உதய ராகம் – 22 (3)

அவர்களின் புது வீட்டை அடைந்திருந்த உதய், வண்டியை வேகமாகப் பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு, அவதி அவதியாக இறங்கி உள்ளே ஓடினான்.

வீட்டிற்குள் நுழைந்ததும் அவன் கண்டது, நடுஹாலில் இருந்த நீண்ட கண்ணாடி ஊஞ்சலில் படுத்து ஆடிக் கொண்டிருந்த மனைவியைத் தான்.

அவனுக்குப் பிடித்த மைசூர் பட்டு அணிந்திருந்தாள். காதில் பெரிய ஜிமிக்கி, கழுத்தை ஓட்டிய ஆரம், கை நிறையக் கண்ணாடி வளையல்கள், காலில் கொஞ்சமே கொஞ்சம் முத்துக்கள் பதித்த மெல்லிய வெள்ளிக் கொலுசு. அவளின் நீண்ட பின்னலை நிறைத்திருந்த மல்லிகைப் பூ. சரம் சரமாக அவள் பின்னலோடு பிணைந்திருந்தது.

அவன் மனதை அப்படியே மொத்தமாக மயக்கியவளின் பாதம் பற்றிக் கொலுசை வருடிக் கொடுத்தான்.

“உதய்..” என்று சட்டென்று எழுந்து அமரப் போனாள் ராகவி.

“படு பட்டே” என்று முன்னே நகர்ந்து அவளின் தலையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு, அவனும் ஊஞ்சலில் அமர்ந்தான்.

“ஷ்ஷ்…ஆஆ..” என்று அவனது கால் விரல்களைக் குனிந்து தேய்த்து விட்டுக் கொண்டான் உதய்.

“ஷீ போடும் போது மெட்டிப் போட்டா, அது காலை அழுத்த தான் செய்யும். அதை நீங்க கழட்டி வச்சா தான் என்ன?” அவன் வலி பொறுக்க முடியா எரிச்சலில் சொன்னாள் ராகவி.

“அது முடியாது, பட்டே” ஒரேடியாக முடித்துக் கொண்டான் உதய். அவர்களின் திருமணத்தின் போது அவனுக்கு அணிவித்த மெட்டியை இன்னும் கழற்றாமல் அணிந்து கொண்டிருக்கிறான் அவன். அதில் ஏதோ சென்டிமென்ட் அவனுக்கு.

“என்ன கோபம்?” குனிந்து அவள் முகம் பார்த்துக் கேட்டான்.

‘ஓ, கோபமா இருக்கோம். இல்ல? அதை மெயின்டெயின் பண்ணு ராகவி’ தனக்குள் சொல்லி கொண்டு எழுந்து அமரப் போனாள் அவள்.

அவள் தோள் பிடித்து இறுக்கி தன் மடியில் கிடத்தினான் உதய்.

“இப்படி இருந்தே சொல்லு” என்றான்.

அவன் கைகளைப் பட்டென்று தள்ளி விட்டு எழுந்து நின்றாள் ராகவி.

“ஃபேஸ்புக், ட்விட்டர் எல்லாப் பக்கமும் உங்க ஃபோட்டோ தான் இருக்கு. பொண்ணுங்க எல்லாம் கிரஷ், ஹாண்ட்சம் ஏசிபின்னு, உங்க ஃபோட்டோ ஷேர் பண்ணி கொண்டாடிட்டு இருக்காங்க. எங்க பார்த்தாலும் உங்க ஃபோட்டோ தான். என்ன நடக்குது? உங்களை யார் பேஸ்புக்கில் ஃபோட்டோ போட சொன்னது? இதுல ஐயா சைபர் செல் வேற…” கடுங்கோபத்துடன் சொன்னாள்.

அவனுக்கு அப்போது தான் பேச்சி முத்துவின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.

சொந்த மகளிடமே கணவனை விட்டுத் தர மாட்டாள். இதில் யார், யாரோ கொண்டாடினால் அவ்வளவு தான். அவனால் மனதில் மட்டுமே புலம்ப முடிந்தது.

இரண்டு நாட்கள் முன்பு கூட, “எப்ப பாரு, என்ன மகளையே கொஞ்சிட்டு இருக்கீங்க? எங்களை எல்லாம் பார்த்தா ஆளா தெரியலையா?” என்று அவனிடம் கத்தி விட்டு போய், முகம் திருப்பிப் படுத்துக் கொண்டாள். அவளைச் சமாதானப்படுத்த அவன் பட்ட பாடு.

“ஐயோ” மெலிதாக முணுமுணுத்தான்.

மனைவி தான் இப்படி என்றால், மகள் அதற்கும் ஒரு படி மேலே போய், “என்னைப் பட்டு சொல்லு ப்பா” என்று கொஞ்சிக் கேட்க,

“எங்க, கூப்பிட்டு தான் பாரேன்” எனும் பார்வையுடன் அவனை முறைத்துக் கொண்டிருந்தாள் ராகவி.

“அது அம்மா பேரு டா, செல்லக் குட்டி. வேற யாரையும் அப்படிச் சொல்லி கூப்பிடக் கூடாது” என்று மகளிடம், சமாளித்து முடிப்பதற்குள் அவனுக்கு நாக்கு தள்ளி விட்டது.

