அது மாலை சிற்றுண்டிக்கான நேரம் என்பதால் கேன்டீனில் அதிகக் கூட்டமில்லை. ரோஜா தனக்கான தேநீருடன் கணினி முன் அமர்ந்து அந்த மாத கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இளமாறன் அழைத்து, அவளது வேலையையும், கவனத்தையும் கலைத்தான்.
“ரோஜா, என் ஃபேமிலி உங்க வீட்டுக்கு வந்துட்டு இருக்காங்க. நம்ம கல்யாணம் பத்தி பேச. எனக்கு இப்போதான், என் தம்பி மெஸேஜ் பண்ணான்.”
“என்ன சொல்றீங்க செஃப். நான் அப்பாகிட்ட இன்னும் பேசவேயில்ல. அம்மாகிட்ட கூடச் சொல்லல. நித்திக்கா வேற வரணும். அம்மா சப்போர்ட் இருந்தா அப்பாவை சம்மதிக்க வச்சுடலாம். ஆனா, இப்போ எப்படிச் சமாளிக்க?” பதட்டம் தந்த படபடப்புடன் பேசினாள்.
“ரோஜா ரிலாக்ஸ்” அதட்டினான் இளமாறன்.
“செஃப், எல்லாமே ரொம்ப வேகமா நடக்குது”
“நான் நிதானமாதான் ஹேண்டில் பண்ணுவேன். யூ டோண்ட் வொர்ரி ரோஜா” என்று அவன் சொன்னதற்கு இரட்டை அர்த்தம் எடுத்துக் கொண்டவளுக்கு அந்தச் சூழலிலும் கோபமும், புன்னகையும் ஒன்றாகத் துளிர்த்தது. ரோஜாவின் மௌனத்தில் திகைத்து, தான் சொன்னதின் அர்த்தம் புரிந்து சிரித்தான் இளமாறன்.
“ரோஜா, என்னால ஹோட்டல்ல இருந்து இப்போ கண்டிப்பா நகர முடியாது. என்ன நடந்தாலும் நாம பார்த்துக்கலாம். ஓகே? டென்ஷன் ஆகாம வேலையைப் பாரு” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மகளைத் தேடி அங்கு வந்தார் சிவஹரி.
“அப்பா வர்றாங்க. பை செஃப்” என்றவள், சட்டென அழைப்பை துண்டித்தாள்.
“ரோஜா, நாம வீடு வரைக்கும் போய்ட்டு வருவோமா? நான் இங்க வேலையை எல்லாம் மேனஜரை பார்த்துக்கச் சொல்லிட்டேன். நைட் டின்னரும் அவரே பார்த்துப்பார்” என்று செய்தியாகச் சொன்னவர், “வாம்மா, வந்து வண்டியை எடு. போகலாம்” என்றார்.
மற்ற சமயங்களைப் போல அப்பாவிடம் கேள்விகளை அடுக்கவில்லை அவள். அம்மாவுக்கு எதுவுமோ என்று பதறவும் இல்லை. என்ன நடக்கப் போகிறதோ என்ற பயத்துடன் அப்பாவை பின் தொடர்ந்தாள். அவள் காரை செலுத்திக் கொண்டிருக்க, சிவஹரி சிறிய தயக்கத்திற்குப் பின் மகளிடம் தகவலை பகிர்ந்து கொண்டார்.
அவர்கள் வீடு நுழைகையில் ரோஜாவை பெண் கேட்டு வந்திருக்கிறோம் என்ற சுகந்தியின் குரல் கேட்டது.
“வாம்மா ரோஜா, நீங்களும் வாங்க” என்று அவர்கள் வீட்டில் நின்றபடி அவர்களையே வரவேற்றார் சுகந்தி. அங்கிருந்த அனைவருக்கும் பல ஆண்டுகள் அறிமுகம் இருந்தாலும், மீண்டும் ஒருமுறை புதியவர்கள் போல உறவுமுறை சொல்லி அறிமுகப்படுத்தினார் சுகந்தி.
சிறிது நேரம் சம்பிரதாய நலம் விசாரிப்புகள் நடந்தேறியது. ரோஜாவின் பொறுமை காற்றில் கரைந்து கொண்டிருந்தது. இதயம் இரு மடங்கு வேகத்தில் துடிக்கும் உணர்வில், தன்னை இயல்பாக்கிக் கொள்ள, தன் வீட்டையே புதிது போலக் கூர்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
சிவஹரி கண் காட்ட, சித்ரா மகளைக் கைப் பற்றி எழுப்பி உள்ளே அழைத்துக் கொண்டு போனார்.
