முதலில் மகள்களைப் பார்த்த சிவஹரி, “அப்பா கேன்டீன் போக நேரமாச்சு. அதான் சாப்பிட உட்கார்ந்துட்டேன். நீங்களும் உட்காருங்க” என்று அழைத்தார்.
அவருக்கு எதிரே அமர்ந்திருந்த அம்மாவிடம் சென்று ஆளுக்கொரு பக்கமாக அமர்ந்து கொண்டார்கள் சகோதரிகள்.
அவ்வளவு நேரமும் வீட்டில் பணிபுரியும் அம்மாவுடன் தோட்டத்தில் சுற்றிக் கொண்டிருந்த மித்ரன், “நானும், நானும்” என்று கத்தியபடி ஓடி வந்தான்.
சிவஹரி பேரனை இழுத்து தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டார். அவர் பேரனுக்கு உணவை ஊட்ட, மகள்கள் இருவரும் அம்மாவை பார்த்தனர்.
“உங்களுக்கு எல்லாம் என்னாச்சுன்னு எனக்குத் தெரியல” சிரிப்புடன் அலுத்துக் கொண்டவரின் குரலில் சலிப்பேயில்லை. மாறாகச் சந்தோஷம் மிகுந்திருந்தது.
சோறை பிசைந்து மகள்களுக்கு ஊட்டியபடி கணவரிடம் கல்யாண ஏற்பாடுகள் குறித்து விசாரித்து, முடிக்கப்படாத வேலைகள் நினைவுபடுத்தி, குறிப்புகள் தந்து கொண்டிருந்தார் சித்ரா. மனைவியின் பேச்சை அமைதியாய் ஆமோதித்துக் கொண்டிருந்தார் சிவஹரி.
ரோஜாவின் திருமணப் பேச்சு முடிவான தினத்தில் இருந்து அவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். பெற்றோரின் இணக்கத்தைப் பார்த்துப் பிள்ளைகள் நிம்மதியும், சந்தோஷமும் அடைந்தனர்.
அதிலும் சித்ரா ஆளே மாறிப் போய் இருந்தார். அவரை அவ்வளவு மகிழ்ச்சியாகப் பார்ப்பதில் பிள்ளைகளுக்கு அலாதி ஆனந்தம்.
சிவஹரி பயந்ததற்கு நேர்மாறாக, இளமாறனின் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டி என இரண்டு குடும்பங்களும் ரோஜாவை அன்பால் தாங்கினார்கள்.
அவளுக்கு நிச்சயத்தின் போதே இரு வீட்டுப் பெரியவர்களும் அவளுக்கு நகை பரிசளித்தனர். அத்தோடு நிற்கவில்லை அவர்கள்.
கஸ்தூரி பாட்டி ரோஜாவை வீட்டிற்கு அழைக்க, இளமாறனுடன் சென்றாள் அவள்.
ஏற்கனவே இளமாறன் குடும்பமும் அங்கிருந்தது. கஸ்தூரி தனது நகை, பட்டுப் புடவைகளில் ஒரு பகுதியை பேரனுக்கு மனைவியாகப் போகிறவள் என்று அவளுக்குப் பரிசளிக்க, ரோஜா தயக்கத்துடன் மாறனை பார்த்தாள்.
“என் பேரன் பொண்டாட்டிக்குன்னு பார்த்து பார்த்து இவ சேர்த்து வச்சதும்மா ரோஜா. இதுக்குச் சொந்தக்காரி நீதான். வாங்கிக்கோ” சுவாமிநாதன் சொல்ல, அப்போதும் அவளிடம் தயக்கம் மட்டுமே.
கஸ்தூரி அவளை நெருங்கி, ஒவ்வொரு நகையாக அணிவித்து விட்டு அழகு பார்க்க, அவளால் தடுக்க முடியவில்லை.
“என் கண்ணே பட்டுடும் போல. ராஜாத்தி மாதிரி இருக்க” அவளின் கன்னம் வழித்து நெட்டி முறித்தார் கஸ்தூரி.
“பாட்டி…” ரோஜா கனமான தங்க வளையலை கையில் இருந்து கழற்றப் போக, அவளின் கைப் பிடித்துத் தடுத்தார் சுகந்தி. திடீரென்று தனக்கு அருகில் வந்து நின்றவரை விழி உயர்த்திப் பார்த்தாள் ரோஜா.
“பெரியவங்க அன்பா குடுக்கிற அன்பளிப்பை வேணாம்னு சொல்லக் கூடாது ரோஜா” என்றார் அவரும்.
