கள் ஊழியர்கள்.
கஸ்தூரி, சுவாமிநாதன் இருவரும் எங்கும் நகராமல் மணமக்கள் உடனே இருந்தனர்.
ரோஜா, இளமாறன் தனியாக ரகசிய சீண்டல்கள் எதுவும் பேசிக் கொள்ள அவர்களுக்கு நேரமே அமையவில்லை. வந்திருந்த விருந்தினர்களுக்குப் புன்னகைத்துப் பதில் சொல்லவே அவர்களுக்கு நேரம் சரியாக இருந்தது.
காலையில் திருமணம் முடிந்து, அதைத் தொடர்ந்து அப்படியே வரவேற்பு நிகழ்ச்சி தொடர்ந்தது.
சுகந்தி, சங்கரன் தம்பதிக்கும், சிவஹரி, சித்ரா தம்பதிக்கும் வந்திருந்த உறவினர்களைக் கவனிக்கவே நேரம் போதவில்லை.
ஆனாலும், அவ்வப்போது மணமக்களையும் வந்து பார்த்துக் கொண்டார்கள் அவர்கள்.
வெண்பா, வினோத், நித்யா, சசிகுமார் என இளையவர்களும் மணமேடையைச் சுற்றியபடியே இருந்தனர்.
இன்று இத்தனை பாசமாக இருக்கும் உறவுகள், அன்று இளமாறனை அநாதரவாக விட்டது ஏன் என்று ரோஜாவுக்குப் புரியவே இல்லை. அதைப் பற்றி யோசிக்க இது நேரமில்லை என்று மூளையின் ஒரு மூலைக்குக் கவலையைத் தள்ளி விட்டு, கணவனைத் திரும்பிப் பார்த்தாள் ரோஜா. இனி கணவன்தான் இல்லையா?
கண்களால் அவளைக் களவாடிக் கொண்டிருந்தான் அவன்.
இளஞ்சிவப்பில் பொன்னிற பட்டுக் கரை வைத்த காஞ்சிப்பட்டில் பொன்னாய் மின்னிய பெண்ணை அடிக்கடி கண்களால் தொட்டுக் கொண்டேயிருந்தான் இளமாறன்.
காதில் பெரிதாய் குடை ஜிமிக்கிகள், கழுத்தில் வரிசையாய் நெக்லஸ், ஆரம், காசு மாலை அதன் மேலே மஞ்சளின் ஈரம் காயாத நீளக் கயிற்றில் நெஞ்சில் தவழ்ந்த திருமாங்கல்யம் என ஒற்றைப் பார்வையில் மொத்தமாய் அவனை ஈர்த்தாள் மனைவி.
ரோஜா கழுத்தில் இருந்த ரோஜா மாலையைச் சரி செய்ய, அந்த மாலை மறைவில் தன் ரோஜாவின் கைப் பிடித்து மென்மையாய் அழுத்தினான்.
“ஒரு அஞ்சு நிமிஷம் உட்காரு” அவன் சொல்ல, “வேணாம். ஆளுங்க வந்துட்டே இருக்காங்க” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ரகுவரன் குடும்பம் மேலேறி வந்தது.
பெரியவர் வைத்தியலிங்கம் முன்னே வர அவரோடு மொத்த குடும்பமும் மேடையேறி, மணமக்களை வாழ்த்தி, ஆசீர்வதித்து, பரிசு வழங்கி, புகைப்படம் எடுத்துக் கொண்டு கீழிறங்கினார்கள்.
ரோஜாவை திரும்பி திரும்பிப் பார்த்தபடி நடந்த ரகுவரனை பிடித்து நிறுத்தினாள் நித்யா.
“என்ன ரகு? உன்னோட உடைஞ்சு போன மனசு எப்படியிருக்கு இப்போ?” கிண்டலாக அவள் கேட்க, “மனசாட்சி இல்லாம கேள்வி கேட்காத நித்யா” சோகமாகப் பதில் சொன்னான். அவனது நடிப்பில் நித்யாவிற்குச் சிரிப்பு வந்தது.
“நான் கல்யாணம் பண்ணிக்கப் பொண்ணு கேட்டா, அந்தப் பொண்ணோட கல்யாணத்துல கேட்டரிங் ஆர்டர் கொடுக்கறீங்க. மனுஷங்களா நீங்க எல்லாம்?” பொய்யான கோபத்துடன் அவன் கேட்க, சத்தமாகச் சிரித்து விட்டாள் நித்யா.
இப்போது ரகுவரன் முகத்திலும் புன்னகை துளிர்த்தது.