“அவங்க திடீர்னு வந்து உன்னைப் பொண்ணு கேட்கிறாங்க ரோஜா. அப்பாக்கும், எனக்கும் இதைப் பத்தி எதுவும் தெரியாது டா. அதான் உன்கிட்ட முன்னாடியே எதுவும் சொல்லல. அவங்க கீழ வெயிட் பண்ணிட்டு இருக்கும் போது நாம அதிகம் பேச முடியாது. நீ முகம் கழுவி, ஒரு நல்ல புடவையைக் கட்டிட்டு வா.” மகளின் நாடியில் கை வைத்து, அவளின் கலக்கம் புரிந்து சித்ரா சொல்ல, சரியென்று தலையசைத்தாள் ரோஜா.
அம்மாவிடம் உண்மையை மறைப்பது அவளுக்குக் குற்ற உணர்ச்சியைத் தந்தது. ஆனாலும், அவரிடம் அனைத்தையும் சொல்ல இது சரியான நேரமில்லை என்பதும் புரிய அமைதிக் காத்தாள்.
“முகம் கழுவிட்டு வா ரோஜா” அம்மா சொல்லவும் நகர்ந்தாள். மகளுக்குத் தானே ஒரு சேலையைத் தேர்ந்தெடுத்து, அதற்குப் பொருத்தமான நகைகளையும் எடுத்து அவளின் படுக்கையில் அவர் வைக்கும் போது பளிச்சென்ற முகத்துடன் வெளியில் வந்தாள் ரோஜா.
“இந்தச் சேலையைக் கட்டிட்டு வாடா. அம்மா அவங்களைப் போய்க் கவனிக்கறேன். சேலையை நீயே கட்டிடுவ தானே?”
“ம்மா..”
“சரி சரி. ரெடியாகி வா” மகளின் அறைக் கதவை மூடி விட்டு சென்றார் சித்ரா.
சுகந்தி குடும்பத்தினர் ரோஜாவை புகழ்ந்து பேசிக் கொண்டிருக்க, மகளைக் குறித்த பெருமிதத்தில் உச்சிக் குளிர்ந்து போனவராக அமர்ந்திருந்தார் சிவஹரி.
சுகந்தி மருத்துவமனையின் உரிமையாளரான மருத்துவர் சுகந்தியே தன் மகளைப் பெண் கேட்டு வந்தது அவருக்கு அத்தனை பெருமையாக இருந்தது.
அவர்களின் மருத்துவமனையில் கேன்டீன் வைத்திருக்கும் தங்கள் வீட்டில் அவர்கள் சம்பந்தம் பேச வந்திருப்பதை இன்னுமே அவரால் நம்ப இயலவில்லை.
சுகந்தி, ரோஜா பற்றிப் பேசிக் கொண்டிருக்க, தற்போதைக்கு மகளின் பேச்சு ஓயாது என்பது புரிந்து, இடைப் புகுந்துதான் பேசத் தொடங்கினார் சுவாமிநாதன். அவர் பேரனை பற்றிப் பேசத் தொடங்க, சற்றே குழம்பினார் சிவஹரி.
அங்கு அலைபேசியில் மூழ்கியபடி அமர்ந்திருந்த வினோத்தின் மேல் அவரது பார்வை சென்றது.
“இளமாறன், எங்க மூத்த பேரன். இங்க ஒரு பெரிய ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல செஃப்பா இருக்கான்” சுவாமிநாதன் சொல்ல, சிவஹரி தன் முகமாறுதலை சாமர்த்தியமாக மறைத்துக் கொண்டார்.
அந்நேரம் ரோஜா தயாராகி வந்து நிற்க, அங்கு அமர்ந்திருந்த அனைவரின் முகத்திலும் புன்னகையை மீறி தெரிந்த சங்கடத்தைக் கண்டு கொண்டாள் அவள்.
சுகந்தி குடும்பத்தினர் வீடு வந்திருப்பதைப் பற்றி அறையில் உடை மாற்றும் போதுதான் நித்யாவிடம் பேசியிருந்தாள்.
