உதய ராகம் – 7 (2)

அவள் அமைதியாய், கரையைத் தொடுவதும் பின் விலகி ஒடுவதுமாக இருந்த கடலை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள்.

இத்தனை அழகாய், சாந்தமாய்ப் படுத்திருக்கும் இந்தக் கடல் தான் சமயங்களில் புயலாய் மாறி கோர தாண்டவம் ஆடி விடுகிறது என்பதைச் சிறு கசப்புடன் நினைத்துக் கொண்டாள்.

புத்தகத்தை நெஞ்சோடு அணைத்தபடி, நெஞ்சில் இருந்தவற்றைச் சொல்லத் தொடங்கினாள்.

உதய் வீட்டினர் கல்யாண தேதியை குறித்து விட்டு சென்று இரண்டு நாட்கள் கடந்திருந்தது.

பெரியவர்கள் ஒன்றாக அமர்ந்து தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்தனர். ராகவன் தன் போக்கில் ஹாஸ்பிட்டல் செல்வதும், வருவதுமாக இருந்தான். கடை வேலைகளில் தன்னை மூழ்கடித்துக் கொண்டாள் ராகவி.

பண்டிகை, முகூர்த்த நாட்கள், தள்ளுபடி எனப் பெரிதாகச் சீசன் எதுவும் இல்லை. ஆனாலும் கடையின் இருப்பைச் சோதித்து மேலும் தேவையானவற்றைப் பார்த்து ஆர்டர் செய்து கொண்டிருந்தாள்.

அன்றிரவு வீடு வந்தவள் யாரிடமும் முகம் கொடுத்து பேசவில்லை. அமைதியாய் உணவை உண்டு விட்டு, அறைக்குச் சென்று விட்டாள்.

கீழிருந்து பேச்சுக் குரல்கள் கேட்டுக் கொண்டே இருந்தது. மெல்ல எழுந்து பால்கனியின் அருகில் வந்து நின்றாள். இப்போது குரல்களும், பேச்சும் தெளிவாக அவள் காதில் விழுந்தது.

“இல்ல, சிதம்பரம். அவரு முதல் முறை பேசும் போதே, சரியா பிடி கொடுத்து பேசல. என்னமோ விருப்பம் இல்லாத தொனி, அவர் குரல்ல இருந்தது. உன்கிட்ட தான் பேசுவேன்னு சொல்லி போனை கொடுக்கச் சொன்னார். ஒருவேளை என்கிட்ட பேசி இருந்தா.. ஒரே பிரிவு இல்லனு சொல்லி, மறுத்து பேசி இருக்க முடியாது பாரு. என்னமோ மனசுக்கு நடக்கறது எதுவும் சரின்னு படல”

“நம்ம பொண்ணு தவறுதலா வேற பையனை பார்த்திட்டு வந்துட்டா. அதுக்கு என்ன பண்றது. எல்லாம் ஆண்டவன் போடுற கணக்கு. இடையில நாம என்ன பண்ண முடியும்? சொல்லு?” என்றவர்,

“ரெண்டு பேருக்கும் பிடிச்சு போச்சு. பெரியவங்க நாம தானே சேர்த்து வைக்கணும். சொல்லு?” என்றார் மகனைப் பார்த்து,

“நாம அவங்க குடும்பத்தைப் பத்தி விசாரிச்சு இருக்கணும் பா” தந்தையை எதிர்த்து பேச மனமில்லாமல், மெல்ல சொன்னார் சிதம்பரம். கண்ணதாசனிடம் இருந்து பெருமூச்சு மட்டுமே பதிலாக வந்தது.

“நான் அதையெல்லாம் யோசிக்காம இருப்பேனா டா? செல்லத்துக்கு அந்தப் பையனை பிடிச்சு இருக்கே, நாம விசாரிக்கப் போய் ஏதாவது ஏடாகூடமா அந்தக் குடும்பத்தைப் பத்தி தெரிய வந்தா, மறுக்க வேண்டி வருமேன்னு தான் யோசிச்சேன். தப்பு தான். என் தப்பு தான். ஆனா, பையன் போலீஸ். அதனால, அவங்க குடும்பம் நல்லவங்களா தான் இருப்பாங்கன்னு நானே ஒரு முடிவுக்கு வந்திருக்கக் கூடாது தான். என்ன பண்றது… விதின்னு ஒன்னு இருக்கறதை அப்பப்போ மறந்திடுறோம்.”

“இந்தா, இப்படிச் சும்மா பேசிட்டு இருக்கறதை விட்டுட்டு அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிங்க. எடுக்கறது பூரா தப்பான முடிவு தான். நாம அபிப்ராயம் சொன்னாலும் காது கொடுத்துக் கேட்கறது கிடையாது.”

கட்டுப்படுத்தப் பட்ட கோபத்துடன் உரைத்தார் விசாலாட்சி.

“இல்ல விசாலம்..”

