சமீபமாகத் தொலைத்த நிம்மதியை, அமைதியை தேடினான் போலும், அவனது தோளில் லேசாகத் தட்டினாள் ராகவி.
“மதுமிதாவை பார்த்து, நடந்ததைச் சொல்லி மன்னிப்பு கேளு”
“என்ன?”
“உன் மேல அவ்ளோ கோபமா இருக்கேன் ராகவ். உன்னைப் பார்த்ததும் நல்லா மண்டையிலயே கொட்டனும்னு நினைச்சேன். ஏன் இப்படிப் பண்ண? ஏன் ராகவ்? நீ என்ன சொன்னாலும், ஜஸ்டிபை ஆகாது. நீ பண்ணது பெரிய தப்பு. நாளைக்கே மதுக்கு நடந்தது தெரிய வந்தா, உன்னை ஒரு வழி பண்ணிடுவா. வேற யார் மூலமாவது அவளுக்குத் தெரியறதுக்கு முன்ன நீயே சொல்லிடுறது நல்லது”
அவன் மௌனமாய் அமர்ந்திருக்க, “அவளுக்கு எப்படித் தெரிய போகுதுன்னு மட்டும் யோசிக்காத. உன்னைத் தவிர வேற யார் மூலமாவது, இது அவ காதுக்குப் போனா, என்ன ஆகும்னு மட்டும் யோசி. சாரி கேளு. அது தான் சரி”
அவள் சொன்னதை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக மெல்ல அசைந்தது அவன் தலை.
“உதய் வீடு…”
“அவங்க நம்மைப் பத்தி நல்லா விசாரிச்சு, எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சிருக்காங்க ராகவ். நாம எந்த வம்பிலும் சிக்காம ஒதுங்கிப் போற குடும்பம்னு தெரிஞ்சுருக்கு. அதான்…”
“இருக்கலாம் ராகவி. ஆனா, நம்ம குடும்பத்தை விட உன்னைப் பத்தி ரொம்ப ஆராய்ச்சி பண்ணி இருப்பாங்கன்னு தோணுது. அது யாருன்னு தான் தெரியல. அந்தப் பொண்ணு விஜி, இல்ல உதய் அப்பா… யாரா வேணா இருக்கலாம்.”
“ம்ம்ம்…”
“என்ன பண்ணாலும் நீ பெருசா பிரச்சினை பண்ணாம ஒதுங்கி போவன்னு அவங்களுக்குத் தெரிஞ்சு இருக்கு. நாமளும் அதையே தான் பண்ணி இருக்கோம். போய் அவங்க கிட்ட சண்டைக்கு நிக்கலை. முடியாதுனு வாக்குவாதம் பண்ணலை…எதிர்த்து ஒரு கேள்வி கூடக் கேட்கலை” சொல்லிக் கொண்டே போனான்.
சற்றே சிந்தித்தால், “ஆமாம், அப்படித் தான். இல்லையா?” என்று அவளுக்கும், ராகவன் சொன்னதற்கு உடன்படத் தோன்றியது.
சட்டம் படித்து, ஒரு ஜவுளி கடையைத் தனியாகப் பொறுப்பேற்று நடத்தும் பெண் பிரச்சனைகளில் தலையைக் கொடுக்க விரும்ப மாட்டாள் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், உண்மை அது இல்லையே. அவள் உதய்காக அல்லவா காத்திருக்கிறாள்.
அவன் தானே பிடித்திருக்கிறது என்று சொன்னான். அவனிடம் தானே அவளும் பிரியத்தைச் சொன்னாள். இப்போது நடக்கும் அத்தனை நாடகங்களுக்கும், அவர்கள் முன் வைக்கும் அத்தனை நிபந்தனைகளுக்கும் அவன் தானே பொறுப்பு. அவன் தானே பதில் சொல்ல வேண்டும். அதற்குத் தான் காத்திருக்கிறாள்.
கல்யாணம் பேசி விட்டு சென்ற அன்றே, பெண் எடுத்து, பெண் கொடுப்பது என்ற கண்டிசன் தெரிந்த அன்றே அவன் சட்டையைப் போய்ப் பிடிக்க வேண்டும் என்று தான் அவள் மனதும் கொந்தளித்தது. காரை எடுத்துக் கொண்டு கிளம்பவும் முற்பட்டாள். ஆனால், அவளுக்குத் தான் அவனைப் பற்றி ஒன்றுமே தெரியாதே. கால்கள் பிரேக்கை மிதித்தது போல அதற்கு மேல் நகராமல் நின்று விட்டது.
“உதய் போன் நம்பர் கொடுங்க” என்று தந்தையின் முன் தான் சென்று நிற்க வேண்டி வந்தது. ஆனால், மகளின் மனதை அறிந்தவராக அவரும் அவனது அலைபேசி எண்ணை கொடுக்கவில்லையே.