இப்போது எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல், “அது ஒரு விழிப்புணர்வுக்காக, சைபர் க்ரைம் பத்தி பேசி வீடியோ போட்டோம் இல்ல மா. அதுல….” மேலே சொல்ல முடியாமல் இழுத்தான்.

அவனுக்கு நெருக்கத்தில் வந்தவள், “இதுக்கு எல்லாம் உங்களுக்குப் பனிஷ்மென்ட் இருக்கு. ஞாபகம் வெச்சுக்கோங்க” எச்சரித்தாள்.

வேறு வழியின்றிப் பாவமாக முகத்தை வைத்து, தலையைத் தலையை ஆட்டினான் உதய்.

அதைப் பார்த்ததும் அவளுக்குச் சிரிப்பு வந்து விட்டது.

“உதய்..” என்றாள் அவனை நெருங்கி நின்று,

“என்ன பட்டே” என்றான், அவளின் இடுப்பை வளைத்து, தன் பக்கமாக இழுத்து,

“கண்ணை மூடுங்க” என்றாள். அப்படியே செய்தான் அவன்.

ஏற்கனவே தயாராகக் கொண்டு வந்திருந்த ஸ்டெதஸ்கோப்பை எடுத்து வந்து அவனின் காதில் மாட்டினாள்.

“பட்டே..‌ என்ன பண்ற?” என்றவனை, “பேசாம கேளுங்க” என்று ஸ்டெதஸ்கோப்பின் மறு முனையை அவளின் வயிற்றில் பதித்து, “கண்ணைத் திறந்து பாருங்க உதய், இதயத்துடிப்பு கேக்குதா?” என்று கண்களில் ஆர்வம் மின்ன, புன்னகையுடன் கேட்டாள்.

ஆனால், அவனுக்கு இதயத்துடிப்பு எல்லாம் கேட்கவில்லை. மாறாக, அவனது இதயத்துடிப்பு தான் எக்கச்சக்கமாக எகிறி இருந்தது.

“பட்டே, உண்மையாவா?” உணர்ச்சி மிகுந்த குரலில் கேட்டான்.

“ம்ம்” என்று கண் சிமிட்டி, புன்னகைத்தாள்.

அவளை அப்படியே இழுத்து அணைத்துக் கொண்டான் உதய்.

ஸ்டெதஸ்கோப் எங்கோ ஒரு மூலையில் போய் விழுந்திருந்தது. நாளை அதைத் தேடப் போவது ராகவன் தானே. அவர்களுக்கு என்ன கவலை.

“எவ்வளவு நாள்? எத்தனை மாசம்?” அவள் முகத்தைக் கைகளில் ஏந்தி கேட்டான்.

“அம்பது நாள் ஆகியிருக்கு.” என்றாள், அவன் கண்களை நேராகப் பார்க்க முடியாமல்,

சிரித்துக் கொண்டே அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான் உதய்.

“நாளைக்கு டாக்டர் போய்ப் பார்ப்போம், பட்டே” என்றான்.

சிறு வயதில் தனித்து விடப் பட்டதாலோ என்னவோ, உதய் குறைந்தது மூன்று குழந்தைகளாவது வேண்டும் என்று ராகவியிடம் கெஞ்சிக் கேட்டிருக்க, அவன் கேட்டு, அவள் எதை மறுக்கப் போகிறாள்.

இதோ, இரண்டாம் முறையாகப் பெற்றோர் ஆகப் போகிறார்கள்.

ஆனால், மூன்றாவது குழந்தை.

“தேங்க்ஸ் பட்டே. ஐ லவ் யூ” அவளை இறுக்கி அணைத்துக் கொண்டு காதில், காதல் சொன்னான்.

மனைவியை மீண்டும் காதலிக்கத் தொடங்கினான் உதய்.

கணவனின் கைகளுக்குள் அடங்கி, அவன் காதலில் கரைந்து போனாள் ராகவி.

அவர்களின் காதலுக்கு, கண்ணாடி வளையலின் சிணுங்கல்களும், கொலுசு மணிகளின் கொஞ்சலும், இணைந்து, அந்தத் தருணத்தை, இன்பத்திலும் இன்பமாய் மாற்றிக் கொண்டிருந்தன.

மல்லிப் பூக்கள் மணம் பரப்பி, சூழலுக்கு மேலும் இனிமை சேர்த்துக் கொண்டிருந்தது.

இந்த இனிமை அவர்களின் வாழ்வில் எப்பொழுதும் நிறைந்திருக்கும்.

இருவரின் நெஞ்சமதில் நிறைந்திருக்கும் நேசமது, என்றென்றும் அவர்களின் வாழ்வில், இனியதொரு ராகமாய், உதயராகமாய் என்றென்றும் உதித்துக் கொண்டே இருக்கும்.

தேய்பிறை நாட்களில் நீ என்னைக் காதலி

வளர்பிறை நாட்களில் நான் உன்னைக் காதலிக்கிறேன்

முழுநிலவாய் என்றென்றும் நம் காதலிருக்கட்டும்!!!

சுபம்

error: Content is protected !!
Scroll to Top