அத்தனை பேரும் அவளுக்குப் பதில் சொல்ல, அவள் எதிர்பார்த்தது மாறனின் பதிலை மட்டுமே. அவனோ அவளை அமைதியாய் விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
மாந்தளிர் பச்சையில் குங்கும சிவப்பு கரையிட்ட மென்பட்டு சேலை அணிந்து, காதில் குடை ஜிமிக்கிகள் அசைந்தாட, கழுத்து நகையை மோதி மோதி உரசிக் கொண்டிருந்த மல்லிகை சரம் சூடி, அமர்ந்திருந்த ரோஜாவை விழிகளால் வருடி ரசித்த மாறனின் கண்களில் ரசனையையும் மீறி மெலிதான பொறாமை தீ. அது அவளின் மென் கழுத்தில் உரசிக் கொண்டிருந்த மல்லிகையைப் பார்த்து எழுந்தது. மனதிற்குள் உதித்த பெருமூச்சை அப்படியே உள்ளே தள்ளினான் அவன்.
“ஏன் பாட்டி, அப்போ எனக்கு ஒன்னுமில்லையா?” என்று கோபமாகக் கேட்டாள் வெண்பா.
“வெண்பா உனக்கு ஹாஸ்பிடலுக்கு நேரமாச்சு இல்ல? கிளம்பு நீ” என்று அவளை விரட்டினார் சுகந்தி.
“இதோ கிளம்பிட்டேன் மா” என்றவள், “என் மேல உங்களுக்குப் பாசமே இல்ல பாட்டி” என்க, “ஆமா போ. அது உனக்கு இன்னைக்குத்தான் தெரியுதா?” என்று பேத்திக்கு ஈடு கொடுத்து பேசினார் கஸ்தூரி.
“இதெல்லாம் என் காலத்து நகை. உனக்குப் பிடிக்காது. ரோஜா வச்சுக்கட்டும். உனக்கு நான் புதுசு வாங்கித் தரேன்” பேத்தியை அவர் சரி கட்ட பார்க்க, அவரை முறைத்தாள் வெண்பா. அப்படியே திரும்பி ரோஜாவை பார்த்து அவள் கண்ணடிக்க, சிரித்தாள் ரோஜா.
“இங்க வந்து பாரு. இங்க இருக்கறது எல்லாம் உனக்குத்தான்” கஸ்தூரி அங்கிருந்த பீரோவை திறந்து வெண்பாவிற்குக் காட்ட, உதடு பிதுக்கி, “ம்ஹூம். நல்லாயில்ல. ரோஜா அண்ணிக்கு நீங்க கொடுக்கிறதுதான் ரொம்ப அழகாருக்கு” என்றாள் வீம்பாக.
“அது எனக்கு உங்க தாத்தா ஆசையா வாங்கித் தந்தது. நான் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வச்சது. அதெல்லாம் மாறன் பொண்டாட்டிக்குதான். வேற யாருக்கும் கிடையாது. போ. நீ கல்யாணம் பண்ணும் போது உனக்குப் புதுசா வாங்கித் தர்றேன்”
“ஓ அப்படியா? அப்போ நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன். எனக்குத் தெரியும். உங்களுக்கு மாறாண்ணாவைதான் ரொம்பப் பிடிக்கும்னு” கண்ணைக் கசக்குவது போல அவள் நடிக்க, “வெண்பா” என்று அதட்டினார் சுகந்தி.
“நான் ஹாஸ்பிடல் போகணும். அதானே மா? இதோ போறேன்ம்மா” என்றவள் ரோஜாவிடம் திரும்பி, “அழகாருக்கீங்க. கஸ்தூரி பாட்டி கெஞ்சிக் கேட்டாலும் நகையைத் திருப்பிக் கொடுக்காதீங்க அண்ணி” என்று விட்டு, “பாட்டி உன் கூட நான் பேச மாட்டேன்” என்று கத்தி விட்டுப் போனாள்.
அப்பா, தங்கை முதலிலும், அவர்களைத் தொடர்ந்து அம்மா, தம்பியும் தங்களின் பணிக்காக மருத்துவமனை செல்ல, ரோஜாவும் கிளம்பத் தயாரானாள்.
“இரும்மா நாங்களும் வர்றோம்” என்றார் சுவாமிநாதன்.
“சரிங்க தாத்தா” அவள் சொல்ல, அவள் கழற்றி தந்த நகைகளை நகைப் பெட்டியில் வைத்துக் கையில் எடுத்துக் கொண்டார் கஸ்தூரி.
