உதய ராகம் – 5 (2)

அலையோசையும், கடற்கரை பறவைகளின் கானமும் உதயராகமாக ஒலித்து அக்காலை பொழுதை ரம்மியமாக்கிக் கொண்டிருந்தது.

மெல்ல அதில் மூழ்கிக் கொண்டிருந்தவள், திடீரென்று கேட்ட சத்தத்தில் திரும்பிப் பார்த்தாள். ராஜா நடந்து வந்து கொண்டிருந்தான். அவன் கையில் இருந்த அலைபேசியில் மனோ உயிர் உருக பாடிக் கொண்டிருந்தார்.

அவளைப் பார்த்து உறக்கம் கலையா விழிகளோடு, “குட் மார்னிங்” என்றான்.

பதிலுக்குப் புன்னகைத்தாள் ராகவி.

“நடக்கலாம் இல்லையா?” என்று அவன் கேட்க, கடல் மண்ணில் கால்கள் புதைய நடக்கத் தொடங்கினாள் ராகவி.

“கடல்னா பயமா? ஏன் கடலை விட்டு இவ்வளவு தூரம் தள்ளி நிக்கறீங்க? நீங்க தண்ணில கால் நனைக்கவே இல்லையே?”

“பயம் இல்ல. ஆனா, கடலோடு எனக்கு விருப்புக்கும், வெறுப்புக்கும் இடையிலான ஒரு உறவு. லவ், ஹேட் ரிலேஷன்ஷிப். பிடிக்கும், ஆனா பிடிக்காது”

அந்தப் பதில் அவனுக்குச் சிரிப்பை வரவழைத்தது.

“உங்க கணவர் உதய் மேல இருக்கற மாதிரி?” சிரிப்பினூடே கேட்டான்.

மறுகணம் கண்களை இறுக மூடி, அடுத்த அடி எடுத்து வைக்க இயலாமல், அப்படியே நின்று விட்டாள் ராகவி.

“ராகவி, என்னாச்சு?”

“எங்கம்மா, கடல்ல மூழ்கி.. இறந்து போனாங்க. கொடூரமான விபத்து. எங்கம்மா உயிரை குடிச்சு, உடம்பை துப்புச்சு இந்தக் கடல்” துக்கம் தொண்டையடைக்கச் சொன்னாள்.

“ஐயோ சாரி, சாரி. வெரி சாரி” பொத்தென மணலில் அமர்ந்தான். மௌனமாய் அங்கிருந்து விலகி நடக்க ஆரம்பித்தாள் ராகவி.

அடுத்து வந்த நிமிடங்கள் அமைதியாய்க் கழிந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நிறைந்திருந்த கடலும், கால் நனைத்த கடல் நீரும், மேனியை தழுவி சென்ற குளிர் காற்றும் அவளது மனதின் வெப்பத்தைக் குறைக்கவேயில்லை.

நினைவுகள் அலையலையாய் எழும்பி அவளை மூச்சடைக்கச் செய்ய, அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் ரிசார்ட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

இரண்டே எட்டில் அவளை நெருங்கிய ராஜா, “பிளீஸ் ரோஜா, ஐ அம் சாரி. காலைலையே உங்க மூடை கெடுத்துட்டேன்.” கெஞ்சல் குரலில் மன்னிப்பை முன் வைத்தான்.

சிறு தலையசைப்புடன் முன்னே நடந்தாள் ராகவி.

“ரோஜா, டீ, காபி? பிளீஸ் ஒரு பத்து நிமிஷம் பேசலாமே.?” கடற்காற்று மேனியை தழுவி செல்ல, அணிந்திருந்த ஸ்வெட்டரை மேலும் உடலோடு இறுக்கியபடி திரும்பினாள்.

ரோஜா, ராகவி என்று அவன் மாற்றி மாற்றி அழைப்பது அவளுக்குச் சிரிப்பை மூட்டியது.

“டீ, ஓகே” என்றாள்.

ரிசார்ட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த ஓபன் ரெஸ்டாரன்ட்டில் அமர்ந்து டீயை அருந்திக் கொண்டிருந்தனர்.

“அடுத்து என்ன நடந்தது? நீங்க இப்போ அவரை, அதாவது உதயை தானே கல்யாணம் பண்ணி இருக்கீங்க?” ஆர்வமாகக் கேட்டான்.