“ஏன் கா, பொதுவா பெரியவங்க பொறுமையா இருக்கணும் சொல்வாங்க இல்ல? அது அவங்களுக்குப் பொருந்தாதா? ரகு வீட்டு பெரியவங்களும் இப்படித்தான் பண்ணாங்க. இப்போ செஃப் வீட்டு பெரியவங்களும் இப்படித்தான் பண்றாங்க. செஃப்கிட்ட சொல்லாமலே நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க கா” என்று பொருமினாள்.
“அவங்களுக்கான முக்கியத்துவத்தை இப்படிக் காட்டுறாங்களோ என்னவோ? பெரியவங்க நாங்க சொல்றதுதான் நீங்க கேட்கணும்னு ஒரு அதிகாரமாவும் இருக்கலாம். எங்களை மீறி எதுவும் நடந்திட கூடாதுன்னு பயமாவும் இருக்கலாம். வீட்ல நடக்கிற எல்லா நல்லதுக்கும் அவங்கதான் காரணமா இருக்கணும்னு ஆசைப்படுறதாவும் இருக்கலாம்” என்று அடுக்கிக் கொண்டே போனாள் நித்யா.
“நித்திக்கா…”
“ஜஸ்ட் சொன்னேன் ரோஜா. அவ்வளவு சீக்கிரமா வயசில் பெரியவங்களுக்கு மறுப்பு சொல்ல மாட்டோம். அவமதிக்க மாட்டோம். இல்ல? அதுவும் கூட ஒரு காரணமா இருக்கலாம்”
“அப்போ நம்ம அப்பா மறுப்பு சொல்ல மாட்டார் சொல்ற? இல்லக்கா?”
“அன்னப்பட்சி ரோஸ் நீ. உனக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக்கற பார்த்தியா?” என்ற நித்யாவின் கேலியில் இருவரும் சிரிக்க, “நாங்க இனிமேதான் கிளம்பணும் ரோஜா. அவங்க கிளம்பினதும் என்ன நடந்ததுன்னு எனக்குச் சொல்லு.”
“ம்ம்”
“நீயும் செஃப்பும் கேடிங்க. உங்க லவ் மேரேஜை, வீட்டுப் பெரியவங்களை வச்சு அரேஞ்ச்டு மேரேஜா மாத்திட்டீங்களே” நக்கலாக நித்யா சொல்ல, அப்படி யோசித்திராத ரோஜா திகைத்துப் பின் சிரித்தாள்.
“நீ ஆசைப்பட்டது நடந்தா எனக்கு ரொம்ப ஹேப்பி ரோஸ் குட்டி. நாம நாளைக்குப் பார்க்கலாம். நீ போய் உன் வீட்டு ஆளுங்களைக் கவனி” என்ற அக்கா நித்யாவின் பேச்சை நினைத்தபடியே அவள் நிமிர,
“ரோஜா, இங்க வந்து உட்காரு. வா” என்று அழைத்தார் சுகந்தி.
அப்பாவை பார்த்து விட்டு, அவரின் அருகில் சென்று அமர்ந்தாள் ரோஜா. அவளின் கைப் பிடித்துக் கொண்டு, “நாங்க வந்த விஷயத்தைச் சொல்லிட்டோம். இனி நீங்கதான் உங்க முடிவை சொல்லணும். உங்களுக்குச் சம்மதம்னா இன்னைக்கே தட்டு மாத்திடலாம்” சிவஹரி, சித்ரா இருவரையும் பார்த்து கேட்டார் சுகந்தி.
சித்ராவின் பார்வை சிவஹரியின் மேல் படிந்து பின் மகளிடம் சென்றது. சிவஹரி மகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்பாவை பார்த்துச் சம்மதமாகத் தலையசைத்தாள் ரோஜா. அதைக் கவனித்த சுகந்தி, “ரோஜா ஓகே சொல்லிட்டாளே. அப்புறமும் என்ன யோசிக்கறீங்க?” என்று கேட்க, சித்ரா முகத்தில் உதித்த மெல்லிய புன்னகை அவரின் சம்மதத்தைச் சொன்னது. அதற்கு மாறாகச் சிவஹரி தயங்கினார்.
சுவாமிநாதன் பெரிய மனிதராக நிலைமையைத் தன் கையில் எடுத்துக் கொண்டார்.
