உதய ராகம் – 21 (4)

“நீ இருக்க இடம் தான் எனக்கு வீடு பட்டே. அது என் அப்பா வீடா தான் இருக்கணும்னு அவசியமில்லை. இப்போ, நீ இருக்க நிலைமையில, நீ பெரியவங்களோட இருக்கறது தான் சரி. அதனால, உன் வீட்ல இருப்போம், பட்டே” என்றவனின் கழுத்தில் முகம் புதைத்தாள் ராகவி.

“அப்பா, அம்மா ரெண்டு பேரும் காரைக்குடி போகப் போறதா சொன்னாங்க. அங்க நம்ம பூர்வீக வீட்டில் இருந்துப்பாங்க. விஜிக்குக் கல்யாணம் பண்ணி வச்சுட்டு தான் போவாங்க. பிரபா அண்ணா, விஜி ஃபேமிலி இனி அந்த வீட்டில் இருப்பாங்க.

விஜி கல்யாணம், அப்பா ட்ரீட்மென்ட், அப்புறம் அவங்க சொந்த ஊர் போறது, இது எல்லாம் நடக்க இன்னும் சில மாசங்கள் எடுக்கலாம். ஆனா, நாம, இனி அங்க போக வேணாம். நான் ஏற்கனவே பேச்சி முத்து கிட்ட சொல்லி நம்ம பொருட்களை எல்லாம், உங்க வீட்டுக்கு… இனி, அது நம்ம வீடு. அங்க மாத்த சொல்லியாச்சு. அவர் நேத்தே மாத்தி இருப்பார்” என்றவனைச் சிரிப்பும், முறைப்புமாகப் பார்த்தாள் ராகவி.

“ஒருவேளை, நான் சமாதானமாகாம இருந்திருந்தா என்ன பண்ணி இருப்பீங்க?” என்று அவள் கேட்க,

“பட்டுனு, என் பட்டு கால்ல விழுந்திருப்பேன், பட்டே” என்று சொன்னவன், அதைச் செய்தும் இருந்தான்.

“அச்சோ உதய், எழுந்திருங்க” என்றாள் சிரித்துக் கொண்டே.

“மன்னிச்சிடு பட்டே, பிளீஸ். இனி உன்கிட்ட எதையும் மறைக்க மாட்டேன். உன்கிட்ட சொல்லாம எதையும் செய்ய மாட்டேன். உன்கிட்ட எப்பவும் இனி திறந்த புத்தகமா தான் இருப்பேன். பிளீஸ், என்னை நம்பு.” கெஞ்சினான்.

“உங்க அப்பா, அவரைப் பார்க்க நீங்க போகனும்னா, நீங்க போறதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை உதய். நான் உங்களைத் தடுக்க மாட்டேன்” என்றாள், அவன் முகத்தைப் பார்க்காமல்,

அவள் முகத்தைத் தன் பக்கமாகத் திருப்பி, “நீ சொன்ன மாதிரி அப்பா, என்னைக்கும் அப்பா தான். அது மாறாது. ஆனா, போதும் பட்டே. இனி என்னால அவரோட போராட முடியாது. எப்போ உன்னை…. நோ.. வேணாம்… ” ஆழ மூச்செடுத்துக் கண்களை மூடித் திறந்தான். அவர் வார்த்தைகளை அவன் நினைத்துப் பார்க்க கூட விரும்பவில்லை.

“அப்பா, அன்புக்காக ஏங்கற வயசை நான் கடந்துட்டேன்னு நினைக்கிறேன் பட்டே. இனி, நான் என் குழந்தைங்களுக்கு நல்ல அப்பாவா இருக்க விரும்பறேன்.” என்றவன், மெல்ல நிமிர்ந்து அவள் முகத்தைத் தன் கைகளில் ஏந்தி,

“நீ இல்லாம, உன்னைப் பார்க்காம, உன் கூடப் பேசாம, ஒரு நாள் கூட என்னால இருக்க முடியாது பட்டே. எனக்கு நீ மட்டும் போதும். நானும் கொஞ்ச நாளைக்கு, கொஞ்ச வருஷத்துக்குச் சுயநலமாக இருந்துக்கறேன்.