“என்ன இல்ல, விசாலம்? பேசாதீங்க நீங்க. அவங்க ராகவனை அவங்க பொண்ணுக்கு… ஆமா, பொண்ணு.. எல்லாம் பொய்… அவங்க வீட்டு பொண்ணுக்கு கேட்கும் போதே, நீங்க முடியாதுனு ஒரே வார்த்தையில் சொல்லி இருக்கணும். அதை விட்டுட்டு.. இப்போ ராகவன் சம்மதிச்சதா சொல்லி, கல்யாணத்துக்குச் சரின்னு சொல்லுவோம். பின்னாடி ராகவி கல்யாணம் முடிவானதும் உண்மையைச் சொல்லிக்கலாம்னு தானே சொன்னீங்க. பொய் எப்பவும் போகக் கூடாத பாதைக்குத் தான் வழிக் காட்டும். இப்ப என்ன ஆச்சு. ராகவன் அவளுக்காக, கல்யாணத்துக்குச் சரின்னு சொல்லிட்டான். ஆனா, உங்க பேத்தி கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டா…” ஆற்றாமையில் பேசிக் கொண்டிருந்த விசாலாட்சியின் குரல் அளவுக்கு அதிகமாக உயர்ந்திருந்தது. அவர் சொன்ன தகவலில் அதிர்ந்து போய்ப் பால்கனி சுவரில் சரிந்து அமர்ந்தாள் ராகவி.

“அடுத்தவனை ஏமாத்த நினைச்சா, முதல்ல நாம தான் ஏமாந்து போவோம்” வெறுப்பாகச் சொன்னார் விசாலாட்சி.

‘அன்று அவளும் தானே அங்கிருந்தாள். இந்தப் பேச்சு, எப்போது நடந்தது?. அவர்கள் தன் முன் இதைப் பேசவில்லையா? இல்லை தான், தான் எதையும் கவனிக்கவில்லையா? இந்த மனமும் மூளையும் அவளைக் குழப்புகிறதா? என்னவாயிற்று எனக்கு?’

ஆத்திரம், அழுகை, கோபம் என அவளுள் உணர்வுகள் கொந்தளித்தது.

உதய் வீட்டினர் மட்டுமல்ல, தன் வீட்டினருமே வார்த்தையில் நேர்மையைக் கடைப்பிடிக்க வில்லை என்பது அவளுக்கு அத்துணை அதிர்ச்சியாய் இருந்தது.

ஆயிரங்காலத்து பயிர் வளர்க்க, ஆயிரம் பொய் சொல்லலாம் என்பதை இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்வார்கள் என்று அவளும் எதிர் பார்த்திருக்கவில்லை தான்.

அவள் கல்யாணம் முடிவானதும், ராகவன் அந்த வீட்டுப் பெண்ணை மணக்க மறுப்பான் என்று அல்லவா திட்டம் போட்டு இருக்கிறார்கள், எத்தனை பெரிய கழுத்தறுப்பாக இருந்திருக்கும்.

பெண்ணைப் பெற்றவர்கள் அப்படி எளிதாக இவர்களை விட்டு விடுவார்களா என்ன? அங்கே நாளை வாழப் போகும் பேத்தியின் நிலை என்னவாகும் என்று இவர்கள் கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லையா?

அந்தப் பெண்ணின் நிலை குறித்தும் இவர்கள் சிறிது கூடச் சிந்திக்கவில்லையா?

எத்தனை பெரிய ஏமாற்று வேலை. அதுவும் தன் குடும்பத்தினரிடம் நிச்சயம் அவள் இதை எதிர்பார்க்கவில்லை.

ராகவன் முழுதாக மதுமிதாவை ஒதுக்கி விட்டு இந்தத் திருமணத்திற்குச் சம்மதம் சொன்னதின் காரணம் இப்போது தான் விளங்கியது.

அந்த மட்டிலும் அவனாவது நேர்மையாக இருந்திருக்கிறானே என்று அவளால் நிம்மதி அடைய முடியவில்லை. ஏனென்றால், மதுமிதாவிற்கு அவன் செய்ய இருந்தது துரோகம் அல்லவா? நம்பிக்கை துரோகம்.

அவளுக்கு அழுகை வரும் போலிருந்தது. கதறி அழ வேண்டும் போலிருந்தது.

உன்னைத் தான் மணப்பேன் என்று உறுதி அளித்து விட்டு, இப்போது உடன் பிறந்தவளுக்காக அவன் செய்ய இருந்தது எத்தனை பெரிய தவறு. இத்தனை இன்னல்களும் அவளால் தான் என்று நினைக்கையிலே அவளுக்குத் தலை விண்ணென்று தெறித்தது.

கண்கள் கலங்கி, கண்ணீர் ஒற்றைக் கோடாகக் கன்னத்தில் இறங்கியது.

வேகமாகக் கீழிறங்கி போய், “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கத்த வேண்டும் போலிருந்தது. ஆனால், அது அவளுக்குப் பழக்கமில்லையே.

இது நாள் வரை பெரியவர்களை எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேசியதில்லை அவள். அவர்களுக்குப் பொறுமையாக விளக்கி புரிய வைப்பாளே தவிரக் கத்தி, கூச்சலிட்டு பழக்கமில்லை.

error: Content is protected !!
Scroll to Top