சூரியன் அவள் தலைக்குப் பின்னே மெல்ல உதயமாக, அவள் முகத்திலும் புன்னகை உதயமாகியது. கையில் இருந்த டீயை நிதானமாக முடித்து விட்டு, அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“எங்க அப்பா, ஐயா ரெண்டு பேரும், உதய் வீட்ல திரும்பவும் பேசறேன்னு சொன்னாங்க. ஆனா, நான் தான் வேணாம்னு சொல்லிட்டேன்.”

“ஏன்?”

“என்னமோ மனசுக்கு சரின்னு படல. எஸ், எனக்கு அவரைப் பிடிச்சிருந்தது தான். ஆனா, என்கிட்ட சரியான காரணம் சொல்லாம என்னை வேணாம்னு சொன்னது, என்னை ரொம்பக் காயப்படுத்திடுச்சு. எனக்கும் அவரைப் பத்தி என்ன தெரியும்? ஜஸ்ட் பார்த்தோம். பேசினோம். போராடி, சேர்ந்து வாழ அது மட்டும் போதுமா? அப்படினு யோசிக்கும் போது.. மனசு முரண்டினாலும் வேண்டாம்னு சொல்லிட்டேன். எங்க வீட்ல கையோட எனக்கு வேற வரன் பார்க்க ஆரம்பிச்சாங்க…”

“ஐயோ… அப்புறம்?” அவன் குரலில் அத்தனை அதிர்ச்சி.

மீண்டும் கதை சொல்லத் தொடங்கினாள்.

காலம் முன்னோக்கி செல்ல, அவர்கள் பின்னோக்கி செல்லத் தொடங்கினர்.

“ரா, ரா… ராகவி. பீச் போலாமா? மூவி? இல்லனா, குமரகம் போய்க் கேரளா ஃபிஷ் மீல்ஸ்?”

ஷிஃபான் சேலைகளை ஒவ்வொன்றாக எடுத்து வாடிக்கையாளர் முன் பிரித்து வைத்துக் கொண்டிருந்தாள் ராகவி. சுஹாசினியின் கேள்வியைக் காதில் வாங்கிக் கொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை அவள்.

“அவ வேலையா இருக்கா சுஹா. இப்போ தொல்லை பண்ணாத” கிசுகிசுத்தாள் பனிமலர்.

“என்ன அவளுக்கு மட்டும் தான் வேலையா? எனக்கு இல்லையா? நான் இன்னைக்குக் காலேஜ் மட்டம் போட்டு வந்திருக்கிறேன். எதுக்காக?”

“அதான் சொன்னியே, பீச், மூவி, சாப்பாடுன்னு” நக்கலாகப் பதில் சொன்னாள் பனிமலர்.

“ஏய் மலரே, என் அறிவே. ராகவி சோகமா சுத்துறாளேன்னு வந்ததுக்கு என்னை, எப்படி அசிங்கப்படுத்திட்ட நீ?” மூக்கை உறிஞ்சினாள்.

“நடிப்ப குறை சுஹா”

“என்ன மலர், இவ இப்படி ஆகிட்டா? அந்தப் போலீஸை இவளுக்கு இவ்வளவு பிடிக்கும்னு தெரியாம போச்சே. சரியாகிடு்வா தானே?” ராகவியைப் பார்த்துக் கொண்டே கேட்ட, சுஹாசினியின் குரலில் தோழியைக் குறித்த வருத்தம் மிகுந்திருந்தது.

“சரி பண்ணிடலாம் சுஹா. டோண்ட் வொர்ரி” என்றாள் மலர்.

பனிமலர் சாப்ட்வேர் என்ஜினியர், தற்போது வேலைக்குச் சிறிய இடைவெளி கொடுத்து விட்டு வீட்டில் இருக்கிறாள். சுஹாசினி பிபிஏ முடித்து விட்டு, தற்போது எம்பிஏ இறுதி ஆண்டில் இருக்கிறாள். ராகவிக்காக அன்று கல்லூரி செல்லாமல் கட் அடித்து விட்டு வந்திருந்தாள். ஆனால், ராகவி தான் அவளைக் கண்டு கொள்வதாக இல்லை.

ராகவியும், உதயும் சந்தித்து நான்கு நாட்கள் கழிந்திருந்தது. ராகவி சாதாரணமாக இருப்பது போலக் காட்டிக் கொள்ளப் பெருமுயற்சி செய்தாள். ஆனால், அவள் முகத்தில் மலர்ச்சியே இல்லை. அது அவளுக்கு நெருக்கமானவர்களைக் கவலை கொள்ளச் செய்தது.

