உதய ராகம் – 7 (3)

சிதம்பரத்தின் குரல் மீண்டும் அவளை அவர்களின் உரையாடலை கவனிக்க வைத்தது.

“அம்மா…”

“என்னடா அம்மா, மாப்பிள்ளை வீடு பேசி முடிச்சு, கல்யாண தேதியை குறிச்சுட்டு போயாச்சு. இப்போ போய் விலாவரியாக அவங்க குடும்பத்தைப் பத்தி, நீங்க ரெண்டு பேரும் விசாரிச்சுட்டு வரீங்க. இதை முன்னாடியே செஞ்சு இருக்கணுமா இல்லையா? நீயே சொல்லு?”

“இல்லம்மா…” பள்ளி மாணவனைப் போலத் தாயின் முன் பம்மினார் சிதம்பரம்.

“எங்க வீட்டு பொண்ணு, எங்க வீட்டு பொண்ணுன்னு அவர் சொல்லும் போதே நமக்குச் சந்தேகம் வந்திருக்கணும் இல்லடா?. இப்போ பாரு. பூதம் வெளில வந்திருக்கு. மாப்பிள்ளையோட அத்தை மகளாம். அவளுக்கு எப்படிடா நம்ம ராகவனைக் கட்ட முடியும்? எப்படிடா முறை வரும்? மாப்பிள்ளைக்கு ராகவியைக் கட்டிக் கொடுத்தா… அந்தப் பொண்ணு ராகவனுக்குத் தங்கச்சி முறை இல்லடா ஆகுது. அவங்க தான் கூறு இல்லாம பேசுறாங்கன்னா… நீங்களும்… நானும்.. அச்சோ, எதையும் விசாரிக்காமல் தலையை ஆட்டி வச்சிருக்கோம். இதுல நம்ம மதுமிதா வேற இருக்கா… ஈஸ்வரா, இதென்ன சோதனை…”

“நாம இப்படி இருக்கும்னு கனவா கண்டோம் விசாலம். அவரு தங்கச்சி குடும்பம் ஒரு விபத்துல தவறிட்டாங்களாம், அப்போ அந்தப் பொண்ணுக்கு நாலு வயசு தானாம். அப்போ இருந்து இவங்க வீட்ல தான் வளருதாம். அதனால….” விசாரித்து அறிந்ததை மெல்ல விளக்க முயன்றார் கண்ணதாசன்.

“ஒன்னா வளர்ந்தா ஒரே குடும்பமா ஆகிட முடியுமா? உங்களுக்கு வயசு தான் கூடிட்டே போகுதே தவிரப் புத்தி தெஞ்சுட்டே தான் போகுது. எப்படி வளர்ந்தாலும் சரி, அந்தப் பொண்ணு, நம்ம மாப்பிள்ளைக்கு… அத்தை பொண்ணு தானே? முறை மாறாதே? அவங்களுக்கே கட்டுற முறை இருக்கும் போது…”

“அதுவும் நடந்து இருக்கு மா…”

“எது டா? தெளிவா சொல்லு…” மகனைப் பார்த்து குரல் உயர்த்தினார் விசாலாட்சி.

“அது, மாப்பிள்ளையைத் தான் முதல்ல.. அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பேசி இருக்காங்க…” தடுமாறினார் சிதம்பரம்.

“அடப்பாவிகளா…” அதிர்ச்சியில் விசாலாட்சியின் கை தானாக வாயை மூடியது.

“இல்லம்மா. மாப்பிள்ளை முடியாதுன்னு சொல்லிட்டாராம். கூடவே வளர்ந்தவ, தங்கச்சி போலத் தான் பார்க்கறேன்னு‌ சொல்லி கட்ட மறுத்துட்டு இருக்கார். அப்புறம் தான், அவருக்கு வெளில பொண்ணு தேடி இருக்காங்க”

“சரியா போச்சு போ. இதென்ன கொடுமை. எல்லாம் நம்ம தப்பு. அவங்களை எதுவும் சொல்ல கூடாது. முறை இருக்கும் போது கட்டி வைக்க நினைச்சதில் தப்பில்லை தான்” என்றவர்,

“நம்ம மேல தப்பை வச்சுட்டு, அவங்களைக் கோபப்பட்டு என்ன பிரயோஜனம் சொல்லு?”

