உதய ராகம் – 7 (1)

“சுஹா பிளீஸ் கோபப்படாத. என் பக்கம் என்ன தப்புன்னு எனக்குத் தெரியணும். என்னால சட்டுனு எந்த முடிவையும் எடுக்க முடியாது. ஐ லவ் உதய். அவர் இல்லாம ஒரு வாழ்க்கையை என்னால கற்பனை பண்ணிக் கூடப் பார்க்க முடியல. நீ சொல்லலாம், அவர் என்னைச் சரியா பார்த்துக்கலை, எனக்கு முக்கியத்துவம் கொடுக்கலை… இன்னும் நிறைய… ஆனா, நான் அவரை நேசிக்கிறேனே சுஹா. அவருக்கும் சேர்த்து.. எங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து நான் நேசிக்கிறேன். அது போதாதா? எனக்கு அது போதும் சுஹா.” குரல் நடுங்க சொன்னாள் ராகவி.

“டிராமா குயின்ஸ்” முணுமுணுத்தாள் பனிமலர்.

திரைச்சீலைகளை விலக்கி விட்டு, கடலை வெறித்த வண்ணம் நின்ற சுஹாசினி ஒன்றும் சொல்லவில்லை. ராகவி தன் மனதில் உள்ளதை கொட்டட்டும் என்று மௌனமாய் நின்றாள்.

“நீங்க எல்லோரும் எனக்குத் தான் சப்போர்ட் பண்றீங்க. என் பக்க நியாயத்தை மட்டும் தான் பாக்கறீங்க. எனக்குச் சாதகமாகத் தான் பேசுறீங்க. என் மேலயும் தப்பு இருக்க வாய்ப்பிருக்குன்னு யோசிக்கக் கூட மாட்டேங்கறீங்க. ஆனா, நான் அவர் பக்க நியாயத்தைப் புரிஞ்சுக்க முயற்சி பண்றேன் சுஹா. அதுக்கு அவர்… ஹெல்ப் பண்றார். அவர்கிட்ட பேசும் போது, நடந்ததை ஷேர் பண்ணும் போது பெட்டரா ஃபீல் பண்றேன் சுஹா. பிளீஸ் புரிஞ்சுக்கோ. உன்னை.. உங்களைக் காயப்படுத்த, கோபப்படுத்த நான் இதைச் செய்யலை.” நெருங்கி சுஹாசினியின் கைகளைத் தன் கைகளுக்குள் பொதிந்து கொண்டாள் ராகவி. சட்டென அவளின் தோளில் சாய்ந்து கொண்டாள் சுஹாசினி.

“என்னால தான் எல்லாம். ஆனா, நீ திரும்ப உடைந்து போறதை என்னால பார்க்க முடியாது ரா… என்னால இன்னொரு முறை உன்னை அப்படிப் பார்க்க முடியும்னு தோணல”

அழுகையை அடக்கி, கலங்கிய குரலில் சொன்னாள் சுஹாசினி.

“உன்னால இல்ல சுஹா. லூசு மாதிரி பேசாத. நான் தான் காரணம். என் வாழ்க்கைக்கு நான் மட்டும் தானே பொறுப்பு? என் முட்டாள்தனத்துக்கு, என் தவறுகளுக்கு நான் வேற யாரையும் கைக் காட்ட கூடாது இல்ல?”

“ஐயோ இந்த மெகாசீரியல் ரொம்பப் போர் அடிக்குது. நிறுத்துங்க பா. நான் ஐஸ் கிரீம் ஆர்டர் பண்ண போறேன். உங்க ரெண்டு பேருக்கும் வேணுமா?” புருவங்களைக் கேள்வியாக உயர்த்தியபடி கேட்டாள் பனிமலர்.

“உன்ன… எப்படி உன்னால முடியுது மலர். எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கோம்.” இடுப்பில் கை வைத்து முறைத்த சுஹாசினியை பார்த்து கண்ணடித்தாள் மலர்.

“ஐஸ் கிரீம்?” என்றாள் மீண்டும்.

“ம்ஹூம் வேண்டாம் மலர். இவ சில்லுனு எதுவும் சாப்பிட கூடாது. நாம இன்னைக்கு மால்பே போறோம். மகாலட்சுமி ஹோட்டல்ல, ஃபிஷ் மீல்ஸ் சாப்பிட. அதுனால, இப்போ வேற எதுவும் வேண்டாம்.”

