உதய ராகம் – 8 (4)

“வேலையில் பிஸியா இருப்பேன்னு சொல்லிட்டு தான் போனார் சுஹா”

உதடு பிதுக்கி, “பாரு மலரே. இப்பவே இப்படி.. பொண்ணைக் கொடு, பையனை கொடுன்னு அவங்க சுத்தல்ல விட்டுட்டு இருக்கும் போதே கொஞ்சம் கூடப் போலீஸை விட்டுக் கொடுக்காம பேசுறான்னா…”

“சுஹா, வேணாம். நீ ரொம்பப் பேசுற” என்று அவளின் வாயை அடைத்தாள் பனிமலர்.

“மன்னிச்சிடு ராகவி. ராகவ் எல்லாம் சொன்னான். என்னால இதையெல்லாம் பார்த்திட்டு பேசாம இருக்க முடியல. கோபமா வருது. அதான் இப்படி வார்த்தைகளை விட்டுடுறேன்” மெல்ல ராகவியின் விரல்களைப் பற்றிக் கொண்டாள்.

“நீங்க ரெண்டு பேரும் சந்திச்சு, பத்து நாள் கூட ஆகலை ராகவி. அதுக்குள்ள உன் வாழ்க்கையை மொத்தமா குத்தகைக்கு எடுக்கப் பார்க்கறாங்க. இந்தப் போலீஸ் தனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி, கண்டுக்காம சுத்தறது கடுப்பாகுது எனக்கு.

அடுத்து அடுத்துக் குண்டை தூக்கிப் போட்டு, மூச்சு விடக் கூட உனக்கு நேரம் கொடுக்காம அவங்க பண்றது ரொம்ப வருத்தமா இருக்கு. அதுவும் உன்னைப் பத்தி எங்களுக்கு நல்லா தெரியும். முதல் அதிர்ச்சியில் இருந்தே நீ இன்னும் வெளிவந்திருக்க மாட்டன்னு எனக்குத் தெரியும். வீட்டில் பார்க்காத ஒருத்தனை, அவன் பேர் கூடச் சரியா விசாரிக்காமல் போய், அவன் முன்னாடி நின்னு கதை பேசிட்டு வந்திருக்கோம்னு ஃபீல் பண்ணிட்டு இருப்பன்னும் எனக்குத் தெரியும்.”

“இல்ல, சுஹா…”

“முதல் சந்திப்பில் அவனை மனசுக்கு பிடிச்சதை விட, இப்போ, அவன் மேல வந்திருக்க இந்தக் காதலை என்ன செய்யன்னு தெரியாம திண்டாடுற. அப்படித் தானே?” அந்தக் கேள்விக்கு அப்படியே கண்களை மூடிக் கொண்டாள் ராகவி.

உயிர் தோழி தான், ஆனாலும் இப்படி உயிரை ஊடுருவி உண்மையை அறிந்து கொள்ளும் தோழியை இறுக்கி அணைத்துக் கொள்ள மட்டுமே தோன்றியது அவளுக்கு.

அவர்கள் இரு முறை தான் சந்தித்துக் கொண்டார்கள். ஆனால், அந்த இரண்டு முறையும் உதயிடம் தான் பேசிய எதையும் தோழிகளிடம் அவள் பகிரவேயில்லை. அதைத் தனக்கே தனக்கான கணங்களாக மனதில் சேமித்து வைத்துக் கொண்டாள்.

அவன் ஏன் மனதுக்கு நெருக்கமானான்.

அவனை ஏன் அவளுக்குப் பிடித்திருக்கிறது, தோழிகள் கேட்கவும் இல்லை. அவளும் சொல்லவில்லை. ஆனாலும், தன்னை இத்தனை துல்லியமாகப் புரிந்து வைத்திருக்கும் தோழிகளின் மேல் பிரியம் கூடவே செய்தது.

“மைண்ட் பிரீஸ் ஆனது போல இருக்கு சுஹா. எதுவுமே மனசில் பதிய மாட்டேங்குது. மூளையே வேலை செய்யாதது போல…”

“ராகவி..” மெல்ல அவளின் கையை அழுத்திக் கொடுத்தாள் சுஹாசினி.

“பாப்பா, எழுந்திரு. வெளில போறோம். சுஹா, மலர் கடையைப் பார்த்துக்கோங்க. நாங்க வர நேரமாகும்” கத்தியபடி அவசர அவசரமாகக் கடைக்குள் வந்த ராகவன், அவள் விரல்களைச் சுஹாசினியிடம் இருந்து பிரித்து, வேகமாக அவளைக் கடையின் வாயிலை நோக்கி நகர்த்தினான்.

“என்ன ராகவ், ஏன் இப்படிப் பதட்டமா இருக்க? என்னனு சொல்லு? எங்கப் போறோம்? இரு நான் என்னோட பேகை எடுத்துட்டு வர்றேன், கையை விடு” கை நீட்டி அங்கே மேஜையின் மேலிருந்த அவளின் கைப்பையை எடுத்தாள் ராகவி.