மாலையில் தான், “உன்னை வேலையில் தொல்லை செய்ய மாட்டேன்” என்று சொல்லி அனுப்பி விட்டு, இரவே போய் வேலையில் மூழ்கி இருப்பவனின் சட்டையைப் பிடித்தாள் என்றால், சரி வராது, நன்றாக இருக்காது என்ற நிதானமும் அவளுக்கு வந்திருந்தது.
நடந்தவைகளைக் குறித்து யோசித்து, தெளிவான ஒரு முடிவிற்கு வர அவளுக்குச் சற்றே அவகாசம் தேவைப்பட்டது. என்ன தான் பெரியவர்களிடம், “எனக்கு உதய் வேண்டாம்” என்று கத்தி விட்டு வந்தாலும், அவர்கள் அப்படி ஒன்றும் அவள் முடிவை உடனே ஏற்றுக் கொள்வார்கள் என்று தோன்றவில்லை.
அதுவும் கல்யாண தேதியை முடிவு செய்த பின்னர், எடுத்தோம், கவிழ்த்தோம் என்று எதையுமே செய்ய மாட்டார்கள் என்றே தோன்றியது.
இரண்டு, மூன்று நாட்கள் கழித்து, இது குறித்து உதயிடம் பேச வேண்டும் என்று அவள் நினைத்திருக்க, இப்போது விஷயம் கை மீறி போய்க் கொண்டிருப்பது அவளைப் பயங்கொள்ளச் செய்தது.
“ஏன் ராகவ் இதெல்லாம் என் வாழ்க்கையில், நம்ம வாழ்க்கையில் உண்மையாவே நடக்குதா? நாம கனவு எதுவும் காணலையே?” என்று அவள் சந்தேகமாகக் கேட்க, சத்தமாகச் சிரித்து விட்டான் ராகவ்.
“ஏன் சிரிக்கற? எனக்கு அப்படித் தான் தோணுது. முதல் நாள் பார்த்தோம். அன்னைக்கே என்னை வேண்டாம்னு அவங்க வீட்ல சொன்னாங்க…” அவன் முறைக்க,
“ஓகே, ஏதோ ஒரு காரணம் சொல்லி மறுத்தாங்க. அப்புறம் நாலே நாள்ல கல்யாணம் பேச வறோம் சொன்னாங்க. வந்தாங்க. தேதி குறிச்சாங்க. போனாங்க. இப்போ பொண்ணு வேணாம்…”
“பாப்பா பிளீஸ். இதில் நம்ம தப்பும் இருக்கு.” சங்கடத்துடன் சொன்னான் ராகவன். கசப்பான முறுவல் ஒன்று அவள் முகத்தில் வந்து போனது.
“ஆமா, அது வேற இருக்கு இல்ல. எனக்கு நிஜமா எப்படி ரியாக்ட் பண்ணனும்னு தெரியல ராகவ். அடுத்தடுத்த அதிர்ச்சிகளில் இருந்து நான் மீளவே இல்ல இன்னும்.. அதுக்குள்ள எங்க தொட்டு எங்கயோ போய் நிக்குது என் விதி. ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது” புலம்பினாள்.
“இதுல உன் தப்பு எதுவும் இல்ல. இது தான் நடக்கணும்னு இருந்தா, யாரால மாற்ற முடியும். சொல்லு?”
“ஏன் மாற்ற முடியாது? என் வாழ்க்கை. இங்க, என் முடிவுகள் தான் இருக்கணும்.” என்றவள்,
“ஆனா, இது தான் நடக்கணும்னு யாரோ முடிவு பண்ணி இதெல்லாம் செய்யறாங்க ராகவ். இந்த ஆட்டம், என் ஒருத்தியை மையமா வச்சு அவங்க ஆடுற.. பொண்ணைக் கொடு. இல்லை வேணாம் பையனை கொடுன்னு.. அவங்க ஆடுற ஆட்டம்.. சுவாரசியமா இருக்கு இல்ல ராகவ். என்ன சொல்லு, பார்வையாளராக இருப்பதிலும் ஒரு திரில் இருக்கத் தான் செய்யுது” என்றாள் ராகவி சிரித்துக் கொண்டே,
“ஒருத்தரே ஆடிட்டு இருந்தா அது ஆட்டம் இல்ல. எதிராளிக்கு முகம் காட்டமா ஆடுற ஆட்டம் எல்லாம் தப்பாட்டம் தான் பாப்பா” கண் சிமிட்டி சிரித்தான்.
