உளமார உன்னுடன் – 2 (2)

‘கவிதாஞ்சலி’ அந்தப் பெயரும் அப்பா சொன்ன செய்தியும் அவன் செவியில் மீண்டும் மீண்டும் அறிவிப்பொலி போல ஒலிக்க, “கவிதாஞ்சலிக்கா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டான்.

“ஆமா தம்பி” என்றார். அவன் முகத்தில் நம்ப இயலாத பாவனை வந்து போனது. காற்றுக்கு அலைமோதிய முன்னுச்சி முடியை கையால் கலைத்து பின்னுக்கு ஒதுக்கினான். அங்கிருந்த குழாயை திறந்து கை நிறையத் தண்ணீரை அள்ளி முகத்தில் அடித்துக் கழுவினான்.

“எந்தக் கவிதாஞ்சலிய சொல்றீங்கப்பா?” அந்தக் கேள்வி அபத்தம் எனத் தெரிந்தே கேட்டான். மறுகணம் மகனை கூர்ந்து நோக்கினார் துரைசாமி.

“நடேசன் மாமா பொண்ணையாப்பா சொல்றீங்க?” பதில் தெரிந்தே கேட்கப்படும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது?

சட்டென அவனுக்கு மூச்சடைக்கும் உணர்வு. கோபம் கண்ணை மறைப்பது என்பதை அந்த நொடி முழுமையாக உணர்ந்தான் அவன்.

“தம்பி, கார்த்திகேயா..” என்று துரைசாமி அழைத்ததைப் பொருட்படுத்தாமல் அப்படியே திரும்பி வீட்டுக்குள் சென்றிருந்தான். சற்று நேரத்தில் குளித்து உடை மாற்றி வந்தவன், அங்கேயே நின்றிருந்த அப்பாவிடம் வந்து, “நான் என்ன செய்ய முடியும்னு பார்க்கறேன்ப்பா. நீங்க கவலைப்படாதீங்க” என்று அவருக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகச் சொன்னான்.

அவரோ குழப்பமான முகத்துடன், “ஊருக்குள்ள யாருக்கும் சொல்லாம கமுக்கமா வீட்டு ஆளுங்கள மட்டும் கோவிலுக்குக் கூட்டிட்டுப் போய்க் கல்யாணத்தை முடிச்சுடணும்னு திட்டம் போட்டிருக்காய்ங்கப்பா. என்ன இருந்தாலும் கல்யாண தகவல்லாம் வெளிய கசியாம இருக்குமா? நேத்துச் சாயந்தரம் பூ பறிக்க வந்த வடிவு உங்கம்மாகிட்ட சொல்லிட்டா. அதைக் கேட்டதுல இருந்து எனக்கு மனசே ஆறல தம்பி” என்று புலம்பினார்.

“இதுவே நடேசன் இருந்திருந்தா..” என்று சொல்லும் போதே அவருக்குத் தொண்டையடைத்துக் கொண்டது. நடேசனை அவர் வீட்டு வாசலில் வைத்து, அவர் கண் முன்னே அல்லவா வெட்டி சாய்த்தார்கள். அந்தப் பெண் பிள்ளைகளுக்கு எத்தனை பெரிய இழப்பு. அந்தத் தகப்பன் இன்று இருந்திருந்தால்.. என்று நினைக்க நினைக்க ஆற்றாமை அவர் மனத்தை அரித்தது.

“நடேசன் மாமா இல்லன்னா என்னப்பா, நாம இருக்கோம் இல்ல? நான் பார்த்துக்கறேன்” என்று திடமாக அவருக்குத் தேறுதல் சொன்னவன், விறுவிறுவென்று தோட்டத்துக்குள் இறங்கி பூ பறிக்கத் தொடங்கியிருந்தான். ஆட்கள் பூ பறித்து முடிக்கும் வரை அவனும் அங்கிருந்து நகரவில்லை. ஒருவித தியானம் போல அவன் விரல்கள் மென்மையாகப் பூக்களைக் கொய்து பையில் சேகரித்தன.

ஒன்றரை மணி நேரம் கடந்திருக்கும். அதற்குள் அவன் மனம் ஒரு நிலைக்கு வந்திருந்தது.

அப்பாவை அழைத்துப் பூக்களை எடைப் போட சொல்லி விட்டு அலைபேசியுடன் ஐக்கியமானான்.

“கார்த்திகேயா சாப்பிட வாய்யா” என்று அம்மா அழைக்கவும் உள்ளே சென்றான்.

கம்பு தோசையும், வெங்காயச் சட்னியும் பரிமாறினார் வாணி. மனம் முழுக்க யோசனையுடன் இருந்தவன், மூன்றாம் தோசையிலேயே போதும் என்று எழுந்து விட்டான்.

வீட்டு வாசலில் சென்று நின்றான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை போர்த்திக் கிடந்த ஊரை கண்கள் குளிர பார்த்திருந்தான்.

