இன்றைக்கு அப்பாவின் பேச்சு அவரை மிக மோசமாகக் காயப்படுத்தி இருக்கும் என்பது அவளுக்கு நிச்சயம்.
“எங்கம்மா வீட்டுக்கு நீங்க என்னை அனுப்பாததோ, இல்ல என் தம்பி வீட்டு விசேஷத்துக்குப் போக முடியாததோ, உங்க மேல எனக்கிருந்த கோபமோ, என் பொண்ணுங்களை விட்டுட்டு அன்னைக்கு நான் சாக முடிவெடுத்ததுக்கு இது எதுவுமே காரணம் கிடையாது. அது உங்களுக்கும் ரொம்ப நல்லா தெரியும். நமக்குக் கல்யாணமான நாள்ல இருந்து நீங்க ஒரு நாளும் என் கூட இருந்தது கிடையாது. நம்ம கல்யாண வாழ்க்கையோட ஒட்டு மொத்த ஏமாற்றம்தான் என்னை அப்படியொரு முடிவெடுக்க வச்சது”
கண்ணீரை துடைத்துக் கொண்டே சொன்னார் சித்ரா. அம்மாவை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள் ரோஜா. அப்பா எதிரே இருந்த சுவரை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தார். அவரின் பதட்டம் வியர்வையாய் நெற்றியில் வடிந்தது.
சில நொடி தாங்க இயலா மௌனத்திற்குப் பின், “சாரி, சாரிம்மா.” என்றார். ஏனோ இப்போதும் மகளிடம்தான் மன்னிப்பை யாசித்தார் சிவஹரி.
மனைவியின் முகத்தை நிமிர்ந்து பார்க்கும் தைரியமும், திராணியும் அவருக்கில்லை.
ரோஜாவால் பெற்றோரை இப்படிப் பார்க்கவே முடியவில்லை. இத்தனை வருடங்களுக்குப் பிறகு இப்போதாவது அவர்கள் மனம் விட்டுப் பேசிக் கொண்டார்களே, அதுவே போதும் என்று அவளால் சமாதானம் அடையவும் முடியவில்லை.
அவளும், நித்யாவும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது அம்மா சுகமில்லாமல் ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்தது அவளுக்கு மங்கலாக நினைவிருக்கிறது. அம்மா உடல் நலகுறைவால் மயங்கி விட்டார் என்று மட்டுமே பிள்ளைகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. சில ஆண்டுகள் கழித்து அக்கா நித்யா சந்தேகப்பட்டது, சகோதரிகள் அது குறித்து விவாதித்தது எல்லாம் அவளுக்கு வரிசையாக நினைவில் வந்தது. ஆனால், என்றைக்கும் அவர்கள் அப்பாவை தவறாக எண்ணியதேயில்லை.
அம்மாவின் மனநிலையை மட்டுமே யோசித்திருக்கிறார்கள். அதனால்தான் இன்றைக்கும் அம்மா சோர்வாகத் தெரிந்தால் அவருடனே சுற்றுவாள் ரோஜா. இரவிலும் அம்மாவுடனே உறங்குவாள். அம்மா கோபமாக இருக்கும் பொழுதுகளில் அப்பாவிடம் சண்டை போடுவாள், அதில் அவளின் மனநிலை இன்னும் பாதிக்கப்படும் என்று மட்டுமே யோசித்த ரோஜா, அம்மாவை அப்பாவிடம் பேச விட்டு, அவர்களுக்குள் ஒரு நிரந்தரத் தீர்வை எட்ட வைக்க நினைத்ததே இல்லை.
மனிதனுக்கு மகிழ்ச்சியும், மன நிறைவும், நிம்மதியும்தான் எளிதாகக் கிடைப்பதில்லை. கோபமும், எரிச்சலும், வருத்தமும், குற்ற உணர்ச்சியும் வெகுஎளிதில் ஒற்றை நொடியில் ஏற்பட்டு விடுகிறது.
