“என்ன நடந்ததோ, அதை அப்படியே சொல்லுங்க. கூட்டியோ, குறைத்தோ வேணாம்” என்றான் தெளிவாக, அவனை முறைக்க முயற்சித்துத் தோற்றாள் அவள்.
“ஏன் அப்படிச் சொல்றீங்க?” என்று அவள் கேட்க,
“உதய் குடும்பம் பிரச்சினை பண்ண விரும்பனாங்கன்னு புரியுது. அவங்களுக்கு ஏதோ இஸ்யூ இருந்து இருக்கு. ஆனா, அதுக்காக ஒரு பயிற்சி மருத்துவரை மாப்பிள்ளையாக்கி, அவங்க வீட்டு பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க முடிவெடுக்க மாட்டாங்க தானே?” என்று அவன் புருவம் உயர்த்த, மனதில் அவனுக்கு ஒரு சபாஷ் போட்டுக் கொண்டாள் ராகவி.
“சரியா தான் கெஸ் பண்ணி இருக்கீங்க. எங்க குடும்பத்துக்கும் அந்தச் சந்தேகம் இருந்தது. என்ன தான் ராகவன் டாக்டர்னாலும் வருமானம் வேணும் இல்ல? அது இல்லாம குடும்பம் எப்படி நடத்துவான்?” அலுத்துக் கொண்டவள்,
“நான் பண்ண ஒரு சின்னத் தப்பு, கவனக் குறைவு. எங்க குடும்பம் மொத்ததுக்கும் அப்படி ஒரு தலைவலியை கொடுத்துச்சு.”
“உதய் குடும்பம் உங்ககிட்ட டிமாண்ட் பண்ணது தப்பு தான். மத்தபடி அவங்க குடும்பம் எப்படி?, நல்ல குடும்பம் தானே?”
“நாங்க விசாரிச்சதே லேட்.” என்றவள்,
“அப்பா விசாரிச்ச வரை எல்லோரும் நல்ல குடும்பம், நல்ல குடும்பம்னு தான் சொல்லி இருக்காங்க.
ஆனா, சில நேரங்களில் நாம இந்த நல்லக்கு டைரக்ட் அர்த்தம் எடுத்துக்கறோம். அவனுக்கு அந்த ஆக்சிடென்ட்டில் நல்ல அடிப்பா… இதுக்கு என்ன அர்த்தம் சொல்லுங்க? நல்ல மழை சொல்றோம், நல்ல பாம்பு சொல்றோம். இதுல வர இந்த நல்லக்கு எல்லாம் அர்த்தம். ரொம்ப நல்லதுன்னு இல்லையில்ல?
எப்படி நல்ல பாம்புன்னா மிக அதிகமான விஷயம் உடைய பாம்பு. ஆபத்தான பாம்புன்னு எடுத்துக்கணுமோ, அது போலத் தான் நாங்க உதய் குடும்பத்தைப் பத்தி சொன்னதையும் எடுத்து இருக்கணும்னு நினைக்கறேன்…” அவள் நக்கலாக நீண்ட விளக்கத்தைச் சொல்லி முடிக்கும் முன், விருட்டென்று இருக்கையைப் பின்னுக்குத் தள்ளி விட்டு எழுந்து விட்டான் அவன்.
என்னவென்பது போலத் திடுக்கிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள் ராகவி.
“வாங்க, வெளில உட்கார்ந்து பேசலாம்” என்றான்.
‘இப்ப அது என் குடும்பம். நீ இப்படிப் பேசக் கூடாது ராகவி’ என்று மானசீகமாக மண்டையில் கொட்டிக் கொண்டாள் ராகவி.
அவர்கள் பேசிக் கொண்டே உணவகத்தில் இருந்து வெளியில் வந்து, மீண்டும் நீச்சல் குளத்தின் அருகில் இருந்த இருக்கைகளில் சென்று அமர்ந்தார்கள்.
அந்தச் சாய்விருக்கையில் நன்றாகக் கால் நீட்டி சாய்ந்து அமர்ந்தவன், “இப்போ சொல்லுங்க” என்றான்.
சில நொடிகள் யோசித்து விட்டு முதலில் இருந்து சொல்லத் தொடங்கினாள் ராகவி.