அருகில் இருந்த அலைபேசியை எடுத்து உள்ளே போட போனவளின் கவனத்தை ஈர்த்தது, திரையில் ஒளிர்ந்து கொண்டிருந்த குறுஞ்செய்தி.

“ஹாய் ராகவி. எப்படி இருக்க? இன்னைக்குச் சாயங்காலம் உனக்கு எதுவும் முக்கியமான வேலை இருக்கா? இரவு உணவு என்னோடு சாப்பிட முடியுமா? – உதய்” என்று இருந்தது.

விழிகளை அலைபேசியில் இருந்து நகர்த்த முடியவில்லை அவளால். மீண்டும், மீண்டும் அதையே வாசித்துக் கொண்டிருந்தாள். ராகவனின் குரல் தான் அவளை நிமிரச் செய்தது.

“ஒரு முக்கியமான ஆளைப் பார்க்க போறோம். நீங்க ரெண்டு பேரும் மாலதி, புவனா அக்காக்கு ஹெல்ப் பண்ணுங்க. நாங்க சீக்கிரம் வந்திடுறோம்” என்றான்.

“யார் அந்த முக்கியமான ஆள்?” என்று சுஹாசினி கேட்க,

“உதய்” என்றாள் ராகவி. மூவரின் கண்களும் அவளை இப்போது ஆச்சரியத்துடன் நோக்கியது.

“அவர் தான் ஊர்ல இல்லையே?” என்று சுஹாசினி தொடங்க,

“இன்னைக்குக் காலைல தான் வந்தார்.” என்றான் ராகவன்.

“என்கிட்ட சொல்லவே இல்ல நீ. நடுராத்திரி போன் பண்ணி எவ்வளவு பேசின. காலையில கூடப் பேசினோமே… இரு…அடுத்து எதுக்காகவாவது சுஹான்னு வா, உனக்கு இருக்கு” என்று பல்லை கடித்தவள், ராகவியைப் பார்த்து ஆசிர்வதிப்பதை போலக் கையை உயர்த்திக் காட்டினாள்.

அதற்கு மேல் அங்கே நின்று கதை பேச தயாராக இல்லை ராகவி. ராகவனுடன் உடனே கிளம்பி விட்டாள்.

அடுத்த முப்பதாம் நிமிடம் கிண்டியில் இருந்தார்கள்.

உதயின் முன்பு…

“சட்டமும், காவல் துறையும் கல்யாணம் பண்ண கூடாதுன்னு புதுசா ஒரு சட்டம் வந்திருக்காம்” என்றாள்.

“அப்படியா?” என்றான், கைகளைப் பேண்ட் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு, உதட்டில் புன்னகை தவழ,

“ம்ம்ம்.”

“சட்டம் பத்தி வக்கீல் உங்களுக்குத் தான் தெரியும். அப்படி உங்களுக்கே தெரியாததுன்னா… பொய்யா? எவன் சொன்னான்னு சொல்லு. லாடம் கட்டி, முட்டியை பேத்துடலாம்”

“வேற யார், நீங்க தான் சொன்னீங்க. எங்க வீட்ல நாங்க சட்டத் திட்டங்களுக்கு ரொம்பக் கட்டுப்பட்டவங்க. அதனால் கல்யாணத்தை நிறுத்திட்டோம். உங்களை நேர்ல பார்த்து சொல்லிட்டு போலாம்னு வந்தேன். வரட்டா…” வலக் கரத்தை முகத்திற்கு நேராக உயர்த்திச் சல்யூட் வைத்தாள். ஆனால், டாட்டா காட்டுவது போலவே இருந்தது அவனுக்கு.

அவனைத் திரும்பி பார்க்காமல் நடந்து காரில் ஏறி அமர்ந்தாள் ராகவி.

இரண்டு எட்டுக்கள் பின்னால் வைத்து, தடுமாறி காரின் மேல் சாய்ந்து நின்றான் உதய்.

“என்ன பண்ணிட்டு வந்திருக்க? உதய் கோபமா, அப்செட்டா இருக்கார் போலத் தெரியுது? அப்படி என்ன பேசின?”

கேட்ட ராகவனைத் திரும்பி பார்க்காமல், பார்வையை முன்னே பதித்து, “கேஸ் ஃபைல் பண்ணியாச்சு. லெட் ஹிம் சால்வ் இட். இல்லனா.. கல்யாணம் நின்னு…”

ராகவனின் மனதில் கோபத் தீ மெல்ல சுடர் விடுவதை உணர்ந்தவள், அத்தோடு நிறுத்திக் கொண்டாள்.

அவ்வளவு நேரமும் அவள் சொன்னதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த ராஜா தலையைப் பின்னுக்கு இழுத்துச் சத்தமாகச் சிரிக்க ஆரம்பித்திருந்தான்.

error: Content is protected !!
Scroll to Top