உதய ராகம் – 22 (1)

மூன்று வருடங்களுக்குப் பிறகு,

“அம்மா, மா. இவளைக் கொஞ்சம் பிடிங்க. வேகமா பிடிங்க மா”

இரண்டரை வயது மகள் உதயதாராவை, யசோதாவின் கைகளில் திணித்து விட்டு வெளியில் ஓடினான் உதய்.

அவன் பின்னேயே ஓடி வந்த மகனை கைகளில் அள்ளி,

“அப்பத்தா கிட்ட இரு டா செல்லம். அப்பா, இதோ.. இப்ப வந்துடுவேன்” என்று மகன் உதய்நந்தாவை தூக்கிக் கொண்டு, திரும்ப வீட்டுக்குள் ஓடி வந்து, யசோதாவின் கைகளில் அவனையும் திணித்து விட்டு வெளியில் ஓடினான்.

அதே வேகத்தில் தன் ராயல் என்ஃபீல்டில் ஏறி, அதை மின்னல் வேகத்தில் இயக்கி, பறந்தான் உதய்.

“உதை…” அப்பாவை கத்தி அழைத்தாள் மகள் உதயதாரா.

“உங்கம்மா ஒருத்தி உதைக்கறது பத்தாதுன்னு, நீங்களும் உங்கப்பாவை உதைங்க என்ன?” என்று கிண்டல் செய்து கொண்டே கீழிறங்கி வந்தாள் பிரியதர்ஷினி.

“ப்பா…” என்று சமத்தாக அழைத்தான் மகன் உதய்நந்தா.

“ஐயோ கட்டித் தங்கமே, உங்க அப்பா போய் ஒரு மணி நேரம் ஆச்சு. இதோ, இப்ப, உங்க மாமன் வந்துடுவான் பார். உங்கம்மா, அதெல்லாம் சரியா பிளான் பண்ணி தான் போய் இருப்பா” என்று குழந்தைகளிடம் யசோதா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அடித்துப் பிடித்து உள்ளே நுழைந்தான் ராகவன்.

ஆம், யசோதா தான்.

ராகவி என்ன தான் உதயிடம் அவனது தந்தை சோமசுந்தரத்தையும், அவனது குடும்பத்தினரையும் தன்னால் இப்போது மன்னிக்க முடியாது என்று சொல்லி இருந்தாலும், அவர்களை அவள் அப்படி ஒன்றும் ஒதுக்கித் தள்ளி விடவில்லை.

அவளும் ஒதுங்கிப் போகவுமில்லை. தாமரை இலை தண்ணீர் போல இருக்கப் பழகிக் கொண்டாள்.

சோமசுந்தரம், யசோதா இருவரும் காரைக்குடி செல்லவில்லை. இங்கே சென்னையில், அதே வீட்டில் மூத்த மகன் பிரபாகரன் குடும்பத்துடன், தான் வசிக்கின்றனர்.

விஜிக்குத் திருமணம் முடிந்து விட்டது. அவளும் இப்போது அதே வீட்டில் தன் கணவருடன் வசிக்கிறாள்.

சோமசுந்தரம் முன்பை போல அல்லாது, அனைவரிடமும் வெளிப்படையாகப் பாசமாக இருக்கிறார்.

யசோதா, தான் இதுவரை சறுக்கியதை சமன் செய்ய, தற்போது மிகுந்த சிரத்தை எடுத்துக் குடும்பத்தை வெகு நேர்த்தியாகக் கவனித்துக் கொள்கிறார். அவ்வப்போது இடைஞ்சல்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. அது தானே வாழ்க்கை, அனைத்தையும் சமாளித்து வாழ்க்கைப் படகை செலுத்திக் கொண்டிருக்கிறார் அவர்.

பிரபாகரன், பிரியதர்ஷினி தம்பதியினருக்கு இப்போது ஒரு மகளும் உண்டு.

மகன் பிறந்த போது, எதையும் கண்டு கொள்ளாமல் சுற்றியது போல இல்லாது, இம்முறை பிரகாகரன் பொறுப்பாகக் குழந்தையை அவரும் கவனித்துக் கொள்கிறார்.

பகல் முழுவதும் யசோதா குழந்தையைத் தன் வசம் வைத்துக் கொள்ள, பிரியதர்ஷினிக்கு இப்போது, உண்ண, உடுக்க, குளிக்க என்று எதற்கும் சிரமில்லை. இம்முறை குழந்தை வளர்ப்பை ரசித்துச் செய்தாள் அவள்.

ராகவி யாரையும் ஒதுக்கவில்லை. ஆனால், அனைவரையும் ஒரேட்டுத் தன்னை விட்டுத் தூரமாகத் தள்ளியே வைத்தாள்.

மாதத்தில் இரண்டில் இருந்து நான்கு நாட்கள் மாமியார் வீட்டிற்குக் கணவன், குழந்தைகளுடன் சென்று வந்தாள்.

