உதய ராகம் – 9 (1)

“எதுக்கு இப்படிச் சிரிக்கறீங்க?”

“என்னவோ மிஸ் ஆகுறது போல இருக்கே?” அவள் முறைப்பதை பார்த்து விட்டு கேட்டான் அவன்.

“ம்ம், இருக்கும், இருக்கும்”

“நீங்க நடந்ததை முழுசா சொல்லாதது போல இருக்கு.

முதல்ல சுஹாசினி எப்படி அவரைப் பத்தின டீட்டெயில்ஸ் அவ்வளவு ஈஸியா கண்டுப்பிடிச்சாங்க? அப்புறம் நீங்க, அதெப்படி சட்டுனு அவர் முன்னாடி போய் நின்னு, அப்படிப் பேச முடியும் உங்களால? வேற எதுவும் பேசிக்கலையா நீங்க ரெண்டு பேரும்? கல்யாணத்தை நிறுத்திட்டேன்னு சொன்னதுக்கு அப்புறமும் எப்படி உதய் உங்களை அமைதியா போக விட்டார்?”

“எப்பா எத்தன கேள்வி?” என்று அவள் அலுத்துக் கொள்ள, சிரித்தான் அவன்.

“என் வேலை அப்படி, எனக்குக் கேள்விகள் கேட்டே பழகிடுச்சு.” என்று புன்னகைத்தான்.

“இதுவரை நீங்க சொன்னதில் இருந்து கணிச்சு சொல்றேன். ராகவி, அதாவது நீங்க, சட்டுனு எதையும், யாரையும் யோசிக்காம தூக்கிப் போட்டுட்டு வர ஆள் கிடையாது. எதையும் நிதானமாக யோசிச்சு முடிவெடுக்கற ஆளா தான் தெரியறீங்க. அதனால தான் என்னால நீங்க உதய் கிட்ட அப்படி எடுத்தெறிந்து பேசி இருப்பீங்கன்னு நம்ப முடியல. அதுவும் இல்லாம, அவரும் அப்படி உங்களைப் போக விட்டிருக்க மாட்டார்னு தோணுது” என்றான்.

“கதையை சரியா கேட்கலை போல நீங்க. உதய் விஷயத்தில் நான் முடிவுகளை உடனுக்குடன் தானே எடுத்தேன். யோசிக்கவேயில்லையே” சலித்துக் கொண்டு, பார்வையைத் திருப்பினாள்.

நீச்சல் குளத்தின் மேற்பரப்பில் ஸ்மூத் லாண்டிங் செய்து, சிறகுகளைப் படபடவென்று அடித்து, நீரை தன் மேல் தெளித்து, தலையைத் தண்ணீரில் இரு முறை அமிழ்த்தி எடுத்து, தலையைச் சிலுப்பி, கண்களைச் சுழற்றி சுற்றுப்புறம் பார்த்து, மீண்டும் இறகுகளை நீரில் நனைத்து என அழகாகக் குளியல் போட்டுக் கொண்டிருந்த பறவையை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ராகவி.

“ம்க்கும்” தொண்டையைச் செருமினான்.

“என்ன?” என்றாள்.

“மணி ரெண்டாகப் போகுது. லஞ்ச் சாப்பிடலாமா? உங்களுக்குப் பசிக்கலையா?” என்று அவன் கேட்க, மெல்ல கைகளைத் திருப்பி மணி பார்த்தாள் ராகவி. 1.30 என்றது கடிகாரம்.

“பசிக்கலை. ஆனா, சாப்பிடணும். வாங்க போகலாம்” என்று மெல்ல எழுந்துக் கொண்டாள் அவள்.

அவனும் எழுந்து அவளோடு நடந்தான்.

ரிசார்ட்டினுள் இருந்த உணவகத்திற்குள் நுழைந்து இருக்கை தேடி அமர்ந்தனர்.

மங்களூரில் மீன் உணவுகள் மிகப் பிரபலம்.

அவர்களது டேபிளின் அருகில் வந்து நின்ற பணியாளரிடம் இருவருக்குமான உணவினை சொல்லி அனுப்பினான் அவன்.

“சுஹா, எங்க மாமனாருக்கு கால் பண்ணி உதய் வீட்டு அட்ரஸ் வாங்கினா. “சார் உங்களுக்குக் கூரியர் வந்திருக்கு. பெரம்பூரில் இருக்கேன். அந்தத் தெரு தானே சார்?”, அப்படினு அவ ப்ரெண்ட்டை விட்டு போன் பண்ணி, அட்ரஸ் வாங்கியாச்சு” அவள் சொன்னதைக் கேட்டுத் தலையில் அடித்துக் கொண்டான் அவன்.

“கேடிங்க” என்றான் சிரித்துக் கொண்டே,

“ராகவ், அவரோட நம்பர் கொடுத்து இருக்கான். இவ உடனே ராகவன் பேர் போட்டு உதய்கு புக் வாங்கிக் கூரியர் பண்ணவும் செஞ்சா. செய்யறதை சரியா செய்யணும் பாருங்க.” என்றாள்.

எதையோ வாய்க்குள் முணுமுணுத்து விட்டுத் தண்ணீர் குடித்தான் அவன்.

