உளமார உன்னுடன் – 1 (2)

“வாப்பா, வாங்க, வாங்க” நடேசனின் சித்தப்பா சாரங்கபாணி வீடு அவர்களை அன்புடன் வரவேற்றது. முதலில் உபசரித்தார்கள். ஆளுக்கு முதலாக அவர்கள்தான் வந்திருந்தார்கள்.

கணேசன், செல்வராணி குடும்பம் இன்னமும் வந்திருக்கவில்லை.

“அவங்க வரும் போது வரட்டும். நாம பேசிட்டு இருப்போம்” என்று சித்தப்பா சொல்லவும் அவரிடம் அமர்ந்து பெரியவர்கள் பேச, சிறுமிகளை உள்ளே அழைத்துப் போனார் அவர்களின் சின்ன அப்பத்தா.

“ரெண்டுக்கும் பட்டுப் பாவாடை சட்டையைப் பார்த்தியா? ஒன்னு போல. நல்லாருக்குத்தா” பேத்திகளின் கன்னம் வழித்து முத்தம் வைத்தார்.

“அவென்தேன் பிடிவாதமா இம்புட்டு வருஷமா சண்டைக்கு நிக்கறானே, நீயாவது தம்பிதானேன்னு விட்டுக் கொடுக்கலாம் இல்லப்பா?” பெரியவர் கேட்க, “என்ன சித்தப்பா இப்படிப் பேசுறீங்க? உங்களுக்கு என்னைய தெரியாதா? ஒவ்வொரு வாட்டியும் நா விட்டுக் கொடுக்கலாம்னு நினைக்கையில என்னத்தையாவது ஏடாகூடாம பேசி எனக்கு ஆத்திரத்தை கிளப்பி விட்டுக் காரியத்தை அவனே கெடுத்துக்கறியான். நா என்னா செய்ய?” என்று அங்கலாய்த்தார்.

“அண்ணேங்கற மரியாதய இல்ல அவனுக்கு. எம் பொண்டாட்டி பிள்ளைகள கண்டா ஆகல. பள்ளிக்கூடத்தில எம் பிள்ள கூடச் சேர கூடாதுன்னு அவென் புள்ளைங்களுக்குச் சொல்லி கொடுத்திருக்கியான். அப்படி என்னா பாவம் பண்ணிட்டோம் நாங்க அவனுக்கு? எம் பொண்டாட்டிய பாக்கற நேரமெல்லாம் மட்டு மரியாத இல்லாம பேசிறியான். ரெண்டு வருஷத்துக்கு முன்னுக்க எம் மேல கை வச்சுட்டியான். நீங்களும்தானே இருந்தீங்க அங்கன? ஊரே கூடியிருந்த திருவிழா கூட்டத்துல வச்சு, ப்ச்” என்று கோபமும் வருத்தமுமாகச் சலித்து நெற்றியில் அறைந்து கொண்டார்.

“அவென் செய்யிறதும் தப்புத்தேன். போனத விடுப்பா. இனி ஆகறத பேசுவோம்” என்று பெரியவர் சொல்ல, “நான்தேன் சொல்லிட்டேனே. அவன் கேட்குறது போலக் காட்டை அவன் பேருக்கு எழுதி குடுத்துடுறேன். ஆனா வாழுற வீட்ட விட்டு குடுக்க முடியாது.” என்று முடிவாகச் சொன்னார்.

அந்நேரம் கணேசன் குடும்பம் உள்ளே வந்ததைப் பேச்சு மும்முரத்தில் அவர்கள் கவனிக்கவில்லை.

“ஓ வீட்ட குடுக்க மாட்டீங்களோ? ஏனாம், உங்கப்பாருக்கு நீங்க ஒருத்தர்தான் புள்ளையா? அப்ப எங்க மாமன யாருக்கு..” என்று கணேசனின் மச்சான் அடுத்து பேசிய வார்த்தைகளைக் கேட்கவே கூசியது அங்கிருந்த அனைவருக்கும்.

“ஏய்” என்று கொதித்துப் போய் அவனை அடிக்கப் போனார் நடேசன்.

கணேசனின் மனைவி மக்கள் ஓரமாக நின்றிருக்க, மச்சானை பேச விட்டு அவரும் கைக் கட்டி நின்று வேடிக்கைப் பார்த்திருந்தார்.

“வேணாங்க” என்று சாவித்ரி கணவரை தடுத்துப் பிடிக்க, “இந்தா சொல்லிட்டாங்க இல்ல. போய்யா போய்..” என்று சாவித்ரியை கை நீட்டி அவன் வரம்பு மீறி பேசவும் நடேசன் அவன் மேல் பாய்ந்து அடித்து விட்டார்.

பஞ்சாயத்து, சமாதானப் பேச்சு வார்த்தை என்று வந்து விட்டு, வார்த்தைகள் தடித்து அடிதடியில் முடிந்திருந்தது.

“ஏன்டா தம்பி, நம்ம ஆத்தாவை அசிங்கமா பேசுறான். நீ பேச விட்டுட்டு பார்த்திட்டு நிக்கற? ஆத்தாவ பேசினாலே உரைக்காத உனக்கு அண்ணிய பேசினா எங்கிட்டு உரைக்கப் போகுது” என்று கசப்பாகத் தம்பியை பார்த்துக் கூறினார்.

