உளமார உன்னுடன் – 1 (1)

மழை மெல்லிய தூறலாய் பொழியத் தொடங்கியிருந்தது. முதல் சொட்டு மழை பூமியில் வீழ்ந்ததும் குப்பென்று மண் வாசம் மேலெழுந்து நாசியை நிறைத்தது.

திண்டுக்கல்லின் விவசாயத்திற்குப் பெயர் போன ஊரான தாமரைக்குளம் அந்தப் பின் மதிய நேரத்தில் மும்முரமாய்க் காடு கழனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தது.

மழையின் தடயம் தெரிந்ததும் தென்றல் சூறாவளி போலச் சுழற்றியடித்தது.

தாமரைக்குளத்தின் முடிவில் தோட்டத்தை ஒட்டியிருந்தது சிறிய கல் வீடு. பின்பக்கம் தோட்டப் பகுதியில் மாமரக் கிளையில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தாள் சிறுமி ஒருத்தி. அவளை ஆட்டிவிட்டுக் கொண்டிருந்த சிறுமிக்கு அப்படியொரு சிரிப்பு. இருவரின் சிரிப்பு சத்தமும் இனிமையாக இசையாய் அவ்விடத்தை நிறைத்துக் கொண்டிருந்தது. மழை அவர்களின் மகிழ்ச்சிக்கு இடி இடித்துச் சுருதி சேர்த்தது.

“கவி, கவிதா குட்டி”

“கீதா குட்டி” என்ற அழைப்புகளைக் கேட்டும் காதில் விழாதது போலத் தங்கள் உலகில் மூழ்கியிருந்தார்கள்.

“மழை பெய்யுது, ரெண்டு பேரும் உள்ளார வர்றீங்களா இல்லையா?” என்ற அம்மா சாவித்திரியின் குரலை தொடர்ந்து, “நா வண்டி எடுக்கப் போறேன். யாரு எங்கூட ரவுண்ட்ஸ் வாரது?” என்று அப்பா நடேசனின் குரலும் கேட்க, அவ்வளவுதான் ஊஞ்சலில் இருந்த கீதாஞ்சலி பொத்தென்று தாவி தரையில் விழுந்திருந்தாள்.

“ஏ பாத்தே, அடிபடப் போகுதே. ரத்தம் வந்தா அம்மா என்னையதான் வைய்யும்” என்று பதறி கத்தியபடி தரையில் தவளையைப் போலக் குப்புற விழுந்து கிடந்த தங்கையிடம் ஓடினாள் மூத்தவள்.

சிறியவளுக்கு அடியெல்லாம் படவில்லை. ஆனால் கீழே விழுந்ததில் கை காலெல்லாம் நன்றாகச் சிராய்த்து ரத்தம் கசிந்தது. அதைக் கண்டதும் பெரியவளின் கண்ணில் கண்ணீர் குளம் கட்டி நின்றது.

இரண்டு விரலில் எச்சில் தொட்டு தங்கையின் காயத்தைத் துடைத்து விட்டாள்.

“அம்மா” என்று சிணுங்கி, அழுகைக்குத் தயாராக உதட்டை பிதுக்கினாள் சிறியவள்.

“அழாத, அக்கா இருக்கேன். தேங்கா எண்ணெ போட்டா சரியா போகும்.” என்று தங்கையின் கன்னத்தைத் தட்டிக் கொடுத்தாள்.

“கவி, கீதா” அம்மா மீண்டும் அழைக்க, “வா உள்ள போலாம்” என்று தங்கையின் கைப் பிடித்துத் தூக்கி விட்டு உள்ளே அழைத்துப் போனாள்.

மஞ்சளில் சிவப்பு கரையிட்ட பருத்தி சேலை உடுத்தியிருந்தார் சாவித்ரி. மஞ்சள் பூசிய வட்ட முகம், நெற்றியின் மத்தியில் பத்து பைசா அளவிற்குப் பெரிய குங்குமப் பொட்டு, வகிட்டில் பட்டையாய் தாழம்பூ குங்குமம், இடுப்பை தொட்ட பின்னலின் ஆரம்பத்தில் நெருங்கத் தொடுத்த பிச்சிப் பூவும், அத்துடன் பன்னீர் ரோஜா, நந்தியா வட்டையும் சேர்த்து வைத்திருந்தவர் மங்கலகரமாகக் காட்சியளித்தார்.

