உதய ராகம் – 6 (2)

அவனிடம் கேட்க நினைத்த கேள்விகள் அனைத்தும், அவள் உதடுகளால் உச்சரிக்கப்படாமலேயே உதிர்ந்திருந்தது.

“பாப்பா, உன்னை ஐயா கூட்டிட்டு வரச் சொன்னாங்க.” என்று ராகவன் வரவும், அவனுடன் நடந்தாள்.

“மாப்பிள்ளை வீடு கிளம்பறாங்க, அதான்..”

“ஓ சரி, சரி”

முறையாக அவர்களிடம் பேசி வழியனுப்பி வைத்தாள்.

இரண்டு கார்களில் வந்திருந்தனர். உதயின் அண்ணன் கார் கேட்டை கடக்க, அவன் பெற்றோர் இருந்த காரின் கண்ணாடி மெல்ல கீழிறங்கியது.

“ரொம்பச் சந்தோசம் சம்மந்தி. ரெண்டு கல்யாணமும் நல்லபடியா நடக்கணும். டாக்டர் தம்பி கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னதில் மனசு நிறைஞ்சு போச்சு. அடுத்த வாரம் நீங்க வீட்டுக்கு வரும் போது, அவங்க கல்யாண தேதியை முடிவு பண்ணிடலாம். இப்போ வரட்டுமா?”

“எங்களுக்கும் ரொம்பச் சந்தோசம் சம்மந்தி.” என்றார் சிதம்பரம்.

என்ன பேசுகிறார்கள் என்று புரியாமல் ஆண்கள் இருவர் முகத்தையும் கேள்வியாகப் பார்த்தாள் ராகவி.

‘டாக்டர் தம்பி என்றால் ராகவனா? அவனுக்குக் கல்யாணமா? அதைப் பற்றி இவர்கள் ஏன் பேச வேண்டும்?’ கேள்வி மலைப்பாம்பாய் அவள் கழுத்தை சுற்றி இறுக்கியது.

கார்கள் மெதுவாக ஊர்ந்து கேட்டை கடந்து வெளியேற, இவர்கள் திரும்பி வீட்டுக்குள் நுழைந்தனர்.

“அப்பாடா..” என்றபடி சோஃபாவில் சரிந்தார் கண்ணதாசன்.

“ஐயா, அவங்க, உதய் அப்பா என்ன சொல்லிட்டு போறாங்க?”

முகம் முழுக்கக் குழப்பத்துடன் தன் முன் நின்ற பேத்தியை பார்த்த கண்ணதாசன் திரும்பி சிதம்பரத்தை பார்த்தார்.

“நான் அப்பா கிட்ட கேட்கலை. உங்ககிட்ட தான் கேட்கறேன். டாக்டர் தம்பின்னா? நம்ம ராகவ்வா? ஆனா, அவன் பேரை ஏன் உதய் அப்பா சொல்றாங்க? என்ன நடக்குது இங்க? ரெண்டு கல்யாணம்னா? எனக்குப் புரியல”

“மாப்பிள்ளை பேரை இப்படியா மண்டையில் அடிச்சது போலச் சொல்லுவாங்க? ஒழுங்கா அத்தான்னு சொல்லு” அதட்டினார் விசாலாட்சி.

“பேச்சை மாத்தாதீங்க ஆயா, நீங்க சொல்லுங்க ஐயா. என்ன நடக்குது இங்க?” பொறுமை இழந்து குரல் உயர்த்தினாள்.

“அது வந்து செல்லம்…” தடுமாறினார் கண்ணதாசன்.

“சொல்லப் போறீங்களா, இல்லையா? நீங்க சொல்லலைன்னா நான் உதய் கிட்டயே கேட்டுக்கறேன்” என்றாள் மிரட்டலாக,

“நானே சொல்றேன் செல்லம். அது வந்து, அவங்க… இந்தக் கல்யாணம் நடக்கணும்னா..”

“நடக்கணும்னா?”

“பொண்ணு கொடுத்து, பொண்ணு எடுக்கக் கேட்டாங்க. சரின்னு சொல்லிட்….”

“ஐயா, என்ன பேசிட்டு இருக்கீங்க? ராகவ்.. அவன் ஏற்கனவே நிச்சயமானவன். வாக்கு கொடுத்து இருக்கீங்க. மறந்துட்டீங்களா?”

“கோபப்படாமல் உட்காரு ராகவி” மகளின் கைப் பற்றித் தன் பக்கத்தில் அமர்த்தினார் சிதம்பரம்.