சொன்ன சுஹாசினியை அதிர்ச்சியுடன் வாய் பிளந்து பார்த்தாள் பனிமலர்.

“ஒரு ஃபிஷ் மீல் சாப்பிட ஒரு மணி நேரம் டிராவல் பண்ணி போகணுமா? நான் வரலை போ சுஹா. இதுல என்னைச் சொல்றியா நீ..” கைகளைக் காற்றில் வீசிக் கொண்டு எழுந்தாள் பனிமலர்.

“எவ்வளவு டென்ஷனோடு சுத்தறோம். நீ மட்டும் எப்படிச் சுஹா இவ்வளவு கேசுவலா சாப்பிட, தூங்க, ஊர் சுத்த பிளான் பண்ற? இதுல என்ன குறை சொல்ற நீ..” அயர்ச்சியுடன் கேட்டாள் பனிமலர்.

“தூக்கத்தை விடத் துக்கத்தை ஆற்றும் மருந்து வேறென்ன இருக்கு, சொல்லு மலர்? உணவோடு சேர்த்துக் கொஞ்சம் கொஞ்சமா துக்கத்தை, கவலையை, வாழ்க்கையின் ஏமாற்றங்களை, துரோகங்களை விழுங்கிடனும் மலரே. அப்படிக் கசப்புகளை விழுங்க நான் தேர்ந்தெடுக்கறது எனக்குப் பிடித்த ஒன்னா இருக்கறதில் என்ன தப்பு சொல்லு? பிடிக்காததை, பிடித்ததைக் கொண்டு அமிழ்த்துவது எளிது தானே? அப்படியே மீனின் முள்ளோடு, நண்டின் ஓட்டோடு என் வாழ்கையின் துயரங்களையும் ஒதுக்கி ஓரமா வச்சுட்டு வருவேன் மலரே. தப்பா சொல்லு?”

தோளை அசட்டையாகக் குலுக்கிக் கொண்டாள் சுஹாசினி. அவள் சொன்ன விளக்கத்தில் கிளுக்கி சிரித்தாள் ராகவி.

“நானும் இதைப் பல முறை சொல்லிட்டேன். ஹ்ம்ம் உங்க ரெண்டு பேருக்கும் தான் புரியுற மாதிரி இல்ல..”

“இதுக்கு நம்ம ஊர்ல வேற பேர் சொல்லுவாங்க சுஹா. சோத்து மூட்டை..” கலகலவென்று சிரித்துக் கொண்டே கிண்டலாகச் சொன்னாள் பனிமலர்.

“ஏய் மலரே…” என்று சுஹாசினி அவள் மேல் பாய, அவளைத் தடுத்து நிறுத்தினாள் ராகவி.

“சுஹா, நீ சொல்றது புரியுது. ஆனா, உன்னைப் போல எங்களால இருக்க முடியல. அப்புறம் இன்னைக்கு நான் எங்கேயும் வரலை பா. என்னால டிராவல் பண்ண முடியும்னு தோணல. நீயும், மலரும் போய்ட்டு வாங்க. நான் இங்கேயே ஏதாவது லைட்டா சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுக்கறேன்”

“ஓகே ராகவி. நீ ரெஸ்ட் எடு. நாங்க சீக்கிரம் வந்திடுறோம்” என்றாள் சுஹாசினி.

“ஓகே சுஹா”

அன்றைய காலை வேளை அமைதியாய்க் கழிந்தது. மூவரும் அவரவர் சிந்தனையில் மூழ்கியபடி தலையை மொபைலுக்குக் கொடுத்திருந்தனர்.

மணி பணிரெண்டை நெருங்குகையில் முன்னரே பிளான் செய்தபடி, சுஹாசினியும், மலரும் ரிசார்ட்டிற்குச் சொந்தமான காரை புக் செய்து மங்களூரின் கடற்கரை கிராமமான மால்பே கிளம்பினர்.

அறையின் தனிமையில் தனக்குள்ளாக மூழ்கிப் போக முயன்று கொண்டிருந்தாள் ராகவி.