மனைவியின் அழகில் நடேசனுக்கு எப்போதும் ஓர் மயக்கம் உண்டு. இப்போதும் அவரை உரசி நின்று, “கண்டிப்பா இந்தப் பஞ்சாயத்துக்கு இன்னைக்குப் போகணுமா?” என்று கேட்டார்.

“நல்லா கேட்டீங்களே கேள்வி. காரியம் கெட்டுச்சு போங்க. ஒழுங்கா தள்ளி நில்லுங்க சொல்லிட்டேன்.” என்று கணவரின் மார்பில் கை வைத்து தள்ளி விட்டார். அவரோ சிரிப்புடன் மேலும் நெருங்கி நிற்க, “எம்புட்டு நாளு இழுத்தடிச்சு என்னென்னமோ பிரச்சனைய பண்ணி, இன்னைக்குத்தான் மனசு வந்து உங்க தம்பி பஞ்சாயத்துக்கு அவரே வர்றேன்னு கூப்பிட்டு விட்டிருக்காரு. இப்போ நாம போகாம இருந்தா நல்லாருக்குமா சொல்லுங்க?” என்று அவர் கேட்க, “ம்ம், போகணும்த்தேன். இன்னைக்குப் போய் எல்லாப் பிரச்சினைக்கும் ஒரு முடிவு கட்டிட்டு வந்துருவோம். சொத்து என்னா சொத்து, நாளைக்குப் போகும் போது நாம தலையிலயா தூக்கிட்டுப் போகப் போறோம். நமக்குப் பின்னால நாளைக்கு நம்ம பிள்ளைங்க இப்படிச் சண்டை சச்சரவு இல்லாம நிம்மதியா இருந்தா போதும் சாவித்திரி” என்று மனைவியின் முகம் பார்த்துச் சொன்னார்.

“அதைத்தானேங்க நானும் ஏழு வருஷமா சொல்லிட்டு இருக்கேன்.”

“அப்போ சொத்த விட்டுக் கொடுத்துருவோமா சாவி?”

“யாருக்கு மாமா குடுக்கப் போறோம். உங்க தம்பிக்குதானே குடுக்கப் போறோம்? அந்தப் பிள்ளைங்களும் நம்ம பிள்ளைங்க போலதானே? போகட்டும் விடுங்க. மனசார விட்டு குடுத்துருவோம்” என்ற மனைவியைப் பெருமை பொங்க பார்த்தார் நடேசன். எத்தனை பெண்களுக்கு இப்படிச் சுளையாகச் சொத்தை தூக்கி கொடுக்க மனம் வரும்? மனைவியை மெலிதாக அணைத்து, கன்னத்தில் ஆசையாக முத்தமிட்டார்.

அந்நேரம், “அம்மா, அப்பா” என்று கத்திக் கொண்டே வீட்டுக்குள் வந்தார்கள் அவர்களின் செல்ல சீமாட்டிகள்.

சாவித்ரிக்கு ஒரே வெட்கமாகி போனது.

“ஐயோ, உங்களோட. பிள்ளைங்க இருக்கையில” என்று அவர் முணுமுணுக்க, “நம்ம பிள்ளைங்கதானே சாவி. அதுங்க பார்த்தா என்ன? அம்மா மேல எம்புட்டு பாசமா இருக்கார் அப்பான்னு நாளைக்குப் பெருமையா பேசும்ங்க” என்று சொல்லிக் கொண்டே சின்னவள் கீதாவை தூக்கிக் கொண்டார்.

“கீய வுழுந்துட்டேன்ப்பா.” இன்னும் மழலை மறையாத குரலில் அப்பாவிடம் புகார் படித்தாள் மூன்றரை வயது கீதாஞ்சலி.

“நா தள்ளி வுடலப்பா பாப்பாவேதான் ஊஞ்சல்ல இருந்து தவ்வி வுழுந்தா” என்று வேகமாகக் கவிதா சொல்ல, நடேசன் சிரிப்புடன், “சரிடா குட்டி, ஒன்னுல்ல, ஊஞ்சல அடிச்சுப்புடலாம்” என்று தன் இரண்டு பெண்களையும் சமாதானம் செய்யத் தொடங்கினார். சாவித்ரி மகளின் காயத்தைக் கழுவி, துடைத்து, தேங்காய் எண்ணெயில் மஞ்சளை குழைத்துச் சிராப்பில் போட்டு விட்டார்.

லேசாக ரத்தம் கசிந்தபடியிருக்க அவருக்கு மனத்தை என்னவோ செய்தது. இந்நேரம் அவரது மாமியார் இருந்திருந்தால், “ரத்தத்த பாத்துட்டீங்க, சகுனம் சரியில்ல” என்று வெளியே அனுப்பி இருக்க மாட்டார்.

