உதய ராகம் – 22 (2)

வண்டியை காற்றின் வேகத்தில் செலுத்திக் கொண்டே ப்ளூடூத்தில் பேச்சி முத்தை அழைத்தான் உதய்.

“சார், சொல்லுங்க சார்” அந்தப் பக்கம் பவ்யமாகக் கேட்டார் பேச்சி முத்து.

“யோவ், என் பொண்டாட்டி மொபைலை ட்ராக் பண்ணி எங்க இருக்கான்னு பார்த்து சொல்லு யா. அப்படியே ரொம்பத் தான் பவ்யம் காட்டுற” அவரிடம் காய்ந்தான் உதய்.

பேச்சி முத்து அவனின் வலது கை, அவரைத் தவிர வேற யாரிடமும் இதை எல்லாம் செய்யச் சொல்ல மாட்டான் உதய். அதுவும் அவனின் உயிரான மனைவி குறித்து!

“இதோ, பார்க்கறேன் தம்பி” என்றவர், “இந்த முறை என்ன பண்ணீங்க தம்பி? தங்கச்சி ஏன் கோவிச்சிட்டு போகுது?” மெல்ல விசாரித்தார்.

“யோவ், பேச்சி முத்து. உங்க வயசுக்கு மரியாதை கொடுக்கணும்னு பார்க்கறேன். இல்லனா, அவ சும்மாவே என்னைப் படுத்துவா. அவ கிட்ட கேஸ் ஃபைல்ல… தெரியாம அவ பேர் சொல்லிட்டேன். அதை அவ முன்னாடியே, தங்கச்சி பேர் தொம்பின்னு, நீ தானேயா போட்டுக் கொடுத்த?” உதயின் குரலிலும், வார்த்தைகளிலும் அப்படி ஒரு எரிச்சல்.

அந்தப் பக்கம் அவர் சிரிப்பது அவனுக்குத் தெளிவாகக் கேட்டது.

அன்று காலையில் அவன் வீட்டில் இருந்து கிளம்பும் போது உதயின் ஜூனியர் கால் செய்து, கேஸ் விஷயமாகச் சில கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார். பேசிக் கொண்டிருந்தவனின் கண்களோ மாடி பால்கனி ஊஞ்சலில், மடியில் மகனை வைத்துக் கொண்டு ஆடிக் கொண்டிருந்த மனைவியின் மேல் தான் இருந்தது.

“சார், சார்” என்று அந்தப் பக்கம் மீண்டும், மீண்டும் அழைக்க,

“என்னய்யா, வேணும்?” அலைபேசியில் எரிந்து விழுந்தான்.

“பேர் மென்சன் பண்ணாம இருக்கு சார், என்ன பேரு சார்” என்று கேட்க, “ராகவி” என்று உளறி இருந்தான்.

பக்கத்தில் நின்றிருந்த பேச்சி முத்து தான் குறுக்கிட்டு, “தம்பி தம்பி. அது நம்ம தங்கச்சி பேர்” என்று சொல்லி இருந்தார்.

சரியாக அந்நேரம் பார்த்து அவன் பின்னே ராகவியும் வந்து நின்று அதைக் கேட்டு விட, கோபத்தில் பல்லைக் கடித்துக் கொண்டே உள்ளே சென்று விட்டாள் அவள்.

அப்போது அவளைச் சமாதானப்படுத்த அவனுக்கு நேரம் வாய்க்கவில்லை.

இப்போது அவன் வீட்டிற்குப் போனால், குழந்தைகள் மட்டும் தான் இருந்தனரே தவிர, மனைவியைக் காணவில்லை.

“எங்கே?” என்று கேட்டால், அப்போது தான் கோபமாகக் கிளம்பி, வெளியில் போனாள் என்ற பதில் தான் வந்தது. வேறு வழியின்றிக் குழந்தைகளை யசோதா மற்றும் பிரியதர்ஷினியிடம் ஒப்படைத்து விட்டு மனைவியைத் துரத்திக் கொண்டு செல்கிறான் உதய்.