மறுநிமிடம் அவர்கள் ஆர்டர் செய்த உணவு வந்து விட, அமைதியாய் தனக்கும் அவனுக்கும் பரிமாறிய படி உண்ணத் தொடங்கினாள் ராகவி.

மீன் காஸி என்று அழைக்கப்படும் மீன் குழம்பு. உரைப்பும், புளிப்புமாக அட்டகாசமாக இருந்தது. கூடவே இருந்த பொறித்த நெத்திலி, வாவல் மீன் அத்தனை ருசி. ரசித்து உண்டாள் அவள்.

“மீன் நேரடியாக மீனவர்கள் கிட்ட இருந்து வாங்குறதா சொன்னாங்க. அதான் இவ்வளவு டேஸ்டா இருக்கு. சாப்பிடுங்க” என்றான்.

மெலிதாகப் புன்னகைத்து விட்டு, உண்ண ஆரம்பித்தாள்.

உணவை எப்போதும் ரசித்து, ருசித்து உண்பவள் ராகவி. பெயருக்குக் கொரிப்பது எல்லாம் அவளது அகராதியில் கிடையவே கிடையாது.

அவள் உண்பதை பார்த்து விட்டு, குழம்பு கிண்ணத்தை அவள் பக்கமாக நகர்த்தி வைத்தான்.

நன்றாக வயிற்றுக்கு உண்டு விட்டே, அவனை நிமிர்ந்து பார்த்தாள் ராகவி.

“பாயாசம் இருக்கு பாருங்க” என்று எடுத்துக் கொடுத்தான். அவள் ஒரு ஸ்பூன் பாயாசத்தைக் குடித்து விட்டு, கண்களை மூடி அதை ரசித்து விழுங்க, சிரித்தான் அவன்.

“உதய், அவரோட ஃபோட்டோ இருக்கா? பார்க்கலாமா?” என்று அவன் திடீரென்று கேட்க, ஒரு நொடி ஒன்றும் புரியாமல் விழித்து விட்டு,

“எப்போதும் கண்களுக்குள்ளே இருப்பவனை எதற்காகக் கைகளில் சுமந்து திரிய வேண்டும்?” என்றாள் மிகத் தீவிரமாக. தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தவனுக்குப் புரையேறியது.

சமாளித்து, “வாவ்” என்றான் வியப்புடன்.

“உங்க, உங்க மனைவி.. அவங்க ஃபோட்டோ இருக்கா?. அவங்க என்ன பண்றாங்க?”

அவளது தடுமாற்றத்தை ரசித்தபடி, “ஓ இருக்கே. அப்புறமா எடுத்துட்டு வந்து காட்டுறேன். சொந்தமா பிசினஸ் பண்றா. பார்க்க கொள்ளை அழகா இருப்பா, தான் அழகுன்னே உணராத அழகு அவ. இளையராஜாவின் ஓவியப் பெண் போல இருப்பா.

ரொம்ப வளர்த்திக் கிடையாது. ஆனா, எனக்கு ஏற்ற ஹைட். லேசா தலையைச் சாய்த்தா போதும், அவளை முத்தமிட…” அவள் அதிர்ச்சியாய் கண்களை விரிப்பதைப் பார்த்து சன்ன சிரிப்புடன் பேச்சை மாற்றினான் அவன்.

“குழந்தை தனமான முகம் எல்லாம் சொல்ல மாட்டேன். அவளோட முகத்தை, அந்தக் கண்களைப் பார்த்ததும் ஒரு குழந்தையைப் போல அவள் காலடியில் என்னை மண்டியிட வைக்கும் முகம். என்னைப் பார்த்தாலே மின்னும் நட்சத்திரங்கள் அவள் கண்கள்.. செதுக்கி வைத்தது போலக் கூர் நாசி…” அதற்கு மேல் கேட்க முடியாமல், பட்டென்று கை நீட்டி தடுத்தாள் அவள்.

“போதும், போதும். கேட்டது என் தப்பு தான். ரொம்ப ஓவரா வர்ணிக்கறீங்க”

“என்னங்க நீங்க? உங்களை மாதிரி எனக்குக் கவிதையா சொல்ல வரலை தான்.… அதுக்காக இப்படியா? முழுசா சொல்ல கூட விடாம தடுப்பீங்க?” குறைபட்டுக் கொண்டான். சிரித்தாள்.

அவனை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தாள். இவனை எப்படி வர்ணிப்பது என்று தாறுமாறாய் ஓடியது அவள் சிந்தனை.

“சரி விடுங்க. நீங்க அடுத்து என்ன ஆச்சுன்னு சொல்லுங்க. இல்லையில்ல, நடந்ததை சரியா சொல்லுங்க.” என்று விட்டு, “ஆனாலும், உங்க குடும்பத்தைப் பாராட்டியே ஆகணும். ரொம்பப் பொறுமை தான் உங்களுக்கு” என்றான்.

மெலிதாக அரும்பிய புன்னகையுடன், அவள் முன் நீட்டப்பட்ட ஃபிங்சர் பௌலில் கைகளைக் கழுவி, டிஸ்யூவில் ஈரம் போகக் கை துடைத்து விட்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.

கதை சொல்ல தயாரானாள்.

error: Content is protected !!
Scroll to Top