“நேரமாகுது சாவித்ரி, போலாம். சும்மா அவங்களைக் காக்க வைக்க வேணாம். வா, வா” என்று நடேசன் பெரிய மகளின் கைப் பிடித்துச் சொல்ல, சரியெனத் தலையசைத்து சிறிய மகளைத் தூக்கிக் கொண்டார்.

வீட்டுக் கூடத்தில் இருந்த பெரிய அலமாரியில் இரண்டு அடுக்கு இடத்தை ஒதுக்கி சாமி படங்கள் வைத்திருந்தார்கள். அதுதான் அவர்களின் பூஜையறை. கணவர் பிள்ளைகளுடன் போய் அங்கே நின்றார் சாவித்ரி.

“அப்பனே முருகா” என்று அவர் கைப் கூப்பி மனமுருக வேண்டிக் கொள்ள, நடேசனும் அவர்கள் செல்லும் காரியம் சுமூகமாக முடிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.

“எனக்குப் பழனி கோவிலுக்கு மொட்டை போடுறேன்னு வேண்டிக்காதப்பா” பெற்றோரை நன்கு அறிந்தவளாக வேகமாகச் சொன்னாள் ஒன்பது வயது கவிதா. அதைக் கேட்டு வாய் விட்டு சிரித்து மகளைத் தோளோடு சேர்த்தணைத்துக் கொண்டார் நடேசன்.

“எம் புள்ள ஆசைக்கு முன்னால எனக்கு எதுவும் பெருசில்ல. நமக்கு என்னா கொடுக்கணும், எப்போ கொடுக்கணும்னு சாமிக்குத் தெரியும்டா குட்டி. நாம நேர்த்திக் கடன் வைக்காமயே அவரு நிறைவேத்தி வைப்பார். என்னா?” என்று அவர் சொல்ல, அப்பா சொன்னது முழுதாக மனத்தில் ஏறாவிட்டாலும், இப்போதைக்குத் தனக்கு மொட்டை போட மாட்டார்கள் என்ற நிம்மதியுடன் வேகமாகத் தலையசைத்தாள் அவள்.

இப்போது தூறல் நின்றிருக்க, நால்வரும் வீட்டை பூட்டிக் கொண்டு அதே ஊரின் மற்றொரு கடைக்கோடியில் இருந்த நடேசனின் சித்தப்பா சாரங்கபாணி வீட்டிற்குச் சென்றார்கள்.

நடேசனுக்குக் கணேசன் என்றொரு தம்பி இருக்கிறார். அவரும் மணம் முடித்து மனைவி மக்களுடன் அதே ஊரில்தான் வசிக்கிறார். அவர்களின் அக்கா செல்வராணியையும் அதே ஊரில் உறவுக்குள்தான் கொடுத்திருக்கிறார்கள்.

ஒன்பது வருடங்களுக்கு முன்பு அவர்களின் தந்தை உயிரோடு இருக்கும் போதே சொத்துக்களை மகன்கள் இருவருக்கும் பிரித்துக் கொடுத்து விட்டார். மகளுக்குத் திருமணத்துக்குப் போட்ட நகை, சீர், தாயின் நகைகள் எனப் பேசி அவருக்குச் சொத்தில் பங்கு கொடுக்கவில்லை.

எட்டு வருடங்களுக்கு முன்பு திடீரெனத் தவறியிருந்தார் அவர்களின் தந்தை. சகோதரர்கள் இருவருக்கும் அப்போது ஆரம்பித்தது பிரச்சினை. அவர்களுக்கு இடையில் நடுவராக நின்று தகராறு ஆகாமல் பார்த்துக் கொண்டார் அவர்களின் தாய்.

மறுவருடம் அவரும் தவறிட, அந்தத் துக்கம் தீரும் முன் பகையை மோசமாக வளர்த்துக் கொண்டார் கணேசன்.

பெற்றோர் வாழ்ந்த பூர்வீக வீடு நடேசனுக்குக் கொடுத்திருந்தார்கள். அவர் அங்குதான் வசிக்கிறார். கணேசன் திருமணம் முடிந்த கையோடு தனியாகச் சென்று விட்டார். உள்ளூரில் அது பெற்றவர்களுக்குத் தலைகுனிவு. அதனால் ஊருக்குள் அவர்களுக்கு இருந்த இருபது செண்டு காலி மனையை அவருக்குக் கொடுத்திருந்தார்கள்.