“எம் புருஷனா பேசினாரு, அவர குத்தம் சொல்றீங்க?” என்று வசந்தி கணவருக்காக வரிந்து கொண்டு வர, “பேசுறது உன் தம்பிதானேம்மா? அவன இப்படிப் பேச சொன்னது யாரு நீயா?” என்று கோபமாகக் கேட்டார் பெரியவர்.

“என்னா மாமா அபாண்டமா எம் மேல பழி சொல்லு சொல்லுறீங்க? அவன் ஏதோ கோபத்துல வார்த்தைய விட்டுட்டான்” என்று வசந்தி சொல்ல சொல்ல நடேசனால் அங்கே நிற்கவே முடியவில்லை.

கூடத்தின் இரண்டு பக்கமும் இருவரின் பிள்ளைகளுமே மிரண்டு போய் நின்றிருந்தார்கள். இன்னமும் செல்வராணி குடும்பம் வந்து சேரவில்லை.

நடேசனுக்கு அம்மாவை, மனைவியைத் தவறாகப் பேசியதை கேட்ட ஆத்திரம் அடங்கவில்லை. இம்முறை நிரம்ப எல்லை மீறியிருந்தார்கள். மனம் முழுமையாகக் கசந்திட, “உனக்கெல்லாம் எதையும் விட்டுத் தர மாட்டேன் நானு. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோடா” என்று தம்பியை பார்த்து கத்தி விட்டார்.

“ஓஹோ, நாங்களும் கேஸ் போட்டு உங்கள தெருவுக்கு இழுப்போம். பார்த்துக்கோங்க” பதிலுக்கு அவர் சவால் விட, “போடா” என்று இடக்கரத்தை அசட்டையாக அசைத்து, மனைவி மக்களை அழைத்துக் கொண்டு வெளியேறினார்.

“என்னப்பா நீயி? நீ கொஞ்சம் பொறுமையா போய் இருக்கலாம். வாப்பா இத இப்படியே காலத்துக்கும் இழுத்தடிக்காம இன்னைக்கே ஒரு முடிவ எடுத்துருவோம்” என்று சாரங்கபாணி, அண்ணன் மகனின் கைப் பிடித்து அழைக்க, “யோவ் சித்தப்பு. நீ என்னத்துக்குச் சும்மா பஞ்சாயத்து பண்றேன்னு துள்ளிட்டு இருக்க? எங்கப்பாக்கு வர வேண்டிய பங்கு உங்கிட்ட இருக்குல்ல? மொத அதைக் கேஸ் போட்டு வாங்குறேன் இருய்யா” என்று கணேசன் அவர் மேல பாய, “எப்பா என்னைய ஆள விடுங்கப்பா” என்று விலகி கொண்டார் அவர்.

நடேசன் அதற்கு மேல் அங்கு நிற்காமல் வண்டியை கிளப்பினார்.

ஊரின் கடைசியில் சித்தப்பா வீடு இருந்தது. அவ்வளவு நேரம் வெண்மையாக இருந்த வானம் சட்டெனக் கருமை பூசிக் கொண்டது.

துளி துளியாக மழை விழத் தொடங்கவும், “ஏங்க மழ விழுதுங்க, வண்டியை வேகமா வீட்டுக்கு விடுங்க. மழையில நனைஞ்சா இந்தச் சின்னக் குட்டிக்கு சேராம போயிடும்” என்று வேகமாகச் செல்லும்படி கணவரை விரட்டினார் சாவித்ரி.

அந்தப் பகுதி முழுவதும் விவசாயத் தோட்டமும் அதையொட்டிய தனித்தனி வீடுகளும்தான் இருந்தன.

அதைக் கடந்தால்தான் ஊருக்குள் செல்ல முடியும். மழை வேகம் பிடிப்பதற்குள் ஊருக்குள் நுழைந்து வீடு சென்று விடலாம் என்று நினைத்து வண்டியை முறுக்கினார் அவர். ஆனால் மழை நனைத்த மண் சாலை வழுக்கி விட்டு வேகமாகச் செல்ல வழி விடவில்லை.

அச்சமயம் சடசடவென மழையும் பொழியத் தொடங்கியிருந்தது. நொடியில் நால்வரும் நனைந்து விட்டார்கள்.

“ஏங்க, ஓரமா நிப்பாட்டுங்க. மழை நின்னதும் போய்க்கலாம்” என்று சாவித்ரி சொல்லவும், “இந்தா வாத்தியார் வீட்ல நிப்பாட்டுறேன் இரு” என்று பத்தடியில் இருந்த வீட்டின் முன்னே சென்று வண்டியை நிறுத்தினார்.

அவர்களின் வண்டிச் சத்தம் கேட்டு எட்டி பார்த்த சிறுவன், “அப்பா, நடேசன் மாமா வந்திருக்காங்க” என்று உள்ளே பார்த்துக் கத்தினான்.

error: Content is protected !!
Scroll to Top