“என்னப்பா செய்யப் போற?” வாணி அவன் பக்கத்தில் வந்து நின்று கேட்க, “இதுக்கு அவங்கம்மா எப்படிம்மா சம்மதிச்சாங்க?” என்று எதிர்கேள்வி கேட்டான் அவன்.

“ம்ம், அவங்களையும் கொற சொல்ல முடியாது இல்லப்பா” என்றார் பெருமூச்சுடன்.

“அப்போ அவங்களுக்குச் சம்மதமா?” என்று அதிர்ச்சியுடன் புருவம் உயர்த்தினான்.

“சம்மதமாண்டு தெரியல. ஆனா அவங்களுக்குத் தெரிஞ்சுதான் எல்லாம் நடக்குது. நேத்து எனக்குத் தகவல் கிடைச்சதும் அவங்களைப் பாக்க போனேன். அந்த அண்ணி எங்ககிட்ட மூஞ்சி கொடுத்து பேசலப்பா” என்றார் வருத்தத்துடன்.

மீண்டும் தலை கோதின அவன் விரல்கள்.

“இவிய்ங்க பகையைத் தீர்க்க, பழி வாங்க, பச்ச புள்ளைய பலி கொடுக்கணுமாண்டு இருக்குப்பா‌ எனக்கு”

“அவங்க நல்லது நினைச்சு கூடச் செஞ்சுருக்கலாம்மா” என்றான். அவன் சொன்னதில் இருந்த முரண் அவனையே சுட்டது. வாணியும் அவனை முறைக்க, “நான் போய் ஊருக்குள்ள என்னா ஏதுன்னு விசாரிச்சுட்டு வர்றேன்ம்மா” என்று அங்கிருந்து நழுவினான்.

அந்நேரம் நண்பனின் வண்டி இருந்தது பெரும் உதவியாக இருந்தது.

அவன் சட்டம் படிக்கிறான், அவனுக்கு மக்களிடம் போட்டு வாங்கத் தெரியாதா என்ன?

இரண்டே மணி நேரத்தில் முழுமையாகத் தகவல் சேகரித்து விட்டான்.

இன்னும் மூன்றே தினங்களில் அவளுக்குத் திருமணம். அதற்குள் ஏதாவது செய்தாக வேண்டும். அவனுக்கு இருப்பது மிகக் குறைந்த காலமே. சட்டெனத் தொற்றிய பரபரப்புடன் வீடு திரும்பினான்.

நடேசனின் அக்கா செல்வராணியின் மகன் முரளிக்கும், கவிதாஞ்சலிக்கும் திருமணம் முடிவாகி இருந்தது.

இரண்டு வீட்டு பெரியவர்களும் பேசி முடிவு செய்த திருமணம்தான்.

அதைத்தான் அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

அந்தக் குடும்பத்தின் சொத்து தகராறு ஒரு கொடூரமான கொலையில் முடிந்திருந்தது. கவிதாஞ்சலியின் கண் முன்னே அவளது அப்பாவை வெட்டி கொன்றிருந்தார் அவளின் சித்தப்பா.

ஏற்கனவே அவர்களுக்குள் பேச்சு வார்த்தை கிடையாது. அதன் பிறகு முழுக்க எதிரிகளாக மாறி போனார்கள்.

அண்ணன் தம்பி குடும்பம் பிளவு பட்டு நிற்கையில், நியாயமாக மூத்த தம்பியின் குடும்பத்துக்கு ஆதரவு கொடுத்தார் அக்கா செல்வராணி.

நடேசன் குடும்பத்தினரிடம் பாச பயிர் வளர்த்து, இதோ தம்பி மகளைத் தன் மகனுக்கு மணம் முடித்துத் தன் வீட்டு மருமகளாக்கும் பெரிய மனத்துக்குப் பின்னேயும் சொத்தை அபகரிக்கும் ஆசை இருப்பது ஊருக்கே தெரியும். அது கவிதாஞ்சலியின் அம்மா சாவித்ரிக்கு தெரியாதா என்ன? அவருக்கு அவரின் நியாயம்.

சிலரின் நியாயங்கள் பலருக்கு அநியாயமாக முடியும் என்பதை அவர் ஏன் உணரவில்லை. அதிலும் சொந்த மகளின் வாழ்வை, இப்படியா பழி வாங்க பகடை காயாக நகர்த்துவார்.

அவன் நெஞ்சில் பாரமேற ஆழ்ந்த மூச்செடுத்துத் தன்னை நிதானப்படுத்தினான்.

மதனை அழைத்து வீடு வரச் சொன்னான்.

அவன் வந்ததும், “அந்த முரளிய போய்ப் பார்ப்போமாடா?” என்று நெற்றியை கீறியபடியே கேட்டான். சட்டையின் கையை மடித்து மேலேற்றி விட்டான். வேட்டியை மடித்துக் கட்டினான்.

