உதய ராகம் – 8 (3)

அவளிடம் இருந்து பதில் வராததும் அவளைத் திரும்பி பார்த்தான். முறைத்துக் கொண்டிருந்தாள் ராகவி.

“என்கிட்ட சொல்லாம, எடுத்த முடிவால தான் இவ்வளவு தலைவலியும்…” என்றாள் எரிச்சலுடன், “சாரி” என்றான் ராகவன்.

“விடு ராகவ். நாளைக்கு உனக்கு மார்னிங் ஷிஃப்ட் தானே. நேரமாகுது, போய்ப் படு” என்றாள். கையில் சாப்பிட்டு முடித்திருந்த‌ கப்புகளை எடுத்துக் கொண்டு எழுந்து போனான் ராகவன்.

மனதில் ஒரு தெளிவு வந்ததும் எதையும் போட்டு உளப்பிக் கொள்ளாமல் உறக்கத்தில் ஆழ்ந்தாள் ராகவி.

“காலைலயே போன் பண்ணி வர சொன்னியே ராகவி. என்ன விஷயம்? நானும் பதறி அடிச்சு இன்னைக்குக் காலேஜ் லீவ் போட்டு நேரா இங்க வந்திடலாம்னு நினைச்சேன். ஆனா,..” என்று சுஹாசினி சொல்ல,

“ஆனா, உங்கப்பா உன்னைப் போட்டு அடிப்பார்னு லீவ் போடலை. அப்படித் தானே?” என்று அவளைக் கேலி செய்து சிரித்தாள் பனிமலர்.

“ஏய் மலரே…” என்று சுஹாசினி பல்லைக் கடிக்க, “பத்தே பத்து நிமிஷம், வந்திடுறேன்” என்று அவர்களிடம் வாயசைத்தாள் ராகவி.

கடையில் இருந்த வாடிக்கையாளர்களைக் கவனித்து அனுப்பி விட்டே தோழிகளின் பக்கம் வந்தாள் அவள்.

“சுஹா…” என்று அவள் ராகம் இழுக்க,

“வா அருணாச்சலம், நீ வருவேன்னு எனக்குத் தெரியும்” என்று நடிகர் ரஜினி படத்தில் வரும் ஒரு புகழ்பெற்ற வசனத்தைச் சொல்லி அவளை நக்கலடித்தாள் சுஹாசினி. அதைக் கேட்டதும் பக்கென்று சிரித்து விட்டாள் பனிமலர்.

“சுஹா…”

“ஹ்ம்ம் நானே, நானே. சொல்லு, சொல்லு. என்ன பண்ணனும்?” என்றாள் சுஹாசினி.

“அது வந்து, உதய் இல்ல..” தயங்கினாள்.

“உதய் தான் இங்கில்லையே.” என்று திரும்பி சுற்றும், முற்றும் தேடுவது போல நடித்த சுஹாசினி,

“அதான், உனக்கும் இல்லைன்னு ஆகிப் போச்சே…” என்று சொல்ல, அவளை இடுப்பில் கை வைத்து முறைத்த ராகவி, கோபத்துடன் அமர்ந்திருந்த இருக்கையைப் பின்னுக்குத் தள்ளி விட்டு எழுந்தாள்.

“ஏன் மலரே, இந்தக் காதல்னு வந்துட்டா, நாகரீகம், முதிர்ச்சி, பக்குவம், படிச்ச படிப்பு, பாக்குற வேலை ஒன்னும் செல்லுபடியாகாது போல. இல்ல?” என்றாள் கேள்வியாக, கேலியாக… பதில் சொல்லாமல் சிரித்தபடி அமர்ந்திருந்தாள் பனிமலர்.