“சில விஷயங்கள் இப்படித் தான் நடக்கும். இந்த ஆர்டரில் தான் நடக்கும்னு நாம அதுவரை நம்பிட்டு இருந்திருப்போம். ஆனா, திடீர்னு அது நமக்கு மட்டும் வேற மாதிரி நடந்தா எப்படி இருக்கும் சொல்லுங்க? ஒரு மாதிரி மண்டை குழம்பி போகும் இல்ல? எனக்கு அப்படித் தான் இருந்தது.
என் ப்ரெண்ட் மலருக்கு வரன் பார்க்கும் போது, அவங்க வீட்ல மாப்பிள்ளை எப்படிச் சல்லடை போட்டு தேடினாங்கன்னு எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. அவ அண்ணன் ரெண்டு பேரும் பையனை ஃபாலோ பண்ணி ரிபோர்ட் கொடுத்ததுக்கு அப்புறம் தான் பொண்ணு பார்க்கவே வந்தாங்க அந்தக் குடும்பம். அப்புறம் பூ வச்சு, பரிசம் போட்டு, நிச்சயம் பண்ணி… ஆனா எனக்கு இப்படி எல்லாம் எதுவுமே நடக்கல.
நிச்சயம் ஆனதுக்கு அப்புறம் அந்தப் பையன் மலர் கிட்ட பேசாத நாள் கிடையாது, அவங்க பார்க்காம இருந்ததும் கிடையாது. ஆனா எனக்கு..?” உதடு பிதுக்கினாள்.
“உதய் பிஸியா இருப்பார்னு என் மனசுக்கு புரிஞ்சுது. ஆனா, வீட்ல நடக்கறது எதுவும் தெரியாம இருக்கறது நல்லது இல்லையே? அந்தக் கோபத்தில் தான் அவர்கிட்ட நான் அப்படிப் பேசினது.
எங்க வீட்ல எனக்காகத் தான் ரொம்ப யோசிச்சாங்க. ஆனா, எனக்கும், ராகவனுக்கும் பிரச்சனையை நேரடியா டீல் பன்றதில் தான் விருப்பம். அதான் நாங்க உதயை பார்க்க போனோம்.”
“ம்ம்..” என்றான்.
ராகவி அன்றைய நாளை மனதில் கொண்டு வந்தாள், உதடுகள் தாமாக நடந்ததை உச்சரிக்கத் தொடங்கின.
காலை மணி எட்டாகியிருந்தது. இரவு வெகுநேரம் கழித்தே உறங்கியதால் உடல் இன்னும் உறக்கத்திற்குக் கெஞ்சியது. கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டே டைனிங் டேபிளில் முன் அமர்ந்தாள்.
“என்ன செல்லம் இன்னைக்குச் சீக்கிரம் கடைக்குக் கிளம்பிட்ட?” என்றபடி அவளுக்கான காபியுடன் அடுப்படியில் இருந்து வந்தார் விசாலாட்சி.
“ம்ம், கொஞ்சம் வேலை இருக்கு ஆயா” என்று விட்டு காஃபியை அருந்த தொடங்கினாள்.
“மனசைப் போட்டுக் குழப்பிக்காத செல்லம். எல்லாம் நாங்க, பெரியவங்க பாத்துப்போம். ஒரு ரெண்டு நாள் டைம் கொடு. எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்.” என்றார் பேத்தியின் தலையைக் கோதி, “ம்ம்” என்று மட்டுமே அவளால் சொல்ல முடிந்தது.
அன்றைய தினம் அவள் எதிர்பார்த்ததை விட வேகமாக ஓடி மறைய, மாலை தொடங்கும் சமயம் வந்து சேர்ந்தனர் அவளின் தோழிகள். அவள் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்து விட்டான் ராகவன்.
தோழிகளைக் கடையைக் கவனிக்கச் சொல்லி விட்டு, உதயை பார்க்க விரைந்தனர் இருவரும். காரில் ஏறி அமர்ந்ததும் அவனது போனை அவளிடம் தூக்கி போட்டான் ராகவன்.
அவன் சொன்னதைச் செய்ய முரண்டியது அவள் மனம்.