“ராகவ் நிச்சயமானவன் ப்பா. மதுமிதா நாளைக்கு வந்து நிற்பா, அவளுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?” நால்வரும் அமைதியாக இருந்தனர். அவளது கோபத்தை அது இன்னும் தூண்டி விட, “நேத்து நான் வரும் போது இதைப் பத்தி தான் பேசிட்டு இருந்தீங்களா?” கோபமாகக் கேட்டாள்.

“ஆம்” என்று தலையசைத்தார் சிதம்பரம். மெல்ல திரும்பி ராகவனைப் பார்த்தாள்.

கண்கள் மளுக்கென்று குளம் கட்டியது.

அவளுக்கு உதயை பிடித்திருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக, அவளின் மகிழ்ச்சிக்காக, தான் நினைவு தெரிந்த நாளில் இருந்தே நேசிக்கும் ஒருத்தியை விட்டுக் கொடுக்கத் தாயராகி விட்டான், என்பது அவளைக் கலங்கடித்து.

அவளுக்குப் பத்து நிமிடத்திற்கு முன்னர்த் தன்னிடம் பேசிய உதய் இதைப் பற்றி ஒரு வார்த்தைக் கூடச் சொல்லவில்லையே என்ற அதிர்ச்சியும், என் வாழ்க்கையில் இவர்கள் என்ன சதுரங்கம் ஆடுவது என்ற ஆத்திரமும் ஒருங்கே வந்தது.

என்ன நினைத்து இப்படி எல்லாம் நிபந்தனை போடுகிறார்கள் இவர்கள்? ஆண் பிள்ளையைப் பெற்ற தைரியமா? அது தான், ஏற்கனவே நிச்சயம் ஆன ஒருவனுக்குப் பொண்ணைக் கொடுக்கச் சொல்லி நிபந்தனை போட சொல்கிறதா?.

ராகவனை அவர்கள் வீட்டு பெண்ணுக்குப் பிடித்திருக்கிறது என்றால், அவனுக்காகவே காத்திருக்கும் மதுமிதாவின் நிலை? எதையும் யோசிக்கவே மாட்டார்களா? விசாரிக்கவே மாட்டார்களா? எல்லாக் குழப்பமும் தன்னால் தான் என்று எண்ணம் தோன்றி, அவளை மனம் கனக்க செய்தது.

உதயின் மேல் கண் மண் தெரியாத ஆத்திரம் வந்தது. பல்லைக் கடித்து, கைகளை மடக்கி தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயன்றாள்.

என்னவெல்லாம் பேசினான், எப்படி மயங்கிப் போனாள். ஆனால், ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை, இந்தப் பெண்ணெடுத்துப் பெண் கொடுப்பது பற்றிப் பேசி இருப்பானா? இல்லையே.

என்ன மனிதன் இவன்? இவனெல்லாம் எப்படிச் சட்டத்தையும், ஒழுங்கையும் கட்டிக் காக்கப் போகிறான்? பெரிய காவல்துறை அதிகாரி. அவள் மனது தானாகப் பொறுமியது.

“ஆச்சி, ராகவி செல்லம். இங்க பாரு டா” மெல்ல அவளை உலுக்கினார். விசாலாட்சிக்கு பேத்தியின் சோர்ந்த முகம் பெரும் கவலையைக் கொடுத்தது.

கண்களை மூடி, ஆழ மூச்சிழுத்து,

மனதை கடினப்படுத்தி, உதயின் உல்லாச சிரிப்புடன் இருந்த முகத்தை உதற முயன்றாள்.

ராகவன் முகத்தை மட்டுமே கண்களில் நிறைத்தாள்.

“எனக்கு உதய் வேண்டாம் ப்பா, இந்தக் கல்யாணம் நடக்காதுன்னு அவங்ககிட்ட சொல்லிடுங்க. இந்த முறை, மறுப்பு நாம சொன்னதா இருக்கட்டும். எங்க பொண்ணுக்கு வேற, நல்ல இடம் பார்த்துக்கறோம்னு சொல்லிடுங்க” என்றாள் முடிவாக.

“அபசகுணமா பேசாத ஆச்சி. இப்போ தான் நல்ல விஷயம் பேசிட்டு போய் இருக்கு. இந்த நேரத்தில் என்ன பேசுற நீ?” திரும்பி விசாலாட்சியைப் பார்த்தவளின் கண்களில் அத்தனை வலி.

“சரி, இன்னைக்குத் தானே பேச கூடாது? அப்போ அவங்களுக்கு நாளைக்கு ஃபோன் பண்ணி சொல்லிடுங்க. அப்படியே நம்ம ராகவ், மதுமிதா கல்யாணத்துக்குக் கண்டிப்பா வரணும்னு சேர்த்து சொல்லுங்க.”