சிவஹரி மன்னிப்பு கேட்க, அம்மாவை அழுந்த பற்றினாள் ரோஜா.
சித்ரா மகளையும், கணவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அத்தனை எளிதில் உடைந்திடாத கணவன் தலை குனிந்து, கையைப் பிசைந்தபடி அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் அவருக்கு மனது இளகியது.
“நீங்க எதுக்குச் சாரி சொல்றீங்க? ஏற்கனவே நிறைய முறை சொல்லிட்டீங்க ரோஜாப்பா. அன்னைக்கு என்ன நடந்திருந்தாலும் சரி, இன்னைக்கு நாம சந்தோஷமாதான் இருக்கோம். நம்ம பொண்ணுங்களுக்கு நீங்க நல்ல அப்பா. அதுல எந்தச் சந்தேகமும் வேணாம் உங்களுக்கு. என்னையும் எல்லா விதத்துலயும் சந்தோஷமா வச்சிருக்கதான் டிரை பண்ணீங்க.”
“எனக்கு உங்களை, உங்க வேலையைப் புரியாம இல்ல. ஒரு மனைவியா எனக்கு நிறைய எதிர்பார்ப்புகள். என் ஆசையெல்லாம் நிறைவேறாத ஏமாற்றம். நிறைய நாள் நீங்க என் கூட இல்லாததுதான் எனக்குப் பெரிய குறையா இருந்தது. இப்பவும் இருக்கு. ஆனா, பழசை எல்லாம் இப்போ பேசி என்னாகப் போகுது? எனக்காகவும், நம்ம பொண்ணுங்களுக்காவும்தான் கஷ்டப்பட்டுக் காசு சம்பாதிக்கறீங்கன்னு எங்களுக்குத் தெரியும். நமக்குச் சமூகத்தில் இன்னைக்கு இருக்க அந்தஸ்து உங்க உழைப்பால் சம்பாதிச்சது. அதைப் பார்த்துதான் உங்க முதலாளி வீடு தேடி வந்து நம்ம பொண்ண அவங்க வீட்டு மருமகளாக்க ஆசைப்படுறார். சுகந்தி டாக்டர் வந்து அவங்க மகனுக்குப் பொண்ணு கேட்கிறாங்க. அந்த அளவுக்குதான் எங்களை நீங்க வச்சுருக்கீங்க. அதுல நிச்சயம் எங்களுக்குப் பெருமைதான். அதுனால இப்படித் தலையைத் தொங்கப் போட்டு உட்காராதீங்க” உணர்ச்சி ததும்பச் சொன்ன அம்மாவை சடாரெனத் திரும்பிப் பார்த்தாள் ரோஜா.
அப்பா என்று வரும் போது அம்மாவை என்றுமே புரிந்து கொள்ள முடியாது என்றே அவளுக்குத் தோன்றியது.
அக்கா நித்யா சொன்னது போலக் கணவன் மனைவி உறவு அந்தரங்கமானது. அதன் இழைகளைச் சேர்ப்பதும், பிரிப்பதும், ஆராய்வதும் சவாலானது. முரண்கள் நிறைந்தது. அதில் நெருக்கமும், நேசமும் நெருப்பைப் போலக் கனன்று கொண்டே இருக்கும், அது அத்தனை சுலபத்தில் அணையாது என்பது சரியெனப் பட, பெற்றோருக்குத் தனிமை கொடுத்து அங்கிருந்து மெல்ல நழுவினாள் அவள்.
அம்மாவின் பல வருட மன வருத்தங்கள் அப்பாவின் ஒற்றை வார்த்தையில் காணாமல் போன விந்தையை வியந்தபடி படியேறினாள். உறவுகள் சிக்கலானவை மட்டுமல்ல அதி நுட்பமானவை. மிகக் கவனமாகக் கையாளவில்லை என்றால் பெரும் சவாலானதும் கூட.