“ரோஜா” என்றழைத்த மாறன், “பிளீஸ், வாங்கிக்கோ” என்றான். அதற்கு மேல் அவளுக்கும் மறுக்கத் தோன்றவில்லை. ஆனாலும், அவள் தயக்கம் புரிந்த பெரியவர்கள் அவளோடு வீடு சென்று சித்ராவின் கையில் நகையைக் கொடுத்தனர். அவரும் முதலில் மறுத்து, பின் கணவர் சரியென்று சொல்லவும் வாங்கிக் கொண்டார்.
பெரியவர்கள் மும்முரமாகக் கல்யாண வேலைகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். நித்யா தங்கைக்குக் கண் சாடை காண்பிக்க, மாறனை அழைத்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்றாள் அவள்.
அங்கிருந்த பூச்செடியில் இருந்து சிவப்பு ரோஜாவை பறித்து அவளிடம் நீட்டினான் அவன்.
அதை வாங்காமல், “அது எங்க ரோஸ். அதை எனக்கே கொடுக்கறீங்க?” என்றாள் ரோஜா.
அகண்ட மாமரத்தின் மேல் சாய்ந்து நின்று, “ம்ம். நீயே என் ரோஸ்தான்” என்று குறுநகையுடன் சொன்னவன், அவளை இழுத்து அவள் கையில் ரோஜாவை திணித்தான். இடக் கரத்தால் அவள் இடை வளைத்து, வலக்கரத்தில் அவள் கன்னம் வருடி, நெற்றி முடி ஒதுக்கி, அவள் தலையில் இருந்த பூவை தொட்டுப் பார்த்து ஆழ மூச்சிழுத்து வாசம் பிடித்தான், “இளா..” என்றாள் ரோஜா தவிப்புடன்.
“எஸ். ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ மேம்?” என்றான் குறும்பாக,
“தள்ளி.. தள்ளி.. நில்லுங்க..” அவள் விழிகள் படபடக்க, குரல் தந்தி அடித்தது.
அவன் கருவிழிகள் அவள் முகத்தில் நிலைத்திருந்தது. மொத்தமாய் அவளை வாரிச் சுருட்டி கண்களின் வழியே இதயத்தில் நிறைத்துக் கொண்டிருந்தான்.
“தள்ளி தானே?” என்றவன் முன்னோக்கி நகர்ந்து நெருக்கத்தைக் கூட்ட, கண்ணை உருட்டி முறைத்தாள் ரோஜா.
“நான் என்ன சொன்னேன்?” அவள் கேட்க, “என்ன சொன்ன?” என்று கேட்டவன், அவள் பதில் சொல்லும் முன் அவள் நெற்றியில் அழுத்தமாக உதடு பதித்தான். இடையில் இருந்த அவன் கரத்தின் அழுத்தத்திற்கு மாறாக முத்தத்தில் மென்மை காட்டினான்.
“சொல்லு, ரோஜா..” என்றவன் அவள் கன்னத்தில் மீசை உரசி உதடு பதிக்க, “இளா…” திக்கியவள், தன் தடுமாற்றத்தை சமாளிக்க அவன் தோளில் கைப் பதித்தாள்.
அவள் கண்களைக் கூர்ந்து பார்த்துப் புருவங்களைக் கேள்வியாக ஏற்றி இறக்கினான்.
ரோஜா கீழ் உதட்டை பதட்டமாகக் கடிக்க, மாறனின் பார்வை அங்கே அழுத்தமாகப் படிந்து மீண்டது. மெல்ல குனிந்து அடுத்தக் கன்னத்திற்கும் முத்தம் பதித்தவன், அவளின் இதழ் நோக்கி குனிய, ரோஜா அவனிடம் இருந்து விடுபட முயன்றாள்.
“பொறுமை ரோஜா” மெல்ல நிமிர்ந்து குறும்பு கொப்பளிக்கும் குரலில் அவள் காதில் அவன் சொல்ல, சிலிர்த்தாள். அதற்கு மாறாக, “இளா கார்டன்ல இருக்கோம். யாராவது வரப் போறாங்க” என்று பதறினாள்.
மிக நிதானமாகக் குனிந்து, “மரத்துக்குப் பின்னாடி இருக்கோம். யாருக்கும் தெரியாது. ரிலாக்ஸ்” என்றவன், அவள் மறுத்து சொல்ல யத்தனிக்கையில் திறந்திருந்த அவளின் இதழில் தன் கன்னத்தை அழுத்தமாகப் பதித்து விலகினான்.
ஈரமாய் அவள் இதழ்கள் அவன் கன்னத்தில் பதிந்திருக்கக் கண் மூடி ரசித்து, “தேங்க்ஸ்” என்றான்.
“எதுக்குத் தேங்க்ஸ்? நான் எங்க கிஸ் கொடுத்தேன்?” ரோஜா கேட்க,
“அப்போ கொடு” என்று கன்னம் காட்டினான்.