மகளின் பேச்சை தட்டாமல் அதற்குள் நான்கைந்து வரன்களைத் தேடிப் பிடித்து, புகைப்படங்களை அவள் முன் நீட்டினார் சிதம்பரம். ஆனால், எதையும் கையில் வாங்கிப் பார்க்க கூட அவள் விரும்பவில்லை. எதற்கும் அவளை வற்புறுத்தாமல் ஒதுங்கி போனார்கள் குடும்பத்தினர்.

அன்றைக்கு ஒரு மணி அளவிலேயே கடையை மாலதியிடம் ஒப்படைக்கச் செய்து, அவளைக் கிளப்பிக் கொண்டு வெளியில் சென்றனர் தோழிகள்.

புதிதாக வெளியாகி இருந்த திரைப்படம், சுவையான கடல் உணவு என எதுவும் அவள் மனநிலையை மாற்றவேயில்லை.

உதயின் வசீகர முகமும், குறும்பாகச் சிரித்த அவன் கண்களும், இறுக பற்றியிருந்த அவனது கையின் கதகதப்பும், அவனின் கம்பீர குரலுமே மனதில் அணிவகுத்துக் கொண்டிருந்தது.

நம்மிடம் சொல்லப்படும் வார்த்தைகளுக்கு உருவங்கள் இல்லையென்றாலும், பல நேரங்களில் அவற்றைப் பற்றிக் கொண்டு தானே கரையேறுகிறோம்.

“எல்லாம் நல்லபடியா நடக்கும்” என்ற உதயின் வார்த்தைகளை எத்தனை நம்பினாள் அவள். ஆனால், அவன் அதைக் காப்பாற்றவில்லையே.

“மணமேடை வரை வந்தே பல கல்யாணங்கள் நின்னு போகுது. அதை நினைச்சு உடைந்து போகாம மூவ் ஆன் ஆகுறாங்க. நீ ஒரு தடவை சந்திச்சதுக்கே இவ்வளவு அக்கப்போரு. அவனை மற ரா…” என்றாள் சுஹாசினி.

“முயற்சி பண்றேன்” என்றாள் ராகவி. ஆனால், அதற்கு அவசியம் இல்லாமல் அன்றைக்கு அவர்கள் வீட்டிற்குள் நுழையும் பொழுது நல்ல செய்தியுடன் காத்திருந்தார் விசாலாட்சி.

“மாப்பிள்ளை வீட்ல இருந்து பேசினாங்க செல்லம். உன்னை எப்போ பார்க்க வர்றதுன்னு கேட்டாங்க. இந்த வாரத்தில் ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்லணும். பேசி முடிக்கத் தான் வர்றாங்க” என்றார். திரியை தூண்டி விட்டது போலப் பளிச்சிட்டது அவள் முகம்.

சட்டென மலர்ந்த புன்னகையை மறைக்க முயலவில்லை அவள். அதுவரை இருந்த கோபம் எல்லாம் சூரியனை கண்ட பனியாய் உருகி மறைந்தது.

“இங்க பாரு ஆச்சி. இந்தப் பையன் உனக்கு நாங்க பார்க்கலை தான். ஆனா, நல்ல வேலை. பையன் பார்க்கவும் நல்லா இருக்கார். குடும்பமும் நல்ல குடும்பமா தெரியுது. நம்ம போதாத காலம் முதல் முறை தட்டி பேசிட்டாங்க. அதையே நினைச்சிட்டு இருக்கக் கூடாது. அடுத்து ஆகற வேலையைப் பார்க்கணும். சரி தானே?” பேத்தியின் முகம் பார்த்து சொன்னார் விசாலாட்சி.

“முதல்ல ஏன் வேண்டாம் சொன்னாங்க ஆயா?” பதில் அறிந்து கொள்ளும் ஆவலில் கேட்டாள் ராகவி.

“தெரியல செல்லம். ஆனா, இந்த முறை பேசும் போது, பையன் விருப்பத்துக்குத் தடையா இருக்க விரும்பல, அப்படின்னு அவங்க அப்பா சொல்லி இருக்கார். ஹ்ம்ம் எல்லாம் நல்லபடியா நடக்கணும். நடக்கும்” பேத்தியின் தலையைக் கோதி விட்டு நடந்தார் விசாலாட்சி.

error: Content is protected !!
Scroll to Top