“சுஹா, நீ இப்படியே பேசிட்டு இருந்தா, நான்…”

“சொல்லு ரா, நான் என்ன பண்ணனும்? உதய் கிட்ட போய்ப் பேசணுமா? ஆனா, நீயே பேசினா தான் சரியா வரும். அதனால, அது இல்ல. வேற என்ன? ஆபீஸ் அட்ரஸ் வேணுமா? இதோ மெசேஜ் பண்றேன் இரு. அப்புறம் வீட்டு அட்ரஸ், அதுவும் அனுப்பறேன் இரு. இவ்வளவு தானா?, இல்ல வேற எதுவும்.. ஓ, சொல்ல மறந்துட்டேன் பாரு. ஆபீசர் ஊரில் இல்ல. போலீஸ்கார் ஒரு கேஸ் விஷயமா கொங்கு மண்டலத்தில் இருக்கறதா சொன்னாங்க. சென்னை வர இன்னும் ஒரு வாரம் ஆகும்.” சொன்னவளை சிறு அதிர்ச்சியும், ஆச்சரியமுமாக விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் பனிமலர்.

ராகவி அப்படி ஒன்றும் அதிர்ச்சி அடையவில்லை. சில தகவல்கள் திரட்ட வேண்டும் என்று தானே அவள் தோழியை அழைத்ததே. ஆனால், தான் கேட்டப் பிறகு தான் அவள் தேடி, கண்டுபிடித்துத் தருவாள் என்று நினைத்திருக்க, அவள் இப்படித் தயாராகக் கையில் வைத்திருந்தது அவளுக்குப் புன்னகையை வரவழைத்தது.

“அடியே ஷெர்லாக் ஹோம்ஸ், நீ ஏன் இந்த வேலையை எல்லாம் பார்த்து வச்ச? அதுவும் வீட்டு அட்ரஸ் வரைக்கும்?” கேட்டாள் பனிமலர்.

“ராகவிக்குத் தேவைப்படும்னு தான், வேற எதுக்கு?” என்றாள் சாதாரணமாக, கேட்ட ராகவிக்குச் சிரிப்பு தான் வந்தது.

“நேத்து மிட்நைட் ராகவ் மெசேஜ் பண்ணான். இவளை விட, அவனுக்குத் தான் போலீஸ் மாமாவை பார்க்க அவ்வளவு ஆசை. அப்புறம் என்ன காலையில் எல்லாத்தையும் தேடி கண்டுபிடிச்சுட்டோம்”

“எப்படிச் சுஹா?” என்று பனிமலர் ஆச்சரியப்பட, “அப்புறம் சொல்றேன் மலரே” என்று விட்டு ராகவியின் பக்கம் திரும்பினாள்.

“நீ சொல்லு ராகவி” என்றாள்.

“அவரைப் பார்க்க போகலாம்னு நினைச்சேன்..”

“ராகவி, எனக்கு உன்னை இருபத்தி மூனு வருஷமா தெரியும். என்கிட்டேயே கதை விடுற பார்த்தியா? என்ன வேணும் சொல்லு” என்றாள் அவள் கண்களைப் பார்த்து,

“வீடு, ஆபீஸ் எல்லாம் எனக்கும் தெரியும் சுஹா. அங்க நான் போய் நின்னா, சரியா இருக்காது. ஸ்டேஷன் கால் பண்ணேன். என்ன சொல்லி அவரைக் கேட்க… ம்ப்ச், பாதியில் வச்சுட்டேன்.

எனக்கு உதய் மொபைல் நம்பர் வேணும். வீட்ல அப்பா கிட்டயும் நம்பர் இல்ல. அவர் கிட்ட, கேட்க, நம்பர் வாங்க மறந்துட்டேன்” என்றாள் தயக்கத்துடன்,

“அடி சக்கை. அப்போ போலீஸ் உன்கிட்ட இன்னும் பேச கூட இல்லையா? இதுல அடுத்த மாசம் கல்யாணம் வேற… ராகவன் கேட்டப்போ.. அவன் விஷயமா, உனக்கு, அப்புறம் வீட்டுப் பெரியவங்களுக்குத் தெரியாம அவரைப் பார்க்க நினைக்கிறான்னு நினைச்சேன். ஆனா, உன்கிட்டயே போலீஸ்…” மேலே என்ன சொல்லி இருப்பாளோ, சட்டென்று அவளைக் கை நீட்டி தடுத்தாள் ராகவி.

error: Content is protected !!
Scroll to Top