அவளது திருமணம் பற்றிய பேச்சுத் தற்போது பெற்றோரின் திருமண வாழ்வு குறித்தானதாக மாறிப் போய் இருந்தது. அவளின் மனதும், எண்ணமும் பெற்றோரை சுற்றியே இருக்க அக்கா, இளமாறன் நினைவு வந்தாலும் அவர்களிடம் பேச முனையவில்லை அவள்.
உடையைக் கூட மாற்றத் தோன்றாமல் அப்படியே படுத்து விட்டாள்.
அரை மணி நேரம் கழித்துச் சித்ரா வந்துதான் மகளை எழுப்பினார்.
“ரோஜா, என்ன இப்பவே படுத்துட்ட? எழுந்து வா, அம்மா காஃபி போட்டு தர்றேன்” தலையணையில் இருந்த மகளின் முகத்தைத் தன் மடிக்கு மாற்றி, அவளின் கன்னத்தைத் தட்டினார்.
அம்மாவின் இடையில் கைக் கோர்த்து வாகாகப் படுத்துக் கொண்டாள் ரோஜா. எதற்காகக் கேட்கிறோம் என்ற பிரக்ஞை இல்லாமல், “சாரிம்மா” என்றாள்.
“ம்ம். அதை விடு. உனக்கு அந்தப் பையனை பிடிச்சுருக்கா?” கேட்ட அம்மாவை தலையைத் தூக்கிப் பார்த்து முகம் நிறைத்த புன்னகையுடன், “ம்ம்” என்றாள் ரோஜா.
“அந்தப் பையனைப் பத்தி, அவர் குடும்பத்தைப் பத்தி அப்பாவும், நானும் ஆயிரத்தெட்டுக் குறை சொல்வோம். சண்டை போடுவோம். ஆனா, அந்தப் பையனை, அவங்க குடும்பத்தைக் கல்யாணம் பண்ணி வாழ போற உனக்குப் பிடிக்கிறதுதான் முக்கியம். நான் அப்பாகிட்ட பேசுறேன். அவர் சம்மதிப்பார். சரியா?” மெல்ல தலையசைத்து அம்மாவின் மடியில் முகம் புதைத்துக் கொண்டாள்.
சிவஹரி கேன்டீன் சென்று விட அம்மாவுடன் இரவு உணவை உண்டு விட்டு அறைக்கு வந்த ரோஜா, நித்யாவிற்கு அழைத்துப் பேசினாள்.
“நீ வீட்டுக்கு வாக்கா பேசலாம். என்னால போன்ல எல்லாத்தையும் சொல்ல முடியாது” ரோஜா சொல்ல,
“அப்படினா பொண்ணு பார்க்க வந்த விஷயம் என்னாச்சு? பழம் இல்லையா? காயா? அப்பாக்கு உன் செஃப்பை பிடிக்கலையா ரோஜா? பொண்ணு தர முடியாது சொல்லிட்டாரா?” அந்தப் பக்கமிருந்து வருத்தத்துடன் கேள்விகளைத் தொடுத்தாள் நித்யா.
“நித்திக்கா, நேர்ல பேசலாம் பிளீஸ். வேற எதுவும் கேட்காத”
“ரைட்டு ரோஜா.” என்று வைத்து விட்டாள் நித்யா.
அதிகாலையில் வீடு வந்த நித்யா நேராகத் தங்கையின் அறைக்குத்தான் வந்தாள். சிறு வயது வழக்கமாக ரோஜாவின் மேல் கைப் போட்டுக் கொண்டு பயண அசதி தீர உறங்கினாள் நித்யா.
அவளின் கணவர் சசிகுமாரும், மகனும் அவளது அறையில் ஓய்வெடுத்தனர்.