அங்கலாய்த்தார் விசாலாட்சி. ஆண்கள் இருவரும் மௌனமாய் அமர்ந்திருந்தனர்.

ராகவி இன்றைய தினம் இன்னும் எத்தனை அதிர்ச்சிகளைத் தனக்காக வைத்திருக்கிறது என்பதை அறியாமல் இடிந்து போய் அமர்ந்திருந்தாள்.

மனம் அதிர்ச்சியில் உறைந்திருந்தது. விரலை கூட அசைக்க முடியாத அளவுக்கு, மனதின் அயர்ச்சி உடலைத் தாக்கியது.

கீழிறங்கி செல்ல வேண்டும் என்று தான் நினைத்தாள். ஆனால், உடலும் மனமும் ஒத்துழைக்க மறுத்தது.

“எங்க வீட்ல நாங்க ரெண்டு பசங்க, ரெண்டு பொண்ணுங்க” என்று உதய் முதல் முறை சந்தித்த போது சொன்ன வார்த்தைகள் அவளது காதில் அசரீரியாக ஒலித்தது.

“எனக்கு ஒரு அண்ணன், ரெண்டு தங்கை” என்று அவன் சொல்லவில்லை, என்பது அப்போது தான் அவளுக்கு உரைத்தது.

“ப்ளடி போலீஸ், எவ்வளவு புத்திசாலி தனம்” பல்லைக் கடித்துக் கொண்டு முணுமுணுத்தாள்.

இப்படி ஒரு உறவு முறை சிக்கலை வைத்துக் கொண்டு, எப்படிப் பெண் கொடுத்து, பெண் எடுப்பார்கள் என்பது அவளுக்கு விளங்கவே இல்லை.

தங்களுக்குத் தான் இந்தச் சிக்கல் எல்லாம் தெரியாது. ஆனால், உதய் வீட்டினருக்கு தெரியும் தானே? பின் எப்படிக் கேட்க முடிந்தது அவர்களால்?

இப்படி ஒரு நிபந்தனையை இட உதய் எப்படிச் சம்மதித்தான்?

கேள்விகள் தலைவலியை அதிகமாக்கியது தான் மிச்சம். தலையைப் பின்னுக்குச் சாய்த்துக் கண்களை மூடினாள்.

பால்கனி கிரில்லில் படர்ந்திருந்த மல்லிகை மலர்கள், மணம் வீசி எப்போதும் போல அவளை அமைதிப்படுத்துவதற்குப் பதில் இம்முறை அவளது தலைவலியை அதிகரிக்கச் செய்தது. மேனியை தழுவிய தென்றல் சிலிர்த்து, நடுங்க செய்தது.

பௌர்ணமி நிலவு அவளைச் சுற்றி வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டிருக்க, அது மேகங்களுக்கு நடுவில் போய் மறைந்து கொண்டால் தேவலாம் என்றிருந்தது அவளுக்கு. மனம் இருளின் கதகதப்பை நாடியது.

‘ஒருவேளை இந்தத் திருமணம் நடப்பதில் அவர்களுக்கு விருப்பம் இல்லையோ?’

அவளது எண்ணத்தை ஒத்திருந்தது அவளது ஆயாவின் கேள்வியும், “நம்ம ராகவியை அவங்களுக்குப் பிடிக்கலையா? முடியாதுன்னு நேரடியா சொல்லாம, இப்படிப் பண்றாங்களா? நாமளே இந்தக் கல்யாணத்தை நிறுத்தணும்னு எதிர்பார்க்கறாங்களோ? ஆனா, ஏன்? அவங்களே நிறுத்தலாமே?” பிரச்சனையின் மையத்தைத் தொட்டார் விசாலாட்சி.