அவனுக்கு இதே வேலை தான். போலீஸ் வேலையில் எத்தனைக்கு எத்தனை விறைப்பாக, முறைப்பாக, பொறுப்பாக இருக்கிறானோ, அதற்கு நேர்மாறாக வீட்டில் எல்லாம் ராகவி ராஜ்ஜியம் தான்.

தன்னிடம் வந்த இளவரசியை ஒரு மகாராணியாகவே நடத்தினான் அவன்.

அவளிடம் தோற்றுப் போவதில் அவனுக்குப் பெருமையே. இறுதியில் இல்லறத்தில் ஜெயிப்பது தானே இங்கு முக்கியம்!!

அவனது நினைவுகள் எங்கோ ஓட, அந்தப் பக்கம் இருந்து, “தம்பி சார்” என்று அவனை அழைத்துக் கொண்டே இருந்தார் பேச்சி முத்து.

“சொல்லுங்க அண்ணா, எங்க இருக்கா?” கேட்டான் அவன்.

அவர் குரலில் இன்னமும் சிரிப்பு மிச்சமிருந்தது.

“தம்பி, உங்க ஃபேஸ்புக், ட்விட்டர் அக்கவுண்ட் பார்த்தீங்களா?” என்று அவர் தயக்கத்துடன் விசாரிக்க,

“இல்லையே. ஏன் கேட்கறீங்க?”

“இல்ல தம்பி, எதுக்கும் ஒரு தடவை அதைப் பார்த்துட்டு அப்புறம் தங்கச்சி கிட்ட போங்க” என்று தயங்கி, தயங்கி சொன்னார் பேச்சி முத்து. ஆனாலும், அவர் குரலில் இருந்த சிரிப்பைக் கண்டு கொண்டான் உதய்.

“ஓ, சரிண்ணா” ‍என்றவன், “மொபைல் ட்ராக் பண்ண முடிஞ்சதா?” ‍என்று தொடங்கிய கேள்விக்கு மீண்டும் வந்து நின்றான்.

“அச்சோ தம்பி. தங்கச்சி, நீங்க வாங்கின புது வீட்டுக்கு போறாங்க போல. ஜிபிஎஸ் அந்த ரூட் தான் காட்டுது” என்று அவர் சொல்ல,

“தேங்க்ஸ் பேச்சிண்ணா” கத்தி விட்டு, அழைப்பை துண்டித்தான் உதய்.

வண்டியை அவர் சொன்ன வழித் தடத்துக்குத் திருப்பினான்.

இங்கே காரை விரைந்து செலுத்திக் கொண்டிருந்தாள் ராகவி.

காரை நிறைத்துக் கொண்டிருந்தது தோழிகளின் குரல்கள். மூவரும் கான்ஃபரன்ஸ் காலில், பேசிக் கொண்டிருந்தனர்.

“சுஹா” என்று ராகவி அழைக்க, பின்னிருந்து, அவளின் குழந்தையாக வளரும் அவளின் அக்கா மகனும், “சுஹா” என்று அழைக்க, மூவருக்கும் அப்படி ஒரு சிரிப்பு வந்தது.

ஆம், சுஹாசினியின் அக்கா மகன் இப்போது அவளிடம் தான் வளர்கிறான். ஒரு சாலை விபத்தில் அவளின் அக்கா, மாமா இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரை விட்டிருக்க, வீட்டில் இருந்த அவர்களின் மூன்று மாத குழந்தை மட்டுமே உயிர் பிழைத்திருந்தது.

அவளின் அக்கா, கணவரின் தம்பியிடம் வளர்ந்த குழந்தைக்காக, அவனைத் தான் வளர்க்க கேட்டு சில மாதங்கள் போராடினாள் சுஹாசினி. ஆனால், இருவரும் ஆளுக்கொரு பக்கம் இழுத்தனரே தவிர ஒரே பக்கம் சாய்வதாக இல்லை.