அப்போதே பெரியதாக அந்த ஊருக்கு நவீனமாகச் சகல வசதிகளுடன் வீடு கட்டிக் கொண்டார் அவர்.

அவருக்கு ஊருக்குள் மனை கொடுத்ததால், நடேசனுக்கு வீட்டையும், அவர் பயிர் செய்து கொண்டிருந்த கிணறும், மோட்டார் தோட்டமும் சேர்ந்து அமைந்த பத்து ஏக்கர் காட்டையும் கொடுத்தார்கள். அதற்காகக் கணேசனுக்கு ஒன்றும் குறைவாகக் கொடுத்து விடவில்லை. அவருக்கும் அதே அளவுதான் விவசாய நிலமும் கொடுத்திருந்தார்கள். ஆனால், நடேசனது போலப் பொன் விளையும் பூமி அல்ல அது என்பதுதான் அவரது பிரச்சனையாக இருந்தது. எப்போதும் அடுத்தவர் வசமிருப்பதற்குத்தான் அதிக மதிப்பு கொடுப்பர் சிலர். கணேசன் அவ்வகையைச் சேர்ந்தவர்.

ஆரம்பத்தில் அம்மா, அப்பாவிடம் முறையிட்டார். அவர்கள், “எப்பா உனக்குக் குடுத்திருக்கக் காடும் நல்லா விளையுற பூமிப்பா. உங்கண்ணேகிட்ட போட்டி போடாதப்பா” என்று நயமாகப் பேசி அனுப்பினார்கள். அவரும் நல்லவிதமாகத்தான் சென்றார்.

அம்மா இறந்து அவரது சொற்ப நகைகளை அக்கா செல்வராணிக்கு கொடுத்ததை அவரின் மனைவி வசந்தியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

“உங்கம்மா நகைங்கள உங்கக்காக்கு குடுத்துட்டாங்க. உங்க வீடு உங்க அண்ணனுக்குப் போயாச்சு. நமக்கு நடுத்தெரு, பட்டை நாமம்தேன். உங்களுக்கு வாக்கப்பட்டு வந்து நான் என்னத்த அனுபவிச்சேன்” என்று புலம்பினார். புலம்பல் பின்னால் பின் பாட்டு போலத் தினமும் தொடர அண்ணனிடம் மல்லுக்கு நின்றார் அவர்.

“நீயென்னப்பா புரியாம பேசுற? பயிர் பண்ணிட்டு இருக்கக் காட்டைக் கேட்கறியே நியாயமா?” என்ற வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்ட காலமெல்லாம் போய்க் கைகலப்பாகி, கடைசியில் இரண்டு குடும்பத்துக்கும் பேச்சு வார்த்தையே இல்லாமல் போனது. இத்தனைக்கும் ஒரே ஊரில் இருக்கிறார்கள். அடிக்கடி எதிர்பட நேரும், இருவரின் பிள்ளைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்கிறார்கள். நடேசனை போலவே அவர் மகளும் கள்ளம் கபடமில்லாமல் சித்தப்பா மக்களிடம் பேசிடுவாள். அவர் மக்கள் இவளை விடப் பெரியவர்கள். ஆனாலும் பெரிய மனத்தில்லாமல் முகம் திருப்பிச் சென்றிடுவார்கள். பெற்றோரின் பேச்சை கேட்கும் பிள்ளைகள், அவர்களையும் எப்படிக் குறை சொல்ல முடியும்?

கவிதாவுக்குதான் வருத்தமாகி போகும். இப்போதெல்லாம் அதுவும் பழகி விட்டது. அவளும் அன்போ, வம்போ செய்யாமல் ஒதுங்கிக் கொள்கிறாள்.

“அக்கா, அண்ணா பேசலன்னாலும் நீ பேசணும் கவி குட்டி. அவங்கள முறைக்கக் கூடாது” என்று மகளுக்கு அறிவுரை சொல்வார் சாவித்ரி. மணமாகி ஐந்தாண்டுகள் கழித்துத் தவமாய்த் தவமிருந்து பெற்ற மகளின் மேல் கொள்ளை பாசம் அவருக்கு. 

அவருக்குப் பிள்ளை இல்லாத காலத்தில் கணவரின் தம்பி மக்களைத்தான் கொஞ்சி தீர்த்திருக்கிறார். அவரிடம்தான் வளர்ந்தார்கள். அந்தப் பாசம் அவருக்கு இன்னமும் இருந்தது. எப்போதும் இருக்கும்.

error: Content is protected !!
Scroll to Top