“வக்கீல் தம்பி, நீங்க என்னா நினைக்கிறீங்க? அவங்கிட்ட போய்ச் சட்டம் பேசலாம்னா? அவென் உங்கள மயிரா கூட மதிக்க மாட்டியான்” என்று நண்பன் இடக்காகச் சொல்லவும், அவனுள் கனன்ற ஆத்திரத்தை காட்டும் வழிவகைத் தெரியாமல் இருந்தவன், நண்பனை அடிக்கக் கை ஓங்கி விட்டான்.

“அடேய் பேசிட்டு இருக்கும் போதே கை ஓங்குற? ஏன்டா வக்கீலு ப்ரெண்ட்ட அடிச்சா உம் மேல இபிகோ பாயாதா டா?” என்று அவன் கையைத் தடுத்துப் பிடித்துக் கேட்கவும் தணிந்தான் கார்த்திகேயன்.

“சண்டைக்காரன் கால்ல விழுறத விடச் சாட்சிக்காரன் கால்ல விழுறது மேல்.” என்று அவன் முணுமுணுக்க, “அட ஆமா வக்கீலு. வா போய்ச் செல்வராணி ஆத்தாவ பார்த்துப்புட்டு வருவோம்” என்றான்.

“அடேய் மதனே” என்று தலையில் அடித்துக் கொண்ட கார்த்திகேயன், “நான் கவிதாஞ்சலிய பார்க்க போறேன்” என்றான்.

“அந்தப் புள்ளையவா? அத தனியா எங்கேயும் விட மாட்டானுங்களேடா? அப்புறம் எப்படி நாம பார்க்கறது?”

“நாம இல்ல மதனே. நா பார்க்க போறேன்.” என்று உறுதியாகச் சொன்னான். அத்தனை உறுதியாகச் சொன்னவனுக்கு அவளைச் சந்திக்க அத்தனை எளிதாகச் சமயம் வாய்க்கவில்லை.

அவனது உதவிக்கு அம்மா வந்தார்.

“அந்தச் சின்னக் குட்டி கீதாஞ்சலி இருக்குது இல்ல? அதுக்கிட்ட பேசியிருக்கேன். உங்கக்காவ கூட்டிட்டு கோவிலுக்கு வான்னு சொல்லியிருக்கேன். ஒரு அஞ்சு மணி போல வர்றோம்னு சொல்லியிருக்கா. நாமளும் கோவிலுக்குப் போவோம். அங்கன வச்சு அந்தப் புள்ள கிட்ட பேசி பார்ப்போம். நல்ல புள்ளதான் கேட்டுப்பா” என்றார் வாணி.

அவனுள் சிறியதாக நம்பிக்கைத் துளிர்க்க, மாலை அம்மா மற்றும் மதனுடன் ஊர் எல்லையில் இருக்கும் துர்கை அம்மன் கோவிலுக்குச் சென்றான்.

அம்மா பயபக்தியுடன் அம்மனை வழிபட, அவன் கண்கள் கோவில் வாசலுக்குத் தாவி கொண்டிருந்தன.

அந்த ஊருக்கு மிக முக்கியக் கோவில் அது. ஆள் உயரத்துக்குச் சுற்றுச்சுவர் எழுப்பட்டு, சுற்றிலும் மரங்கள் அடர்ந்து நடுவில் துர்கை அம்மன் வீற்றிருப்பார்.

“டேய் அந்தப் புள்ள வருது பாருடா” என்று அவன் தோளை இடித்துக் கிசுகிசுத்தான் மதன்.

அவன் பார்வையும் வாசலில்தான் நிலைத்திருந்தது.

கீதாஞ்சலி வருவதைப் பார்த்தான். ஆனால்.. அவள் பின்னால் வருவது, அதுவா கவிதாஞ்சலி? அவன் ஆறு மாதங்களுக்கு முன்னர்ப் பார்க்கும் போது சிறுமியாகத் தெரிந்தவள் எப்போது இளம் பெண்ணாக மாறினாள்?

அவன் கண்கள் அவளைக் கூர்மையாக அளவிட்டன. அவளேதான். மஞ்சளில், பச்சைக் கரை வைத்த மென்பட்டுச் சேலை உடுத்தியிருந்தாள். கை நிறையக் கண்ணாடி வளையல்கள். காதில் குடை ஜிமிக்கி, கழுத்தில் அன்னம் பதித்த நீண்ட சங்கிலி, அத்துடன் உறவாடியது மல்லிகைச் சரம். அவளை அப்படிப் பார்க்கையில் சிறு பெண் என்று யாராலும் சொல்லி விட முடியாது.

நாளை இப்படியாக அவள் மணக்கோலத்தில் நின்றால், அந்தத் திருமணத்தை யாரும் தடுக்க முடியாது என்பதே அவனது பதட்டத்தை அதிகரிக்கச் செய்தது.

error: Content is protected !!
Scroll to Top