ஆண்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்திருக்க வேண்டும். அதில் கோபமுற்று, “இன்னும் என்ன பாக்கி இருக்கு. சொல்லுங்க. ரெண்டு பேரும் என்னத்தை மறைக்க முயற்சி பண்றீங்க? இதுக்கு மேலயும் ஏதாவது இருக்கா என்ன? கடவுளே வாயை திறந்து சொல்லுங்களேன்” கத்தினார்.

“விசாலம், அமைதியாகு. ஏன் இப்படி ஆவேசப்படுற?. உன் உடம்புக்கு நல்லது இல்லம்மா.”

கண்ணதாசனின் அக்கறையைப் புறங்கையால் ஒதுக்கி தள்ளியவர்,

“இந்தாங்க, இப்ப சொல்லப் போறீங்களா? இல்லையா?” கத்தினார். அதற்குப் பலன் இருந்தது.

“இன்னைக்குச் சம்மந்தி…” என்று தொடங்கிய சிதம்பரம், தாயின் முறைப்பில் சட்டென்று வார்த்தைகளை மாற்றிப் போட்டார்.

“மாப்பிள்ளை தம்பியோட அப்பா கிட்ட பேசினோம். அவர்… அவர்.. பொண்ணு கொடுக்க வேண்டாம். ராகவி வேண்டாம். ஆனா, ராகவனுக்கும், அந்தப் பொண்ணுக்கும் கல்யாணத்தை முடிச்சுடலாம்னு சொல்றார்.”

“என்னடா சொல்றா? அதான் அங்க போய்ட்டு வந்ததில் இருந்து ரெண்டு பேரும் மந்திரிச்சு விட்டது போல இருந்தீங்களா? முன்னாடியே சொல்றதுக்கு என்ன?” இத்தனை வருடங்களில் அந்த வீடு விசாலாட்சியின் அப்படியொரு அதட்டலை கேட்டதே இல்லை.

சிதம்பரத்தின் வார்த்தைகளில் மொத்த குடும்பமும் ஸ்தம்பித்தது.

“ஆமாங்க சம்மந்தி. விஜியை எங்க பொண்ணாவே பார்த்துட்டோம். அப்படித் தான் வளர்த்தோம். அவளை என் தங்கச்சி பொண்ணா, நான் பார்த்ததே இல்ல. அந்த வேறுபாடு நாங்க காட்டினதே இல்ல. உதய் உங்க பொண்ணை விரும்பறேன்னு வீட்ல வந்து சொன்னதும், பொண்ணைப் பத்தி விசாரிச்சோம். அப்போ விஜி தான் நெட்ல உங்க பொண்ணு போட்டோவை எடுத்து காட்டினா. கூடவே, டாக்டர் மாப்பிள்ளை படமும் இருந்தது. பார்த்ததும் விஜிக்கு அவர் மேல விருப்பம். தாய், தகப்பன் இல்லாத புள்ளை. அது ஆசையை நிறைவேத்தி வைக்கலன்னா, என் தங்கச்சி என்னை மன்னிக்கவே மாட்டா..”

உதயின் தந்தை சோமசுந்தரம் சொன்னதை, அப்படியே குடும்பத்தினரிடம் சொல்லிக் கொண்டிருந்தார் சிதம்பரம்.

எங்குத் தொடங்கிய ஆட்டம் எங்குப் போய் முடியப் போகிறது என்று தெரியாமல், மௌனமாய் ஆட்டத்தில் இருந்து விலகி நின்று கவனிக்கத் தீர்மானித்தாள் ராகவி.

தன் வாழ்க்கையில் யார் யாரோ காய் நகர்த்தி ஆடிக் கொண்டிருக்க, வெறும் பார்வையாளராக மாறி நின்றாள் அவள். இனி, அதுதான் அவளுக்கு நிரந்தரம் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை.

error: Content is protected !!
Scroll to Top