“நாங்க திடுதிப்புன்னு சொல்லாம கொள்ளாம வந்து நின்னது தப்புதான். உங்க பொண்ணுக்கு வரன் பார்க்க தொடங்கிட்டீங்களான்னு கூடத் தெரியல. நீங்க எந்த அவசரமும் இல்லாம பொறுமையா யோசிச்சு உங்க முடிவை சொல்லுங்க தம்பி.” என்றவர், அங்கிருந்த பூ, பழ தட்டுக்களைக் கை காட்டி, “இதெல்லாம் உங்க வீட்டுக்கு யதார்த்தமா வந்தாலும் வாங்கிட்டு வந்திருப்போம். அதனால தயங்காம எடுத்துக்கோங்க” என்று முடித்தார்.
சிவஹரி அனைவரையும் ஒருமுறை பார்த்து, “நீங்க வீடு தேடி வந்து எங்க பொண்ணைக் கேட்டது எங்களுக்கு ரொம்பச் சந்தோஷம். நாங்க வீட்ல கலந்து பேசிட்டு நிச்சயமா ஒரு நல்ல பதிலா உங்களுக்குச் சொல்றோம்” என்று புன்னகையுடன் சொன்னார்.
சுகந்தி குடும்பத்தினர் தங்களின் ஏமாற்றத்தை, வருத்தத்தைப் புன்னகையில் மறைத்து விடைப் பெற்றுக் கொண்டனர்.
அவர்கள் சென்றதும், கணவரிடம் திரும்பினார் சித்ரா.
“அவங்க பையனை நான் பார்த்த மாதிரி ஞாபகமில்ல. ஆனா, நீங்க பார்த்திருப்பீங்க தானே? சுகந்தி டாக்டர் குடும்பத்துக்கு என்ன குறை? அவங்க பையன் நல்ல வேலையில் இருக்கறதா சொன்னாங்களே. அப்புறம் ஏன் யோசிக்கறீங்க ரோஜாப்பா? அதுலயும் ரோஜாவும் சரின்னு சொல்லும் போது, நீங்க சம்மதம் சொல்லாம, ஏன் வீட்ல பேசிட்டு சொல்றேன் சொன்னீங்க?” என்று சித்ரா கேட்க, “சுகந்தி டாக்டர், அவங்க மூத்த மகனுக்கு ரோஜாவை கேட்கறாங்க சித்ரா. எனக்கு மனசுக்கு சரின்னு படல. அதான் பதில் சொல்லாம அனுப்பிட்டேன்” என்றவரை சித்ரா அதிருப்தியுடன் பார்க்க, ரோஜா அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
“எனக்குப் புரியல. அவங்க மூத்த மகனுக்கு என்ன குறை? நல்ல வேலையில் தானே இருக்கார்?” சித்ரா அப்பாவியாகக் கேட்க,
“என்ன பெரிய பிரதமர் வேலை? அதுவா முக்கியம் இப்போ? உன்னைச் சொல்லி என்ன ஆகப் போகுது. உன் மகளைச் சொல்லணும். அவ வேலையைப் பார்த்திட்டு இருக்காம, அன்னைக்கு அந்தப் பையனுக்கு ஹெல்ப் பண்ண போய்த் தானே, இப்போ இவளை பொண்ணு கேட்டு வந்திருக்காங்க” மகளைப் பார்த்துக் கோபமாக அவர் சொல்ல,
“என்ன பேசறீங்க நீங்க? ரோஜா ஒரு உயிரை காப்பாத்தி இருக்கா. அதை என்னைக்கும் தப்பு சொல்லாதீங்க.”
என்றார் சித்ரா. ரோஜா எழுந்து அம்மாவின் அருகில் சென்று அமர்ந்தாள்.
“நாளைக்கு நித்யாவும் மாப்பிள்ளையும் வந்ததும், சுகந்தி டாக்டர் வீட்டுக்கு நம்ம முடிவை சொல்லிடலாம். நித்திக்கு தோதுபடுற போலக் கல்யாண தேதியை முடிவு பண்ணிக்கலாம்.” சித்ரா பேசிக் கொண்டே போக,
“ம்ஹூம். அந்தப் பையன் அவங்க குடும்பத்தோடயே இல்ல. நம்ம பொண்ணுக்கு அவன் சரி வர மாட்டான்” என்றார் சிவஹரி.
“குடும்பத்தோட இருந்தா மட்டும் என்னவாகிட போகுது? கல்யாணத்துக்கு அப்புறம் எத்தனை தடவை என்னை எங்க வீட்டுக்கு போக விட்டிருப்பீங்க நீங்க?” இரைந்தார் சித்ரா.
மானசீகமாகத் தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டாள் ரோஜா.