“நான் பொய் சொல்ல விரும்பல நித்யா. அந்த இளமாறனை பார்க்க கொஞ்சம் பொறாமையாதான் இருக்கு. முதல் பார்வையில் ரோஜா அவனுக்காகத் தவிச்சது. அதுவும் அவன் யாருன்னு கூடத் தெரியாம. இப்பவும் அவனைப் பார்க்கிற பார்வை. அவங்க காதலை பார்க்கும் போது பொறாமையா இருக்கு. ம்ம், ரோஜா எனக்கில்லை. அவ்ளோதான்.” அவன் வார்த்தையில் இருந்த உணர்வும் வருத்தமும் அவன் குரலில் இல்லை.
“என்ன ரகு இப்படி ஃபீல் பண்ற?”
“சாரி. என்னையும் அறியாம சொல்லிட்டேன். அதை விடு. எனக்கு வீட்ல பொண்ணு பார்க்கிறாங்க. இதுவரை பிடிக்கல, வேணாம் சொல்லிட்டு இருந்தேன். இனி செட்டிலாகிடுவேன். ரோஜா கிடைக்கலைன்னா என்ன, எனக்காக ஒரு முல்லையோ, குறிஞ்சியோ கிடைக்காமயா போய்டுவா. அப்போ இருக்கு உங்களுக்கு” என்று அவன் சொல்ல, “அடுத்து உன் கல்யாணத்தில் மீட் பண்ணுவோம். உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லாதான் நடக்கும்” என்றாள் நித்யா.
“ரகு, சாப்பாடு நேரம் ஆச்சு. அங்க ஆள் இல்ல. நீ போய்ப் பாரு” அவன் அப்பா சுதாகர் வந்து சொல்ல, “இதோ போறேன்ப்பா” என்றவன், நித்யாவிடம் திரும்பி, “ஆனாலும், இது ரொம்ப ஓவர்” என்று விளையாட்டாகப் புலம்பி விட்டே சென்றான்.
அவன் புலம்பியதற்கு மாறாக உணவுக்கான ஏற்பாட்டை முன் தின இரவில் இருந்து சிறப்பாகவே செய்து கொண்டிருக்கிறான்.
ஆம், ஒரு ஐந்து நட்சத்திர விடுதியின் முதன்மை சமையல் கலைஞரான இளமாறனின் திருமண விருந்தை, அமிர்தா பவன் வழங்கியது. அது ரோஜாவிற்காக.
அவர்களின் நிச்சயதார்த்த விழாவிற்கு வந்த போதே திருமண விருந்திற்கான பொறுப்புகள் அனைத்தும் தங்களது என்று சொல்லி விட்டார் பெரியவர் வைத்தியலிங்கம்.
ரோஜா தங்கள் வீட்டிற்கு மருமகளாக வரவில்லை என்றாலும், அவள் என்றுமே தங்கள் குடும்பத்தில் ஒருத்திதான். சிவஹரி பெண்ணிற்கு அவர் செய்யாமல் யார் செய்வார் என்று அவர்கள் மறுத்து பேச இடம் தராமல் தன் முடிவை முன் வைத்தார் அவர்.
நித்யாவின் திருமணத்தின் போதும் இதேதான் நடந்தது. பெரியவர் முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்ததோடு மட்டுமில்லாமல் உணவிற்கான பொறுப்பையும் அன்புடன் ஏற்றுக் கொண்டார். அதனால் இப்போது அதை மறுப்பது சிவஹரிக்குக் கடினமாக இருந்தது.
மேலும் சுகந்தி குடும்பத்தினர் என்ன சொல்வார்களோ? அவர்களின் எதிர்பார்ப்பு என்னவோ என்று கவலை வேறு அவருக்கு. மாப்பிள்ளை இளமாறன் தலைச் சிறந்த சமையல் கலைஞன் என்னும் போது அந்தக் கவலை இன்னும் அதிகரித்தது.
ஆனால், வைத்தியலிங்கம் நிச்சயத்தின் போதே அனைவரின் முன்பும் தன் முடிவை கோரிக்கையாக வைத்து அவர்களைச் சம்மதிக்க வைத்திருந்தார்.
திருமண விருந்து குறித்த அவர்களின் எதிர்பார்ப்பு, விருப்பங்களை அவர் கேட்டறிய, பாரம்பரிய தமிழ் உணவு வேண்டும் என்றார்கள் சுகந்தி குடும்பத்தினர்.
இளமாறன் எளிமையாக வேண்டும் என்றான். அவ்வளவுதான்.
அவனுக்குத் தற்போதைய உணவு டிரெண்ட் அலர்ஜியை கொடுத்திருந்தது.