தன் கடமைகள் எதில் இருந்தும் அவள் விலகவேயில்லை.

நாத்தனார் காவ்யாவிற்கு இப்போதும் பண்டிகை, நல்ல நாட்கள் எனச் சீர் செய்து கொண்டு தான் இருக்கிறாள். ஆனால், ஒரு வரைமுறையோடு அதை நிறுத்திக் கொள்கிறாள்.

அனைத்தையும் ஒரு அளவோடு நிறுத்திக் கொண்டாள்.

அப்போது தானே அது அமிர்தமாக மதிக்கப்படும்.

அவர்கள் அனைவரின் வீட்டிற்க்கும் செல்கிறாள். அதே நேரம், அவர்களையும் தன் வீட்டிற்க்கு அழைத்து, உபசரித்து நன்றாகவே நடத்துகிறாள்.

ஆனாலும், மாமனார் வீட்டோடு செல்லும் எண்ணம் மட்டும், இப்போதைக்கு அவளுக்கு இல்லை.

இங்கே, தாய் மாமாவை கண்ட குழந்தைகள் இரண்டும், “மாமா, மாமா” என்று ராகவனிடம் தாவினார்.

என்னமோ பார்த்து பல நாள் ஆனது போல அப்படி ஒரு நாடகம். அவர்கள் அந்த வீட்டில் இருந்து, இங்கு வந்து முழுதாக இரு நாட்கள் கூட ஆகியிருக்கவில்லை. அதற்குள் மாமனை தேடி இருந்தார்கள் இரட்டையர்கள்.

ராகவி என்றாலே ராகவனுக்கு உயிர் எனும் போது, அவளின் இரட்டை குழந்தைகளை இன்னும் அதிகம் நேசித்தான். அவன் அவர்களுக்காக எதையும் செய்வான்.

“என் செல்ல குட்டீஸ். வாங்க, வாங்க” இருவரையும் இரண்டு கைகளிலும் அள்ளிக் கொண்டான்.

இருவரும் அவனிடம் ஒரே நேரத்தில் பேச முயற்சிக்க, அவனோ, யசோதா மற்றும் பிரியதர்ஷினியுடன் பத்து நிமிடம் பேசி விட்டு, இருவரையும் கூட்டிக் கொண்டு வெளியில் வந்தான்.

மாமனுடன் கார் டிரைவ் என்றதும் குஷியாகி விட்டனர் குழந்தைகள். அவனிடம் கதைப் பேசிக் கொண்டே பயணித்தனர். அவனும், அவர்களுக்குத் தகுந்த பதில் கொடுத்துக் கொண்டே காரை செலுத்தினான்.

“பாட்டி, பாட்டய்யா கிட்ட போகலாம். என்ன? ரெண்டு நாளா அவங்க உங்களை ரொம்ப மிஸ் பண்ணிட்டாங்க” என்று ராகவன் சொல்ல, குழந்தைகளோ மாமனிடம் வேறு ஒன்றுக்கு அடிப் போட்டனர்.

“சாக்கி மாமா” என்றாள் உதயதாரா.

“கார், வேணும் மாமா” என்றான் உதய்நந்தா.

அவர்கள் கேட்பதை வாங்கிக் கொடுத்தால், ராகவி கத்துவாள் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். குழந்தைகளோடு, அவனும் கைக் கட்டி நின்று அவள் திட்டுவதை அமைதியாகக் கேட்டுக் கொள்வான். வேறு என்ன செய்வது? ராகவியின் திட்டிற்குப் பயந்து அவனின் மருகமகளையும், மருமகனையும் கவனிக்காமல் அவனால் இருக்க முடியாதே.

காரை சூப்பர் மார்க்கெட்டின் முன் நிறுத்தி அவர்கள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து, இருவரையும் வீட்டிற்க்கு அழைத்துப் போனான் ராகவன். அங்கே அவர்களுக்காக விசாலாட்சி காத்திருந்தார்.

பால் கொழுக்கட்டை சாப்பிட்டுக் கொண்டே, மிக்கி மவுஸ் கார்ட்டூன் பார்த்தனர். இனி அவர்களின் பொழுது அப்படியே ஓடி விடும்.

ராகவன் தற்போது எம்.டி. அனஸ்தீசியாலஜி முடித்து விட்டு, முழுநேர மயக்கமருந்து நிபுணராக வேலையைத் துவங்கி இரண்டு மாதம் தான் ஆகிறது.

இன்னும் கல்யாண கனவு அவன் இருக்கும் திசைப் பக்கமே வரவில்லை.

அந்த மயக்க மருந்து நிபுணனை எப்படித் தன் மேல் மயக்கமாக்குவது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள் அவனின் உள்ளம் கவர்ந்த மதுமிதா.

அவர்களுக்கு விரைவில் திருமணம் முடித்து வைத்து, அத்தையாகும் கனவோடு சுற்றிக் கொண்டிருக்கிறாள் ராகவி.

error: Content is protected !!
Scroll to Top