“ராகவி, சொல்றதை கேளு டா.. கல்யாண தேதியை குறிச்சாச்சு. இப்போ போய்…” என்று சிதம்பரம் ஆரம்பிக்க, அவரை முந்திக் கொண்டு பேசினான் ராகவன்.

“அக்கா, நான்.. என் சம்மதத்தோடு தான் எல்லாம் நடக்குது. அதனால் நீ கவலைப்படாம…”

“அப்படியா ராகவ்? ரொம்பச் சந்தோசம். ஏன் ஆண்கள் எல்லாம் இப்படி இருக்கீங்க? கொடுத்த வாக்கை காப்பத்தவே மாட்டீங்களா?” படபடவெனப் பொரிந்தவள்,

“இப்போ பேசி இருக்கப் பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கோ ராகவ் என்னை ஆளை விடு. போதும்” என்றாள். ராகவன் பதட்டமாக நெற்றியை தேய்த்துக் கொண்டான்.

“எனக்கு உதய் வேண்டாம் ப்பா. அவங்களுக்குக் கால் பண்ணி கல்யாணத்தை நிறுத்துங்க. எனக்கு வேற பையன் பாருங்க.” யார் முகத்தையும் பார்க்காமல் சொல்லி விட்டு, மாடிப்படி ஏறினாள் ராகவி.

அவன் மனதில் கார்மேகங்கள் சூழ, பதட்டத்துடன் கன்னத்தில் கை வைத்து அமர்ந்து விட்டான் ராகவன்.

பெரியவர்கள் ஒருவரை ஒருவர் பதட்டமாகப் பார்த்துக் கொண்டனர்.

“இந்தக் கல்யாணம் பேச ஆரம்பிச்ச நேரமே சரியில்ல. ஒரே தடங்கலா வருது.” புலம்பினார் கண்ணதாசன்.

“மனுஷங்க ஆடுற ஆட்டத்துக்கு, ஏன் பா நேரம் சரியில்லைன்னு சொல்றீங்க?” தந்தையைப் பார்த்து கேட்ட சிதம்பரம், சோர்வாகத் தளர்ந்து அமர்ந்து விட்டார்.

“நான் நேத்தே அவகிட்ட சொல்ல சொன்னேன். என் பேச்சை யார் கேட்டா? தாயில்லா பிள்ளையை இப்படிக் கலங்க விடுறீங்களே.” கலங்கிய கண்களைச் சேலை தலைப்பில் துடைத்துக் கொண்டார் விசாலாட்சி.

“தப்புப் பண்ணிட்டேன் விசாலம். இப்ப ரெண்டு புள்ளைங்க வாழ்க்கையையும் கேள்விக் குறியா ஆக்கிட்டேனே. என்ன போல ஒரு கூறு கெட்டவன் இந்த உலகத்தில இருப்பானா? என்னமோ பேத்தி மேல இருக்கற பாசத்தில, இப்படிப் பண்ணிட்டேன். கடவுளே, இப்ப நான் என்ன பண்ணுவேன்?” தலையில் அடித்துக் கொண்டார் கண்ணதாசன்.

“அப்பா, நீங்க டென்ஷன் ஆகாதீங்க. என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம். அவங்க வீட்ல பேசிப் பார்க்கலாம்” சொன்ன மகனை நிமிர்ந்து பார்த்த கண்ணதாசனின் கண்களில் நம்பிக்கையே இல்லை.

ஒரு மணி நேரத்திற்கு முன்பு அந்த வீட்டில் இருந்த மகிழ்வின் சுவடுகள், இப்போது சுத்தமாகத் துடைத்து எறியப் பட்டிருந்தது.

“அப்பா, உதய் போன் நம்பர் கொடுங்க” என்றபடி வந்து நின்றாள் ராகவி.

“எதுக்கு மா?” தயக்கமாகக் கேட்டார் சிதம்பரம்.

“என்கிட்ட இல்லப்பா, அதான் கேட்டேன்.” என்றாள் சாதாரணமாக,

“இப்போ அவர்கிட்ட நீ என்ன பேச போற? ஆத்திரத்தில் எடுக்கும் முடிவுகள் எல்லாம் சரி வராது ஆச்சி. பொறுமையா யோசிச்சு…” முதல் முறையாகப் பெரியவர்களின் பேச்சை நின்று கவனித்துக் கூடக் கேட்காமல், மாடிப் படியேறி மறைந்தாள் ராகவி. பாதி வார்த்தைகள் அந்தரத்தில் நிற்க, அப்படியே உறைந்து போய்ப் பேத்தி போன திசையையே பார்த்திருந்தார் கண்ணதாசன்.

“ஓ மை கடவுளே” அதிர்ச்சியுடன் கத்தினான் ராஜா.