“உதயை வேணாம்னு சொல்லிட்டேன். வேற பையன் பார்க்க சொன்னேன். இதை அடிக்கடி சொல்றீங்களே, நீங்க நிஜமா சொல்றீங்களா? இல்ல என்னைக் கலவரப்படுத்த சொல்றீங்களான்னு தெரியல? எனக்குச் சந்தேகமாவே இருக்கு?” என்ற ராஜாவின் கேள்வி மனதில் வலம் வர புன்னகைத்துக் கொண்டாள் ராகவி.

அவள் பொய் சொல்லவில்லை தான். ஆனாலும், உண்மையைக் கொஞ்சம் மிகைப்படுத்திச் சொல்கிறாளோ? தன்னையே கேள்வி கேட்டுக் கொண்டாள் ராகவி.

நம்மை நியாயப்படுத்த அடுத்தவரின் மீது பழியைப் போடுவதும், அவர்களின் தவறை, சமயங்களில் தவறே இல்லை என்றாலும் கூட, ஒன்றை பத்தாக்கி திரித்துச் சொல்வதும் மனித இயல்பு தானே?

தன்னை நல்லவளாகக் காட்ட, கணவனை வில்லனாக்கி கொண்டிருக்கிறோமா? தன்னைத் தானே கேள்விக் கேட்டுக் கொண்டாள் ராகவி.

‘இல்லையே நடந்ததைத் தானே சொல்கிறேன்’ என்று தனக்குத் தானே சமாதானமும் சொல்லிக் கொண்டாள்.

தோழிகள் இருவரும் இல்லாத அறையின் வெறுமையும், நிசப்தமும் கழுத்தை நெரிக்க, கையில் புத்தகத்துடன் நீச்சல் குளத்தை நோக்கி நடந்தாள் அவள். கடற்கரையை ஒட்டிய ரிசார்ட்டில் எதற்காக நீச்சல் குளம் கட்டி இருப்பார்கள் என்ற கேள்வியுடன் நடந்தாள். அங்கே அவளுக்கு முன்பாகக் கையில் ஒரு புத்தகத்துடன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து புத்தகத்தில் மூழ்கி இருந்தான் ராஜா.

அவனிடம் பேசுவதா, வேண்டாமா என்று அவள் தன் மனதோடு போராடிக் கொண்டிருக்க, அவள் வந்ததை உணர்ந்தவன் போன்று நிமிர்ந்து, “ஹாய்” என்றான்.

ஒரு நிம்மதி பெருமூச்சுடன் அவன் அருகில் அமர்ந்தாள் அவள்.

“எப்படி இருக்கீங்க?” என்றான்.

“இன்னைக்குக் காலையில் தானே பார்த்து பேசினோம். என்னமோ பல நாள் கழிச்சு பார்க்கற மாதிரி கேட்கறீங்களே?” என்றாள் கண்களை உருட்டி, சிரித்தான் அவன்.

“உங்க ப்ரெண்ட்டுக்கு நாம பேசுறது தப்பா தான் படும். வந்த இடத்தில் நீங்க, என் கூட இப்படி ஓட்டிட்டு இருக்கறது அவங்களுக்குப் பிடிக்காம போனதில் தப்பொன்னும் இல்ல. நீங்க, இனி என்கிட்ட பேசாம இருக்கறது தான்…” அவனை முடிக்க விடாமல் இடைப் புகுந்தாள் ராகவி.

“எங்க ஐயாக்கு ரொம்ப வருத்தம். தேவையில்லாம ரெண்டு பேரப் பசங்க வாழ்க்கையையும் இப்படிக் குழப்பி விட்டுட்டோமேன்னு…” மீண்டும் கதைச் சொல்லத் தொடங்கினாள்.

“ஆனா, உங்க ஐயாவையும் தப்பு சொல்ல முடியாதே. பேத்திக்காக அப்படிப் பண்ணி இருக்கார். கோபம் மட்டுமில்ல, பாசமும் பல நேரங்களில் கண்ணை மறைக்கத் தான் செய்யும்.” வெகு இயல்பாகக் கதைக்குள் நுழைந்தான் ராஜா.

“இதுக்கு நான் என்ன சொல்ல? புரிந்து கொண்டதற்கு நன்றியா?” கிண்டலாகச் சிரித்தபடியே கேட்டாள். புன்னகைத்தான்.

கதை கேட்க தயாராகக் கையில் இருந்த புத்தகத்தை ஓரமாக வைத்து விட்டு, கை கட்டி அமர்ந்தான் ராஜா.

error: Content is protected !!
Scroll to Top