“கிரிக்கெட்ன்னா ஒரு பேட்ஸ்மேனை வீழ்த்த ஒரு பவுலர் இருந்து தான் ஆகணும். எதிரில் செக் வைக்க ஒருத்தன் இல்லாம, செஸ் ஆடுவதில், காய் நகர்த்துவதில் என்ன சுவாரசியம் இருக்கப் போகுது? நாம போட போற கோலை எல்லாம் தடுக்க எதிரா கோல் கீப்பர் ஒருத்தன் நின்னா தான் அது விறுவிறுப்பான ஆட்டம். இல்லன்னா அது பொங்காட்டம் தான். ஒரு பரபரப்பு, பதட்டம் இல்லாத ஆட்டத்தில் என்ன சுவாரசியம் இருக்கப் போகுது” ஒரு பெருமூச்சுடன் கண்களைத் தேய்த்துக் கொண்டான் ராகவ்.
மெல்ல அவனைத் திரும்பி பார்த்து, “இப்பவும் பரபரப்பு, பதட்டம் எல்லாம் இருக்கத் தானே செய்யுது. ஆனா, நீ என்னையும் இந்த ஆட்டத்தில் களம் இறங்க சொல்றியா?” என்றாள் கேள்வியாக.
“உனக்காகத் தான் இத்தனையும்… உன்னை வச்சு தான் இத்தனையும்… அவ்ளோ சீக்கிரம் உன்னை இந்த ஆட்டத்தில் இருந்து… இல்ல பார்வையாளர் அரங்கில் இருந்து கூட நகர விட மாட்டாங்கன்னு தோணுது.” சட்டென்று மூச்சை உள்ளிழுத்தாள் ராகவி.
“என்ன ராகவ், பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்ற? எனக்கு, எனக்கு…”
“நீ பயப்படவே தேவையில்ல பாப்பா. அவங்களுக்கு இந்நேரம்… இல்ல முதல்லயே தெரிஞ்சிருக்கு. நான் உனக்காக இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிப்பேன்னு.. உன்னைப் பத்தி விசாரிச்சவங்க என்னைப் பத்தி மட்டும் விசாரிக்காமயா இருந்திருப்பாங்க? அதெல்லாம் ரொம்ப சரியா தான் எல்லாத்தையும் பிளான் பண்ணி இருக்காங்க. அவங்களுக்கு நிச்சயம் மதுமிதா பத்தி தெரிஞ்சு இருக்கு. எனக்கும், அவளுக்குமான பிரியம் வரை… ஆனா,…” அவன் மூச்சு வாங்க எடுத்துக் கொண்ட நொடியில் அவன் சொல்ல வந்ததைச் சொல்லி முடித்தாள் ராகவி.
“ஆனா, எனக்காக.. நீ மதுமிதாவை மட்டுமில்ல. நீ உயிரா நேசிக்கிற வேலையைக் கூட விட்டுட்டு வருவன்னு அவங்களுக்குத் தான் தெரியல.” என்றாள் குரலில் சிறு கசப்புடன்,
“என் மேல இவ்வளவு பாசம் வைக்காத ராகவ். உன்னையும் கொஞ்சம் நேசிக்கலாம் நீ. யூ ஷுட் பி யுவர் ஃபர்ஸ்ட் பிரையாரிட்டி.” என்றாள் கண்கள் கலங்கி, தொண்டை அடைக்க.
பதில் ஏதும் சொல்லாமல் மௌனமாய் அமர்ந்திருந்தான் ராகவன்.
“உதய் போன் நம்பர் வேணுமா? அவரைப் பார்க்கணுமா?” அவளது மனதை படித்தவனாக அவன் கேட்க, எத்தனை முயன்றும், மெலிதான திடுக்கிடலை அவளால் மறைக்க முடியவில்லை.
“அப்பா ஃபோன்ல அன்னைக்கே தேடினேன், கிடைக்கல. அப்பா கிட்ட, உதய் அப்பா நம்பர் தான் இருக்கு. அவங்க அப்பா கிட்ட பேசி நம்பர் வாங்கலாம்னு யோசிச்சேன். ஆனா, உதய் உனக்குக் கால் பண்ணி பேசுவார்னு எதிர்பார்த்தேன். அதுவும் நடக்கல. இப்போ.. ஹ்ம்ம் அவர் மொபைல் நம்பரை கண்டுபிடிப்போம். நேரில் பார்த்து பேசிடு நீ” என்றான் தீர்மானமாக.
“என்ன கீழ இருந்து ஒரு சத்தத்தையும் காணோம்?” என்றாள் கேள்வியாக,
“மணி என்ன ஆச்சு தெரியுமா? அவங்க தூங்க போய் இருப்பாங்க” என்றான்.
“அச்சோ, அடுத்து என்ன பேசினாங்கன்னு கவனிக்கலையே..” என்று அவள் பதட்டமாக,
“நம்ம கிட்ட சொல்லாம எந்த முடிவும் எடுக்க மாட்டாங்க. அதனால் கவலையை விடு” என்றான் அவன்.