“என்ன இப்படி ஆகிடுச்சு?” என்றான்.

“எப்பா ஒரு கல்யாணத்தில் இவ்வளவு குழப்பம் வருமா? சும்மாவா சொன்னாங்க. வீட்டை கட்டிப் பார், கல்யாணம் பண்ணி பார்னு. எனக்கே அவ்வளவு ஆத்திரமா வருது. உங்க ஃபேமிலி எப்படித் தான் சமாளிச்சாங்களோ. ஊப்ஸ். ஆமா, நீங்க அடுத்து என்ன பண்ணீங்க?”

“அதான் சொன்னேனே, ஒரே வார்த்தையில் முடிச்சுட்டேன். கல்யாணமே வேண்டாம் சொல்லியாச்சு.”

“இல்லையே உதய் போன் நம்பர் தானே கேட்டீங்க.? சரி விடுங்க. கல்யாணம் வேணாம் சொன்னீங்க. அதுக்கு உதய் என்ன சொன்னார்? அடுத்து என்ன பண்ணார்? ஒருவேளை… இதெல்லாம் அவருக்குத் தெரியாமலேயே நடந்திருக்கலாம் இல்லையா? நீங்க அவர்கிட்ட கேட்டீங்களா? அவர் சொன்ன மாதிரி உங்களைப் பார்க்க வந்தாரா? இல்ல அதுக்குள்ள கல்யாணமே நின்னுடுச்சா?” கேள்விகளை அடுக்கினான்.

இதே கேள்வி அவளுக்கும் தோன்றியது தானே. ஆனால், அவனிடம் கேட்டாளா? இல்லையே? உதயிடம் கேட்கவே இல்லையே! அது யார் தவறு?

“கேட்கலை” என்றாள் சோர்வாக,

“என்னங்க, எவ்வளவு கேள்வி கேட்டேன். ஒரே வார்த்தையில் பதில் சொல்லி முடிச்சுட்டீங்க. கேட்கலைன்னா? என்ன கேட்கலை?”

“நான் உதய் கிட்ட இது பத்தி கேட்கலை” என்றாள் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு,

“நீங்க அவர்கிட்ட பேசி இருந்திருக்கணும்” என்றான் ராஜா அழுத்தமாக, அவளுக்குக் காரணமற்று அவன் மேல் கோபமாக வந்தது.

“எனக்குத் தெரியும், நீங்க இப்படித் தான் ஏதாவது சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன். ஆல் ப்ளடி மென் ஆர் சேம்.” அவன் முகத்தில் வார்த்தைகளை எறிந்து விட்டு, சட்டென்று இருக்கையில் இருந்து எழுந்தாள் ராகவி.

“ராகவி பிளீஸ்…” எட்டி அவள் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினான்.

“ராகவி..” மறுபுறம் இருந்து கத்தினாள் சுஹாசினி.

“****** டிரபுள்” முணுமுணுத்தான்.

ஓரக் கண்ணால் அவனை முறைத்தாள் ராகவி.

“மணி ஏழு தான் ஆகுது ரா… உன்னைக் காணோம்னு பதறிட்டு வரேன். நீ என்னன்னா இங்க உட்கார்ந்து சாவகாசமா கதை பேசிட்டு இருக்க” சுஹாசினியின் குரலில் இருந்த கோபத்தை ராகவியால் புரிந்து கொள்ள முடிந்தது.

“வா சுஹா, போகலாம்” அவளை அங்கிருந்து நகர்த்த முயன்றாள் ராகவி. ராஜாவை திரும்பி நன்றாக முறைத்து விட்டு, ராகவியின் கரத்தை இறுக்கமாக பற்றி வெளியில் இழுத்துக் கொண்டு போனாள் சுஹாசினி.

நான்கே எட்டில் ராகவியின் முன் வந்து நின்று, “நான் சொன்னதை யோசிங்க. ஒருவேளை… உதய்க்கு நடந்தது எதுவும் தெரியாம கூட இருந்திருக்கலாம், இல்லையா? அவர் தான் முக்கியமான கேஸில் மாட்டிட்டு இருந்தாரே. சந்தேகத்தின் பலனை குற்றவாளிக்குக் கொடுக்கலாம். தப்பில்லை. உங்க சட்டம் அப்படித் தானே சொல்லுது? ம்ம்ம்?” அவளுக்கு மட்டும் கேட்கும் படி சொல்லி விட்டு நொடியில் அவர்களைக் கடந்து போனான் ராஜா.

ராகவியின் மனம் கேள்விகளால் நிரம்ப ஆரம்பித்தது.

error: Content is protected !!
Scroll to Top