என் அன்றில் நீ இல்லாம, சென்னையில் முழுசா ஒரு நாள் கூட என்னால இருக்க முடியல. உன்கிட்ட ஓடி வந்திட்டேன். என் அகவல் (அழுகை) காலம் முடிந்தது பட்டே.

அன்றில் பறவையில் பெண் பறவை கருவுற்றிருக்கும் போது எழுப்பும் ஒலிக்கு பேர் என்ன தெரியுமா? “நரலல்”. உன்னோட செல்ல சிணுங்கல் போல இருக்கும்னு நினைக்கறேன்.

உதய் பக்கத்தில வாங்க, உதய் என் கையைப் பிடிங்க, உதய் தள்ளிப் போங்க. இப்படி, இல்ல?” என்று கண் சிமிட்டினான்.

அவள் பதிலுக்கு, “உதய்” என்று சிணுங்க, சத்தமாகச் சிரித்தான் அவன்.

“இனி நம்ம வாழ்க்கையில் அன்றில்களைப் போல உளறலும், நரலலும் மட்டும் தான் இருக்கணும் பட்டே. நாம அழுதது போதும். இனி நம்மை நாமே சந்தோசமா வச்சுப்போம். நம்ம சந்தோஷத்துக்கு வேற யாரும் தேவையில்லை.

நீ, நான், நம்ம குழந்தைங்க, இந்தச் சின்ன உலகம் எனக்குப் போதும்” உணர்ச்சி ததும்பச் சொன்னவனின் கண்களில் இருந்து, இரு சொட்டுக் கண்ணீர் வைரமாய் மின்னி கன்னம் தொட்டது.

“ஷ்ஷ், உதய். எமோஷனல் போலீஸ் நீங்க” அவன் கண்களைத் துடைத்து விட்டாள் ராகவி.

“உன்கிட்ட மட்டும் தான் பட்டே. என் சிரிப்பு, என் கோபம், என் அழுகை, என் காதல், என் கா…”

“ஆங், போதும், போதும். ரொம்ப நீளமா போகுது” அவன் வாயை மூடினாள் ராகவி. கண்களால் சிரித்தான் உதய்.

“இனி எப்போ எல்லாம் சண்டை வருதோ, அப்போ எல்லாம் ரோஜாவும், ராஜாவுமா ஆகிடலாம். சரியா?” என்று அவன் கேட்க,

சின்னச் சிரிப்புடன், “சரி” என்றாள் ராகவி. உதயின் ஒரு கரம் ராகவியின் வயிற்றில் படர்ந்து, இடுப்பை வளைக்க, மறுகரம் அவள் முகத்தை அழுந்த பற்றியது. அவளின் புருவ மத்தியில் அழுத்தமாய் முத்தமிட்டான்.

“ஐ லவ் யூ பட்டே” கரகரத்த குரலில், ஆயிரமாவது முறையாகக் காதலை சொன்னான். சிறு புன்னகையில் அதை ஏற்றுக் கொண்டாள் ராகவி.

சூரியன் உதயமாகி பல மணி நேரம் ஆகியிருந்தது. அதனால் என்ன, இனி அவர்களின் வாழ்வில் காதலின் உதயமும், காதல் கானத்தின் ராகமும் மட்டுமே இருக்கும்.

உதயின் ராகமாக இருப்பாள் ராகவி.

ராகவி எனும் ராகத்தை உதயமாக்கி கொண்டே இருப்பான் உதய்.

அவர்களின் வாழ்வில் இனி உதயராகம் நிலைத்திருக்கும்.

error: Content is protected !!
Scroll to Top