சிவஹரி மருத்துவமனை கிளம்பும் முன் மருமகனை சந்தித்து விட்டு மனைவியுடன் மகள்களைக் காண சென்றார். நித்யா தங்கையின் மேல் கைப் போட்டு மென்மையாக அணைத்திருக்க, ரோஜாவின் கால் அக்காவின் மேலிருந்தது. இருவரும் சிறுமிகள் போல உறங்குவதைப் பார்க்கையில் அவருக்குத் தன்னிச்சையாகப் புன்னகை அரும்பியது. தன் அருகில் நின்றிருந்த மனைவியைத் திரும்பிப் பார்த்தவரின் முகத்தில் பூரணப் பூரிப்பு.
தன் பிள்ளைகளின் பல வருட வளர்ச்சியைக் காண தவறிய தவிப்பும், ஏக்கமும், அவர் கண்களில் தெரிந்தது. பிள்ளைகளின் நெருக்கம் பற்றி மனைவி பேசியது இப்போது அவருக்குத் தெளிவாகப் புரிந்தது. பிள்ளைகள் பேசி சிரித்துக் கொள்வதை அவரும் பார்த்திருக்கிறார்தான். ஆனால், இப்படிக் கூர்ந்து கவனித்ததில்லை. இயல்பான நிகழ்வாக எடுத்துக் கொண்டு கடந்து விடுவார் அவர்.
இளமையில் அவரின் குறிக்கோள் எல்லாம் குடும்பத்தை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு வந்து விடுவதாக மட்டுமே இருந்தது. அதை நோக்கியே ஓடினார், உழைத்தார்.
இரண்டு பெண் பிள்ளைகள், அவர்களை நல்ல முறையில் வளர்த்து, பெரிய படிப்புகள் படிக்க வைத்து, வசதி வாய்ப்புகள் நிறைந்த இடத்தில் சீரும் சிறப்புமாகத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே ஒரு சராசரி அப்பாவாக அவரின் கனவாக இருந்தது. வீட்டில் மனைவி இருக்க, அவள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை அவருக்கு. மொத்த குடும்பத்தையும் தாங்கும் மனைவியைத் தாங்கவும் தான் வேண்டும், அவள் தோள் சாயத் தன் துணை வேண்டும் என்பதெல்லாம் அவருக்குத் தோன்றியதேயில்லை.
“தாத்தா.. அம்மா” என்று அழைத்துக் கொண்டே ஓடி வந்த பேரன் அவரின் சிந்தனையைக் கலைத்தான்.
“ஷ்ஷ்ஷ், குட்டி பையா சத்தம் போட கூடாது. அம்மாவும், சித்தியும் தூங்கறாங்க” பேரனை கையில் தூக்கி வைத்து ரகசியம் பேசினார் சிவஹரி.
“அம்மாவை எழுப்பச் சொன்னாங்க அப்பா” என்று தானும் ரகசியம் பேசினான் குழந்தை.
“அம்மா தூங்கட்டும். உனக்கு நானும், பாட்டியும் ஹெல்ப் பண்றோம். வாங்க” என்று பேரனுடன் கீழிறங்கினார்.
“மித்ரன் குட்டி, பாட்டிகிட்ட வாங்க. தாத்தா கேன்டீன் போகணும். அவங்களுக்கு டைமாச்சு” கணவரிடம் இருந்து பேரனை வாங்கிக் கொண்டார் சித்ரா.
அவர்கள் இருவருக்கு நடுவிலும் மெலிதான திரையும், பல வருடங்களாக உறைந்திருந்த பனிப் பாறையும் நிற்கத்தான் செய்தது. அதை மீறி அன்றாடம் போல இயல்பாக நடந்து கொண்டனர்.
“நான் மதியம் வர்றேன் சித்ரா. பிள்ளைங்க எழுந்தா போன் பண்ணு. ஏதாவது வேணும்னா சொல்லு. பசங்ககிட்ட வாங்கிக் கொடுத்து விடுறேன்”
“ம்ம், சரிங்க” என்றார் சித்ரா.
சிவஹரி மருத்துவமனை கிளம்ப, மகள்கள் இருவரும் பத்து மணி போல எழுந்து வந்தனர்.