முடிவில், அவர்கள் இருவருமே திருமணம் செய்து கொண்டு, சித்தியும், சித்தப்பாவும் அக்குழந்தைக்கு அம்மா, அப்பா ஆகியிருந்தனர்.

அவனுக்கு, இப்போது மூன்றே கால் வயதாகிறது. சுஹாசினிக்கு இப்போது ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. அவள் வெளிநாட்டில் வசித்தால் கூட, வாரத்தில் பத்து முறையாவது தோழிகளுடன் பேச மறப்பதேயில்லை.

“சுஹா, குட்டிப் பொண்ணு எப்படி இருக்கா?” என்று ராகவி கேட்க,

“அவளுக்கு என்ன ரா? பிரின்ஸஸ் அவ. ஆனா, என்னைத் தான் வச்சு செய்யறா” என்று புலம்பினாள் சுஹாசினி.

“சரி அதை விடு. நீ எங்க கிளம்பிட்ட ரா?” என்று அவள் பதிலுக்கு ராகவியிடம் கேட்க, ராகவி சத்தமாகச் சிரித்தாள்.

“நீ வாழுற ரா. ஆமா, இப்ப எதுக்குப் போலீஸை அலைய விடுற?” என்று சுஹாசினி கேட்க,

“இப்ப என்ன ரா, சண்டை?” என்று மலரும் விசாரித்தாள்.

மலர், அவளை விரும்பிய வீராவையே மணமுடித்து இருந்தாள். இரு வீட்டாரையும் சம்மதிக்க வைத்தது, அவளின் உடன் பிறவா அண்ணன், ஏசிபி உதய்பிரகாஷ் தான்.

மலர் தற்போது கணவனுடன் பெங்களூரில் வசிக்கிறாள். அவளுக்கு இப்போது தான் மகன் பிறந்திருந்தான். ஆறு மாதம் தான் ஆகிறது.

“ரா, என்னனு சொல்லு பிளீஸ்?” என்று மலர் கெஞ்ச, சத்தமாகச் சிரித்தாள் ராகவி.

“சண்டை எதுவும் இல்ல. ஆனா, சண்டை இல்லாம போரடிக்குது. போலீஸை கொஞ்சம் நம்ம பக்கம் இழுக்க, சும்மா கோபப்பட்டு, கோவிச்சுட்டு புது வீட்டுக்கு போறேன்” என்றாள் ராகவி.

“ஏய் ரா, யாருகிட்ட கதை சொல்ற?” என்று சுஹாசினி கேட்க,

“எங்களையே ஏமாத்த பார்க்கறியா ராகவி?” என்று மலரும் தன் பங்கிற்குக் கேட்க, ராகவிக்குச் சிரிப்பு தான் வந்தது.

“முதல்ல அவர்கிட்ட சொல்லிட்டு, அப்புறம் உங்ககிட்ட சொல்றேன் பிசாசுங்களா..” செல்லமாகச் சலித்துக் கொண்டு சொன்னாள் ராகவி.

“என்ன விஷயம் ரா…” இருவரும் ஒன்றாக ராகம் இழுக்க,

“போனை வச்சுட்டு போய், உங்க புருஷனையும், பிள்ளை குட்டியையும் பாருங்க. எப்பப் பாரு என்னையும், அவரையும் வச்சு என்டர்டெயின்மென்ட் பண்ணிட்டு இருக்கீங்க. ராஸ்கல்ஸ். போனை வைங்க ரெண்டு பேரும். ஐ ஆம் டிரைவிங். சோ, நான் இப்போ போனை வைக்கறேன்” சொல்லி விட்டு, சிரித்துக் கொண்டே அழைப்பை துண்டித்தாள் ராகவி.

அலைபேசி இணைப்பை துண்டிக்கும் முன், தோழிகள் இருவரின் ஒருமித்த, “ஏய் ரா…” என்ற கூச்சல் கேட்கவே செய்தது. ஆனாலும், அழைப்பை துண்டித்திருந்தாள் ராகவி.

error: Content is protected !!
Scroll to Top